சூரியதிசைப் பயணம் – 8

மாஜிலியில் இருந்து நேராக சிவ்சாகர் நகரை நோக்கி காரில் வந்தோம். வரும் வழியில் சாப்பிடலாமென நினைத்தாலும் இரவுக்குள் சென்றுவிடவேண்டும் எனத் தோன்றியதனால் எங்கும் தாமதிக்கவில்லை. வழியில் ஒரு கடையில் ஜிலேபி , காரவடை, டீ சாப்பிட்டோம். ஷிவ்சாகரில்தான் நண்பர் ராம்குமார் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்தார்.

ஷிவ்சாகருக்கு வந்தது நல்ல நாள், சிவராத்திரி. ராம்குமார் எங்களை புறவழிச்சாலை வழியாக வரச்சொல்லியிருந்தார். அவர் ஏற்பாடுசெய்திருந்த அலுவல்விடுதிதான் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம். அதற்கு நேர் எதிரில் பிரம்மாண்டமான குளம். அதன்பெயர்தான் சிவசாகரம். அசாமில் இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு குளங்கள்தான் இந்தியாவிலேயே பெரிய குளங்கள் என்கிறார்கள். கும்பகோணம் மகாமகக்குளத்தை விட இருமடங்கு பெரியது. 257 ஏக்கர்.

sivasagar-temple lake view

ஏரி மிகச்சுத்தமாக இருந்தது.தமிழ்நாட்டைப்போல ஓட்டல், ஆஸ்பத்திரிக்கழிவுகளையும், மாநகராட்சி குப்பையையும் குளங்களில் கொட்டும் வழக்கம் இங்கில்லை. காரணம், பக்தி. அத்துடன் பொதுவாகவே அஸ்ஸாம் நம்மைவிடத் தூய்மையானது. சாக்கடைகள் குப்பைக்குவியல்களை பார்ப்பது அரிது.

முன்பு ரங்க்பூர் என்று அழைக்கப்பட்ட ஷிவ்சாகர் அசாமின் மிகப்பெரிய அரசகுலமான அஹொம் வம்சத்தின் தலைநகரம். ஆறுநூற்றாண்டுகாலம் எதிரிகளில்லாமல் அஸ்ஸாமை ஆண்டது அஹொம் குலம். 1819இல் பர்மிய அரசர்கள் அஹொம் அரசர்களை வென்று அரசகுலத்தையே கருவறுத்தார்கள். 1825-இல் பர்மியர்களிடமிருந்து இப்பகுதி பிரிட்டிஷ் அரசால் கைப்பற்றப்பட்டது.

சிவ்சாகர் ஏரியும் அருகே உள்ள சிவ-விஷ்ணு கோயிலும் போர்ஃபுக்ரி என்ற குன்றின் மேல் உள்ளது . நாங்கள் செல்லும்போது சிவராத்திரி விழாவால் ஆலயமும் வளாகமும் ஒளிவெள்ளத்தில் மூழ்கி இருந்தன. எல்லா திருவிழாக்களையும்போல ஏராளமான சோப்பு-சீப்பு-கண்ணாடி கடைகள். ஒரு புதிய ஊரில் மிகமிக ஆர்வமூட்டுபவை சந்தைகள்தான். கல்சட்டிகள், பிளாஸ்டிக் பொம்மைகள், கைநெசவுக்கான பொருட்கள், வேட்டைப்பொருட்கள், இனிப்புகள், ஆடைகள், நகைகள், கொம்பில் செதுக்கப்பட்ட ஏராளமான கலைப்பொருட்கள்…

charaideo modiam1

இங்கே திருவிழாக்களில் பெண்கள் நிறைய பங்கெடுக்கின்றனர். சென்ற இருபத்தைந்தாண்டுகளில் தமிழகத்தில் திருவிழாக்களில் பெண்களின் பங்கேற்பு குறைந்தபடியே வருகிறது. திருவிழாக்கள் குடிக்களியாட்டங்களாக ஆகி அடிதடி, பெண்களைச் சீண்டுதல் என மாறிவிட்டதே காரணம். இங்கே திருவிழாக்கள் பக்தியுடன் கலந்திருப்பதனால் குடி கிடையாது. அஸ்ஸாமில் பொதுவாகவே பெண்களை அவமதிப்பது கிடையாது. ஏனென்றால் இது சமீப காலம்வரை தாய்வழிச்சமூகம். பெண்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் உள்ள இடம் மிக முக்கியமானது.

