களம் [சிறுகதை]

அதிகாலைமுதலே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினாபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும், குதிரைகளிலும், மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி அரண்மனையை சூழ்ந்து கொண்டது. அரண்மனையில் இருநாட்களுக்கு முன்னரே பரபரப்பு பெருகி, அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் வேகங்களில் விரையவே முழுமுற்றான ஓர் ஒழுங்கின்மை எங்கும் நிறைந்திருந்தது.

தன் தனிப்பட்ட பயிற்சிக்களத்தில் துரியோதனன் இடைவிடாத ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, அர்ச்சுனன் துரோணருடன் விற்பயிற்சியில் தன்னை இழந்திருந்தான். குருகுலத்து இளவரசர்கள் அனைவருமே பதற்றத்துடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் பீமன் மட்டும் மடைப்பள்ளியில் சமையலுக்காக தென்னாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த விற்பன்னர்களிடமிருந்து பழரசம் சேர்த்து மாமிசம் சமைப்பதையும் பால்சேர்த்து கூட்டுகள் செய்வதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டிருந்தான். அரங்கேற்றநாள் காலையில்கூட அவனை மடைப்பள்ளியிலிருந்துதான் கூட்டிவரவேண்டியிருந்தது.

ஈரம் காயாத காகபட்சக்குழல் தோளில் புரள தர்மன் கருங்கல் தளம் வழியாக நடந்து ஆயுத சாலைக்குச் சென்றான். இலக்குப்பலகையில் அம்புதைக்கும் ஓலி கேட்டது. துரோணர் வில்லை தாழ்த்திவிட்டு “அம்பு நம் கையை விட்டுச் சென்றாலும் நம் கருத்தில் இருந்து செல்லலாகாது. அதன் ஆத்மாவில் நம்முடைய இலக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். காற்றில் பறக்கும் ஓர் அம்பில் அந்த வில்லாளி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பார்கள்” என்றபடி மான் தோலால் முகத்து வியர்வையை ஒற்றிக்கொண்டார்

அர்ஜுனன் உடலெங்கும் வியர்வை வழிய வந்து அவர் பாதங்களைப் பணிந்தபின் வில்லைக் கொண்டுசென்று கொக்கியில் மாட்டினான். “முன்பு ஒரு கதை சொல்வார்கள். வில்லில் இருந்து அம்பை தொடுத்த வில்லாளி ஒருவனின் தலையை அக்கணமே ஒருவாள் கொய்தெறிந்தது. அவனுடைய ஆன்மா அந்த அம்பில் எஞ்சியிருந்தது. அது மீண்டும் அந்த உடலில் புகுந்து கொண்டு அவன் எழுந்தான் என்று…” துரோணர் தன் உடைகளை அணிந்துகொண்டார். “அம்பு சொல் போன்றது. சொன்னவன் நெஞ்சில் உள்ளது சொல்லின் பொருள். பொருளற்ற சொல் என ஒன்று இல்லை”

தருமன் துரோணரை வணங்கினான். அவர் மெல்லிய தலையசைப்பால் அவ்வணக்கத்தை ஏற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றார். அவர் ஒருபோதும் தருமனைப் பொருட்படுத்தியதில்லை. தருமன் அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். கச்சையை அவிழ்த்தபடி அர்ஜுனன் “என்ன அண்ணா, மனம் கவலையில் கனத்திருக்கிறதென்று தோன்றுகிறதே” என்றான்.

“நான் நேற்று முழுக்க துயில்கொள்ளவில்லை” என்றான் தருமன். “ஏன்?” என்று அர்ஜுனன் சாதாரணமாகக் கேட்டான். “என் உள்ளுணர்வு சொல்கிறது, இந்த பயிற்சிக்களம் என்றோ எங்கோ ஒரு பெரும் போர்க்களமாக ஆகப்போகிறது என்று. தம்பி, ஆயுதங்களுக்குத் தங்களுக்கென ஒரு திட்டம் உண்டு என்று எனக்கு படுகிறது. அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக்கொள்கின்றன. அவை நமக்குள் குரோதங்களையும் பேராசைகளையும் ஐயங்களையும் நிரப்புகின்றன. நம்மை ஒரு பெரிய சமர்களம் நோக்கி மௌனமாக இட்டுச்செல்கின்றன.”

