சூரியதிசைப் பயணம் – 2

1

காலை நான்குமணிக்கே விடிந்துவிட்டது. பறவைக்கூச்சல் கேட்டு வெளியே பார்த்தால் அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னால் பிரம்மாண்டமாக பிரம்மபுத்திரா ஓடிக்கொண்டிருந்தது. தமிழகக் கண்ணுக்கு அது ஒர் ஆறு என்றே தோன்றாது. ஏரி என்றே தோன்றும். அத்தனை அகலம். பிரம்மபுத்திரா பற்றிய என் நினைவே அதன் கரையில் நெடுந்தொலைவுக்கு படிந்திருக்கும் கரிய சேறுதான். அப்படியேதான் இருந்தது. சற்றே கலங்கலான நீர் ஒளியுடன் கண்கூச நிறைந்து கிடந்தது. காலையில் அதில் மீன்பிடிப்படகுகள் நின்றிருந்தன.

4

காலையில் காமாக்யா கோயிலுக்குச் சென்றோம்.கௌஹாத்தியின் முக்கியமான மத மையம் இந்த ஆலயம். காமாக்யா என்ற தேவி சக்தியின் காம வடிவம். புராதனமான பெண்குறி வழிபாட்டின், அல்லது தாய்மை வழிபாட்டின் இன்றைய வடிவம் இது. இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் இதுவே தொன்மையானது எனப்படுகிறது. சாக்தத்தின் நாகர-காமரூப மரபில் வழிபடப்படும் பத்து மகாவித்யைகளுக்கான பத்து ஆலயங்கள் அடங்கிய ஒரு மலைச்சரிவு இது. புவனேஸ்வரி, சின்னமஸ்தா, பாகலாமுகி, திரிபுரசுந்தரி, தாரை, பைரவி, தூமவதி, மாதங்கி, கமலா ஆகிய தேவியருக்கான ஆலயங்கள் இங்குள்ளன.

6

ஒன்பதாம் நூற்றாண்டில் காமரூபத்தை ஆட்சி செய்த மிலேச்சஹ அரசவம்சத்தின் வனமாலவர்மதேவனின் டெஸ்பூர் செப்பேடுகளில் இந்த ஆலயம் பற்றிய குறிப்பு உள்ளது. அதற்கு முன்னரே இங்கே பெரிய ஆலயம் இருந்ததற்கான தொல்பொருள் தடயங்கள் உள்ளன. பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாமை ஆண்ட இந்திரபாலர் தர்மபாலர் போன்ற அரசர்கள் தாந்த்ரீக வழிபாடு கொண்டவர்கள். ஆகவே அஸ்ஸாம் முழுக்கவே தாந்த்ரீக வழிபாடு பெருகியது. இப்போதுள்ள ஆலயத்தின் முதல் வடிவம் இக்காலகட்டத்தில் கட்டப்பட்டது.

சுல்தான் ஹுசெய்ன் ஷா 1498-இலும் சுல்தான் சுலைமான் கர்ரானி 1572-இலும் காமாக்யா ஆலயத்தை முழுமையாக இடித்து அழித்தார்கள். அதன் கல்லால் ஆன அடித்தளம் மட்டும் எஞ்சியிருந்தது, பின்னர் பதினாறாம் நூற்றாண்டில் அஹோம் வம்ச மன்னர்களால் அந்த இடிந்த அடித்தளம் மீது செங்கல்லால் கட்டப்பட்ட சதுரக்கூம்பு வடிவமான முகடுடன் இன்றைய ஆலயம் உள்ளது.
.

K
இந்த ஆலயத்தின் மையக்கருவறையில் ஒரு சிறிய பாறையில் பெண்குறியின் வடிவிலான நீண்ட பள்ளத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. பழமையான ஆலயம். அதன் அடித்தளம் இன்று நிலமட்டத்தை விட ஐந்தடி ஆழத்தில் உள்ளது. கருவறை ஆலயத்திற்குள் மேலும் ஐந்தடி ஆழத்தில் உள்ளது.

5

கருங்கல்லால் ஆன அடித்தளத்தை வைத்துப்பார்த்தால் பிரம்மாண்டமான நாகரபாணி ஆலயம் அங்கிருந்தது என்று சொல்லமுடியும். இந்த ஆலயம் ஐந்தாம் நூற்றாண்டு வரை தாந்த்ரீகர்கள் வந்துசெல்லும் ரகசிய வழிபாட்டிடமாக இருந்துள்ளது. அதற்கு முன்பு இது பழங்குடிகளின் வழிபாட்டிடமாக இருந்திருக்கலாம். குப்தர் காலத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட பழைய ஆலயம் பின்னர் ஏழாம் நூற்றண்டில் நாகர பாணி கற்கோயிலாக எழுப்பப்பட்டிருக்கிறது.

