ரிஷிகேஷில் காலை ஆறுமணிக்கே விழித்து எழுந்து குளிக்காமல் பல் தேய்த்து காலையுணவை சாப்பிட்டபின் காத்திருந்தோம். முந்தையநாள் கிருஷ்ணன் கங்கையில் சறுக்குப்படகு பயணம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்திருந்தார். அவரே விசாரித்து விவாதித்து பேரம்பேசி தலைக்கு முந்நூறு ரூபாய் செலவில் செய்த ஏற்பாடு அது. அந்நேரத்திலேயே மடத்தில் சூடான காலை உணவு கிடைத்தது.
ஏழரைமணிக்குத்தான் ஓட்டை வண்டி வந்துசேர்ந்தது. அதன் பின்பக்கம் இருந்த திறந்த பெட்டியில் ஏராளமான தட்டுமுட்டு பொருட்கள். அவற்றுடன் நானும் யுவன் சந்திரசேகரும் அரங்கசாமியும் ஏறிக்கொண்டோம். கிட்டத்தட்ட வானில் பறப்பது போல ரிஷிகேஷின் நெருக்கமான சந்துகள் வழியாக சென்றோம். மக்கள் காலையில் என்ன செய்கிறார்கள் என வீட்டுக்குள் எட்டிப்பார்க்கும் பேறு பெற்றோம்—பெரும்பாலும் பூரி உருட்டிக்கொண்டிருந்தார்கள்.
கங்கை கரைவழியாக ஏறி ஏறி சென்று ஒரு கரையில் நிறுத்தினார்கள். அங்கே கரையோடராக மரக்கூட்டங்கள் அடர்ந்திருந்தனா. லாரியில் இருந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் குவியலை எடுத்து போட்டு பெரிய சைக்கிள் பம்பால் எம்பி எம்பி அடிக்க ஆரம்பிக்க காற்று விழுங்கி ஒரு படகு உருவாகி வர ஆரம்பித்தது. கிருஷ்ணனும் அரங்க சாமியும் அருணும் காற்றடிக்க உதவிசெய்தார்கள். ஏழு தனிப்பகுதிகளாக காற்றடிக்க வேண்டிய படகு. பத்துபேர் வசதியாக அமரலாம்.
அதைத் தூக்கிக்கொண்டு இறங்கி நுரைத்துக்கொண்டு வேகமாக சென்ற கங்கையை அடைந்தார்கள். கூடவே நாங்களும் சென்றோம். எங்களுக்கு மூழ்குதலைதடுக்கும் தக்கைகாவசமும் தலைக்கு காப்புத்தொப்பியும் அணிவித்து ஆளுக்கு கையில் ஒரு துடுப்பையும் கொடுத்துவிட்டார்கள். கங்கை அதிநீலமாக அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஓசை கேட்டுக்கொண்டே இருக்க கங்கைமேல் ஒளி மெல்ல விரிந்துகொண்டிருந்தது. கரையோரமாக ஒரு கடை போல வைத்து சர்பத் விற்றுக்கொண்டிருந்தார்கள். கங்கை நீரையே அள்ளி விற்பதென்றுதான் அதற்குப் பொருள்
எங்கள் படகோட்டி அமெரிக்க உச்சரிப்பில் படகின் விதிகளைச் சொன்னான். ரப்பர் இருக்கைக்கு அடியில் காலைச் செருகிக்கொண்டு படகின் விளிம்பின் தொற்றி அமர்ந்து கொள்ள வேண்டும். துடுப்பின் சிலுவைபோன்ற முனையை கையால் பிடித்து மறுகையால் துடுப்பின் நடுப்பகுதியை பற்றிக்கொண்டு அவன் துழாவச் சொன்னால் துழாவ வேண்டும், நிறுத்தச் சொன்னால் நிறுத்த வேண்டும். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க நியாயமில்லை, அந்த அறிவிப்பை மட்டும் ஆங்கிலத்தில் சரசரவென சொன்னான்
படகில் தள்ளாடி ஏறி அமர்ந்துகொண்டோம். எங்களுடன் இரு மகன்களும் பெற்றோரும் கொண்ட ஒரு வட இந்தியக்குடும்பம். மொத்தம் பத்துபேர். கிளம்பி கொஞ்ச தூரம் வரை அமைதியான பயணம். சட்டென்று நீர் சரிந்து வேகமாக இறங்க ஆரம்பித்தது. துழாவுங்கள் என்றான் படகோட்டி. நாங்கள் துழாவ படகு பாறைகள் மேல் முட்டாமல் அலைகள் மேல் ஏறி சரிந்து இறங்கி மேலே எழுந்து மீண்டும் இறங்கி சுழிகளில் வளைந்து மீண்டு சமநிலை அடைந்தது. நீர் சிதறி எங்களை முழுக்கவே நனைத்துவிட்டது. அனைவரும் சிரித்துக்கொண்டும் பதறிக்கொண்டும் இருந்தோம்.