“தத்துவத்தில் இருந்து நீங்கள் கவிதை நோக்கி வந்து விட்டீர்கள் அண்ணா” என்றபடி அர்ஜுனன் உச்சியில் குடுமியாகக் கட்டியிருந்த குழலை கலைத்து தோளில் பரப்பிக்கொண்டான். சால்வையை எடுத்து போட்டுக்கொண்டு “நான் நீராடச் செல்கிறேன்” என்றான். “தம்பி, உண்மையிலேயே உனக்கு தெரியவில்லையா? இங்கே நிகழவிருப்பது வெறும் பயிற்சிதானா? அதற்கு ஏன் இத்தனை வன்மம்? என்னைப்பார்த்துச் சொல், சுயோதனனின் கண்களைச் சந்தித்து பேசமுடிகிறதா உன்னால்?”

அர்ஜுனன் எரிச்சலுடன் “ஆம், எந்த பயிற்சியும் போர்தான். அதை அறியாத ஷத்ரியன் இல்லை. ஆனால் இந்தப்பயிற்சியில் அவர்களுக்கு ஒன்று தெரிந்துவிடும். நம் வல்லமைக்கு முன்னால் அவர்கள் எதிர்நிற்க முடியாது. அப்படி ஒரு கனவு அவர்களிடமிருக்கும் என்றால் அது இன்று மாலையோடு கலைந்து விடும்.”

பெருமூச்சுடன் தர்மன் தலைகுனிந்து மண்ணைப் பார்த்தான். “என் வில்லிலும் பீமனின் தோளிலும் ஐயம் கொள்கிறீர்களா அண்ணா?” தருமன் நிமிர்ந்து “இல்லை தம்பி. உங்களுக்கிணையாக அவர்கள் தரப்பில் எவருமே இல்லை என்று நான் அறிவேன். ஆனால்…” அர்ஜுனனின் கண்களைப் பார்த்து சஞ்சலமாக தவித்த கண்களுடன் தருமன் சொன்னான். “ஆயுதங்களை நான் அஞ்சுகிறேன் தம்பி. அவை மனிதன் மீது படர்ந்திருக்கும் பாதாளத்தின் சக்தி என்று தோன்றுகிறது. இரும்பு எத்தனை குரூரமான உலோகம்! மண்ணின் ஆழத்தில் இருந்து அது கிளம்பி வருகிறது. எதற்காக? அதன் நோக்கம்தான் என்ன? இத்தனை வருடங்களில் அந்த உலோகம் குடித்த குருதி எத்தனை ஏரிகளை நிறைக்கப்போதுமானது!” தருமன் தலையை பிடித்துக்கொண்டான். “எனக்கு பயமாக இருக்கிறது தம்பி… மனிதனை ஆள்வது விண்ணின் ஆற்றல்கள் அல்ல. ஆழத்தின் சாபமான இரும்புதான். வேறெதுவும் அல்ல. அதுதான் வரலாற்றை தீர்மானிக்கிறது. தர்ம அதர்மங்களை வரையறை செய்கிறது.”

“நீங்கள் சற்று பழரசம் பருகி ஓய்வெடுக்கலாம்” என்றான் அர்ஜுனன் எரிச்சலுடன். “இந்த மனப்பிரமைகளுக்குள் இருப்பது உங்கள் அச்சம்தான். உள்ளூர நீங்கள் சுயோதனனை அஞ்சுகிறீர்கள்.” “இல்லை தம்பி நான் அஞ்சுவது அவனை அல்ல…” அர்ஜுனன் அதைக் கவனிக்காமல் “– நீங்கள் அதை மறைக்க வேண்டாம். இன்று பயிற்சிக்களத்திற்கு வாருங்கள். என் அம்புகளின் ஆடலைக் கவனியுங்கள் உங்கள் அச்சம் இன்றோடு விலகும்.”

