சூரியதிசைப் பயணம் – 1

இந்தமுறை வடகிழக்குப் பயணம் என்று சொன்னபோதே என் மனதில் அர்ஜுனனின் வடகிழக்குப்பயணங்கள்தான் எழுந்தன. மகாபாரதகாலத்தில் அஸ்ஸாம் காமரூபம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனன் தன் காடேகலிலும் பின்னர் அஸ்வமேதத்திலும் வடகிழக்கில் மணிப்பூர் வரை சென்றதாக சொல்லப்படுகிறது. பிரம்மபுத்திரா மற்றும் வடகிழக்கு நிலத்தின் அழகிய சித்திரம் மகாபாரதத்தில் உள்ளது.

1

மணிப்பூரின் இளவரசி சித்ராங்கதையை அர்ஜுனன் மணந்த கதை வசீகரமானது. சித்ராங்கதையை இளமையிலிருந்தே ஓர் ஆண் என்றே சொல்லி வளர்த்துவந்தான் அரசன். அர்ஜுனனைக் கண்டதும் அவள் தன்னை பெண் என உணர்ந்தாள். அந்த காதல்கதையை அழகிய இசைநாடகமாக தாகூர் எழுதியிருக்கிறார்.

வடகிழக்குக்கு வந்த அர்ஜுனன் இங்குள்ள மதூகமலரின் மணத்தை அறிந்ததை மகாபாரதம் சொல்கிறது. அதை வாசித்த நாள்முதல் மதூகமணம் கமழும் ஒரு நிலமாகவே இந்நிலத்தை எண்ணியிருந்தேன். 1982ல் அஸ்ஸாம் முதல் மணிப்பூர் வரை பயணம் செய்தேன்.

அஸ்ஸாம் பிரச்சினை உச்சத்திலிருந்த கொந்தளிப்பான நாட்கள் அவை. பலவகையான கெடுபிடிகள் நடுவே மெலிந்த உடம்பும் அடர்ந்த தாடியும் அழுக்கான ஆடைகளுமாக தனியாகப்பயணம் செய்த என்னை எங்கும் சந்தேகப்பட்டார்கள். நிறுத்தி நிறுத்தி விசாரித்தார்கள். ஆனால் உல்லாசமாக இருந்தேன். ஏனென்றால் மொத்த வடகிழக்கும் எனக்கு இன்னொரு கேரளம்போலவே தோன்றியது. பசுமை நிறைந்த ஊர். அழகிய சிறிய வீடுகள். மொழியில் எல்லாவற்றிலும் ஒரு ஓ.

மீண்டும் வடகிழக்குக்கு வந்தது 2012ல் சிக்கிம் வழியாக பூட்டான் சென்றபோது. சிக்கிமுக்கு நான் சென்றதில்லை என்றாலும் அது முழுமையாகவே மாறிவிட்டிருந்ததாகத் தோன்றியது. தென்னிந்தியாவில் அனைத்து மலைநகரங்களிலும் இருக்கும் உயர்ந்த கட்டிடங்கள், நாகரீக விடுதிகள், புதியவகைக் கார்கள் என காங்டாக் கொழித்துகொண்டிருந்தது.

நான் அஸ்ஸாமை பார்த்து முப்பத்திமூன்று வருடங்களாகின்றன. நடுவே அஸ்ஸாமில் தினம் ஒரு கலவரம் நடந்து பல்லாயிரம்பேர் கொல்லப்பட்டு ராஜீவ்காந்தியின் அஸ்ஸாம் ஒப்பந்தம் அமலாகி மாணவர்தலைவர் மகந்தா தேர்தலில் வென்று முதல்வராகி அவர் எதன்பொருட்டு போராடினாரோ அதை முழுமையாகக் கைவிட்டு ஊழலில் திளைத்துச் சீரழிந்து அஸ்ஸாம் போராட்டம் மறக்கப்பட்டு வரலாறாக மாறிவிட்டிருக்கிறது.

அன்று வெறும் பொட்டல்காடாகக் கிடந்த ஆந்திரநிலம் இன்று இந்தியாவின் செல்வந்தமாநிலமாகிவிட்டிருக்கிறது. அன்று பிழைப்புக்காக ஊர் ஊராக குடிபெயர்ந்துகொண்டிருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்து மணிபூர், நாகாலாந்து, மிசோரம் பகுதிகளில் இருந்து இளைஞர்கள் தமிழகத்திற்கு வேலைதேடி வந்துகொண்டிருக்கிறார்கள். நான் தங்கும் விடுதிகளில் பெரும்பாலும் வெயிட்டர்கள் வடகிழக்குப்பகுதியினர். அவர்களிடம் உங்களூருக்கு முப்பது வருடம் முன்பு வந்திருக்கிறேன் என்று சொல்லி புன்னகையைக் காண்பதுண்டு. மீண்டும் இப்போதுதான் வடகிழக்குக்கு வரநேர்ந்திருக்கிறது.

