சாப்பிட்டுவிட்டு ஹர் கி போடி படித்துறைக்கு இறங்கிச்சென்றோம். அதுதான் கும்பமேளா என்ற மானுடப்புயலின் மையம். கங்கா ஆரத்தி முடிந்து பெரும்கூட்டம் வெளியேறிக்கொண்டிருந்தது. ஆனால் அதேயளவுக்குக் கூட்டம் உள்ளேயும் சென்றுகொண்டிருந்தது. அந்தக்கூட்டத்தை வைத்துப்பார்த்தால் அதிகமான காவலர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். பொதுவாக கட்டுப்பாடும் பணிவும் உள்ள கூட்டம் ஆகையால் போலீஸாரின் பணி வழிகாட்டுவதுடன் நின்றுவிட்டிருந்தது. அவர்கள் மிகவும் இலகுவான மனநிலையில் இருந்தார்கள்.
இந்த கும்பமேளா முழுக்கவே நாங்கள் கவனித்தது போலீஸாரின் நட்பான மனநிலைதான். கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் போலீஸார் எப்போதுமே விரைப்பாக இருப்பார்கள். எவரையுமே ஒருமையில்தான் அழைப்பார்கள். ஆட்டுமந்தைகளை விரட்டுவதுபோல விரட்டுவார்கள். எந்த தகவலையும் அவர்களிடம் கேட்க முடியாது. ஆனால் கும்பமேளாவில் நின்ற அத்தனை போலீஸ்காரர்களுமே பணிவுடன் பேசினார்கள். கத்திய போலீஸாரையே பார்க்க முடியவில்லை. சாதாரண கிராமவாசிகள் கூட போலீஸாரிடம் சென்று விசாரித்ததைக் காண முடிந்தது. ஆனால் போலீஸ் காரர்களுக்கு சாதாரண அளவில்கூட ஆங்கிலம் தெரியவில்லை. அவர்களிடம் கிருஷ்ணன் அவரது நூறுசொல் இந்தியை வைத்து பேசியபோது முழு புத்தியையும் பயன்படுத்தி புரிந்துகொண்டு வழிகாட்டினார்கள்.
ஹர் கி போடிபகுதியில் கங்கை மூன்று பெரும் கிளைகளாக ஓடுகிறது. அந்த கிளைகளுக்குக் குறுக்காக ஏராளமானா பாலங்களை கட்டியிருக்கிறார்கள். பல பாலங்கள் தற்காலிகமாக கும்பாமேளாவுக்காக கட்டப்பட்டவை. இரும்பு சட்டங்கள் மேல் பலகை அடித்து எழுப்பப்பட்டவை. பாலங்கள் வழியாக மனிதக்கூட்டத்தை கண்டுகொண்டு நடந்து சுற்றி வந்தோம். மறுகரைக்குச் சென்று அங்கிருந்து சுற்றி மீண்டும் பழைய இடத்துக்கு வந்தோம். நேரம் பத்து மணி ஆகிவிட்டிருந்தது. மீண்டும் சாலைக்கு வந்து டீ சாப்பிட்டோம். எங்காவது படுத்து கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்தோம். எந்த இடத்தைப்பார்த்தாலும் அடுக்கடுக்காக மக்கள் கம்பிளி போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தார்கள். ‘’அப்டியே பொங்குது மோகன். மனுஷங்க எல்லா அடையாளத்தையும் இழந்து வெறும் ஜனங்களா ஆயிட்டது மாதிரி இருக்கு’’ என்றான் யுவன் சந்திரசேகர்.
ஆரம்பத்தில் நாங்கள் பார்த்த கங்கைபடிக்கட்டை இரவு பதினொரு மணிக்குச் சென்று சேர்ந்தோம். லேசான குளிர் இருந்தது. ஏற்கனவே கடைவீதியில் பிளாஸ்டிக் தாளை பாய் அளவுக்கு வெட்டி ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு தாள் ஐந்து ரூபாய் என்று அவன் சொன்னது அதிகம் என்று வாங்க வேண்டாம் என்று கிருஷ்ணன் முடிவெடுத்தார். ஆனால் கல்தரையில் படுக்க குளிர்தாங்கும் ஏதாவது தேவைப்பட்டது. எதுவுமே இல்லாமல் போர்வையை விரித்து போர்வைகளை போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டோம். நான் என் காவி வேட்டியை முண்டாசாக கட்டிக்கொண்டேன்
கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகவே குளிர ஆரம்பித்தது. கிருஷ்ணன் யுவனிடம் பாடச் சொன்னார். யுவன் பாடினார். பொதுவாகவே அவன் நல்ல பாடகன். அந்த மனநிலை வேறு பாட்டுக்கு உரியது. நான் ‘எங்குமே ஆனந்தம்’ என்ற கண்டசாலா பாட்டை பாடும்படி கேட்டேன். அதன்பின் மயக்காமா கலக்கமா, ஒளிமயமான எதிர்காலம், ஓராயிரம் பார்வையிலே… நான் அவத் நாட்டு நாட்டுப்புறக் கதைகள் என்ற தொகுப்பின் சில கதைகளைச் சொன்னேன். உக்கிரமான காதல்கதைகள் அவை.
