கும்பமேளா – 6

பிரம்மாண்டமான வரிசை நெரிந்து நெரிந்து சென்று கொண்டே இருந்தது. பின்பு தற்காலிகப்பாலங்களில் ஏறி மறுபக்கம் சென்று படித்துறைக்கு திறந்தது. அங்கே மக்கள் திரள் ஒரு வண்ணக்குளம் போலிருந்தது. பூஜைகளின் போது மலர்க்குவியல்கள் கொட்டப்பட்ட குளத்தில் பலவண்ணங்களில் அவை படலமாக அலைபாய்வது போல. அந்தக்குளம் நோக்கி ஓடை போல எங்கள் வரிசை சென்றிறங்க அதேபோல இன்னொரு ஓடை வழிந்து வெளியேறியது. மக்கள் குரல்கள் இணைந்து பேரொலி எழுந்துகொண்டே இருக்க கொஞ்ச நேரத்தில் அந்த ஒலி நம் காதுக்குப் பழகி நமக்குத்தேவையான ஒலி மட்டுமே நம் காதில் கேட்க ஆரம்பித்தது.

படித்துறைகளில் சில்லிட்ட நீரில் மக்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். பலர் குடும்பங்களாக வந்து குடும்பங்களாக நீராடினார்கள். உடைமைகளைப்பற்றிய எந்த பயமும் தென்படவில்லை என்பது ஆச்சரியமளித்தது. அந்த பெருங்கூட்டத்தில் திருடர்கள் இருந்தால்கூட மிகக் குறைவாகவே இருக்கக் கூடும். பெண்கள் அந்தக்கூட்டத்தையே ஒரு பெரிய திரையாகக் கொண்டுவிட்டார்கள் போல. நூறு நூறாயிரம் கண்கள் சூழ்ந்திருக்கும் உணர்வே அவர்களிடம் இல்லை. சுதந்திரமாக உடை களைந்தனர், உடை மாற்றினர். நீர்விளையாடினர். அத்தனை லட்சம் கண்கள் கொண்ட கூட்டம் ஒரு விராட புருஷன், பிரபஞ்ச மனிதன். அவனுக்கு தனிமனித அடையாளமில்லை போலும். அவனுடைய பார்வையில் மானுடக்காமத்தை அவர்கள் உணரவில்லை போலும். எப்போதும் உடல்குறித்த எச்சரிக்கையுடன் இருக்கும் அவர்கள் எப்படி அதை வென்றார்கள் என்பதே பெரும் வியப்புதான்.

அந்த இடத்தில்தான் நாகா துறவிகளும் அகோரிகளும் புனித நீராடுவார்கள் என்றார்கள். பல புகைப்படங்களில் அதைக் கண்டுமிருக்கிறோம். நாகா துறவிகளில் பல தளங்களில் நிற்பவர்கள் உண்டு. எப்போதுமே நிர்வாணமாக இருப்பவர்கள் ஒரு வகை. இந்தமாதிரி சடங்குகளுக்கு மட்டும் நிர்வாணமாக இருப்பவர்கள் இன்னொரு வகை. பிறரிடம் பேசுபவர்கள் மிகக் குறைவு. கணிசமானவர்கள் பேசுவதில்லை. அந்த வகையான துறவுஅமைப்பு மிகமிகக் கடுமையானது.  அச்சம், ஆசை,போன்ற உணர்ச்சிகளை முரட்டுத்தனமாக ஒடுக்குபவர்கள் அவர்கள். கும்பமேளாவுக்கு கூட்டம் கூட்டமாக வந்து அந்த சாதுக்கள் நீராடுவதுதான் முக்கியமான நிகழ்ச்சி. அது காலை ஆறு இருபதுக்கு என்று கிருஷ்ணன் விசாரித்தபோது யாரோ சொல்லியிருந்தார்கள்,