அஸ்ஸாமை ஆண்ட அஹொம் குலத்தின் வரலாற்றைப்பற்றி ராம்குமார் நிறையவே சொன்னார். அஹொம் மக்கள் தாய்லாந்தில் இருந்து நாகாலாந்து வழியாக வந்து குடியேறியவர்கள். மங்கோலிய இனத்தவர். தாய்லாந்தில் பெரிய அரசகுலம் உருவாகி ஆட்சியும் பண்பாடும் வலுவாக வேரூன்றியபின் தாயாதிச்சண்டை காரணமாக இங்கே வந்தார்கள். இது புத்தரின் பூமி என்பது முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது.

Near shiva temple

அஹொம் ஆட்சியாளர்கள் புத்த மதத்தவர். ஆனால் அந்தபுத்தமதமானது தாய்லாந்தின் பலவகையான பண்பாட்டுக்கூறுகள் கலந்த தனித்துவமான ஒரு வழிபாட்டுமுறையாகவே இருந்திருக்கிறது.

30-ஆவது அஹொம் அரசரான ராஜா ருத்ர சிங்கா 1707-இல் இந்த நகரைக் கட்டி இதற்கு செ மோன் என்று பெயரிட்டார். எட்டுவருடம் இந்த நகரம் கட்டப்பட்டது. சிவசாகரம் ஏரியின் கரையில் உள்ள ஷ்வ் டோல், பிஷ்ணுடோல் என்ற கோயில்கள் அப்போதுதான் கட்டப்பட்டன. டோல் என்றால் அஸ்ஸாமிய மொழியில் கோயில். இதன் உச்சிப்பகுதி பூகம்பத்தால் சற்று சிதைந்தாலும் பின்னர் சீரமைக்கப்பட்டது.

மிகப்பெரிய கோயில் எண்கோணவடிவில் அமைந்த அடித்தளம் மேல் பட்டைக்கூம்பு வடிவம் கொண்ட கோபுரம். நாகர பாணி கோயில் என்று சொல்லலாம். ஆனால் சிற்பங்களோ அணிவளைவுகளோ இல்லாத நேரான கூம்பு. அஸ்ஸாமுக்கே உரிய தனித்துவம் கொண்ட கோபுரக்கலை இது.

இரவில் தெருவெங்கும் அழகிய இளம்பெண்கள் செந்நிற ஒளியில் சென்றுகொண்டிருந்தனர். கொழுவிய கன்னங்களும் மெல்லிய கழுத்தும் இடுங்கிய கண்களும் சிறிய மூக்கும் சிறிய பொம்மைபோன்ற உடலும் நீள்கற்றைக்குழலும் கொண்ட மங்கோலிய மஞ்சள் மேனிப்பெண்கள். சற்றே சுருண்ட கூந்தலும் மாநிற வட்டமுகமும் சிறிய கண்களும் கொண்ட கலப்பினப் பெண்கள். பளிச்சிடும் மஞ்சள்நிறமும் பரந்த உடலும் கொண்ட பெண்கள். கரிய நிறம் கொண்ட மத்தியப்பிரதேசத்தின் கோண்டு இனப்பெண்கள்.

அசாம் இனக்கலப்பின் நிலம். எந்தப்பகுதியிலும் நாலைந்து இனத்தைச் சேர்ந்த மனிதர்களை காணமுடியும். மாணவர்கள் செல்வதைக் கண்டால் அது இன்னமும் புரியும். சீட்டுக்கட்டை விரித்தது போல வெவ்வேறு இனத்தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஓர் எல்லையில் தூய சீன முகம். மறு எல்லையில் கோண்டுகளின் தூய கறுப்பின முகம். நடுவே இவையிரண்டும் கலந்து உருவான நூற்றுக்கணக்கான உருவ வேறுபாடுகள்.

