ராஜ் தாக்கரே

பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து மும்பைக்கு ரயில்வேத் தேர்வு எழுத வந்த மாணவர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா  கும்பல் தாக்கிய செய்தி உருவாக்கிய மனக்கசப்பு கொஞ்சமல்ல. ஏனெனில் இது ஒரு தனித்த நிகழ்ழ்சி அல்ல. இந்தியாவெங்கும் இத்தகைய மனக்கசப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஒரு ஒற்றைப்பொருளியல் கட்டுமானமாக இந்த தேசம் செயல்படும்போது உருவாகும் ஆற்றலைக் கண்டு அஞ்சும் சக்திகளின் பின்னணி இம்மாதிரி முயற்சிகளில் எல்லாம் உள்ளது. முதலில் அறிவுஜீவிகளும் இதழாளர்களும் இவ்வகை வெறுப்பை உருவாக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் சிவசேனா போன்ற தெருக்கும்பல்கள் அவற்றைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

1982களில் நான் பெங்களூரில் இருந்த நாட்களில் மெத்தப்படித்த மேதாவிளான பேராசிரியர்கள் சிலரால் உருவாக்கபப்ட்ட ஒன்றாக இருந்தது கன்னட மொழி வாதம். அது அன்று கர்நாடகத்தில் ஒரு நகைச்சுவையாகவே கணிசமானோரால் பார்க்கப்பட்டது. ஏனென்றால் கர்நாடக மாநிலத்தில் கன்னடம் தனிப்பெரும் மொழியே அல்ல. துளு, கொங்கணி, மராட்டி, இந்தி ,குடகு ஆகிய மொழிகள் முறையே அங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தன.  ஆனால் சட்டென்று நடிகர் ராஜ்குமார்ருக்கு அரசியலாசை வந்தது. நன்ன கன்னட மாதே என்று கூவியபடி சால்வை போர்த்தி மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார். அப்போது அவரது கூட்டங்களுக்கு 200 விடலைப்பையன்கள் சத்தம் போட்டுக்கொண்டு பின்னால் வருவார்கள். அதையும் வேடிக்கையாக போய் நின்று பார்த்துச் சிரித்திருக்கிறேன்.

இன்று கன்னடமொழிவாதம் கர்நாடக அரசியலில் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்துள்ளது. அப்போது சாம்ராஜ்பேட் , ஜெயநகர், மல்லேஸ்வரம் போன்ற்ற இடங்கள் தமிழர்களின் கோட்டை. தமிழர்களின் கடைகள்தான் ஓல்டு மெட்றாஸ் முழுக்க. ஒரு சொல் கன்னடம் தெரியாமல் பெங்களூரில் தமிழே பேசி எங்கும் செல்ல முடியும். ஆனால் இப்போது ஓல்டு மெட்ராஸ் சாலையில் இருந்தும் சாம்ராஜ்பேட்டில் இருந்தும் தமிழர்கள் முற்றாக துரத்தப்பட்டுவிட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் பறிக்கபப்ட்டு விட்டன.  உண்மையில் கன்ன மொழிவாதத்துக்குள் உள்ள உட்பிரச்சினைகளை,  அதாவது துளு கொங்கணி மக்கள் கனரா, மைசூர் மாவட்டங்களில் அளிக்கும் எதிர்ப்புகளை மழுப்புவதற்கே திட்டமிட்டு தமிழ் வெறுப்பை தூண்டுகிறார்கள். பொது எதிரியை உருவாக்கி அவன் மேல் வெறுப்பை தூண்டுவது செயற்கையான ஒற்றுமையை உருவாக்குவதற்கான குறுக்குவழி. கடைசியில் அகண்ட பாரத தேசியம் பேசிய எதியூரப்பா வரை அதை கையிலெடுக்க நேர்ந்தது.

சிவசேனா தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான கோபத்தை தூண்டியபடி பிறவிகொண்ட தெருப்பொறுக்கி அரசியலின் கட்சி.  அதற்கான விதையும் அங்குள்ள ஆரம்பகால அறிவுஜீவிகளாலேயே உருவாக்கபப்ட்டது. இந்தி சினிமாவுக்கு எதிராக மராட்டி நாடகமேடையை முன்வைத்த அறிவுஜீவிகளே மராட்டியவாதத்தின் தொடக்கப்புள்ளிகளைப் போட்டார்கள். சிவசேனாவின் குட்டியான மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா இன்று அதே திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.  ராஜ் தாக்கரே குறுக்குவழி அரசியலுக்காக பிரிவினைவாதத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்த அடி எந்த நிமிடமும் அங்குள்ள தமிழர்களுக்கு விழலாம். மும்பையில் பல லட்சம் தமிழர்கள் தொழிற்சாலை வேலைகள் ,சிறு தொழில்கள், சிறு வணிகங்கள் செய்து வாழ்கிறார்கள். தென் மாவட்டங்களில் இன்றும் மும்பைக்குப் போவது ஒரு பெரிய வாழ்க்கை வாசலாக உள்ளது. அவர்கள் அங்கே ஒரு முக்கியமான பொருளியல் சக்தி.