அந்த இடத்தைப்பிடித்துக்கொண்டு குளிக்காமல் கண்களை முடிந்த அளவுக்கு விரித்துக்கொண்டு பார்த்து நின்றோம். அது ஒரு பெரும் பிரமிப்பு நிலை. கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் நீளம் கொண்ட மொத்த படித்துறையும் மனிதத்தலைகளால் முழுமையாக நிறைந்திருக்கும் காட்சி அது. மழைவெள்ளம் படிகளில் படிந்து மடிந்து இறங்குவது போல கூட்டம் இறங்கியது. கூட்டம் என்ற ஒற்றை இருப்பாகவே அந்த லட்சக்கணக்கானவர்களைச் சொல்ல முடியும். கூட்டம் ஒழுகியது,  சுழித்தது. அலைமோதியது. வழிந்தோடியது. கரையில் காயப்போட்ட சேலையின் நுனி நீரில் நனைவதுபோல கூட்டத்தின் விளிம்பு கங்கையில் நீராடுவதாக தோன்றியது.

கூட்டத்தைப்பார்க்கையில் கூடும் அந்த தியான நிலைக்கு என்ன பொருள்? அப்போது மானுட மனம் எதை உணர்கிறது? நான் விரும்பும் ஒரு சித்திரக்கதையில் நியண்டர்தால் குரங்கு ஒன்று தற்செயலாக வழிதவறிச் செல்கிறது. தனித்துவிடுகிறது. அலைந்து திரிந்து களைத்து அது நீர் அருந்தக் குனிகையில் தன்னை நீரில் பார்க்கிறது. மிகப்பயங்கரமான மிக மிக உக்கிரமான ஓர் அறிதலை அது அப்போது அடைகிறது. ‘நான்!’ என அது தன்னை உணர்கிறது. அந்தக்கணம் முதல் இன்றுவரை மானுடத்தை அலைக்கழிக்கும் மாபெரும் தத்துவச் சிக்கலே அதுதான், ’அஹம்’. அது ரமணராக இருந்தாலும் தெரிதாவாக இருந்தாலும் தத்துவமுடிச்சு அதுவே. அந்த அகம் தன்னை விலக்கி விலக்கி தான் என உருவாக்கிக்கொண்ட அனைத்தையும் கூட்டம் அழித்துவிடுகிறது. தன்னை பேருருவம் கொண்ட ஒன்றின் சிற்றுறுப்பாக சில கணங்களிலேனும் அது உணர்கிறது.

கூட்டத்தைப்பார்க்கையில் ஒருகணம் அது கூட்டம் என்ற பேரிருப்பாக தெரிகிறது. பின்பு பிரக்ஞை மீள்கையில் மனிதர்கள் தெரிகிறார்கள். கூட்டம் மறைந்து விடுகிறது. தனிமனிதர்கள். நீராடும் பெண்கள். ‘தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந்நாடே’ என்ன ஒரு கனவு. கணவனுக்கு தலைதுவட்டிவிடும் பெண். குழந்தையை அதட்டும் தாய். நடுநடுங்கும் மூதாட்டி. கிழவரை ஆதரவாக பற்றிக்கொண்டு படியிறங்கும் கிழவி. மிரண்ட நோக்குடன் இளம்பெண்கள். உற்சாகத்தில் நிலைகொள்ளாமல் ஹைட்ரஜன் பலூன் போல எம்பும் பயல்கள். தொங்கு மீசைகளில் சொட்டும்  நீர்த்துளிகள். திரிகளாக தொங்கிச் சொட்டும் தாடிகள் தோள்களில் படிந்த கூந்தல்கள். ‘மார்கழி நன்னாளில் மங்கையர் இளந்தோளில் கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்’ மீண்டும் கூட்டம். அத்தனை தனியடையாளங்களையும் இழந்து திரளாக ஆன மனிதர்கள். அவர்களுக்கு தனி எண்ணம் இல்லை, தனி மனம் இல்லை, தனி ஆத்மா இல்லை. பல லட்சம் கால்களும் பல லட்சம் கைகளும் பல லட்சம் தலைகளும் கொண்ட பரமபுருஷன்

’ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல’ என்று பழமொழி உண்டு. அதன் பொருள் இதுவே என்று நினைத்துக்கொண்டேன். கூட்டம் எத்தனை கச்சிதமாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்று எண்ணியபோது  வியப்பு கரையாமல் நின்றது. ஒரு ஓடை மூடப்படுகிறது. அடுத்த ஓடை திறக்கிறது. வண்ணங்கள் நீரில் கரைந்து கரைந்து அலையாட காலை விடிந்தது. செஞ்சூரிய வட்டம் பின்னால் கிளம்பி வந்தது.  நாங்கள் இருந்தது இரு நதிக்கிளைகளுக்கு நடுவே இருந்த படித்துறைமேடையில். அதன் இருபக்கௌம் நதி. குளித்தவர்கள் சூரியனை நோக்கி அர்க்யம் செய்து வணங்குவதைக் கண்டேன். வட இந்தியாவை பொறுத்தவரை அது எல்லா சாதியினரும் செய்யும் சடங்கு.  விடிய விடிய கூட்டத்தின் வண்ணங்கள் பளீரிட்டு கண்ணை நிறைத்தன. கண்கள் மட்டுமே பிரக்ஞையாக நிற்கும் கணங்கள்.

ஆறு இருபதாகியது. ஏழாகியது. நாகாபாபாக்கள் வரவில்லை.  அங்கே அதர்கு மேல் நிற்கவும் முடியவில்லை. ஆகவே படிஏறி பாலம் வழியாக மறுபக்கம் வந்து ஹர்கிபோடி படித்துறை வழியாக ஏறி மேலே சென்றோம். குளியலுக்குப்பின் கூட்டம் பெரும்பெருக்காகச் சென்றுகொண்டிருக்க அதே அளவுக்குக் கூட்டம் வந்துகொண்டிருந்தது. நாங்கள் குளிக்கவில்லை. சடங்குகளில் நம்பிக்கை கொண்ட எவரும் எங்களில் இருக்கவில்லை.  மேலே சென்று டீ சாப்பிட்டோம். சூடாக ஜீரா சொட்டும் ஜிலேபி சாப்பிட்டோம்

துறவிகள் வந்துகொண்டே இருந்தார்கள். அதிகமும் பல்வேறு மடங்களைச் சார்ந்தவர்கள். ஒரு நிர்வாணத்துறவி தனியாக நடந்துசெல்ல அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக காலில் விழுந்து வணங்கினார்கள். அந்தப்பெருங்கூட்டம் நடுவே  அப்படிச்செல்வதன் உக்கிரமான தனிமை என்னை பீதியுறச்செய்தது. பெரும் பித்து அல்லது முழு விடுதலை இன்றி அது சாத்தியமில்லை. நெடுந்தூரம் சென்று பக்கவாட்டில் வளைந்து ஒரு மடத்துக்குள் சென்றோம். மிகப்பெரிய மடம். வாசலில் கஜேந்திர மோட்சம் சிலை ஒன்று செய்திருந்தார்கள். மிக நுட்பமான அழகிய கான்கிரீட் சிலை. மிகப்பெரியது. வண்ணக்கலவைகூட அற்புதமாக இருந்தது. அங்கே இரவுபகலாக சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த கழிப்பறையில் காலைக்கடன்களை முடித்தோம். சாப்பிடவில்லை. போகிறவழி முழுக்க பஜனையும் சாப்பாடும்தான் நடந்துகொண்டிருந்தது.