அஸ்ஸாமின் இனப்பிரச்சினை எளிய விடைகள் கொண்டது அல்ல. இங்குள்ள பூர்வகுடிகள் போடோக்கள். தாய்லாந்திலிருந்து வந்து அறுநூறாண்டு காலம் இப்பகுதியை ஆண்ட அஹொம் மக்கள் முக்கியமான இனக்குழு. . பர்மியப்பகுதியில் இருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டுமுதல் வந்து குடியேறிய பத்துக்கும் மேற்பட்ட சிறிய பழங்குடி இனக்குழுக்கள் உள்ளன. இவர்களெல்லாமே மஞ்சள் இனத்தவர்.

பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோட்டக்கூலிகளாக மத்தியப்பிரதேச கோண்டு பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர். மக்கள் தொகையில் அவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் கருப்பினத்தவர். 1970-களில் பங்களாதேஷிலிருந்து இஸ்லாமியக் குடியேற்றக்காரர்கள் இங்கே வந்து நிலங்களை கைப்பற்றி காங்கிரஸ் அரசின் உதவியால் நிலப்பட்டாவும் குடியுரிமையும் பெற்றனர். இங்கு அதற்குமுன் இஸ்லாமியர் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். இதைத்தவிர தோட்டங்களில் வேலைசெய்யவும் வணிகத்திற்கும் வந்த வங்காளிகளும் சிந்தி மார்வாரிகளும் இங்குள்ளனர்.

இங்குள்ள பூர்வகுடிகள் இங்கே இன்றைக்கு சிறுபான்மையினர். நிலம் அவர்களிடம் இல்லை. வணிகமும் அவர்களிடம் இல்லை. அரசியலதிகாரமும் இல்லாமலாகியது. அதிலிருந்தே அஸ்ஸாம் பிரச்சினை தொடங்கியது. பலவகையான ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒரே சமயம் மொத்த அஸ்ஸாமியப்பழங்குடிகளும் தங்கள் இல்லத்தை விட்டு வெளியே வந்து பாத்திரங்களால் ஒலியெழுப்புவது போன்ற போராட்டங்கள் புகழ்பெற்றவை.

for your satisfaction

ஆனால் அதிகாரபோதையில் இருந்த இந்திராகாந்தி அந்தப் போராட்டங்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அதிகாரிகளைக்கொண்டு அடக்கவே முயன்றார். விளைவாக போராட்டம் வன்முறை நோக்கி சென்றது. பர்மா அதற்கு உதவிசெய்தது. வன்முறை உச்சத்தை அடைந்தபின் ராஜீவ் காந்தி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார். அதன் விளைவாக அஸ்ஸாம் ஒப்பந்தம் உருவானது.

அதன்படி இன்று போடோக்களின் பகுதி போடோ கௌன்சிலால் ஆளப்படுகிறது. அப்பகுதியின் ஆட்சியதிகாரம் முழுக்க போடோக்களுக்கே அளிக்கப்பட்டது. அஸ்ஸாமில் அஸ்ஸாம் இளைஞர் போராட்டக்குழுவே அஸ்ஸாம் கணபரிஷத் என்ற பேரில் ஆட்சியைப்பிடித்தது. மஹந்தா இந்தியாவின் மிக இளவயது முதல்வரானார். ஆனால் பிரச்சினைகளை தீர்க்கவோ அஸ்ஸாமை வன்முறையின் விளைவான தேக்கநிலையில் இருந்து மீட்கவோ அவரால் முடியவில்லை. மேலும் கத்துக்குட்டித்தனமான கல்வி, நிலச்சீர்திருத்தங்கள் நிலைமையை மேலும் தேக்கநிலை நோக்கி இட்டுச்சென்றன.

இன்று காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. சமீபத்திய தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றுவருகிறது. போடோக்களின் நிலப்பகுதி போடோ கௌன்சிலால் ஆட்சிசெய்யப்படுகிறது. அது பெரும்பான்மைக்குமேல் சிறுபான்மையினரின் ஆட்சிதான். போடோக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அதில் இருந்து பல சிறிய வன்முறைக்குழுக்கள் உருவாகி வந்து கொள்ளைகளில் ஈடுபடுகின்றன. அவர்களின் தலைவர்கள் வடக்கு பர்மாவில் அந்த அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இல்லாத மலைக்கிராமங்களில் தங்கியிருக்கிறார்க்ள். அங்கே ஆயுதங்கள் எளிதாகக் கிடைக்கின்றன.