நாங்கள் செல்லும்போது எட்டுமணி ஆகிவிட்டது. ஐந்தரை மணிக்கு சென்றிருக்கவேண்டும். பெரிய கூட்டம் வந்து சேர்ந்து ஆலயவளாகமே நிறைந்திருந்தது. கருவறைத்தரிசனத்திற்கு மிகப்பெரிய வரிசை. மூன்றுமணிநேரம் ஆகும். மிகச்சிறிய கருவறை என்பதனால் சிறிய குழுக்களாகேவே உள்ளே விடுவார்கள். ஆகவே தரிசனம் செய்யாமலேயே திரும்பிவிட்டோம்.

கோயிலை சிலமுறை சுற்றிவந்து பார்த்தோம். ஒருசராசரி தமிழனுக்கு பெரிய கலாச்சார அதிர்ச்சி அளிக்கக்கூடிய கோயில். எங்கு நோக்கினாலும் ரத்தச்சிவப்பு ஆடைஅணிந்த சாக்தர்கள். இன்றும் உயிர்ப்பலி கொடுக்கப்படுகிறது. ஏராளமானவர்கள் கைகளில் ஆடுகளுடன் வந்திருந்தனர். அவற்றை ஒரு குளத்தில் நீரில் முக்கி நீராட்டி மார்போடு அணைத்து வைத்திருந்தனர். இங்குள்ள ஆடுகள் குட்டை ரகம். சிறிய கால்கள் கொண்டவை.

பல சிறிய சன்னிதிகளில் வெட்டப்பட்ட ஆட்டுத்தலைகள் இருந்தன. ஒரு தலை ஆடிக்கொண்டிருந்தது. சிறிய வளைகள் வழியாக வந்த எலிகள் அந்தத் தலையை கவ்வி இழுத்து தின்றுகொண்டிருந்தன. ஒரு தெய்வத்தின் முன் வெட்டப்பட்ட பெரிய எருமைத்தலை வளைந்த கொம்புகளும் தொங்கும் காதுகளும் விழித்த கண்களுமாக வைக்கப்பட்டிருந்தது. குருதி சிந்திக்கொண்டே இருப்பதனால் ஆலயவளாகத்தை ஹோஸ்பைப்பால் நீர் பீய்ச்சி கழுவிக்கொண்டே இருக்கிறார்கள். குருதிவாசம் எங்கும் நிறைந்திருக்கிறது.

ஆலயத்தின் சிற்பங்களில் அர்ஜுனன், துர்க்கை, சூரியன் என சிலதெய்வங்களையே அடையாளம் காணமுடிந்தது. சிற்ப இலக்கணமே முற்றிலும் வேறு. ஒரு கையில் சக்கரமும் மறுகையில் தாமரையும் வைத்த தெய்வம் விஷ்ணுவாக இருக்கலாம் என ஊகித்தோம். தெய்வங்களுக்கெல்லாம் தாய்லாந்து முகம்.

3

ஆலயத்தில் தெரிந்த பெண்முகங்கள் ஆர்வமூட்டுபவை. சீனக்குருதியும் இந்தியக்குருதியும் கலந்த பெண்கள் பளிச்சிடும் மஞ்சள்நிறமும் குள்ளமான உருவமும் உருண்ட முகமும் கொண்டிருந்தனர். ஆனால் கண்கள் சீனக்கண்கள் அல்ல. கூந்தலும் சுருளாக இருந்தது. பர்மியமுகமும் இந்திய விழிகளும் கொண்ட பெண்கள். எப்போதுமே இனக்கலவைதான் மிகச்சிறந்த அழகிகளை உருவாக்குகிறது என்று தோன்றியது.

8
காலை ஒன்பதுமணிக்கே பிரம்மபுத்திராவின் பாலத்தை கடந்துவிடும்படி ராம்குமார் சொல்லியிருந்தார். நாற்கரச்சாலை பணிநடப்பதனால் சிலசமயம் மூன்றுமணிநேரம் சாலையிலேயே வாழவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை. ஆகவே காலையுணவு சாப்பிடாமலேயே கிளம்பி அந்தப் பாலத்தை கடந்தோம்.

முந்தைய கட்டுரைகம்பராமாயணம் வகுப்பு
அடுத்த கட்டுரைதொழில்நுட்ப அடிமைமுறை-கடிதம்