சூரியதிசைப் பயணம் – 7

மறுநாள் காலை ஆறரை மணிக்கு எழுந்து டீ குடிக்கச் சென்றோம். மாஜிலி எட்டு மணிக்கே விழித்தெழும். முக்கியமான காரணம் சமீப காலம் வரை நீடித்த உல்ஃபா கலவரம், அஸ்ஸாமில் நிரந்தரமான பீதியை நிலைநிறுத்தி வணிகம் தொழில் அனைத்தையுமே பக்கவாதம் வந்து படுக்கச்செய்துவிட்டது. மெல்ல மெல்லத்தான் அஸ்ஸாம் மீண்டுவருகிறது. ஒரு சிறிய கடையில் டீ இருந்தது. அதை குடிக்க ஒரு கிடா வாசலில் காத்திருந்தது. டீ குடித்து அதற்கும் ஏதாவது வாங்கிக்கொடுக்கவேண்டும் என்பது அங்கே வழக்கம் என அது நிறுவியிருந்தது.
face
மாஜிலியில் 144 கிராமங்கள் உள்ளன. மிசிங் என்ற அருணாசலபிரதேசத்து பழங்குடிகளே இங்கு அதிகம். மஞ்சள் கலந்த செம்பு நிறமும் மங்கோலிய முகமும் கொண்டவர்கள். யானைப்புல்லையும் மூங்கிலையும் கொண்டு கட்டப்பட்டு களிமண் பூசப்பட்ட சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். இங்குள்ள வீடுகளெல்லாமே தூண்கள் மேல் கட்டப்பட்டவை.

இந்த ஊர் பெண்கள் ஜாக்கெட் அணிந்து மேலே நம்மூரில் பெண்கள் குளிக்கையில் கட்டுவதுபோல மார்பின்மேல் துணியை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.. மரங்களில் குடைந்த சிறிய படகுகளை பயன்படுத்துகிறார்கள். அவை பல இடங்களில் சேற்றில் நின்றன. ஏனென்றால் இது இங்கே கோடைகாலம். பிரம்மபுத்திரா பாதியாக குறைந்துவிட்டிருக்கிறது.

9

மாஜிலி மிக வளமான மண். முழுக்கமுழுக்க வண்டல். ஆகவே இங்கே விவசாயம் செழித்தது. பல்லாயிரம் பேர் வந்து குடியேறினர். 16-ஆம் நூற்றாண்டில் இங்கே ஸ்ரீமந்த சங்கரதேவர் என்ற துறவி வந்து தங்கி ஒரு மடத்தை அமைத்தார். சங்கரதேவர் என பெயர் இருந்தாலும் அவர் ஒரு வைணவர். அவரும் அவருடைய முதல் மாணவரான மாதவதேவரும் அமைத்த மடங்கள் சத்ராக்கள் எனப்படுகின்றன. அவை புத்தமதத்தின் மடாலயங்களின் பாணியில் அமைந்தவை. இளமையிலேயே இளைஞர்களை தங்கவைத்து வைணவக்கல்வி அளித்து நாடெங்கும் அனுப்புகிறார்கள். அவர்கள் துறவிகளாக இருக்கவேண்டும், விரும்பும்போது மணம் செய்துகொள்ளலாம்.

4

இன்று அறுபதுக்கும் மேற்பட்ட சத்திரங்கள் உள்ளன. இந்தநிலம் முழுக்கமுழுக்க வைணவர்களால் ஆனது. இன்றும் செழித்துள்ள மிக விரிவான ஒரு நவ வைணவப்பண்பாடு இங்குள்ளது. சங்கரதேவர் புஷ்டிமார்க்க மரபிலிருந்து வந்தவர். ஆகவே கிருஷ்ணவழிபாடே முதன்மையாக இவர்களால் அனுசரிக்கப்படுகிறது. வைணவத்துறவிகள் மஞ்சள் ஆடை அணிகிறார்கள். இந்தவகையான ஒரு நவீன மடாலய அமைப்பு இந்தியாவில் வேறெங்கும் வைணவத்திற்கு கிடையாது.. சமீபகாலமாக தீவிரமான கிறித்தவ மதமாற்றம் இங்கே நிகழ்ந்துவருகிறது. ஒரு கிராமம் கிறித்தவ கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

3

காலையில் ஔனியாட்டி சத்ராவுக்கு சென்றோம். அதை ஒரு கட்டடத்தொகை என்று சொல்லலாம். தகரக்கூரைபோட்ட கட்டடங்கள் நடுவே சிறிய ஆலயம். அங்கே நாநூறு வைணவ மாணவர்கள் படிக்கிறார்கள். நிரஞ்சன் பத்கதேவர் என்பவரால் அமைக்கப்பட்ட சத்ரா இது. இதுவே மாஜிலியில் இன்றிருக்கும் சத்ராக்களில் மிகப்பெரியது. இன்று இங்கே 125 துறவிகள் இருக்கிறார்கள்.

10

காலையில் அங்குள்ள கோயில்களும் அருங்காட்சியகமும் திறக்கவில்லை. ஆகவே திரும்பி இன்னொரு மடாலயமான தக்கின்பத் சத்ரா சென்றோம். செல்லும் வழியில் இருபக்கமும் மிக விரிந்த வயல்வெளிகள். அறுவடை முடிந்து பொன்னிறமாக காலையொளியில் பனிப்புகை தவழக்கிடந்தன. கூழைக்கடாக்கள் நாரைகள் கொக்குகள் என பறவைக்கூட்டம். காரை முன்னால் செல்லும்படி ஆணையிட்டுவிட்டு நடந்தோம். காலைநடை உடலுக்குள் குருதியை இளவெம்மையுடன் ஓடச்செய்தது. காலையில் காட்சிகள் ஒவ்வொன்றும் புதியதாக துலங்கியிருந்தன.

