சூரியதிசைப் பயணம் – 5

காசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினோம். நல்ல குளிர் இருந்தது. அஸ்ஸாம் சமநிலப்பகுதி என்றாலும் ஊட்டி அளவுக்கே காலையில் குளிர் இருந்தது. இமையமலையின் குளிர்ச்சாரல் காரணமாக இருக்கலாம்.

1

திறந்த ஜீப் வந்தது. இப்பகுதியில் மாருதி ஜிப்ஸி ஜீப்புகள் இன்னமும் பரவலாக புழக்கத்தில் உள்ளன. காட்டுக்குள் செல்ல அவைதான் சிறந்த வண்டிகள். காசிரங்கா காட்டுக்கு அருகே சென்று உள்ளே நுழைய சீட்டு வாங்கிக்கொண்டோம். மனாஸ் வனப்பூங்கா அனுபவத்திற்குப்பின் மிருகங்களை காணமுடியுமா என்னும் ஐயம் எழவில்லை. ஆனால் காண்டாமிருகத்தைக் காணமுடியுமா என்ற ஐயம் நீடித்தது.

1904-இல் பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சான் பிரபுவின் சீமாட்டி மேரி கர்சான் இந்தக் காட்டுக்கு காண்டாமிருகங்களை பார்ப்பதற்காக வந்தார். ஒரு காண்டாமிருகத்தைக்கூட பார்க்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது. காரணம் அன்றைய சிற்றரசர்களால் தொடர்ச்சியாக காசிரங்காவின் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டிருந்தன. மேரி கர்சன் இந்தக்காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆக்கவும் காண்டாமிருகங்களை பாதுகாக்கவும் தன் கணவரிடம் மன்றாடினார்.

2

விளைவாக 1905-இல் இப்பகுதி காண்டாமிருகங்களின் காடாக அறிவிக்கப்பட்டு வேட்டை தடுக்கப்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டு காசிரங்கா வனப்பூங்கா உருவாக்கப்பட்டது. இன்று இது இந்தியாவின் மிகப்பெரிய புலிச்சரணாயலம். உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருக சரணாலயம். 2005-இல் இந்த வனப்பூங்காவின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது கர்சான் பிரபுவின் வாரிசுகள் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

காசிரங்கா என்றால் சிவந்த ஆடுகளின் நிலம் என்று பொருள் .செந்நிறமான ஆடு இப்பகுதியில் அதிகமாக இருந்தது. சுமார் 40 கிமீ நீளமும் 13 கிமீ அகலமும் கொண்ட காசிரங்கா காடு இந்தியாவின் வனப்பூங்காக்களில் பெரியது. இந்தியாவின் பிற காடுகளைப்போல மலைச்சரிவில் அமையாமல் சமநிலத்தில் அமைந்தது. பிரம்மபுத்திரா இதை சுற்றிக்கொண்டு செல்கிறது. மோரா திப்லு , மோரா தன்ஸ்ரி ஆகிய ஆறுகள் இந்த வனத்திற்குள் ஓடி பிரம்மபுத்திராவில் கலக்கின்றன.

3

பிரம்மபுத்திராவின் மாவுபோன்ற வண்டல்மண்ணால் ஆன நிலம். கணிசமான பகுதி வருடம்தோறும் நீரால் நிறைக்கப்படும் சதுப்பு. அங்கே கட்டைவிரல் கனத்தில் நாணல் போன்ற தண்டுள்ள நான்கு ஆள் உயரமான யானைப்புல் வளர்ந்து செறிந்திருக்கிறது. காண்டாமிருகங்களுக்கும் யானைகளுக்கும் காட்டெருமைகளுக்கும் இந்தப் புல் மிகச்சிறந்த உணவு. ஆகையால் இவ்விலங்குகள் இங்கே பல்கிப்பெருகியிருக்கின்றன. கலைமான்கள் மிளாக்கள் இலைமான்கள் காட்டுப்பன்றிகள் இந்தப் புல்வெளிகளில் பெருகியிருக்கின்றன.

காட்டுக்குள் காலையிலேயே சென்று காத்திருந்தோம். ஏழரை மணிக்குத்தான் எங்கள் முறைவந்தது. பதினாறு வளர்ப்பு யானைகள் இங்கே பயணிகளை கொண்டுசென்று காட்டுக்குள் வாழும் காண்டாமிருகங்களை காட்டுகின்றன.

