சூரியதிசைப் பயணம் – 3

2மதியம் ஒருமணிக்கு மனாஸ் தேசிய வனப்பூங்காவை வந்தடைந்தோம். ராம்குமார் அங்கே இருந்த தனியார் விடுதி ஒன்றில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார். அஸ்ஸாமின் சுற்றுலாத்தொழில் கொஞ்சம் மேலேறி வந்த சமயத்தில் சமீபத்திய போடோ தாக்குதல் அதை பின்னடையச்செய்துவிட்டது. ஆனாலும் அறைகளில் குடும்பங்கள் நிறையவே இருந்தன.

6
மனாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்தக் காடு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . மனாஸ் ஆறு பாம்புதேவியான மானசாதேவியின் பெயரால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்கிறார்கள். பிரம்மபுத்திராவின் துணையாறு இது. யுனெஸ்கோ இந்தக்காட்டை உலகக் கலாசாரச் சின்னமாக அறிவித்திருக்கிறது.

மனாஸ் காடு தொடர்ந்த கடும் வேட்டையால் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்தது. தீவிரவாதம் காரணமாக ஆயுதங்கள் பரவலானதும் தீவிரவாதத்திற்கு பணம் திரட்ட யானைத்தந்தங்களும் காண்டாமிருகக் கொம்புகளும் உதவியாக இருந்தமைதான் காரணம். இபோது கடுமையான காவல் காரணமாக வேட்டை தடுக்கப்பட்டு வன உயிர் பாதுகாக்கப்படுகிறது.

மனாஸ் காட்டில் காண்டாமிருகம் முழுமையாகவே அழிந்து விட்டது. 2007-இல் காசிரங்காவிலிருந்து குட்டிகள் கொண்டு வரப்பட்டு காண்டாமிருகம் இங்கே மீட்கப்பட்டுள்ளது இப்போது 26 காண்டாமிருகங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் ஒன்று சென்ற மாதம் கொல்லப்பட்டிருக்கிறது.
3
மனாஸ் காட்டுக்குள் மாலை மூன்றுமணிக்கு இரண்டு திறந்த ஜீப்புகளில் இரண்டு துப்பாக்கியேந்திய வனக்காவலர் துணைவர நுழைந்தோம். வெயிலில் அந்தக் காட்டில் பயணம்செய்யும்போது இருந்த மனப்பதிவு இரண்டு. ஒன்று கேரளத்தில் ஃபாரஸ்ட் சபாரி என்று சொல்லி இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட்டிச்சென்று திருப்பிக்கொண்டுவருவது போல ஒரு ஏமாற்றுவித்தையாகவே அது இருக்கப்போகிறது. இரண்டு, அந்த மதியவெயிலில் மிருகங்கள் ஏதும் கண்ணில்படப்போவதில்லை.
1

3

4
அதற்கேற்ப காடு பெரும்பாலும் காய்ந்தே இருந்தது. சில இடங்களில் புதிய புல் வளர்வதற்காக பழைய காய்ந்த புல்லுக்கு வனக்காவலரே தீயிட்டிருந்தனர். நான்கு கிலோமீட்டர் சென்று ஒரு காவல்கோபுரத்தை அடைந்தபோது அருகே ஒரு யானையை பார்த்தோம். இளைஞன். ஆனால் இங்குள்ள யானைகள் தென்னிந்திய யானைகளில் முக்கால்பங்கு உயரமே கொண்டவை. ஆகவே குட்டியானை என்ற எண்ணம் வந்தது.

துதிக்கை நீட்டி எங்களை மோப்பம் பிடித்தது. சட்டென்று பின்னால் வந்த ஜீப்பை துரத்தத் தொடங்கியது. காவலர் சத்தம்போட்டார். கல்லை வீசினார். ஆனால் அது வந்த வேகம் குலைநடுங்கச்செய்தது. அவர் எங்களை காவல் கோபுரத்தில் ஏறும்படி சொல்லியபடியே வானை நோக்கி சுட்டார். குண்டுச்சத்தம் அதை அச்சுறுத்தவில்லை. கொஞ்சம் பின்னடைந்து காட்டின் விளிம்பில் நின்றது.

நாங்கள் மேலே ஏறி நின்று அதை நோக்க்கிக் கொண்டிருந்தோம். அது அகழியைச் சுற்றி வந்து மீண்டும் காவல்கோபுரத்தின் முற்றத்தை நோக்கி வந்தது. தலையை ஆட்டி துதி தூக்கி மோப்பம் பிடித்தது. காலால் மண்ணைத்தட்டி கிளப்பி துதியால் அள்ளி தலைமேல் போட்டுக்கொண்டது. காவலர் கூச்சலிட்டு கல்லைத்தூக்கி வீசிக்கொண்டே இருந்தார். அது பயப்படாமல் மீண்டும் மீண்டும் காவல்கோபுரத்தை நோக்கி வரமுயன்றது. மண்ணை உதைத்து கிளப்பியபடி பிளிறியது. பின்னர் மெல்ல விலகிச்சென்றது.
4

அதுவரை நெஞ்சு படபடத்துக்கொண்டிருப்பதை அதன்பின்னரே உணர்ந்தோம். இதுவரை காட்டில் யானைகளை பார்த்திருக்கிறோமே ஒழிய யானை தாக்கவந்தது புதிய அனுபவம். தாக்கவரும் யானையை அத்தனை அண்மையில் பார்த்தது ஒரு வாழ்நாள் அனுபவம்.