இரண்டு மணிநேரம் தூங்கியிருப்போம். வசந்தகுமார் தூங்கவே இல்லை என்றார். இரண்டு மணிக்கு எழுந்து பார்த்தால் சாரிசாரியாக மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அத்தனை மக்களும் செல்லும் திசை ஹர்கிபோடிதான். அனேகமாக காலைக்குளியலுக்கான இடம் தேடிச் செல்கிறார்கள் என்று தோன்றியது. தாமதித்தால் பிந்திவிடுவோம் என்று கிளம்பினோம்.
கங்கையின் மறுகரை வழியாகச் சென்றோம். செம்புழுதி விளக்கொளியில் புகை போல இரண்டாள் உயரத்துக்கு எழுந்தது. பெரும் கூட்டமாக மக்கள் வந்துகொண்டிருந்தார்கள். அதே அளவுக்கு மக்கள் சென்று கொண்டும் இருந்தார்கள். பல இடங்களில் கங்கைக்கரைப் படிக்கட்டு தடுக்கப்பட்டு கூட்டம் திசை திருப்பப்பட்டது. நாங்கள் படுத்திருந்ந்த படிக்கட்டு நேப்பாளிகளால் நிரம்பியிருந்தது. படிக்கட்டுகளுக்கே அந்த வகையான அடையாளம் உண்டுபோலும்.
மணீஷா கொய்ராலாவின் தங்கை போன்ற ஒரு பேரழகிக்கு நேப்பாளிகள் கூடி ஏதோ சடங்கு செய்துகொண்டிருந்தார்கள். அவள் உயர்தர சரிகையாடையும் ஏராளமான நகைகளும் அணிந்திருந்தாள். அருகே மேலும் பல மணிஷா கொய்ராலாக்கள். யுவன் அவர்களில் ஒருவரிடம் என்ன சடங்கு என்று கேட்டான். ஷாதி என்றார்கள். ஷாதி என்றால் திருமணம் என இணையம் மூலம் அறிந்திருந்தோம். ஆனால் சடங்கு பெண்ணுக்கு மட்டும்தான் நடந்துகொண்டிருந்தது
அதற்கப்பால் உள்ள படித்துறையில் பெரும்பாலும் இமாச்சலப்பிரதேஷ் மக்கள். ஆண்கள் டாக்டர் கரன் சிங் அணிவதுபோன்ற சரிகை குல்லாய் அணிந்திருந்தார்கள். சரிகையைக்கொண்டே நெய்த புடவை உடுத்த பிளாஸ்டிக் சருமம் கொண்ட பெண்கள் . எங்களுக்கு அந்த நேரத்தில் அந்தப்பெரும்கூட்டத்தின் அமைப்பும் போக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. பல இடங்களில் மூங்கில் கட்டி பெரிய வரிசைகளை அமைத்திருக்க மக்கள் அதில் சென்று இணைந்துகொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் சிக்க வேண்டாம், குளியலைப்பார்க்கும் இடம் ஒன்றை தேர்வுசெய்வோம் என்று சென்றோம். கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் சுற்றியபின்னர்தான் ஒருமாதிரி விஷயம் புரிந்தது
அந்த மொத்தக்கூட்டமும் எங்கிருந்தோ காமிராவால் பார்க்கப்பட்டு மிகக்கச்சிதமாக கட்டுப்படுத்தப்பட்டது. கங்கைக்குச் செல்லும் எல்லா பாதையுமே கட்டுப்படுத்தப்பட்ட வரிசைகள்தான். ஒருவரிசையை திறந்து குறிப்பிட்ட அளவு மக்களை உள்ளே விட்டதுமே அதை மூடிவிடுவார்கள். அடுத்த வரிசை திறக்கப்படும். மீண்டும் முதல் வரிசை திறக்கும். அப்படி நூற்றுக்கணக்கான வரிசைகள். ஏதேனும் ஒரு வரிசையில் சேர்ந்துகொள்வாதைத் தவிர வேறு வழியே இல்லை. மிகச்சிறந்த இயந்திரம் போல அந்த நிர்வாகம் இயங்கி மக்களை திருப்பிவிட்டு நிர்வாகம் செய்தது. ‘’இத்தனை பெரிய கூட்டத்திலே அனாமலி கொஞ்சம் கூட இல்லியே’’ என்றார் யுவன்
ஒரு வரிசையில் சேர்ந்துகொண்டோம். நெரிசல் இருந்தது என்றாலும் பெரிய நெரிசல் என்று சொல்ல முடியாது. அதிலேயே பத்தாயிரம் பேர் இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் கிழவர்கள் கிழவிகள். எண்பது தொண்ணூறு வயதான கிழடுகள் கூட நிறையவே கண்ணுக்குப் பட்டார்கள். இந்த வட இந்தியக் குடும்பங்களில் கிழங்களுக்கு இருக்கும் மரியாதையும் அவர்கள் கிழங்களை பேணிப்பராமரித்து கொண்டு செல்லும் கவனமும் பிரமிப்பூட்டுபவை. பெரும்பாலான கும்பமேளாக்குழுக்களில் நூறுபேர் வரை இருப்பார்கள். கையில் கொடியுடன் ஒரு கம்பீரமான கிழவர்தான் முன்னால் செல்வார். குடும்பங்களை பெண் யானை யானைக்கூட்டத்தை வழிநடத்துவது போல கிழவிகள்தான் வழிநடத்தினார்கள்.