அர்ஜுனன் செல்வதை பொருளற்று பார்த்துக்கொண்டிருந்த தருமன் பெருமூச்சு விட்டான். தூரத்தில் நாழிகை மாறுதலுக்கான பெருமுரசம் அதிர்ந்தது. பெருமுரசொலி வழியாக உருண்டு உருண்டு நெருங்கி வருகிறது காலம். நிலையிலாதவனாக தருமன் தன் அறைக்குச் சென்றான். ஏடுகளை புரட்டிக்கொண்டு எதையுமே படிக்கமுடியாத மனத்துடன் அமர்ந்திருந்தான். பின்பு எழுந்து சென்று சதுரங்கப்பலகையை விரித்துக்கொண்டு காய்களை பரப்பி தனக்குத்தானே ஆட ஆரம்பித்தான். ஆட்டவிதிகள் வரையறை செய்யப்பட்ட இந்த ஆட்டம் வெளியே உள்ள மகத்தான சதுரங்கத்தில் இருந்து என்னை மீட்கிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

மதிய வெயில் தாழ ஆரம்பித்ததும் களமுற்றத்தின் பெருமுரசம் முழங்க ஆரம்பித்தது. அரண்மனையின் அத்தனை கட்டிடங்களையும் அது குதிரைகள் போல சருமம் சிலிர்த்து விரைத்து நிற்கச் செய்தது. ஒவ்வொருவராக களம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சேவகர்கள். பின்னர் அதிகாரிகள். பின்னர் அமைச்சர்கள். பின்பு அரசகுலப்பெண்டிர். கடைசியாக இளவரசர்கள். தம்பியர் நால்வர் சூழ வர தருமன் செம்பட்டாடையும் இளமஞ்சள் மேலாடையும் மகர கங்கணமும் தோரணமாலையும் அணிந்து களமுற்றம் நோக்கி நடந்தான். செம்மண் விரிந்த களமுற்றம் கண்ணில் பட்டதுமே அவன் உடல் சிலிர்த்தது. புதுநிலம் கண்ட புரவி போல அவன் தயங்கி பின்னால் நகர அர்ஜுனன் “தலைநிமிர்ந்து செல்லுங்கள் அண்ணா, நாளை அஸ்தினபுரத்தின் அதிபர் யாரென இன்று தெரிந்துவிடும்” என்றான். குருதிக்குளமெனக் கிடந்த களமுற்றம் நோக்கி மெல்ல நகர்ந்து சென்றான் தருமன்.

அரங்கேற்றக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த மணிமண்டபத்தில் அரியணையில் வேதகோஷங்கள் முழங்க வாழ்த்தொலிகள் அதிர, திருதராஷ்டிரர் வந்து அமர்ந்ததும் அரங்கவெளியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் மேடைகளிலிருந்து மலர்மழை பொழிந்து, நீர்பெய்து இறுக்கப்பட்ட களநிலம் கொன்றை மரத்தடிபோல ஆயிற்று. திருதராஷ்டிரருக்கு இடப்பக்கம் பின்புறமாக சஞ்சயன் அமர்ந்திருக்க, வலப்பக்கம் பீஷ்மர் வெண்தாடியுடனும் பொற்சரிகை வேலைப்பாடுகள் செய்த தூய வெள்ளாடையுடனும் அமர்ந்திருந்தார். அவருக்கு அப்பால் விதுரருக்கும், பிற அமாத்யர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த தனி மண்டபத்தில் அரசியாகிய காந்தாரியும், இடப்பக்கம் அவளுக்குக் கண்களாக விளங்கிய சேடி சித்ராங்கதையும் அமர, வலப்பக்கம் குந்தி அமர்ந்தாள். சங்குகளும் முரசுகளும் அதிர்ந்து அமைதிகொள்ள நிமித்திகன் ஒளிரும் செம்பட்டுத் தலைப்பாகையும் மஞ்சள் ஆடையும் அணிந்தவனாக எழுந்து அஸ்தினாபுரத்தின் மாமன்னனாகிய திருதராஷ்டிரரையும், பீஷ்ம பிதாமகரையும், பார்வையாளர்களாக சிறப்பு வருகை செய்துள்ள சிற்றரசர்களையும் வாழ்த்தியபிறகு அரங்குக்கு வந்துள்ள குடிமக்களுக்கு வாழ்த்து சொன்னான். ஆயுதக்கல்வியில் முழுமையடைந்த குருவம்ச இளவரசர்களின் திறனை குடிகள் அனைவரும் காண அவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தான்.