IMG_0213

தொடர் அலைச்சல். பிப்ரவரி 8 ஆம்தேதி கோவையில் பூமணிக்குப் பாராட்டுவிழா. 9 அன்று கோவையில் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. மலையாளத் தயாரிப்பாளர் ஒருவருக்காக 10 அன்று சென்னை வந்தேன். எதிர்பாராதவிதமாக சந்திப்பு 11 அன்றும் நீண்டது. 11 மாலை அனந்தபுரி எக்ஸ்பிரஸில் கிளம்பி 12 காலை நகர்கோயில் சென்றேன் 11 அன்று ஒரு முக்கியமான திருமணநிகழ்ச்சி இருந்தது ,செல்ல முடியவில்லை.

வீட்டுக்கு 12 ஆம்தேதி பத்து மணிக்கு வந்து அன்று மாலை ஐந்தரை மணிக்கு கன்யாகுமரி எக்ஸ்பிரஸிலேயே சென்னைக்கு கிளம்பினேன். அருண்மொழி ஆபீஸ் சென்றிருந்தாள். கிளம்பி அவளை போஸ்டாபீசிலேயே பார்த்துவிட்டு கிளம்பலாமென்று டிரைவரை வரச்சொல்லியிருந்தேன். அதற்குள் அவளே வந்துவிட்டாள்.

13 அன்று காலை எழும்பூரில் வந்திறங்கினேன். நண்பர் செந்தில்குமார் தேவனும் சுரேஷ்பாபுவும் காரில் வந்து அழைத்துக்கொண்டனர். கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் சென்டிரலில் வந்திறங்கினர். அவர்களை அழைத்துக்கொண்டு வளசரவாக்கத்தில் தனசேகரின் வீட்டுக்குச் சென்றேன். அங்கே குளித்து உடைமாற்றிவிட்டு மதியம் 12 மணிக்கு சென்னை விமானநிலையத்துக்கு சென்றோம். எங்களை சுரேஷ்பாபுவே கொண்டு சென்று வழியனுப்பிவைத்தார். வசந்தகுமாரும் ராஜகோபாலனும் கே.பி.வினோதும் தனித்தனியாகவந்தனர். மதியம் ஒன்றரைக்கு விமானம் கிளம்பியது

கல்கத்தாவில் ஒருமணிநேரம் காத்திருந்து கௌஹாத்திக்கு மாலை ஐந்தரை மணிக்கு வந்துசேர்ந்தோம். நன்றாக இருட்டிவிட்டிருந்தது. கால அளவில் அஸ்ஸாம் நம்மை விட ஒன்றரை மணிநேரம் முன்னால் இருக்கிறது. நேரம் இந்திய அரசால் வகுக்கப்பட்டது என்பதனால் எப்போதும் நம்மைவிட முன்னால் விடிந்து முன்னால் இருட்டிவிடும்.

ராம்குமார் ஏற்பாடுசெய்திருந்த ஓட்டுநர் வந்து அழைத்துச்சென்றார். உயர்நீதிமன்றத்திற்கு அருகே இருந்த அரசு விடுதியில் தங்கினோம். மதியம் விமானத்தில் ஒன்றும் சாப்பிடவில்லை. சென்னை விமானநிலையத்தில் சாப்பிட்ட வெஜிட்டபிள் சான்விச்சும் காபியும்தான். இரவுணவு சமைக்கத் தாமதமாகும் என்று அங்கே கேண்டீனில் சொன்னார்கள். கடுமையான பசி. எனவே வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடலாமென திட்டமிட்டோம்.
கௌஹாத்தியில் ஊட்டி அளவுக்கே அந்தியில் குளிர் இருந்தது. ஆறுமணிக்கு நள்ளிரவு இருட்டு. ஒன்பது மணிக்கு நகரம் அடங்கிவிடும். நாங்கள் ஒரு சிக்கன் சென்டரை கண்டடைந்தோம். நான் வசந்தகுமார் வினோத் மூவரும். மற்றவர்கள் சைவம் .ஒரு முழு கோழியை தந்தூரியாக தந்தனர். மூவருமாக சாப்பிட்டோம். மொத்தமே முந்நூறு ரூபாய்தான். நான் இரவுணவை அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.

பழங்கள் வாங்கலாம் என்று சந்தைக்குச் சென்றோம். நம்மூர் சந்தையேதான். அந்நேரத்திலும் பிரம்மாண்டமான மீன்களை வெட்டிக்கொண்டிருந்தனர். பிரம்மபுத்திராவின் மீன்கள். இறைச்சிக்கோழி வெட்டப்பட்டுக்கொண்டிருந்தது. தேங்காயளவுக்கு பெரிய கத்தரிக்காய்கள். பெரிய தக்காளி. முட்டைக்கோஸ். முள்ளங்கி. நான் ஆப்பிளும் வாழைப்பழமும் வாங்கிக்கொண்டேன். வாழைப்பழம் திண்டுக்கல் மலைப்பழம் போல சுவையாக அதே வடிவில் இருந்தது.

