ஜனவரி 13 அன்று மதியம்வரை ரிஷிகேஷிலேயே சுற்றினோம். கங்கைக்கரைக்குச் சென்று மீண்டும் குளிர்ந்துக்குளிர்ந்த நீரில் நீராடினோம். கொஞ்சம் தூங்கினோம். மாலை மூன்றரை மணிக்கு ஆட்டோ வருவதாகச் சொல்லப்பட்டிருந்தது. வந்தது நான்கரை மணிக்கு. எட்டுபேர் ஏறும் ஆட்டோ. அதில் ஏறி ஹரித்வார் கிளம்பினோம்.
கும்பமேளா ரிஷிகேஷில் இருந்தே ஆரம்பித்துவிட்டது போல் இருந்தது. ஒரு முடிவிலா பேரணிபோல மக்கள் 22 கிலோமீட்டர் அப்பாலிருந்த ஹரித்வாருக்கு மூட்டை முடிச்ச்சுகளுடன் நடந்தே சென்றுகொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைத்தோற்றம் கொண்டவர்கள். பெரிய முண்டாசுகளில் வித விதமான வடிவங்கள். காதருகே குச்சம் தொங்குபவை. மேலே சிலும்பி நிற்கும் குச்சம் கொண்டவை. காதில் சரிந்து படிந்தவை. செங்குத்தாக முன்பக்கம் எழுந்தவை பின்பக்கம் சரிந்தவை… பெண்களில் மிதமான வண்ணம் கொண்ட சேலைகள் அணிந்த பெண்கள் என எவருமே இல்லை. சரிகைகள் ஒளிரும் செந்நிற மற்றும் நீலநிற ஆடைகளே அதிகம். கூந்தல் மீது முக்காடு போல போடப்பட்ட சேலைகள் பின்பக்கம் நீட்டி பறக்கவிடப்பட்ட முக்காடுகள்… தோள்வரை வெண்ணிற வளையல்கள் அடுக்கிய பெண்கள். காலில் வெள்ளி தண்டயமிட்ட பெண்கள்… அவர்களில் பலருக்கு அந்தப்பயணத்தில் ரயில் செலவுதவிர வேறு எதற்குமே பணம் தேவையில்லை. எங்கும் அமர்ந்தும் படுத்தும் உறங்கினார்கள். நூற்றுக்கணக்கான இடங்களில் சாப்பாடு போடப்பட்டது.
ஆட்டோவை வழியெங்கும் நிறுத்து இடமிருக்கிறதா என்று கேட்டார்கள் . ஆட்டோ இருபக்கமும் வெயிலில் வெந்துகிடந்த காடுகளையும் அவற்றினூடாக வெண்ணிறமான உருளைக்கற்களின் பிரவாகம் போலக் கிடந்த வரண்ட காட்டாறுகளையும் நீலநீர் ஓடிய சிற்றாறுகளையும் தாண்டிச் சென்றது. ரிஷிகேஷ் ஹரித்வார் சாலையில் உள்ள பல கட்டிடங்களுக்கு இருநூறு வருட வரலாறு கூட இருக்கும். பல கட்டிடங்கள் கைவிடப்பட்டு கிடந்தன. வனப்பகுதி தாண்டி சோதனைச்சாவடியை கடந்ததும் இருபக்கமும் வீடுகளும் கோதுமை வயல்களுமாக அடுத்த நிலக்காட்சி வந்தது
ஹரித்வாருக்கு 8 கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டார்கள். அன்னிய வாகனங்கள் மேலே செல்ல அனுமதி இல்லை. அங்கே இறங்கி அடுத்த உள்ளூர் ஆட்டோவில் ஏறி மேலும் மூன்று கிலோமீட்டர் சென்று ஓரு வளைவருகே இறங்கினோம். அங்கிருந்து நடந்துதான் மேலே செல்லவேண்டும். அந்த பிரம்மாண்டமான பேரணி இப்போது பல கிளைகளாக மாறியது. ஒரு பிரவாகம் உள்ளே செல்கையில் இன்னொரு பிரவாகம் வெளியே வந்துகொண்டிருந்தது.