மீண்டும் சமநிலை பயணம். எதற்காக சரிவுகளில் துழாவச்சொல்கிறான் என்று சந்தேகம் வந்தது. சரிவுகளில் படகு நீரில் அடித்துச்செல்லப்பட்டால் பாறைகளில் தான் சென்று முட்டும். அதை துழாவும்போது படகு சீராக செல்ல முடிகிறது. யுவன் சந்திரசேகர் ஏதாவது பாடலாமே என்று கிருஷ்ணன் சொன்னார். யுவன் அலைகளை சம்பந்தப்படுத்தி சினிமா பாடல்களைப் பாடினான். உலவும் தென்றல் காற்றினிலே… அந்த மனநிலைக்கு பாட்டு உற்சாகமாகவே இருந்தது. அங்கே கங்கை நெருக்கமான மலைகள் நடுவே இருந்து வழிந்து வருவது போல தோன்றியது. மலைகள் நதியின் ஆட்டத்தில் மிதப்பது போல. பசுமை படர்ந்த மலைச்சரிவுகள் மூன்றுபக்கமும். மழைக்காலத்தில் அவை இன்னமும் பசுமையாக இருக்கக் கூடும்.
மீண்டும் நீர்ச்சரிவு. மீண்டும் திகிலும் உற்சாகமும் பின்னிக்கலந்த வேகம். அலைகள் அறைந்து எல்லாருமே ஈரமாக நனைந்து விட்டிருந்தோம். கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்குள் நாலைந்து இடங்களில் அப்படி நீரில் சறுக்கி சுழன்று சென்றோம். இது ஜூனியர் ராஃப்டிங் என்ற திட்டம். பெண்கள், நீந்தத்தெரியாதவர்களையும் சேர்த்துக்கொள்ளக்கூடியது. யுவன், கிருஷ்ணன் இருவருக்குமே நீந்த தெரியாது. 25 கிமீ தூரம் உள்ள சறுக்குப்படகுப் பயணம் மேலும் ஆபத்தானது என்றார்கள்
ராம் ஜூலா அருகில் இறங்கினோம்.ஓர் அற்புதமான அனுபவம் என்றே சொல்லவேண்டும். அதன் சாகச அம்சம் என்பது குறைவே. ஆனாலும் கங்கையின் ஓட்டத்தை மிக அண்மையில், நம் உடலால், உணர முடிந்தது.சந்திரசேகரின் பாட்டை அந்த வட இந்திய தம்பதிகள் மனம் திறந்து பாராட்டிவிட்டுச் சென்றார்கள். பணம் ஏதும் கொடுக்கவில்லை.
மேற்கொண்டு செய்வதென்ன என்று பேசி திட்டமிட்டு ஒரு கார் பிடித்து மலை ஏறிச் செல்லலாம் என்று முடிவுசெய்தோம். 2000 ரூபாய்க்கு ஒரு கடையில் மலை ஏறி சம்பா என்ற மலைக்கிராமம் வரை போக ஒப்பந்தம் இட்டோம். டாட்டா சுமோ வரும் என்று சொல்லி , வந்தது டாட்டா சுமோவாக இருந்த ஒரு வண்டி. வண்டியோட்டி ஒரு சிறுவன். வண்டியின் கதவுகள் திறக்காது, திறந்தால் மூடாது.வெயில் நன்றாகவே எரிக்க ஆரம்பித்தது. ஆனால் உடைகள் கங்கையின் சில்லிப்புடன் ஈரமாகவே இருந்தன
வண்டியில் மலை ஏறிச்சென்றோம். ரிஷிகேஷில் இருந்து ஏற ஏற மலைகள் வளர்ந்து கொண்டே வரும். ஒரு மலையில் ஏறுவதே அதைவிட பெரிய மலையை பார்ப்பதர்காகத்தான் என்பதுபோல. மலைக்கு மேல் ஊர்கள் மாவட்டங்கள் உள்ளன. இமயம் அடுக்குகளாக ஆரம்பிப்பது அங்கிருந்துதான். மலைச்சரிவுகளில் பாத்திவயல்கள் அமைத்து வேளாண்மை செய்திருந்தார்கள். பிரம்மாண்டமான முதலை ஒன்றின் செதில் வளையங்கள் போல மலைச்சருமம் முழுக்க வயல்பாத்திகள். அப்போது கொஞ்ச இடங்களில் கோதுமையும் முட்டைக்கோஸும் போட்டிருந்தார்கள். பல வயல்கள் காயப்போடப்பட்டிருந்தன
ஏற ஏற வெயில் குறைந்து இனிய காற்று ஆரம்பித்தது. நரேந்திரபூர் என்ற ஊரைத்தாண்டி சம்பாவுக்கு சென்று சேர்ந்தோம். சிறிய ஒரு மலைக்கிராமம் அது.ஒரே ஒரு சாலைச்சந்திப்பு, அங்கே சந்தை. நேப்பாளச் சாயல் கொண்ட முகங்களுடன் வண்ண வண்ண உடைகள் அணிந்த பெண்கள். முண்டாசு கட்டிய ஆண்கள். எல்லா முகங்களுமே செம்பு நிறமாக கன்றியிருந்தன, குளிரின் இயல்பு அது. பட்டு சுருங்குவது போல சுருக்கங்கள்.
