எங்கும் நிறைந்தவளே

images

அன்புள்ள ஜெ,

உங்கள் பித்தை இன்று தரிசித்தேன். எங்கெங்கோ இழுத்துச் செல்லும் அத்தியாயம். தாந்த்ரீக மரபில் காமமும் ஓர் வழி என்ற அளவிலேயே அறிமுகம் இருந்த எனக்கு, அம்மரபில் காமம் எவ்வாறு பார்க்கப்படுகிறது, அது எவ்வாறு அறியப் படுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கியது இந்த அத்தியாயம்.

அந்த ஆப்த மந்திரம், “சர்வகல்விதமேவாஹம்! நான்யதஸ்தி சனாதனம்!! ” இப்படி ஓர் பேருருவம் கொள்ளுமென்று நினைக்கவில்லை. அத்தியாயம் முழுவதுமே ஓர் சந்தம். எழுதலில் மெதுவாகத் துவங்கி, புலரி, காலை என்று மிதவேகமேடுத்து, மதியத்தில் உச்சம் கொண்டு, மாலையில் தயங்கி, மயங்கி பின் அமைதலில் பெருமூச்சு விடும் ஓர் சந்தம். பல இடங்களில் சன்னதம்.

முழுக்க முழுக்க காலத்தின்சுழற்சியை, சந்திரனில் துவங்கி சூரியனுக்கு வந்து சந்திரனில் முடியும் ஓர் நாளை, அந்த நாளில் சாத்தியமான அனைத்தையும் தேவியாகவே, சர்வகல்விதமேவாஹம் என்று பார்ப்பதை, அந்த ஓர் வார்த்தை அனைத்துமாவதை உணரும் போது வரும் பரவசம் எழுத இயலாது.

ஆகா அறிந்துவிட்டேன் என்ற உவகையிலேயே மீண்டும் ஓர் முறை வாசித்தால், அங்கே இருந்தது காலத்தின் சுழற்சி அல்ல, காமத்தின் கொண்டாட்டம். எழுந்து, நீண்டு, உடைந்து, துடித்து, நுழைந்து, கடந்து, அதிர்ந்து, அடங்கும் அந்த விளையாட்டில் தேவியின் நினைவன்றி வேறு எது வந்திருந்தாலும் அக்கணமே உடைந்து, பொல பொல வென்றாகும் மலர்பொடி போன்ற, மெல்லிய சிலந்தி வலை போன்ற, வெயில் கண்டவுடன் உதிரும் மென் பனி பொருக்கு போன்ற காமத்தின் இறைவியே எங்கும் உன்னைக் கண்டாலொழிய நிறைந்தமையுமா என் சித்தம்.

காமம் என்பதிலே தான் எத்தனை வண்ணம். நொடியென்றாகும் நாளும், நாள் என்றாகும் கணங்களும் மாறி மாறி வருவது தானே பெருங்காமம். அகம் முழுக்க காமத்தின் வசம் கொடுத்து, சித்தத்தை அந்த சித்தினியில் செலுத்தி, அவளன்றி எதுவுமில்லை என்றுணரும் அந்த முதல் பெருங்காமத்தை, அதன் வலியை, அந்த குருதிதுளியோடு உடலெங்கும் பரவியிருக்கும் பரவசத்தை எழுத இதை விட வேறு எந்த மொழியை தேர்ந்தெடுத்திருந்தாலும் நீர்த்துப் போய் இருக்கும். ஏன் சகதேவன் வரவில்லை என்றிருந்த எனக்கு, ஐவரில் யாருக்குமே கிடைக்காத அந்த பேரனுபவத்தை வழங்கிய உங்களை எப்படி பாராட்டுவேன்.

இதற்கு முன்பு வந்த அத்தியாயத்தில் திரௌபதி சொல்லும் அந்த வார்த்தை, “வியப்புதான். ஐவரில் இளையவரிடமே முழுமை நிகழ்ந்திருப்பது”, அதன் தொடர்ச்சியாக அவன் நெஞ்சில் தலைவைத்து அவள் உறங்கும் அந்தக் காட்சி. முழுக் காதலை அறிந்த ஒருத்தி, அதன் காமத்தை அறிவிப்பதை இன்றைய அத்தியாயம் அட்டகாசமாக உணர்த்தியது. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அத்தியாயம். வரி வரியாக வாசிக்க வாசிக்க பெருகிக் கொண்டே செல்லும் அத்தியாயம். இன்னும் பல நாட்களுக்கு என் உறக்கத்தைத் தூக்கிப் போகப் போகும் அத்தியாயம், “சர்வகல்விதமேவாஹம்! நான்யதஸ்தி சனாதனம்!!”.

இந்த கடிதத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஓர் குறிப்பு: கழிந்த இரு வாரங்களாக ஓர் விசித்திர நிலை, ஒரு கடிதமும் எழுதத் தோன்றவில்லை அல்லது எழுத நினைத்தாலும் வார்த்தைகள் வரவில்லை. இத்தனைக்கும் சிறப்பான பல அத்தியாயங்கள் வெண்முகில் நகரத்தில் வந்து விட்டன. ஆனால் சித்தத்தில் ஏதோ ஓர் அடைப்பு போல. இன்று இந்த அத்தியாயம் அனைத்தையும் உடைத்து விட்டது. அதற்கு ஆயிரம் நன்றிகள்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

அன்புள்ள அருணாச்சலம்,

அந்த அத்தியாயத்தின் முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு.தேவி, நீ விழிதிறக்காத இவ்வாலயத்தின் முகப்பில் வெண்ணீறால் உடல்மூடி வெள்ளெருக்கு மாலைசூடி மண்டைக்கலம் இரண்டேந்தி திசையாடை அணிந்து தனித்தமர்ந்திருக்கிறேன் மண்டைக்கலம் இரண்டு ஏந்தி திசையாடை அணிந்து -திகம்பரனாக- அமர்ந்திருப்பவன் இந்த பாஞ்சாலி சுயம்வர அத்தியாயங்களின் முதலில் வரும் அந்த சாக்தன்

ஐந்து உறவுகளால் ஆராதிக்கப்படும் அன்னையை அறியும் ஆறாவது காதலன்
ஜெ

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகாஞ்சிரம்-கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21