இந்தியாவின் பெருநகரங்கள் பெருந்தொழில்மயமாகி வருகின்றன. அப்போது அங்கே பலவகையான தேவைகள்  உருவாக பலவகையான மனிதர்கள் தேவைபப்டுகிறார்கள். ஆகவே இயல்பாகவே அவை பல்லின பலமொழி பலபண்பாட்டு கலவைகளாகவே உருவாகின்றன. அடிபப்டையான திறமையும் புலம்பெயர்ந்து சென்று வேலைபார்க்கும் தன்மையும் கொண்ட தமிழர்களும் மலையாளிகளும் உருவாகும் வாய்ப்புகளை அதிகமாகபயன்படுத்திக்கொள்கிறார்கள்.

டெல்லி மும்பை பெங்களூர் மூன்றும் அத்தகைய மாநகர்கள். அவை இனி மராட்டியருக்கோ கன்னடர்களுக்கோ சொந்தமல்ல. ஆனால் அந்நகர்கள் உருவாக்கும் செல்வத்தின் பெரும்பகுதி அந்த மாநிலங்களுக்குச் செல்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்குப் போகுமென்றால் உலகமக்களில் அனைத்து இனங்களும் வாழும் நகர்களாக அவை ஆகும். இப்போது பெங்களூரில் அதன் சாயல்கள் தெரிகின்றன

டொரொண்டோ போன்ற ஒரு நகரின் ரயில் நிலையத்தில் நிற்கையில் தெரியும் பல்லினவாழ்க்கை ஆழ்ந்த பரவசத்தை உருவாக்கக் கூடியது. அப்படி ஒருநகரம் நம் நாட்டில் இல்லையே என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. அத்தகைய ஒரு கட்டத்துக்கு நாம் செல்வதகான தடையே இம்மாதிரி குறுக்கல் வாதங்களும் இன, மொழி வாதங்களும்தான்.

இந்தியாவை அழிக்கும் இந்த நச்சு சக்தியுடன் கூட்டு வைத்திருக்கும் பாரதிய ஜனதா எந்த அர்த்ததில் அதை ஒரு தேசிய சக்தி என்று சொல்லிக் கொள்கிறது? இன்றைய காலகட்டத்தில் அனைத்து தேசிய சக்திகளாலும் விஷப்பாம்பு போல அழிக்கப்பட வேண்டிய ஒருவர் ராஜ் தாக்கரே. அவரை அலங்காரக் கைது செய்து இனவெறுப்பு கொண்ட மக்களுக்கு ஆதர்சத் தலைவராகக் காட்டுவதல்ல இன்றைய தேவை. இந்த வழி அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் அதிகாரத்துக்கல்ல சிறைக்கே கொண்டுசெல்லும் என்று நெற்றியில் அறைந்து கற்பிப்பது.அதற்கு இந்திராகாந்திதான் சரியோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இந்தியாவில் அல்ல, உலகில் எங்கு இனமொழிமதவாதம் எழுந்தாலும் தமிழர்கள் பாதிக்கபப்டுவார்கள் என்பதே இன்றைய நிலை. நியூயார்க்கில் சிங்கப்பூரில் கொலாலம்பூரில் சிட்னியில் டொரொண்டோவில்– எங்கும். ஆனால்  அந்த உணர்வு நமக்கிருக்கிறதா? ஒரு நவீன குடிமக்களாக நாம் இருக்கிறோமா?  அடுத்த இதழில் குமுதத்தில் ஞாநி கண்டிப்பாக ராஜ் தாக்கரேக்கு குட்டு வைப்பார். ஆனால் ராஜ் தாக்கரேயைக் கண்டிக்கும் தகுதி நம் இதழாளர்களுக்கோ அறிவுஜீவிகளுக்கோ உண்டா?

மக்கள் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாகப் பார்த்தேன். ஒரு நீதிமன்றத்தில் சேட்டு [மார்வாடி அல்லது ராஜஸ்தானி] வேடமிட்டு ஒருவர் அமரச்செய்யப்பட்டு அவரை விசாரணைசெய்கிறார்கள். தமிழகத்தின் அத்தனை வீழ்ச்சிக்கும் பிரச்சினைகளுக்கும் தானே காரணம் என்று அவர் சொல்கிறார். அபப்டித்தான் ஏமாளித்தமிழனை சுரண்டி அழிப்போம் என்று கொக்கரிக்கிறார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி.

இந்தியா முழுக்க சில முக்கியமான வணிகங்களையும் தொழில்களையும் தமிழர்கள்தான் செய்கிறார்கள். இன்று இப்படி ஒரு நிகழ்ச்சியை ராஜ் தாக்கரேயின் தொலைக்காட்சி தயாரித்து ஒளிபரப்பினால் நாம் என்ன சொல்வோம்?

இந்த பத்து வருடங்களாக பட்டினியில் இருந்து சற்றெ வெளிவந்து மூச்சுவிட ஆரம்பித்திருக்கும் இந்திய மக்களின் அடிவயிற்றில் அடிக்க ஒரே வழி மத மொழி இன பிரிவினைவாதம் பேசுவதுதான். நம் அரசியல் வாதிகள் நம்மை வாழ விடமாட்டார்கள். அதற்குக் காரணம் நம் அ·! ற்பத்தனத்தாலும் சுயநலத்தாலும் அவர்களை ஆரம்பத்தில் நாம் வளர விடுவோம்

முந்தைய கட்டுரைஇணையப்பதிவுகள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்