கும்பமேளா – 2

ஹரித்வாருக்கு வந்திறங்கியபோது அதிகாலை மூன்று மணி. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு பொட்டல்வெளியில் விளக்கொளியில் புழுதிப்படலம் தங்கச்சல்லாபோல ஜொலித்துக்கோண்டிருந்தது. புழுதிபடிந்த கார்கள் விலாநெருங்கி நிறைந்திருந்தன.  புழுதித்தரை மீது விரிக்கப்பட்ட சாக்குகளில் ஏராளமானவர்கள் கம்பிளிக்குவியல்களாகப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். தூக்கமிழந்த போலீஸ்காரர்கள் கைகளில் ஸ்டென் மெஷின் கன்களுடன் சுற்றிவர ஒரு தீதி உற்சாகமாக டீத்தூள் பால் சர்க்கரை எதுவுமே இல்லாத டீ போட்டு விற்றுக்கொண்டிருந்தாள். குளிருக்கு அதுவும் நன்றாகவே இருந்தது.

நாங்கள் வரும்போது ஹரித்வரில் தங்க பலவகையான ஏற்பாடுகளுடன் வந்திருந்தோம். வரும் வழியிலேயே அந்த எந்த ஏற்பாடும் வேலைசெய்யவில்லை என்ற தகவல் வந்தது. ஹரித்வாரில் எங்குமே தங்க இடமில்லை. கட்டக்கடைசியாக விஜய் டிவி தயாரிப்பாளரும் என் நண்பருமான ஆண்டனியிடம் சொல்லி  ஓர் ஏற்பாடு செய்திருந்தேன். அவரும் அங்கே தங்க முடியாது இடமே இல்லை என்றார். ரிஷிகேஷ் போய் தங்குங்கள் என்றார். கரு. ஆறுமுகத்தமிழன் வழியாக ரிஷிகேஷில் ஒரு இடம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே இடமிருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே ரிஷிகேஷுக்கே செல்வதென்று முடிவுசெய்தோம்.

ஹரித்வாரில் எங்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட இடம் கும்பமேளாவுக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக பேருந்து தங்குமிடம். அது ஹரித்வாரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. அங்கிருந்து ஹரித்வாருக்குள் நுழைய ஆட்டோ ரிக்‌ஷா கிடைத்தது. ராட்சத  ஆட்டோ. அதில்  எட்டுபேர் சௌகரியமாக அமரலாம். இருபது பேர் வரை அசௌகரியமாக அமர்ந்து செல்வதைக் கண்டேன்- செல்லப்படுவதை என்று சொல்லவேண்டும். ஹரித்வாருக்குள் அந்நேரத்திலும் கூட்டம். சத்தம்.

ஹரித்வாருக்குள் சென்று அங்கிருந்த ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து ரிஷிகேஷுக்கான பேருந்தை பிடித்தோம். நான் தூங்கிவிட்டேன். யுவன் சந்திரசேகரும் அரங்கசாமியும் நின்றுகொண்டே தூங்க வேண்டியிருந்தது. காலை ஐந்தரை மணிக்கு ரிஷிகேஷ் வந்தோம். அங்கிருந்து ஓர்  ஆட்டொ பிடித்து சொல்லிவைத்திருந்த இடத்துக்கு கிளம்பினோம். இடம் பெயரும் குத்து மதிப்பாகவே தெரிந்திருந்தது. மடம்பெயர் சிமிட்டா மதிப்பாக. ஆனாலும் ஆட்டோக்காரர் கோயிலூர் மடத்துக்கு கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்

கோயிலூர் மடம் செட்டியார்களின் மடங்களில் ஒன்று. முன்பகுதியில் கொஞ்சம் கட்டுமான வேலை நடக்கிறது. வசதியான மடம். முகப்பில் சந்தோஷிமாவுக்கும் சிவபெருமானுக்கும் நடுவே திருவள்ளுவருக்கும் சிலை வைத்து வழிபாடு நடக்கிறது. சென்று அறை பெற்றதுமே படுத்து மதியம் பன்னிரண்டு மணி வரை தூங்கினோம்.

எழுந்ததுமே குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். நல்ல சாம்பார், சாதம். பசியில் ருசி பெருகும் விந்தை எத்தனை அனுபவித்தாலும் சலிக்காத அற்புதம். கோயிலூர் மடத்தின் தலைவர் நாச்சியப்ப சுவாமிகளின் படம் சுவரில் இருந்தது. பசி தணிந்து சுவாமிகளின் முகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

குளிக்கப்போகலாம் என்று கிளம்பினோம். ரிஷிகேஷ் தெருக்களில் சுற்றி நடந்து திரிவேணிகட் என்ற படித்துறையை அடைந்தோம். உக்கிரமான வெயில் இருந்தாலும் இமயமலைக்காற்று கொஞ்சம் குளுமை அளித்தது. திரிவேணி கட் செயற்கையாக சிவப்புக்கற்களால் உருவாக்கப்பட்ட பெரிய படித்துறை. குளிப்பதற்காக கங்கையின் பெருக்கை வெட்டி கிளை ஒன்று அமைத்திருந்தார்கள். தண்ணீர் பனிக்குளிருடன் விரைக்க வைத்தது. சற்று முன்னர்தான் வெயிலில் வெந்தோம் என்பதே மறந்து விட்டது.

