சூரியதிசைப் பயணம் – 9

18-ஆம்தேதி புதன்கிழமை. நாங்கள் கிளம்பி வந்து ஐந்துநாட்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு புதிய பண்பாட்டின் புதிய நிலத்தின் வாழ்க்கைக்குள் இருந்தமையால் காலம் பலமடங்கு விரிந்து நீண்டு விட்டிருந்தது. கௌஹாத்தியே கடந்தகாலத்தின் தொலைவில் எங்கோ தெரிந்தது.

9

காலையில் எழுந்து அஸ்ஸாமிய கருப்பு டீ அருந்திவிட்டு குளிராடைகளை அணிந்துகொண்டு சிவன்கோயிலுக்கு சென்றோம். அதிகாலையிலேயே ஆலயவளாகம் உயிர்பெற்றிருந்தது. வணிகர்களும் பிச்சைக்காரர்களும் தொழிலை தொடங்கிவிட்டிருந்தனர். அனைவருமே பிகாரிகள். அஹோம் மக்களும் போடோ மக்களும் சிறுவணிகம் செய்வதையும் பிச்சை எடுப்பதையும் வெறுப்பவர்கள். அவர்கள் பொய் சொல்லும் வழக்கம் இல்லை என்றார் ராம் குமார். அங்கே வன்முறை உண்டு, திருட்டு அனேகமாக கிடையாது என்றார்.

நாமறிந்த இந்துக்கோயிலின் எந்த அமைப்பும் இல்லாத கட்டடம். இஸ்லாமிய கட்டடக்கலை பாணியில் செங்கல்லால் ஆன கூம்புக்கூரையும் உள்ளே குவைமுகடும் கொண்டது. முகமண்டபத்தில் சிற்பங்கள் ஏதுமில்லை. ராஜா ருத்ர சிங்காவால் கட்டப்பட்ட கல்லால் ஆன மையக்கருவறையில் சிற்பங்கள் மழுங்கி உடைந்திருந்தன. அருகே சென்றால்தான் ஆலயத்தின் உயரம் நம்மை திகைக்கச் செய்யுமளவுக்கு தெரியும்.

2

சிவராத்திரி நெரிசல். ஆனால் காமாக்யா கோயில் போல நீண்ட வரிசை இல்லை. ஆகவே உள்ளே சென்றோம். உள்ளே கருவறைநடுவே மிகச்சிறிய லிங்கம். அதன் மேல் நீர் கொட்டும்படி ஒரு மடை. அந்த மடை முன் மண்டபத்தில் வந்து திறந்திருக்கிறது. பக்தர்களால் வழிபாடாக அளிக்கப்பட்ட தீர்த்தத்தை அதில் கொட்டுகிறார்கள். அது வழிந்தோடி லிங்கம் மீது வழிகிறது. தீபாராதனை, பிரசாதம் அளித்தல் என எந்த வழக்கமும் இல்லை. பக்தர்கள் அளித்த மலர்களை பூசாரிகள் வாங்கிக் கொண்டு சென்று லிங்கத்திற்கு சார்த்துகிறார்கள்.

3

சிவன் விஷ்ணு துர்க்கைக்கு ஒரே வளாகத்தில் மூன்று கோயில்கள் இருந்தன. எல்லாமே அறுகோணக்கூம்புக் கோபுரங்கள். முற்றிலும் அன்னியமான சூழலாக கட்டடங்கள் தோன்றவைத்தன. வழிபாடு முற்றிலும் அணுக்கமாக உணரச்செய்தது. விசித்திரமான ஒரு மனநிலை.