மனித முகங்கள் மீது ஆர்வமுடைய ஒருவன் அந்த பயணத்தை ஒரு மாபெரும் கல்விச்சாலை என்றே நினைப்பான். முடிவே இல்லாத வகைபேதங்கள். நம்முடைய இந்திய முகம் என்பதுகறுப்பின முகமும் சித்தியன் முகமும் சீராகக் கலந்த ஒன்று. கூரிய ஒடுங்கிய முகமும் செந்நிறமும் சிறிய உடலும் கொண்ட சித்தியன் தோற்றம் பிகாரிகளுக்கு அதிகம் இருப்பதாக தோன்றியது. அத்தனை வட இந்திய முகங்களிலும் கொஞ்சம் மங்கோலியக் கலப்பு இருந்தது. குறிப்பாக நிறம், கண்ணருகே உள்ள சுருக்கங்கள்.
இளவெயிலில் நடந்து ஹரித்வாருக்குள் சென்றபோது இருட்ட ஆரம்பித்திருந்தது. நேராக நடந்து கங்கையில் இருந்து ஹரித்வாரின் மையப் படித்துறை நோக்கி கிளை திருப்பி விடப்பாட்டிருந்த இடத்தை அடைந்தோம். கண்ணெதிரே எங்கும் முகங்கள் நெரித்து கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஆனாலும் அப்பகுதியெங்கும் அகண்ட அமைதி நிலவியதுபோலவும் தோன்றியது. அந்திச்சிவப்பே அதற்குக் காரணம். கங்கைப்பாலம் மீது நின்ற வசந்த குமார் ஒளி போகும் வரை படம் எடுப்பதாகச் சொன்னார். நானும் அரங்கசாமியும் யுவனும் பேசிக்கொண்டே கங்கைக்கிளை தொடங்கும் இடம் வரை வந்தோம்.
நீர்விளிம்பில் ஏராளமான மைனாக்கூட்டங்கள். தூரத்தில் செம்பிழம்பாக அணைந்தது சூரிய வட்டம். அங்கே அமர்ந்து ஆழ்ந்த தியானநிலை ஒன்றை சற்று நேரம் அறிந்தேன். கங்கையில் படித்துறை சிவப்புக்கல்லால் சீராக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. சுத்தமான நீல நீர் அதிவேகத்துடன் மடிந்து சுழன்று புளைந்து நெளிந்து ஓடியது. படித்துறைகளில் பெண்களும் ஆண்களும் விதவிதமான சாமியார்களும் குளித்துக்கொண்டிருந்தாலும் அந்த பிரம்மாண்டமான படித்துறையில் நெரிசல் எழவில்லை.
மிக ஆச்சரியமான ஒன்றை நான் கவனித்திருந்தேன், யுவன் அதைச் சொன்னதும் அரங்கசாமியும் ஆமோதித்தார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக கும்பமேளா நடந்திருக்கிறது 50 லட்சம்பேர் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் ஹரித்வார் அதி சுத்தமாக இருக்கிறது. மதுரை சித்திரைத்திருவிழாவும் சரி திருச்செந்தூர் சூரசம்ஹாரமும் சரி மலத்திருவிழாக்கள் என்றுதான் சொல்ல முடியும். எங்கும் மலம் மிதிபடும். நாற்றம் குடலைப்புரட்டும். அத்தனை குப்பைகளும் தெருக்களிலேயே குவியும். ஆனால் ஹரித்வாரின் சுத்தம் மேலைநாடு ஒன்றுடன் ஒப்பிடுமளவுக்கு இருந்தது. கங்கைக்கரையில் இருந்த கற்குவியல்கள், பாறைகள் கூட சுத்தமாக இருந்தன.