மீண்டும் கங்கையின் மறுபக்கம் சென்றோம். ஏற்கனவே நாங்கள் குளித்த இடத்தை அடைந்து விரிவாகக் குளித்தோம். இரவு தூங்காமல் இருந்த களைப்பு முழுக்க ஒரே குளியலில் தீர்ந்து போகும் விந்தையை அறிந்தேன். கங்கைநீர் குளிரே திரண்டு வந்து உடலை இறுகப்பற்றிக்கொள்வது போல் இருந்தது. குளித்துவிட்டு மேலே வந்தபோது நன்றாகவே வெயில் வர ஆரம்பித்திருந்தது. எல்லாருமே கிளம்பலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்கள். யுவன் சந்திரசேகருக்கு கால்களில் பிறவிச்சிக்கல் ஒன்று உண்டு. கால்சருமம் மிகமிக மென்மையானது, அதாவது கடினமானது. அதில் வளையும் தன்மை குறைவு. ஆகவே சூடு தாங்க முடியாது. நெடுந்தூரம் நடக்க முடியாது. பெரும் கொப்புளங்கள் வரும். அவன் பொதுவாக பயணங்கள் செய்வதில்லை. நான் தான் அவனை வற்புறுத்தி பல இடங்களுக்குக் கூட்டிச்செல்வது வழக்கம். அவன் அன்றிரவு மட்டும் 12 கிலோமீட்டருக்கு மேல் நடந்திருந்தான். கங்கையின் குளிர் காரணமாகவே தாக்குப்பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முடியாது என்றான். ஆகவே கிளம்பி விட முடிவெடுத்தோம்

வெயிலில் நடந்து ஆட்டோ பிடித்தோம். மீண்டும் ரிஷிகேஷுக்கு கிளம்பினோம். நாங்கள் வந்துகொண்டிருந்தபோது நாகா பாபாக்கள் குளிக்க வந்திருக்கிறார்கள். 11.10 மணிக்கு. அந்நேரத்தை தீர விசாரித்திருந்தால் அறிந்திருக்கலாம். எங்களில் எவருக்குமே இந்தி தெரியாது. கிருஷ்ணனின் உடைசல் இந்திச்சொற்களை வைத்துத்தான் புரிந்துகொண்டிருந்திருக்கிறோம். ஆறு இருபது என்பது புனித நேரம்.ஆனால் நாகா பாபாக்களும் அப்படி நாளும் கோளும் ஒன்றும் இல்லை. அவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து கூட்டமாக கிளம்பி வந்திருந்தார்கள். சில ஆயிரம் பேர். அவர்கள் வரும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் இறந்ததாகச் சொன்னார்கள். ஆனால் கும்பமேளாவின் கூட்டத்தை வைத்துப்பார்த்தால் அதை  பெரும் செய்தியாகச் சொல்லமுடியாது. எல்லா மரணச்செய்திகளையும் இணைத்து ஒரு பரபரப்புச் செய்தியாக ஆக்கிவிடுவார்கள் ஊடக மன்னர்கள். கும்பமேளாவுக்கு வருபவர்களில் அதிகமானபேர் வயோதிகர்கள். அந்தக்கூட்டம் அவர்களில் பலருக்கு மரணகாரணமாக இருப்பதை அங்கே கவனிக்கலாம். பல மருத்துவமனைகள் அங்கே உண்டு. மருத்துவமனை மீது பெரிய ஒரு ஹீலியம் பலூன் பறந்துகொண்டிருக்கும். ஆம்புலன்ஸ்கள் ஓடிக்கொண்டே இருந்தன. மரணம் பொதுவாக நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று தோன்றியது

மதியம் இரண்டு மணிக்கெல்லாம் கோயிலூர் மடத்துக்கு வந்துவிட்டோம். வந்ததுமே படுத்து மாலை வரை தூங்கினோம். இந்த கும்பமேளா பயணம் முழுமையடையவில்லை என்ற எண்ணமே எனக்கிருந்தது. நாகா பாபாக்களை பார்த்திருக்க வேண்டும். அதற்கு இன்னமும் முறையான ஏற்பாடுகளுடன் வழிகாட்டியுடன் வந்திருக்க வேண்டும். அடுத்த கும்பமேளாவில் பார்க்கலாம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகும்பமேளா – 7
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (35 – 41)