4

1

விடுதிக்கு வந்து காலையுணவு சாப்பிட்டபின் கிளம்பி ஷிவ்சாகரில் உள்ள பழமையான இடங்களை பார்க்கச்சென்றோம். ஷிவ்சாகர் கிழக்கே பான்கர் ஆறாலும் மேற்கே டிக்கோ நாம்தாங்க் ஆறாலும் வளைக்கப்பட்ட நகரம். இங்குள்ள ரங் கார் என்ற இடம் அஹொம் அரசர்களின் பழைமையான திறந்தவெளி அரங்கம். இரண்டு அடுக்குள்ள நீள்வட்ட வடிவிலான கட்டடம் இது. வண்டிக்கூரை போன்ற முகடு. செங்கல்லாலேயே சுவரும் வளைந்த கூரையும் கொண்ட முகலாய பாணி கட்டிடம்.

ronghar-amphitheater

அக்காலத்தில் அஹோம் மன்னர்கள் இங்கே பலவகையான கலைநிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நிகழ்த்தியிருக்கின்றனர். அவர்களுக்கான அரங்குகளும் சபையும் இங்கே உள்ளது. கீழே அரசகுடியினரும் மேலே அரசரும் பரிவாரங்களும் அமர்ந்திருப்பார்கள். கீழே அதிகம் நிகழும் களியாட்டம் என்பது எருதுச்சண்டைதான். எருமைச்சண்டையும் பாம்புச்சண்டையும் நிகழ்வதுண்டு.

joysagar-lake

ஜோய்சாகர் ஏரிக்கு அருகே உள்ள தலாதல் கர் முதலில் ஒரு ராணுவ தங்குமிடமாக அமைக்கப்பட்டது. மண்ணுக்கு அடியில் மூன்று அடுக்குகளும் மண்ணுக்கு மேல் இரண்டு அடுக்குகளும் கொண்ட பெரிய அரண்மனை வளாகம் பின்னர் அமைக்கப்பட்டது. இரண்டு சுரங்கப்பாதைகள் அரசகுலத்தினரின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

தலாதல் கர் ஒரு முழுமையான அரண்மனை வளாகம். அரசகுடியினர் தங்குவதற்கான அறைகள், கல்விக்கூடங்கள், சபைமண்டபங்கள், விருந்தினர் மாளிகைகள் ஆகியவை மண்ணுக்குமேல் முதல் தளத்தில் உள்ளன. காவலர்தங்குமிடங்களும் உல்லாசமண்டபங்களும் இரண்டாம் தளத்தில். கருவூலம், நூலகம் போன்றவை முழுக்க மண்ணுக்கு அடியில்.

6

முழுக்கமுழுக்க சுட்டசெங்கல்லால் கட்டப்பட்ட கட்டடத்தொகை இது. சுவர்கள் செங்கல்லால் ஆனவை. பல அடுக்குகளினால் ஆன கனத்த சுவர்கள் நீர் ஊறாதவை. எனவேதான் மண்ணுக்கு அடியிலும் கட்டமுடிகிறது. மேலே கூரையும் செங்கல்லால் ஆனதுதான். வளைவாகக் கட்டப்பட்ட கூரை உள்ளே குவைமாடமாகவும் மேலே சமதளமாகவும் உள்ளது.

charaideo moidam 5தலாதல் கர் பார்த்துவிட்டு அஹொம் மன்னர்களின் மைதாம் என்ற இடுகாட்டை பார்ப்பதற்காக சென்றோம். அங்கே செல்லும்வரை அவ்விடத்தின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும், ஏதோ மைதானம் என்ற எண்ணம் இருந்தது

10

சுருக்கமாக சொல்லப்போனால் மைதாம் என்பது எகிப்திய பிரமிடுகளைப்போல இந்தியாவின் பிரமிடு அமைப்பு. ஆனால் பிரமிடுகளைப்போல நாற்பக்க கூம்பு வடிவம் கொண்டது அல்ல. அரைக்கோள வடிவமானது. கல்லாலோ செங்கல்லாலோ அமைந்தது அல்ல, மண்ணால் ஆனது. மற்றபடி பிரமிடுக்குரிய அனைத்து தனிச்சிறப்புகளும் இதற்கும் உண்டு.

charaideo moidam 3

அஹொம் மன்னர்களும் அவர்களின் முதன்மையான தளபதிகளும் அமைச்சர்களும் இங்கே புதைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் உடல்கள் தேனில் போடப்பட்டு பதப்படுத்தப்பட்டு சிலகாலம் வைக்கப்படும். அவர்களுக்கான இறுதிச்சடங்குகள் அந்நாட்களில் தொடர்ந்து நடக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கான மைதாம்கள் அமைக்கப்படும்.