வடக்கே வயதானவர்கள் கும்பமேளா நீராட்டை வாழ்க்கையின் இறுதிக்கடமையாக நினைக்கிறார்கள். அவர்களின் அந்தக்கோரிக்கையை எந்த குடும்பமும்தட்ட முடியாது. ஆகவே அவர்களை கூட்டிவந்துவிடுகிறார்கள். அனேகமாக 12 வருடம் கழித்து அடுத்த கும்பமேளாவுக்கு அவர்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை என்பதை அந்த கிழவர்களின் முகங்களில் ததும்பும் உக்கிரம் நெகிழ்ச்சி துயரம் ஆகியவை கலந்த முகபாவனை காட்டுகிறது. பலர் கைகளை கூப்பியபடியே செல்வதை, அழுவதை கண்டேன்.
பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா நிருபர் ஒருவர் கும்பமேளா பற்றி ஓர் அவதூறுக்கட்டுரை எழுதினார். கும்பமேளா என்பது இந்தியக்குடும்பங்கள் தங்கள் வயது முதிர்ந்த பெற்றோரை கொண்டு வந்து கைவிட்டு விட்டுச் செல்லும் ஒரு விழா என்பது அவரது புரிதல். அவ்வாறு கைவிடப்படும் கிழவர்கிழவிகள் பிச்சை எடுத்து கங்கை கரையில் கூட்டம் கூட்டமாகச் சாகிறார்கள் என்று அவர் எழுதினார். அந்தக் கட்டுரை இந்திய ஆங்கில இதழ்களில் வெளிவந்தது. குமுதமும் அதை வெளியிட்டது. இத்தகைய ஓர் அவதூறு வேறு எந்த சமூகத்தைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் ஆதாரம் என்ன என்று கேட்டிருப்பார்கள். குடைந்து எடுத்திருப்பார்கள். இந்தியா பற்றி ஏதும் சொல்லலாமே. நம் ஆங்கில ஊடகங்களே இந்த மக்களை மனசாட்சியற்ற குரூரமான மிருகங்கள் என்றுதானே நமக்குச் சொல்கின்றன. இந்த எளிய ஏழை மக்கள் நம்மூர் படித்த முற்போக்கினருக்கு அபபடி என்னதான் மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டார்கள் என்றுதான் புரியவில்லை.
ஆனால் இலஸ்டிரேட்டட் வீக்லி அந்த அவதூறை விசாரித்தது. ஆதாரம் கேட்டது. அமெரிக்க இதழ் அது அந்த நிருபரின் தனிப்பட்ட கருத்து என்று ஒதுங்கிக்கொண்டது. அந்த நிருபர் அதை அவர் ’கேள்வி’ப்பட்டதாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான், ஆனால் இன்றும் அந்த விஷயத்தை சொல்லிக்கொண்டிருப்பவர்காள் உண்டு. நான் கிளம்பும்போதுகூட ஒரு நண்பர் சொன்னார்
கும்பமேளா கூட்டத்தை வைத்து பார்த்தால் அங்கே வரும் கிழவர்கள் குழந்தைகளின் எண்ணிக்கை பீதியூட்டும். ஆனால் பொதுவாக தொலைந்து போகிறவர்கள் மிகமிகமிகக் குறைவு. காரணம் மிகச்சிறந்த நிர்வாக ஏற்பாடுகள். அதைவிட இந்த மக்கள் பெரிய கூட்டங்களாகவே வருகிறார்கள் என்பது. ஒருவரோடு ஒருவர் உடைநுனிகளை கட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் நாங்களும் ஒருவர் தோள்பையை இன்னொருவர் பற்றிக்கொண்டேம். பெருங்கூட்டம் நெரித்து நெரித்து சென்றுகொண்டேஇருந்தது. ‘கங்கை அன்னைக்கு வணக்கம்’ என்று கூட்டம் பேரொலியுடன் இரைந்துகொண்டே இருந்தது