4

யானைப்புல் அடர்ந்த சதுப்பை புல்வெளி என்று சொல்லமுடியாது. யானையே உள்ளே மறைந்துவிடும். புல்காடு எனலாம். அதனுள் யானை எங்களை கொண்டுசென்றது. முதல் காண்டாமிருகத்தை கண்டோம். அதன் பின்னங்கால் வளைவுக்குள் முகம்புதைத்து குட்டியும் நின்றிருந்தது. குட்டி வால் பாறைப்பிளவில் கொடி போல ஆடிக்கொண்டிருந்தது. கரடுமுரடான உடல். ஆனாலும் குழந்தைத்தன்மை தெரிந்ததை இயற்கையின் விந்தை என்றுதான் சொல்லவேண்டும்.

யானையில் சென்றால் காண்டாமிருகத்தை மிக அருகே சென்று பார்க்கமுடியும். பொதுவாக காண்டாமிருகம் அஞ்சி ஓடுவதில்லை. செல்பேசிகள் ஒலிக்காமலிருந்தால் கண்களை உருட்டி நோக்கியபடி அசையாமல் நின்றிருக்கும். கிரானைட் கல்லால் செதுக்கப்பட்டதுபோன்ற வண்ணம் கொண்டிருந்தது அன்னை. இரவில் நீரில் நெடுநேரம் ஊறியிருக்கவேண்டும்.

5

அந்தப்புல்காட்டிலேயே நான்கு காண்டாமிருகங்களை கண்டோம். ஒன்று எங்களைக் கண்டதும் வயிறுகுலுங்க ஓடி அப்பால் சென்றது. காண்டாமிருகத்தை அதன் வாழ்விடத்தில் நெருக்கமாகக் காண்பது ஓர் அரிய அனுபவம். அச்சமும் குதூகலமும் கலந்த மனநிலை..

சவாரி யானைகள் குட்டையானவை. அவற்றின் மத்தகம் மீது ஒருவர் தாரளமாக அமர இடமிருந்தது. முதுகில் கட்டப்பட்ட அம்பாரியில் நான்குபேர் முதுகோடு முதுகு ஒட்டி இருபக்கமும் பார்க்க அமர்ந்துகொண்டு காற்றில் அசைந்தாடிச் சென்றோம். சில கோணங்களில் பழங்கால முகலாயப்படையெடுப்பு போலிருந்தது பதினாறு யானைகளின் அணிவரிசை.

6

வற்றிப்போன ஏரி போல கண்ணெட்டும் தொலைவு வரை விரிந்துகிடந்த சதுப்புவெளியில் ஒரு பெரிய யானைக்கூட்டத்தை கண்டோம். மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தன. அருகே பத்துக்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள். ஜுராசிக் யுகத்திலிருந்து தப்பிப்பிழைத்துவந்த இரு உயிர்கள். அவை ஒன்றை ஒன்று முறைத்துக்கொள்வதில்லை. அவை மெல்ல அசைந்து சென்றது ஜுராசிக் பார்க் படத்தின் ஒரு காட்சி போலவே இருந்தது.

இங்குள்ள யானைகள் அளவுக்கு எங்கும் யானைகள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. டன்கணக்காக உணவு. உணவிலேயே பிறந்து உணவிலேயே வாழ்கின்றன யானைகள். மெல்ல புல்லை ஒடித்து சுருட்டித் தின்றபடி பயணிகளைப்பார்க்கக்கூட திரும்பாமல் அவை நின்றிருந்தன.

7

திரும்ப அறைக்கு வந்து காலையுணவு உண்டபின் ஜீப்பில் ஒரு கானுலா செல்லலாமா என்று தயங்கினோம். உடனே கிளம்பி மாஜிலி என்ற ஊரை நான்கு மணிக்குள் அடையவேண்டியிருந்தது. ஆனால் காசிரங்கா எங்களை விடவில்லை. ஜீப்பில் காட்டுக்குள் சென்றுவிட்டோம்.

அது மிக முக்கியமான முடிவு. என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் மிகப்பெரிய கானுலா இதுதான். நமீபியப்பாலைவனத்தில் சென்றதுதான் மிக அதிகமான வனமிருகங்களைக் கண்ட பயணமாக அதற்கு முன் இருந்தது. இந்த மூன்றுமணிநேர ஜீப் பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளை கண்டோம். யானை மந்தைகள் என்றே சொல்லவேண்டும். அறுபதுக்கும் மேல் காண்டாமிருகங்களை கண்டோம்.