8

மைதாம்கள் அரைக்கோள வடிவில் செங்கல்லால் அமைக்கப்பட்ட கல்லறைகள். இருபதுபேர் தாராளமாக நிற்கும் அளவுகொண்டவை. மூன்று ஆள் உயரம் கொண்டவை. மிகப்பெரிய மைதாம் எட்டாள் உயரம் கொண்ட ஒரு சிறிய கூடம். மன்னரின் மனைவிகள், சேவகர்கள் ஆகியோர் மன்னருக்குரிய பொருட்கள் வைர நகைகள் பொன்னகைகள் உணவுப்பொருட்கள் மற்றும் பூசைப்பொருட்களுடன் சேர்த்து அந்தக் கல்லறையில் வைக்கப்படுவார்கள். கல்லறை செங்கற்களால் காற்றும் நீரும் புகாமல் மூடப்படும். அதன்மேல் மண் அள்ளி போடப்பட்டு கச்சிதமான அரைக்கோள வடிவமான குன்று உருவாக்கப்படும். அதுதான் மைதாம். இறந்த மன்னரை பெரும் ஊர்வலமாக மைதாமுக்கு கொண்டுவருவார்கள். பலவகையான சடங்குகள் நிகழும்.

7

மழைக்காலத்தில் பசும்புல் வளர்ந்து பச்சைக்கோளங்களாக மைதாம் காணப்படும். அவற்றின் கச்சிதமான அரைக்கோள வடிவத்தால்தான் அவற்றை மானுட உருவாக்கம் என ஊகிக்க முடியும். 1890-இல் இப்பகுதியை வென்ற பர்மிய படையெடுப்பாளர்கள் பெரும்பாலான மைதாம்களை தோண்டி புதையல்களை எடுத்துச்சென்றனர். பின்னர் பிரிட்டிஷாரும் பெரிய மைதாம்களை தோண்டி புதையல்களை எடுத்தார்கள். ஆனாலும் தோண்டப்படாத நூற்றுக்கும்மேற்பட்ட மைதாம்கள் இன்று உள்ளன.

5

மைதாம்கள் அசாமிய வன்முறை முடிந்து அமைதி திரும்பியபின் சென்ற பத்தாண்டுகளாகத்தான் இந்திய அரசின் பாதுகாப்புக்கும் ஆய்வுக்கும் ஆளாகியிருக்கின்றன. தொல்லியல்துறை ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. மிகப்பெரிய மூன்று மைதாம்கள் திறக்கப்பட்டு உள்ளே உள்ள செங்கல் கட்டுமானத்திற்குள் செல்ல வழியமைக்கப்பட்டிருக்கிறது. அரைக்கோள கட்டுமானத்திற்குள் செல்லும் சிறிய வாயிலும் பாதையும் உண்டு. உள்ளே பெட்டியில் மூடப்பட்ட மன்னரின் சடலம் பக்கவாட்டு துளைகளுக்குள் செருகப்பட்டிருக்கும். அந்த வழிகள் தொல்லியல் துறையால் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

inside moidam

இந்தியாவின் பெருமைமிகுந்த அரசகுலங்களில் ஒன்று என அஹொம் அரசகுலத்தை சொல்ல முடியும். தாய் ஆவணங்களின்படி இவர்கள் கிமு 568-இல் தாய்லாந்து அரசரான லெங்டான் என்பவரின் மைந்தர் வழி வந்தவர்கள். அவர் இடியின் மைந்தர் என அழைக்கப்பட்டவர். லெங்டான் தன் மைந்தன் தென் காம்மை அன்று முங்கி ரி ராம் என்று அழைக்கப்பட்ட இந்த நிலத்தை ஆட்சி செய்ய அனுப்பினார். அவர்கள் நாகலாந்துக்காடுகள் வழியாக வந்து அமைத்த முதல் தலைநகரம் இது. இதன் பெயர் செ ராய் தோய். பின்னர் 1397-இல் அவர்கள் ஷிவ் சாகருக்கு தலைநகரை மாற்றிக்கொண்டாலும் அவர்களின் புனிதநகரமாக இது நீடித்தது. அவர்களின் இடுகாடு கடைசிவரை இதுதான்.