இக்குழுக்களில் அதிகபட்சம் ஐம்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் வன்முறைநிகழ்ச்சிகளை உருவாக்க முடிகிறது. அரசாங்க நடவடிக்கையால் போடோ வன்முறைக் குழுவைச்சேர்ந்த நான்குபேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகதான் சமீபத்திய படுகொலைகள் நிகழ்ந்தன.

அதிலும் ஒரு நுட்பம் உள்ளது. போடோக்களின் இன்றைய முதன்மையான எதிரிகள் வங்கதேச முஸ்லீம் குடியேறிகள். ஆனால் அவர்களை போடோக்கள் எதிர்க்கமுடியாது. அவர்கள் மெல்லமெல்ல ஆயுதம்தாங்கியவர்களாக ஆகிவிட்டனர். அல்கய்தாவின் ஊடுருவல் இருப்பதாக இந்திய உளவுத்துறை சொல்கிறது. ஆகவே அவர்கள் எடுத்துக்கொண்ட இலக்கு கோண்டு மக்கள்.

கோண்டு மக்கள்தான் அஸ்ஸாமிம் மிகமிகப் பரிதாபகரமான பகுதியினர். அவர்கள் இங்கே எஸ்டேட் வேலைக்காக கொண்டுவரப்பட்டனர். இன்றும் தொண்ணூறுசதவீதம் பேர் எந்தப்படிப்பறிவும் இல்லாமல் கொத்தடிமை வேலைசெய்கிறார்கள். கல்வி கற்க முடியவில்லை. அவர்கள் மத்தியப்பிரதேசத்தில் அட்டவணைப் பழங்குடிகள். ஆனால் அஸ்ஸாமில் அவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் இல்லை. அவர்களுக்கு விவசாயமோ மாடு மேய்த்தலோ கைவரவில்லை. அஸ்ஸாமில் குழந்தை இறப்பு விகிதம், சுகாதாரக்குறியீட்டெண், கல்விக்குறியீட்டெண் அனைத்தையும் கீழே கொண்டுவருபவர்கள் இவர்களே.

இந்த கோண்டுபழங்குடிகளைத்தான் போடோக்கள் தாக்கினர். அவர்களை அடிமைகளாக வைத்து வேலைவாங்கிய மிகச்சில இஸ்லாமியரே தாக்கப்பட்டனர். ஆனால் இந்திய ஊடகங்கள் இஸ்லாமியர் தாக்கப்பட்டதாக மட்டுமே செய்தி வெளியிட்டன. அதை இஸ்லாமிய இனப்படுகொலை என்ற அளவில் கொண்டுசென்றன இஸ்லாமிய இயக்கங்கள். கோண்டு பழங்குடிகளுக்காக எவரும் குரலெழுப்பவில்லை. அவர்களுக்காகப்பேச மத்தியப்பிரதேசத்தில் இருந்து பாபுலால் மராண்டிதான் வந்தார்.

charaideo moidam 6

கோண்டு பழங்குடிகள் இங்குள்ள அரசால் முழுமையாகவே கைவிடப்பட்டவர்கள். அவர்களுக்கு சற்றேனும் உதவும் சக்தியாக உள்ளது கிறித்தவ மதமாற்ற அமைப்புகளே. அவர்கள் கல்விகற்கவும் எளிய மருத்துவ உதவிகளைப்பெறவும் அவையே உதவுகின்றன. அவர்கள் வெளியே செல்வதற்கான வாயிலாக இருப்பதும் கிறித்தவ மிஷனரி மட்டுமே.

சிவராத்திரி கோலாகலத்தில் சாஜன் முண்டா என்பவர் தொலைந்து போய்விட்டார் என ஒலிபெருக்கி கூவிக்கொண்டே இருந்தது. சிவ்ஷாகர் ஏரியை நடந்து சுற்றிவந்தோம். சிவராத்திரியின் பளபளப்பு கோலாகலம். திரும்பத்திரும்ப அந்தக் குரல் தொலைந்துபோன அந்த கோண்டு பழங்குடியை கூவி தேடிக்கொண்டே இருந்தது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23
அடுத்த கட்டுரைசொல்வெளியும் நிலவெளியும்