சமீபத்தில் மலேசியா சென்றிருந்தேன். அந்நாட்டின் சுத்தத்துடன் ஒப்பிட்டால் பத்துமலையில் தைப்பூசத்தில் நான் கண்ட குப்பை பெரும் அதிர்ச்சியை அளித்தது. புனிதப்படிகள் முழுக்க பிளாஸ்டிக் குப்பைகள். காகிதங்கள். குப்பைகளை போடாதீர் என மைக் அலறிக்கொண்டே இருக்க குப்பைகளை சன்னிதிக்கு முன்னாலேயே கொட்டிக்கொண்டிருந்தார்கள் மக்கள். அந்தக்கூட்டத்தில் குப்பைகளை அள்ளவும் முடியாமல் அவை சேர்ந்துகொண்டே இருந்தன. ஆனால் ஹரித்வாரில் பிளாஸ்டிக் குப்பைகள் அனேகமாக கண்ணிலேயே படவில்லை.
ஏன் என்று சிந்தித்தேன். ஒன்று ஹரித்வாருக்கு வந்த ஏழை மக்கள் அதிகமாக குப்பைபோடும் நுகர்வுப்பண்பாட்டுக்குள் இன்னமும் வரவில்லை. மிகக்குறைவாகவே பொருட்கள் வைத்திருந்தார்கள். மிகக்குறைவாகவே பயன்படுத்தினார்கள். ஏழை மக்களே அங்கே வந்தவர்களில் தொண்ணூறு சதவீதம்பேர். இரண்டாவதாக அங்கே வந்தவர்களில் அனேகமாக அனைவருமே கங்கைமீதான ஆழமான பக்தியுடன் ,அர்ப்பணிப்புடன் வந்திருந்தார்கள். அவர்களுக்கு கங்கை மாதா தூயவள். அவளை அசிங்கமாக்க அவர்களால் முடியாது. அங்கே பெரும்பாலான கட்டளைகள் சில இடங்களில் எழுதி வைக்கப்பட்டிருந்ததோடு சரி. மக்கள் இயல்பாகவே கட்டளைகளை பின்பற்றினார்கள். அந்தக் கட்டளைகள் பலவும் அவர்களின் பண்பாட்டில் ஏற்கனவே இருந்தது போல அவர்கள் அதற்கு அடிபணிந்தார்கள்.
கங்கையில் இறங்கி குளித்தோம். நீர் நம் குளிர்சாதனப்பெட்டிகளில் இருக்கும் குடிநீர் அளவுக்கு குளிராக இருந்தது. ஒரு வலுவான குதிரை நம்மை இழுக்கும் அளவுக்கு நீரோட்டம். படிகளில் பற்றிக்கொள்ள இரும்புச்சங்கிலிகள் போட்டிருந்தார்கள். ஆற்றுக்குள் கொஞ்ச தூரம் தள்ளி குளிப்பவர் அடித்துச்செல்லாப்படாமலிருக்க இரும்புக்குழாய்கள் நடப்பட்டிருந்தன. அந்நேரத்தில் கங்கையில் குளித்தது உடலையும் மனதையும் விறுவிறுப்பாக்கி அத்தனை களைப்பையும் இல்லாமல் செய்தது.
நீரில் இறங்கத்தயங்கி நின்றவர்கள் மீது குளிர்ந்த நீரை இறைப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது. குளிருக்கு என் உடல் உலுக்கும் என்றாலும் சட்டென்று பாய்ந்து விடுவது என் வழக்கம். அங்கே கங்கை நீர் கொஞ்சம் கனமாக இருப்பது போல தோன்றியது. குளித்துவிட்டு பற்கள் கிடுகிடுக்க உடைமாற்றிவிட்டு டீ சாப்பிடுவதற்காக கங்கை கரையோரமாக நடந்தோம். கங்கையின் மறுகரை முழுக்க மக்கள் கூட்டம் படி தெரியாமல் அப்பியிருந்தது. நீரில் நூற்றுக்கணக்கில் விடப்பட்ட விளக்குகள் மின்னியபடி ஒழுகிச்சென்றன. மணியோசைகள். ஓயாத நாம கோஷங்கள். கங்கை வழியாக நடந்து சிறிய பாலம் ஒன்றில் ஏறி மறு கரைக்குச் சென்றோம். அங்கே சாலையின் ஓரம் ஒரு கடைக்குச் சென்று சப்பாத்தியும் டீயும் சாப்பிட்டோம்.