யானையைப்பற்றி பேசியபடி சென்றோம். நான் 18 வயதிலேயே காட்டில் யானையை பார்த்துவிட்டேன். யானையை காட்டில் பார்த்தவர்கள் அதை மிகவும் அஞ்சுவார்கள். அதைப்போல ஊகிக்கமுடியாத நடத்தை கொண்ட வேகமான ஆற்றல் மிக்க புத்திசாலித்தனமான கொலையாளி பிறிதில்லை.

6
மனாஸ் காட்டில் யானைப்புல் எழுந்து விரிந்த சமவெளி ஒன்றிருக்கிறது, காண்டாமிருகத்தின் வாழ்விடம். அங்கே கூட்டம் கூட்டமாக காட்டெருமைகளை பார்த்தோம். காண்டாமிருகங்கள் கண்ணில் படவில்லை. பொன்னிறமாகக் காய்ந்து ஆங்காங்கே பச்சை விரிந்த அந்த வெளி ஓரு கனவுநிகர்த்த காட்சியனுபவமாக இருந்தது. நமீபியாவின் மகத்தான பொன்னிறப் புல்வெளியை நினைவுகூர்ந்தேன்.

திரும்பிவரும் வழியில் நான்கு யானைக்கூட்டங்களை பார்த்தோம். பத்து யானைகள்வரை கொண்ட மந்தைகள். அவை எங்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. நிதானமாக புல்லை சுருட்டித் தின்றுகொண்டிருந்தன. காட்டில் ஒரே பயணத்தில் அத்தனை யானைகளைப் பார்த்தது எனக்கு இதுவே முதல்முறை.
6
மனாஸ் ஆற்றின் நீர் பனியிறுகியதுபோல சில்லென்றிருந்தது. அதில் கொஞ்சம் கால்கை கழுவிவிட்டு உருளைக்கல் பரவிய அதன் கரையில் நின்றிருந்தோம். மறுபக்கம் காட்டு மாடு ஒன்று வந்து நீர் அருந்திச்சென்றது. மாலை ஐந்துமணிக்கே நன்றாக குளிரத்தொடங்கியது.

திரும்பி வந்துசேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. காட்டுக்குள் சாலை மண்ணால் ஆனதென்றாலும் நேராக உறுதியானதாக இருந்தது. கிட்டைத்தட்ட ஐம்பது கிலோமீட்டர் காட்டிலேயே சுற்றிவந்தோம்.

7
அற்புதமான காட்டு அனுபவம் என்று தோன்றியது. மாலை அந்த விடுதியின் நிர்வாகியான கல்யாண் என்பவரை சந்தித்தோம். அஸ்ஸாமின் பிரச்சினைகளைப்பற்றி சொன்னார். அஸ்ஸாமியர்களுக்கு மத்திய அரசாலும் இந்திவாலாக்களாலும் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக நினைப்பிருக்கிறது.

மேலும் அஸ்ஸாமில் அசாமியர்களை சிறுபான்மையினராக ஆக்கும் வங்கதேசக் குடியேறிகள் பிரச்சினையை காங்கிரஸ் வளர்த்தது என்றும் நினைக்கிறார்கள். குடியேறிகள் முஸ்லீம்கள். அவர்கள் காங்கிரஸின் வாக்குவங்கி என்பதனால் அவர்கள் குடியுரிமை பெறுவதை காங்கிரஸ் ஊக்குவித்தது. குடியேறிகள் பெரும்பாலும் பஞ்சம் பிழைக்கவந்த பரம ஏழைகளும் கூட.
9

ஆனால் இன்று அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைநிலம். அஸ்ஸாமின் பலபகுதிகளை ‘விடுவிக்கப்பட்ட’ இஸ்லாமிய பகுதிகளாகவே அறிவித்திருக்கிறார்கள். பல இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற வஹாபிய மதவெறி அமைப்புகளின் சுவரொட்டிகளையும் பானர்களையும் கண்டோம். போடோக்கள் இன்று இவர்கள் மீது நேரடியான தாக்குதலை தொடுப்பதற்கான காரணம் இவர்கள் பெரும்பாலும் இன்று பெரிய ஆயுதமேந்திய இஸ்லாமிய அமைப்புகளாக மாறிவிட்டிருந்ததுதான் என்றார்கள்.

7

கல்யாண் தென்னிந்தியாவுக்கு வந்திருந்தார். கன்னியாகுமரிக்கும் வந்ததாக சொன்னார். தென்னகம் தங்களைவிட ஐம்பதாண்டு முன்னேறிய மாநிலம் என்றார். தன் மகனை பெங்களூரில் படிக்கவைக்கவேண்டுமென்பதே கனவு என்றார். தென்னகத்தில் எங்கும் தாங்கள் அன்னியராக உணரவில்லை என்றார். அவர் ஒரு மனம்திரும்பிய போடோ தீவிரவாதி என பின்னர் அறிந்தோம். அவருக்கு அரசாங்கமே இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை அளித்திருக்கிறது. இருவரும் எந்நேரமும் அவருடனேயே இருக்கிறார்கள்.

அஸ்ஸாமில் தனிநாடு கோரிக்கை உண்டா என்று கேட்டோம். ‘அஸ்ஸாமில் அஸ்ஸாம் எனற உணர்வு இல்லை. முதலில் இங்குள்ளது எந்தப்பழங்குடி என்ற உணர்வுதான். அஸ்ஸாம்தேசியம் என ஒன்று இல்லை. பழங்குடி உணர்வுக்கு அப்பால் ஒரளவேனும்உள்ளது இந்தியா என்ற உணர்வுதான்’ என்றார். எப்போதுமே நேரில் வந்து சந்திக்கையில் அடையும் உண்மையே வேறு என நினைத்துக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 4