இரவு ராம்குமாரின் நண்பரான ஆட்சிப்பணி அதிகாரி கைலாஷ் வந்திருந்தார். ஒன்பது மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். கைலாஷ் சென்னையைச் சேர்ந்தவர். கோவையில் இளமையைக் கழித்தவர். 2012ல் இந்திய ஆட்சிப்பணியில் நுழைந்திருக்கிறார். அஸ்ஸாமிய மொழியை கற்றுவருவதாக சொன்னார்.
அஸ்ஸாமின் பிரச்சினைகளை அவரது கோணத்தில் கேட்க சுவாரசியமாக இருந்தது. ஒட்டுமொத்தச் சித்திரம் நாமறிந்ததே. ஆனால் நுட்பமான தகவல்கள் ஆச்சரியமூட்டின.

அஸ்ஸாமில் அமைதியின்மையை உருவாக்கிய இரு முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அன்னியக்குடியேற்றம் மூலம் அவர்கள் சிறுபான்மையினராக ஆனது. இரண்டு, மத்திய அரசால் ஒட்டுமொத்த வடகிழக்கும் புறக்கணிக்கப்பட்டது — இவை உண்மையான பிரச்சினைகள்.மியான்மார் நாட்டின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் நிகழும் தீவிரவாதமும் அன்னியநிதியமைப்புகளால் உருவாக்கப்படும் இனக்குழுப்பிரச்சினைகளும் செயற்கையான பிரச்சினைகள்.

இவற்றில் மத்திய அரசால் வடகிழக்கு புறக்கணிக்கப்படுவது உண்மையிலேயே பெரிய பிரச்சினைதான் என்பதை அனேகமாக இங்குள்ள அனைவருமே சொன்னார்கள். இன்னமும் கூட வடகிழக்குப்பகுதிகளுக்கு சரியான ரயில் வசதி செய்யப்படவில்லை. வெள்ளைக்கார ஆட்சியில் போடப்பட்ட மீட்டர்கேஜ் ரயில்பாதைகள்தான் பெரும்பாலும். கல்வி மருத்துவம் தொழில்வளர்ச்சி துறைகளில் மத்திய அரசின் முதலீடு மிகக்குறைவு.

இப்போதைய அரசு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றனர். மத்திய அமைச்சர்கள் மாதம் ஒரு அமைச்சராவது வடகிழக்கில் சுற்றுப்பயணம் செய்தாகவேண்டும் என்ற கட்டாய ஆணை உள்ளது. ரயில், சாலைப்போக்குவரத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மெல்லமெல்ல நிலைமை மாறிவருகிறது.

ஆனால் குடியேற்றம் எளிதில் சமாளிக்கமுடியாத பிரச்சினை. அஸ்ஸாம் பெரிய எல்லையை வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்கிறது. வங்கதேசம் மக்கள்மண்டிய வறுமை ஓங்கிய நிலம். ஆகவே ஏராளமானவர்கள் அங்கிருந்து எல்லைதாண்டி வந்து அஸாமிலும் வடகிழக்கிலும் குடியேறுகிறார்கள். வடகிழக்கில் பழங்குடிகள் நிலத்தை நிரந்தரமாக கைவசப்படுத்தி வேளாண்மை செய்பவர்களல்ல. ஆகவே அந்நிலங்களை வந்தவர்கள் கையகப்படுத்தி விளைநிலமாக ஆக்கி பட்டாவாங்கி குடிமக்கள் ஆகிறார்கள். பல இடங்களீல் பழங்குடிகள் சிறுபான்மையினராக ஆகிவிட்டனர். அதுதான் அஸ்ஸாம்பிரச்சினையின் வேர்.

அந்தச்சிக்கல் தீர்க்கப்படுவது எளிதல்ல. ஏனென்றால் இன்னமும்கூட எல்லைப்பகுதி காவலில்லாமலே இருக்கிறது. பல இடங்களில் எல்லை என்பது நதிதான். நீந்தியே கடந்து வந்துவிடலாம். சிலசமயம் நதி திசைமாறி வங்கதேசத்தில் உள்ள ஒரு கிராமம் அப்படியே இந்திய எல்லைக்குள் வந்துவிடும் என்றார் கைலாஷ். எந்த நாட்டுக்குடிமக்கள் என அவர்களுக்கே தெரியாது. அவர்களுக்கு குடியுரிமை அளிக்காமலிருக்க முடியாது. ஒரு சினிமாவுக்கான கதை என்று தோன்றியது.

வந்தபின்னர்தான் முக்கியமான சிக்கல் என்ன என்று தெரிந்தது. என்னிடம் இணைய இணைப்புள்ள 3ஜி கருவி இல்லை. போனமுறை பிரசாத் கொண்டுவந்திருந்தமையால் அதைப்பற்றி எண்ணவே இல்லை. இங்கே வாங்கவும் முடியவில்லை.. மேலும் இங்குள்ள காடுகள் எங்கும் எந்தவிதமான செல்பேசித் தொடர்பும் இல்லை. ஆகவே 3ஜி வாங்கினாலும் பயனில்லை என்றனர். ஆகவே அனுபவங்களை முடிந்தால் ஏதாவது சிறுநகர்களில் இருந்து மின்னஞ்சல்தான் செய்யவேண்டும்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 17