தக்கின்பத் சத்ரா சிறியது. பனமாலிதேப் [வனமாலிதேவர்] என்பவரால் அமைக்கப்பட்டது. இங்குள்ள எல்லா சத்ராக்களிலும் மீன் வளர்ப்பதற்கும் குளிப்பதற்கும் உரிய பெரிய குளங்கள் உள்ளன. நாங்கள் செல்லும்போது இருவர் அவற்றில் நீரை அள்ளி மேலே விட்டு குளித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் சிறிய படகில் நீரில் படர்ந்திருந்த கொடிப்பாசிகளை அள்ளிக்கொண்டிருந்தார்.

இந்தமடாலயங்களில் பொதுவாக சிற்பங்கள் என ஏதுமில்லை. கட்டடக்கலையும் பெரிதாக இல்லை. இங்குள்ள சிறப்பு என்பது ராசலீலா எனப்படும் பெரும் திருவிழா. அனைவரும் கிருஷ்ணனாகவும் ராதையாகவும் வேடமிட்டு ஆடிப்பாடி களிக்கும் மூன்றுநாள் திருவிழா இன்று பெரிய சுற்றுலாக்கவர்ச்சியாக உருவாகி வருகிறது.

ராசலீலாவின் மிகப்பெரிய அழகு என்பது முகமூடி நடனம். மாஜிலிக்கே உரிய தனிக்கலை என்றால் அதுதான். ஷாமாகுரி சத்ரா அருகே முகமூடிகள் செய்யும் ஒரு கலைகிராமம் உள்ளது என்றனர். விடுதிக்கு வந்து காலையுணவை உண்டுவிட்டு அதைப்பார்ப்பதற்காக சென்றோம். சுமார் ஐம்பது வீடுகள் கொண்டது இது. அஸ்ஸாமிய பாரம்பரிய மூங்கில் வீடுகள். ஆனால் அனைவருமே வசதியானவர்கள் என தெரிந்தது.

6

இப்போது அந்த கிராமம் ஹேமசந்திர கோஸ்வாமி என்பவரால் தலைமைதாங்கி நடத்தப்படுகிறது. அவர் முகமூடிகள் செய்வதிலும் அணிந்து ஆடுவதிலும் பெரும்புகழ்பெற்ற முதல்தரக் கலைஞர். அவரது மாணவரான அனந்த கலிதா என்ற இளைஞர்தான் முகமூடிகளை எடுத்துக் காட்டினார். பகாசுரன் போன்ற அரக்கர்கள், கருடன், மோகினி என விதவிதமான முகமூடிகள்.

2

இவை கண்களும் வாயும் அலகும் அசையக்கூடியவகையில் மூங்கிலாலும் புல்லாலும் செய்யப்பட்டு தாள் ஒட்டி மேலே வண்ணம் பூசப்பட்டவை. பழங்குடித்தன்மை கொண்ட முகமூடிகள். ஆனால் செவ்வியல்கலைகளுக்குரிய நுட்பங்கள் கொண்டவை. அம்முகமூடிகளை அணிந்துகொண்டு ஆடுவதும் அக்கலையின் ஒரு பகுதி. அனந்த கலிதா கருட முகமூடி அணிந்த போது பருந்தின் அசைவுகள் அவரில் கூடின. சட் சட் என தலை திருப்பினார். சிலிர்த்துக்கொண்டார். அரக்க முகமூடிகள் அணிந்தபோது கோழி சிலிர்ப்ப்து போல உடல் அசைய சிம்மம் போல கர்ஜனை செய்தார்.

ஆனால் அவரது பிரியமான வேடம் மோகினி. அசாமிய முகம் கொண்ட அழகி. அதை அணிந்து தன் கூந்தலை கையால் அளைந்தபடி ஓரக்கண்ணால் நோக்கியும் நெளிந்தும் வளைந்தும் அவர் நடந்தபோது சில கணங்களுக்குள் பேரழகி ஒருத்தியை நம் கற்பனை கண்டுவிடுகிறது.

1

முகமூடிகளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அவை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகர கணத்தில் உறைந்தவை என்பதே. முகம் மாறுவதுபோல அவை மாறுவதில்லை. அந்த உணர்ச்சியை உடலசைவுகள் மூலம் விரிவாக்கம் செய்தபடியே செல்லமுடியும். முகமூடி போட்டு ஆடும் கலை உலகம் முழுக்க உள்ளது. கேரளத்தில் தெய்யம் முகமூடி ஆட்டம்தான். ஆப்ரிக்க முகமூடிக்கலை உலகப்புகழ்பெற்றது. சீன முகமூடிக்கலையையும் நான் கண்டிருக்கிறேன். முகமூடி ஒரு சிற்பம். ஆனால் அதனுள் மனிதன் இருக்கிறான். ஆகவே உயிரூட்டப்பட்டது அது.

7

8

மாலை நான்குமணிக்கு படகு போய்விடும். ஆகவே சாப்பிடாமலேயே விரைந்து கிளம்பிக்கொண்டிருந்த படகை பிடித்துவிட்டோம். படகுத்துறையின் புண்ணாக்குக் கேக்கை நாங்கள் மீண்டும் உண்ணவேண்டுமென விதி இருந்திருக்கிறது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22
அடுத்த கட்டுரைபதுங்குதல்