ஒரு கடையில் ஜிலேபி ரசகுல்லா சாப்பிட்டோம். மேலே அங்கே பார்க்க ஏதுமில்லை. மழைக்காலம் முடிந்திருந்தால் அந்த ஊரே பச்சைமலைச்சரிவுகளால் ஜொலித்திருக்கும். அப்போது தவிட்டுநிறமாக வரண்டு இருந்தது. ஒரு சுற்று சுற்றிவிட்டு திரும்பி விட்டோம். வரும் வழியில் நானும் அரங்கசாமி, அருண், கிருஷ்ணன் ஆகியோரும் இறங்கி ஒரு புல்வெளிச்சரிவில் ஏறி பாறை மீது குந்தி பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் தீவிரமான பேச்சு.. அறிவுக்கும் தர்க்கத்துக்குமான உறவைப்பற்றி. முறைப்படுத்தப்பட்ட தர்க்கஞானம் இல்லாமல் தத்துவத்தை விவாதிக்கலாமா என்பதைப்பற்றி. வசந்தகுமாரும் யுவனும் நடக்க முடியாது என்று சொல்லி காரிலேயே சென்று ஒரு கடையில் அமர்ந்து நூடில்ஸ் டீ சாப்பிட்டார்கள்.
திரும்பும் வழியில் ஒரு சமவெளியைக் கண்டோம். செங்குத்தாக ஓங்கிய மலைகள் நடுவே அதிகம் போனால் நூறு ஏக்கர் பரப்புள்ள சமவெளி விசித்திரமாக அழகாக இருந்தது. அங்கே ஒரு குடும்பம் விவசாய வேலைகள் செய்துகொண்டிருந்தது. இறங்கிச் செல்லலாம் என்று நான் கல்லடுக்கப்பட்ட சுவரில் கையை நீட்டும்போது மின்னதிர்ச்சி ஏற்பட்டதுபோலிருந்தது. என்ன வென்றே தெரியவில்லை கையும் காலு எரிய ஆரம்பித்தது. செந்தட்டி போல இன்னும் பெரிய ஏதோ செடி. அதெப்படி தொட்டதுமே எரிய ஆரம்பிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. கடுமையான அரிப்பு. கடுமையான எரிச்சல். குளிர்ந்த நீரில் கழுவியபோது கொஞ்சம் பரவாயில்லை என்று பட்டது.
அந்த விவசாயக்குடும்பம் நேபாளிகள். அங்கிருந்து விவசாயக்கூலிகளாக வந்து இங்கே தங்கியிருக்கிறார்கள். வேலைகள் இல்லாதபோது திரும்பிவிடுவார்களாம். அவருக்கு ஐந்து குழந்தைகள், ஐந்துமே பெண்கள். இரு சிறுமிகள் அழகாக இருந்தார்கள். கடைசிக்குட்டியின் பெயர் ஷீத்தல். வெளியாளைப் பார்க்கும்போது வெட்கி திரும்பி குனிந்து அமர்ந்துகொண்டார்கள்.
எரிச்சல் இருந்துகொண்டே இருக்க காரில் திரும்பினோம். டிரைவர் இன்னமும் சிறுவன். அவனிடம் என்ன கேட்டாலும் முழுமையாகவே திரும்பி நம்மை நோக்கி பதில் சொன்னபடி அபயாகரமான வளைவுகளில் உச்சகட்ட வேகத்தில் ஓட்டினான். ஒரு மாபெரும் ரங்கராட்டினத்தில் செல்வது போன்ற அனுபவம். அவனிடம் மெல்ல போ என்று கெஞ்சிக்கொண்டே இருந்தோம். அவன் ‘அராம்ஜீ’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஆனால் அவன் ஒரு அபாரமான ஓட்டுநர் என்றார் அரங்க சாமி. அவனது தன்னம்பிக்கைதான் அந்த கவனக்குறைவுக்குக் காரணம். வண்டி முற்றாக அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
வரும்வழியில் நரெந்திரபூரில் ஒரு அரண்மனையைப் பார்த்தோம். அப்பகுதியை ஆண்ட ராஜபுத்திர மன்னர்களின் கோடைகால அரண்மனை அது. 18 ஆம் நூற்றாண்டைச்ச் சேர்ந்தது. மிக விரிந்த மலைக்காட்சியை நோக்கி திறந்து கொள்ளும் சாளரங்களுடன் ஒரு மலைச்சரிவில் கட்டப்பட்ட மஞ்சள் நிறக் கட்டிடம். இரவில் அதற்கு அற்புதமாக மின்விளக்கொளி அமைத்து பொன்னாக ஒளி விடச்செய்திருந்தார்கள்.
இரவு பத்து மணிக்கு திரும்பிவந்து சேர்ந்தோம். சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தபோது உடம்பெங்கும் புழுதி அப்பியிருந்தது. தலை தேங்காய்நார் போல சொரசொரத்தது. வெந்நீரில்குளித்துவிட்டு தூங்குவதற்காக படுத்தோம்
படங்கள் மேலும் : http://picasaweb.google.co.in/universys/More#
[மேலும்]