charaideo 7 (1)

இந்த நிலம் நாம்டாங் ஆறும் டிக்ஹோவ் ஆறும் நாம் டி லாவோ என்னும் பிரம்மபுத்திரா ஆறும் வளைத்த வளமான மண்ணில் அமைந்தது. செ ராய் தோய் பலவகையிலும் முக்கியமான இடம். இது அவர்கள் இந்தியாவின் பெருநிலத்தில் அமைத்த முதல் நகரம். இரும்பு இங்கே அதிகமாக கிடைத்துள்ளது. மேலும் தாய் ஆட்சியாளர்களான அஹொம் மன்னர்கள் நீத்தோர் வழிபாடு கொண்டவர்கள். அவர்களின் முன்னோர் அடக்கம் செய்யப்பட்ட மைதாம்கள் அவர்களின் வழிபாட்டிடங்களும் கூட. அரசர்கள் இறக்கும் தருணங்களைத் தவிர ஒவ்வொரு வருடமும் நீத்தார் வணக்கத் திருவிழாவும் இங்கே மிக பிரம்மண்டமாக நிகழ்ந்தது.

செ ராய் தோய் பற்றி விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நகரின் மையப்பகுதியில் அக்கால அரண்மனைக்கூட்டமும் பெரிய ஏரியும் இருந்தது. ஏரியிலிருந்து நீர் வந்து தேங்கும் வடிவில் நகரைச்சுற்றி பெரிய நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. அது பக்கத்தில் இருந்த ஆறுகளுடன் இணைக்கப்பட்டிருந்தமையால் செ ராய் தோயுக்கான அனைத்துப்பொருட்களும் படகுகள் வழியாகவே வந்தன. படைநீக்கமும் படகுகள் வழியாகவே. அடர்காடுகளால் ஆன இப்பகுதியில் படகுப்போக்குவரத்தே எளிதானது. ஆறுகள் அக்கால நெடுஞ்சாலைகள் போல.

அஹொம் என்றால் பாதுகாக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட என்று பொருள். தாய்லாந்து வம்சாவளி ஆட்சியாளர்கள் தங்களை அவ்வாறு அழைத்துக்கொண்டர்கள். இங்கு வரும்போது அவர்கள் பௌத்தர்களாக இருந்தனர். பின்னர் இந்துக்களாக மாறினர். ஆனால் மாட்டிறைச்சியும் பன்றியிறைச்சியும் உண்ணுதல், பிணங்களை அடக்கம் செய்தல் ஆகிய தங்கள் மரபுகளை விடாது பின்பற்றினர். இன்றும் அஸ்ஸாமின் உயர்குடிகள் அஹொம்களே. அவர்கள் இந்துசாதியினராக அறியப்படுகின்றனர். அஸ்ஸாமியப்பண்பட்டை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

charaideo 8

மைதாம்கள் இந்தியப்பண்பாட்டின் மிக முக்கியமான சின்னங்கள். இன்னமும்கூட இந்தியாவின் மைய ஓட்ட வரலாற்றாசிரியர்களால் கவனிக்கப்படாதவை. இந்தியாவில் ஒரு பிரமிடு மரபு உள்ளது என்பதே வியப்புக்குரியது. மேலும் இந்த மைதாம் மையக்கட்டுமானங்கள் அப்படியே பௌத்த ஸ்தூபிகள் போல உள்ளன. பௌத்த ஸ்தூபிகளுக்கும் இவற்றுக்குமான உறவென்ன என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

மைதாம்களை பார்த்துவிட்டு திரும்பிவந்து ஷிவ்சாகரின் ஏரி ஒன்றின் கரையில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டோம். மங்கிவந்த வெயிலில் மைதாம்களைப் பார்த்தது பெரும் மன எழுச்சியை அளிப்பதாக இருந்தது. கடந்தகாலம் ஒரு கனவாக நம்மைச்சூழும் அத்தகைய தருணங்கள் மிக அபூர்வமானவை.

முந்தைய கட்டுரைவாசிப்பை நிலைநிறுத்தல்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25