கூட்டம் கூட்டமாக மக்கள் பெருகி ஹர் கி போடி என்ற மைய ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அதற்கு அருகே உள்ள கங்கைப்படித்துறைதான் மைய இடம். அங்கேதான் மாலையில் கங்கா ஆர்த்தி நடக்கும். கங்கைக்கு தீபம் காட்டி பூஜைசெய்வார்கள். பெரும்கூட்டம் இருந்தாலும் தேவையில்லாத நெரிசல் இல்லை. கூச்சல்கள் குழப்பங்கள் இல்லை. அதைவிட தெருவும் சாலையோரங்களும் சுத்தமாக இருந்தன. ‘’பாவப்பட்ட சனங்கள் ஜெயன், சட்டத்தை மீறணும்கிற எண்ணமே இல்லாதா மக்கள். நமக்கு குப்பை போடக்கூடாதுன்னாலே போட்டா என்னன்னுதான் நினைப்பு வருது’’ என்றார் வசந்தகுமார். ஹரித்வார் என்று பேச்சு வழக்கில் இருந்தாலும் அதன் உச்சரிப்பு ஹர்த்வார் என்பதே. ஹரனின், சிவனின் , இருப்பிடம் அந்த தலம்.
வசந்தகுமார் சொன்னதைப்பற்றி சிந்தித்தேன். படித்தவர்கள் நிறைந்தவர்களாகச் சொல்லப்படும் கேரளத்தில்கூட நினைத்த இடத்தில் குப்பைகளை வீசுவார்கள். திரிச்சூர் பூரம் போன்ற திருவிழாக்கள்கூட நிர்வாகக்குளறுபடிகளுக்கும் அசுத்தங்களுக்கும் புகழ்பெற்றவை. ஏன்? எனக்கு தோன்றிய விடை இதுவே. நெடுங்காலமாக மக்கள் வளர்த்தெடுத்த பண்பாட்டுக்கூறுகள் மதங்களுடன் இணைந்து ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பகுத்தறிவு மார்க்சியம் என்ற பேரில் அவற்றை தூக்கி வீசியாயிற்று. அந்த சிந்தனைமரபுகள் உருவாக்கிய மாற்று அறங்கள், பண்பாடுகள் எவற்றையும் ஏற்கவும் இல்லை. நதியெல்லாம் கங்கை என்று சொல்லி அவற்றை சுத்தமாக வைத்திருக்கலாம். அல்லது சூழியல் நோக்கில் சுத்தமாக வைத்திருக்கலாம். இரண்டுமில்லை.
கங்கை ஹரித்வாருக்குப்பின்னர் காசி வருவதற்குள் நாறிப்போய்விடுகிறது. காரணம் பல பெருநகரங்களின் குப்பைகள், கழிவோடைகள் அதில் கொட்டப்படுகின்றன என்பதே. பல ஆயிரம் தொழிற்சாலைக் கழிவுகள் அதில் கலக்கின்றன. முழுக்க முழுக்க அவை அரசாங்கத்தின் அராஜகச்செயல்கள். ஆனால் அவற்றை திசை திருப்ப மதத்தை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார்கள். கங்கையில் பிணம் மிதக்கிறது என்ற குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்படுவது அதனாலேயே. உண்மையான சிக்கல் அது அல்ல, ஆலைக்கழிவுகள்தான். அவற்றை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் எந்த அரசும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை
[மேலும்]