8

காட்டெருமைகளும் காண்டாமிருகங்களும் யானைக்கூட்டங்களும் மான்மந்தைகளும் ஒன்றாகச்சேர்ந்து மேயும் சதுப்புப்பகுதியை இளவெயிலில் பார்ப்பது கனவா என்ற பிரமையை எழுப்புவது. ஏதேன் தோட்டம் பற்றிய கற்பனையைத்தான் நினைவுகூர்ந்தேன்.

காண்டாமிருகங்களை விதவிதமாக காணமுடிந்தது. நீர் அருந்தியபடி ஐயத்துடன் திரும்பிப்பார்த்தவை. சேற்றில் புரண்டு கிடந்தவை. தம்பதிகளாக குழந்தையை பொத்தி அணைத்து கொண்டுசென்றவை. புல்லுக்குள் ஒளிந்து நின்று நோக்கியவை. நிழலில் படுத்துக்கொண்டு தாடையை தரையில் வைத்து செவிகூர்ந்து நோக்கியவை. காசிரங்கா காட்டில் ஆயிரத்தைநூறு காண்டாமிருகங்கள் உள்ளன என்று கணக்கு.

9

இங்கே பார்ப்பதுபோல தென்னகத்தில் எங்கும் இத்தனை மிருகங்களை காணமுடியாது. ஏனென்றால் தென்னகத்தில் காடு மிகச்செறிவானது. மிருகங்கள் கணநேர மின்னலாகத் தெரிந்து மறையும். இங்குள்ள திறந்த வெளியில் ஒரே பார்வையில் பல கிலோமீட்டர் தொலைவு கண்ணுக்குப்படும். கூட்டம் கூட்டமாக மிருகங்கள் தென்படும்.

காண்டாமிருகத்தின் முகத்தில் உள்ள விசித்திரமென்ன என்று வினோத்தான் சொன்னார். நாம் அதன் கண் இருக்கும் என நினைத்துப்பார்க்கும் இடத்தில் கண் இருப்பதில்லை. சற்று தள்ளி மேலும் கீழே இருக்கும். அதுதான் அதன் முகத்தை நம் உள்ளம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாமல் குழப்பியடிக்கிறது.

10

இங்கே நாங்கள் பார்த்த அரிய உயிரினம் கிரேட் ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சிப்பறவை. வால்பாறை பகுதியில் நல்லூழ் இருந்தால் கண்ணில்படும் அரிய பறவை. முறம்போன்ற மிகப்பெரிய சிறகும் பெரிய அலகும் கொண்ட இணைப்பறவை இது. இங்கே சர்வசாதாரணமாக பறந்தலைவதை காணமுடிந்தது.

மனாஸ் காசிரங்கா காடுகளில் ஃபயர் ஆப் ஃபாரஸ்ட் எனப்படும் பெரிய மரம் ரத்தச்சிவப்பு மலர்கள் மட்டும் கொண்டு விரிந்து செறிந்து நின்றிருந்தது. அதன் மலர்கள் காடெங்கும் உதிர்ந்து கிடந்தன. அதை இலைமான்கள் பொறுக்கித் தின்று கொண்டு விழித்து நோக்கின. காடு தீப்பற்றி எரிவதுபோலத்தான். எரிமருள் வேங்கை.

11

காசிரங்காவில் வன ஊழியர்களே காட்டுக்கு தீயிடுகிறார்கள். யானைப்புல்லை கொளுத்தி அழித்தால்தான் மழைக்காலத்தில் பச்சைத்தளிர்கள் பெருகிவரும். மிருகங்களுக்கு உணவு கிடைக்கும். காட்டுநெருப்பு சடசடவென வெடியோசை எழுப்பி உறுமி மூண்டெழுவதை கண்டோம்.

பகல் முழுக்க புழுதிநீராட்டுதான். ஒருகட்டத்தில் அத்தனை யானைகளையும் காண்டாமிருகங்களையும் பார்த்ததன் வியப்பு விலகி ஒரு கனவுநிலை ஆட்கொண்டது. அந்த மிருகங்களுடன் அந்த அடர்காட்டில் எப்போதும் அப்படியே வாழ்ந்துகொண்டிருப்பதுபோல ஒரு பிரமை.

முந்தைய கட்டுரைகுறள் என்னும் தியானநூல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 20