சூரியதிசைப் பயணம் – 6

நதி என நாம் நினைப்பதன் சித்திரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இளமையில் நானறிந்த நதி என் வீட்டின் கொல்லையில் ஓடிய வள்ளியாறுதான். வற்றாத நதி. அதன் படுகை அதிகம் போனால் அரைகிலோமீட்டர் அகலம். மழைக்காலத்தில் செந்நிறநீர் நிறைந்தோடும்.

2 (2)

எட்டாவது படிக்கையில் முதல்முறையாக தாமிரவருணியை பார்த்தேன். இருமடங்கு பெரிய நதி. என் மனம் அன்றுகொண்ட விம்மிதத்தை இப்போதும் நினைவுகூர்கிறேன். அதன்பின் காவேரியைப்பார்த்தபோது தாமிரவருணி சிறியதாகியது. அதன்பின் கிருஷ்ணையையும் கோதாவரியையும் பார்த்தபோது நதி என்ற கற்பனையையே மாற்றியமைத்தேன். கிருஷ்ணா நதி மீது ரயில்பாலத்தில் முடிவில்லாமல் சென்றுகொண்டே இருக்கையில் ஒரு கணத்தில் இது என்ன நதியா ஏரியா என எழும் பிரமிப்பை வட இந்தியாவில் பயணம்செய்யும் பெரும்பாலான தமிழர்கள் அடைந்திருப்பார்கள்

Majuli walk vkr1

அதன்பின் கங்கை. அதன்பின் பிரம்மபுத்திரா. அதன்பின் மிஸிஸிப்பி.. அதன்பின் கொலராடோ. நான் பார்த்த பெரிய நதிகள் பல. இனி என்னை எந்த நதி திகைப்படையச்செய்யும் என எண்ணியிருந்தேன். இம்முறை மீண்டும் பிரம்மபுத்திராவைப்பார்த்தபோது பலநிமிட நேரம் சொல்லின்மையை அடைந்தேன். மனம் புத்தி ஆணவம் மூன்றும் பணிந்து கரைந்து மறையும் தியானநிலை

இந்தியாவின் மிகப்பெரிய நதி என்றால் அது பிரம்மபுத்திராதான். கங்கை அதில் பாதிதான். காவேரி அதனுடன் ஒப்பிட்டால் சிறு ஓடை.. கரை ததும்பித்தான் கோடையிலும் செல்கிறது. அசாமை அடைந்ததும்தான் அது சமவெளியில் ஓடுகிறது ஆகவே பரந்து விரிந்து பலப்பல கிளைகளாக ஆகி ஒழுகிச்செல்கிறது ஒவ்வொரு நதிக்கிளைகள் நடுவிலும் மிகப்பெரிய மணல்திட்டுக்கள். ஒவ்வொன்றும் ஒரு நாகர்கோயிலுக்குச் சமம். மறுகரை என்பது பெரும்பாலும் பிரம்மபுத்திராவில் இந்த நதிக்குறையின் விளிம்பே.

Majuli Vkr4

16 ஆம் தேதி காசிரங்காவிலிருந்து நேராக பிரம்மபுத்திராவை அடைந்தோம். மூன்றுமணிநேரப்பயணம். பிரம்மபுத்திராவின் நடுவே உள்ள மாஜிலி என்ற ஆற்றிடைக்குறைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நதித்தீவு. 1250 சதுரகிலோமீட்டராக இருந்த இதன் பரப்பு பல முறை பிரம்மபுத்திராவால் விழுங்கப்பட்டு அரிக்கப்பட்டு இப்போது 421 சதுரகிலோமீட்டராக இருக்கிறது .2001ல் வந்த வெள்ளத்தில் மாஜிலியின் மூன்றில் ஒரு பங்கு கரைந்து கடலுக்குச் சென்றுவிட்டது

மாஜிலிக்குச் செல்ல பெரும்படகுகள் –அல்லது இரும்புத்தெப்பங்கள் என்று சொல்லவேண்டுமோ?- உள்ளன. படகுத்துறையே ஒரு பெரிய படகுதான். ஏனென்றால் நீர்மட்டம் வருடத்தில் ஐம்பது முறைக்குமேல் மாறக்கூடியது. ஒரு படகில் ஐந்நூறுக்கும் மேல் மனிதர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்கள் பத்துப்பதினைந்து கார்கள் மலைமலையாக பொதிகள் ஏற்றப்பட்டபின் கிளம்பியது.

Majuli Vkr3

மாலைநான்கு மணிக்கு கடைசிப்படகு. அதன்பிறகு படகுப்போக்குவரத்து இல்லை. பிரம்மபுத்திராவில் இரவில் படகுகள் செல்லமுடியாது. மணல்திட்டுகளும் சுழிகளும் அபாயகரமானவை. ஆகவே காரில் நிற்காமல் வந்தோம். மதிய உணவு சாப்பிடவில்லை. படித்துறையில் இருந்த சிறிய தற்காலிகக்கடைகளில் பழகிப்போன புண்ணாக்கால் செய்யப்பட்ட கேக்கையும் டீயையும்தான் சாப்பிட்டோம்

மாஜிலி என்றால் நடுநிலம் என்று பொருள் ஐநூறாண்டுகளுக்கு முன்னர்தான் இது விரிந்து பெரிய தீவாக ஆகியிருக்கிறது 1661 முதல் 1696 வரை நடந்த தொடர் பூகம்பங்கள் அசாமின் நில அமைப்பையே மாற்றியமைத்தவை. அதன் வழியாக அசாமின் பண்பாட்டிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.. அதன் வழியாக பிரம்மபுத்திரா திசைமாறி ஒழுகத்தொடங்கியது. 1750ல் பதினைந்து நாட்கள் தொடர்ந்து பொழிந்த மழையும் பெருவெள்ளமும் பிரம்மபுத்திராவை இரண்டு பெரிய பெருக்குகளாகப்பிளந்தன. விளைவாக உருவானதே மாஜிலி