கண்சிவக்க நீராடி விட்டு கிளம்பினோம். படித்துறை சுத்தமாக இருந்தது. ஏராளமான கோயில்களில் இருந்து பஜனை ஒலி கேட்டபடியே இருந்தது. கான்கிரீட்டில் கட்டப்பட்ட பெரிய சிவன் சிலையும் கீதோபதேசம் சிலையும் வழக்கமான கான்கிரீட்தனம் இல்லாமல் உயிரோட்டமாக இருந்தன.

கங்கையில் குளிப்பதர்காக ஒரு தமிழ்க்கூட்டம் வந்திருந்தது. கரிய இளைஞர்கள். எல்லாருமே குடுமி வைத்து பூணூல் போட்டவர்கள். அங்குள்ள ஏதோ மடத்தில் வேதம் பயில்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவனை அந்தப்படிகளில் வந்துகொண்டிருந்த ஒரு வட இந்திய மனிதர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார், அதைக்கண்டு அருண் ஓடிப்போய் என்ன என்று கேட்டார். அரங்க சாமியும் சென்றார். சில நிமிடங்களில் சாந்தமாக திரும்பிவிட்டனர். என்ன என்று நான் கேட்டேன். அந்த தமிழ் இளைஞன் கங்கையின் அக்கரை மேட்டில் சென்று மலம் கழித்திருக்கிறான். அறைந்தவர் அந்த படித்துறையின் காவலர். ‘’அடிக்க வேண்டியதுதான் சார்’’ என்றார் அருண். அந்த அடிவாங்கிய இளைஞன் ஒன்றும் நடக்காதது போல நண்பர்களுடன் குளிக்க ஆரம்பித்தான். தமிழ்ப்பண்பாட்டை வடவருக்கு உணர்த்திய அவனை கூப்பிட்டு மேலும் நான்கு அறை விட்டால் என்ன என்று தோன்றியது

மாலை அறைக்கு திரும்பிவிட்டு கிளம்பி லட்சுமண் ஜூலா சென்றோம். கங்கையை மிகச்சிறந்த கோணத்தில் பார்ப்பதற்கான இடங்களில் ஒன்று லட்சுமண் ஜூலா. ஜூலா என்றால் தொட்டில் அது ஒரு கம்பிப்பாலம். வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்டது. ஐந்தடி அகலம். அதன் வழியாக சாரி சாரியாக மறுகரைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். கங்கையின் இருபக்கமும் உள்ள நூற்றுக்கணக்கான கோயீல்களில் தீபங்கள் ஒளிர்ந்தன. மணியோசை ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தப்பகுதியிலிருந்த  விழாக்கோலம் மனதை மயக்குவதென உணர நாம் மனிதர்களை நேசிக்க வேண்டும். அந்த மனிதர்களை முடிவிலாத இறந்த காலத்துடன் பிணைக்கும் பண்பாடு மீது நமக்கு ஒரு பற்று இருக்க வேண்டும்.

முகங்களின் அருவி ஒன்று நம் மீது கொட்டுவது போன்ற அனுபவம் அது. எத்தனை இனங்கள் எத்தனை பண்பாடுகள். முகங்களைக் கொண்டு எந்த ஊர் எந்த மொழி என்று ஊகிப்பது அற்புதமான ஒரு விளையாட்டு. நாங்கள் முண்டாசைக்கொண்டு ராஜபுத்திரர் என ஊகித்த இருவரிடம் கேட்டுபபர்த்தோம். உஜ்ஜயினியைச் சேர்ந்தவர்கள்.

முக்காடு போட்ட பெண்கள், முகத்திரை போல சேலை மறைத்த பெண்கள் , முழங்கை வரை வளையல அணிந்த பெண்கள். கால்களில் வெள்ளி வளையங்கள் அணிந்தவர்கள்… மங்க்கோலிய ரத்தம் கலந்த முகங்களில் நேராளமான சுருக்கங்கள். கூர் மூக்கு கொண்ட அராபிய ரத்தம் செக்கச்சிவந்த கிரேக்க ரத்தம். இந்தியா என்னும் இனக்க்களின் கடல்!,  பெரும்பாலான மனிதர்கள் பெரும் திரள்களாகவே கிளம்பி வந்திருப்பதாக தெரிந்தது. அவர்கள் தங்குமிடம் உணவு எதற்கும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தலைகளில் இருந்த மூட்டைகளில் கம்பிளியும் ஜமுக்காளமும் இருந்தன. கிடைத்த இடத்தில் படுத்து தூங்க வேண்டியதுதான். ரயில் கட்டணமன்றி வேறெதைப்பற்றியும் கவலையில்லாமல் வந்திருந்தார்கள்.

லட்சுமண் ஜூலாவை தாண்டி அப்பால் சென்று ஒரு கோயிலில் கொஞ்சநேரம் அமர்ந்து இளைப்பாறினோம். மீண்டும் நடந்து இப்பால் வந்தோம். இரவேறும் வரை அந்த மனிதவெள்ளத்திலேயே திளைத்துக்கொண்டிருந்தோம்.  அதுவும் ஒரு கங்கை நீராட்டே

[மேலும்]

முந்தைய கட்டுரைஆறு தரிசனங்கள்
அடுத்த கட்டுரைகர்மயோகம் : (25 – 30)