Majuli Vkr2
பிரம்மபுத்திராவை மாலைவேளையில் கடந்துசெல்வது வாழ்வின் மகத்தான அனுபவங்களில் ஒன்று. நான்கு மணி என்றால் நமது ஊரில் ஐந்தரை மணிபோல. மஞ்சள் வெயில். தெளிந்த நீலநீர்வெளி. இளம் குளிர். ஓசையே இல்லை. அவ்வப்போது செல்லும் பயணப்படகுகள். இருகரைகளிலும் கிராமங்கள் இல்லை. ஆற்றிடைக்குறைகளின் மணல்மேடுகளும் கரைக்காடுகளும் மட்டுமே.

படகின் மேல் கூரையில் நின்றபடி சென்றோம். பெரிய உருத்திராட்ச மாலைபோல நீரில் வளைந்து சென்றன நீர்க்காகங்கள். நீரிலிருந்து கனத்த புகை என எழுந்து வளைந்து சென்றன நாரைக்கூட்டங்கள். வாத்துக்கூட்டங்கள் நீரில் நீந்தும்போது உருவாகும் அலைவடிவம் நீர்வலை போல அவற்றைச் சூழ்ந்து சென்றது. மோனம் மிகுந்த தருணம். முழு விடுதலைக்கு அண்மையில் செல்லும் தருணம்.
Majuli boat vkr1

மாஜிலியில் இறங்கிச் செல்லும்போது பயணிகளை படித்துறையில் இருந்து நகருக்குள் கொண்டுசெல்லும் பேருந்து மணலில் மாட்டிக்கொண்டது. பிரம்மபுத்திராவின் மணல்கரையே ஐந்து கிலோமீட்டருக்கு மேல் அகலமானது. சாலை போடமுடியாது. மணல். ஆனால் மென்மையான மணல். கட்டுமானத்துக்கும் உதவாது. மணல்மேல் யானைப்ப்புல்லை பரப்பி சாலையாக்கியிருந்தனர்.

பேருந்தை மீட்டு எடுக்க ஒருமணிநேரமாகியது. நாங்கள் இறங்கி தள்ளினோம். பேருந்தை சற்று பின்னால் எடுத்தபின் முன்னால் கொண்டுசெல்லலாம் என்று கே.பி. வினோத் அளித்த ஆலோசனைதான் கடைசியில் வென்றது. அதன்பின்னர் நாங்கள் மாஜிலிக்குள் நுழைந்தோம்.
IMG_1047
மாஜிலியில் இருந்த சர்க்யூட் ஹவுஸுக்கு வந்துசேர்ந்தோம். மாலையுணவு அங்கே நேரமாகும் என்றார்கள். வெளியே உணவு வேண்டுமென்றால் முன்னரே சொல்லியனுப்பவேண்டும், சொல்லியனுப்பியபின் ஒரு சுற்றுலா விடுதியில் சாப்பிடச்சென்றோம். அங்கே உணவு வர மேலும் ஒரு மணிநேரமாகியது. நல்ல குளிர் இறங்கிக்கொண்டிருந்தது. ஏழரை மணிக்கே கூரிருள். ஓலைக்கொட்டகையில் அமர்ந்து சாப்பிட்டோம்
11
இப்பகுதியின் அரிசி மிகச்சுவையானது கோமல் சால் .என்கிறார்கள். துணியில் கட்டி கொதிநீரில் நீரில் பதினைந்து நிமிடம் போட்டு எடுத்தால் சோறு. சற்று ஒட்டும்தன்மைகொண்டது. இங்கே இன்னொரு சிறப்புணவு பட்டாணிக்கடலையை விட கொஞ்சம் பெரிய உருளைக்கிழங்கு. அதை சுண்டல்போலச் செய்த பொரியல் நான் சமீபத்தில் சாப்பிட்ட மிகச்சிறந்த உணவு. சிறந்த மீன் கிடைக்கும். ஆனால் உணவுக்கு ஆணையிட்ட சைவ உணவுக்காரரான கிருஷ்ணன் அனைவருக்கும் சைவமே போதும் என எங்களுக்குத்தெரியாமல் சொல்லிவிட்டிருந்தார்
2 (1)
மாஜிலியின் குளிர் ஏறி ஏறி வந்தது. இமையக்குளிர் போல வறண்ட குளிர் அல்ல. நீராவி நிறைந்த குளிர் இது. கோடைகாலத்தில் மிகக்கடுமையாகப் புழுங்கும் என்றார்கள். வியர்வை ஊறி ஆடைகள் நனைந்துவழியுமாம். 2001ல் வந்த வெள்ளத்தில் அந்த விடுதியிலேயே இடுப்பளவு நீருக்குள் இருந்ததாம். அதாவது மொத்த மாஜிலியே நீருக்குள் இருந்திருக்கிறது. நிலம் காணாமலாவதைப் பற்றி எண்ணிக்கொண்டேன். வாழ்ந்த நிலம் மறைந்து போவது எவ்வளவு பெரிய கதை. யாராவது நாவலாக எழுதியிருப்பார்களா?

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21
அடுத்த கட்டுரைஉச்சவழு- கடிதம்