தருமன் குடிமக்களின் வாழ்த்தொலிகள் அதிர களத்துக்கு வந்து, அரங்கின் தென்மேற்கு மூலையில் அரங்கபூஜைமேடை மீது வெள்ளையாடையும் வெண்ணிறமான தாடியுமாக நின்ற துரோணரை வணங்கினான். திறந்த பெருந்தோள்களில் பவள ரத்தின வளைகளும், அகன்ற மார்பில் செம்மணியாரமும், அனல் போல ஒளிவிடும் குண்டலங்களும் அணிந்த துரியோதனன் வணங்கியபடி களத்தில் நுழைந்தபோது கடலோசைபோல இடையறாது கேட்ட வாழ்த்தொலிகள் தொடர்ந்து துச்சாதனனும் விகர்ணனும் அரங்குக்கு வந்தபோதும் வேகம் தாழாமல் முழங்கின. ஆனால் மதயானை மத்தகம் போல கனத்து உருண்ட தோள்களிலும் காட்டுப்பாறைபோன்ற மார்பிலும் எந்த அணிகளும் இல்லாமல் அலட்சியமாக சுற்றியுடுத்த அந்தரீயம் மட்டும் அணிந்தவனாக பீமன் அரங்குக்கு வந்தபோது பிற எவருக்குமே எழாத அளவுக்கு வாழ்த்தொலி முழக்கங்கள் கேட்டன. களிவெறி கொண்ட நகரத்து இளைஞர்கள் மலர்களை வானில் வீசியபடி எழுந்து நின்று கைவீசி ஆர்ப்பரித்தனர். அர்ச்சுனன் நுழைந்தபோது பெண்கள் கூட்டத்தில் மகிழ்ச்சிக் குரல்களும் ஆரவாரச் சிரிப்புகளும் ஒலித்தன.

துரியோதனன் கண்கள் பீமனின் உடல்மேலேயே நிலைத்திருந்ததை அர்ச்சுனன் ஓரக்கண்ணால் கவனித்து திரும்பியபோது யுயுத்சுவின் பொருள்பொதிந்த புன்னகைத்த கண்கள் அவனை வந்து தொட்டன. நிமித்திகன் ஒவ்வொரு இளவரசனாக அறிமுகம் செய்து முடிந்ததும் திருதராஷ்டிரர் கையை அசைக்க போர் முரசங்கள் முழங்கின, அரங்கில் மெல்ல ஒலிகள் அடங்கி அமைதி பரவியது. கொடிகளும் தோரணத்துணிகளும் பதைபதைத்து அசைந்தன.

முதலில் விகர்ணனும் மகோதரனும் புரிந்த கதைப்போர் அஸ்தினபுர வீரர்களுக்கு வெறும் குழந்தை விளையாட்டாகவே இருந்தது. சிரித்தபடி அவர்களைக் குரல்கொடுத்து ஊக்கினார்கள். பிறகு சகதேவனும் துர்முகனும் வேல்களால் போர் புரிந்தார்கள். நகுலனும் யுயுத்சுவும் வாள்களுடன் அரங்குக்கு வந்தபோது பார்வையாளர் மத்தியில் விளையாட்டுமனநிலை அடங்கி உத்வேகம் பரவியது. யுயுத்சு உயரமான மெல்லிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டவன். வாள்போரில் அது எப்போதுமே சாதகமான விஷயம். நகுலன் அழகிய சிறுவன் போலிருந்தான். அந்தக் காரணத்தினாலேயே போரில் யார் வெல்லவேண்டுமென பார்வையாளர் உடனடியாக தீர்மானித்துவிட்டதாகப் பட்டது. இருவரும் கூர்ந்த பார்வைகள் எதிரியை அளவிட சுற்றிச் சுற்றி வந்தனர். கொத்த யத்தனிக்கும் நாகங்கள் போல வாள்நுனிகள் நீண்டும் பின்வாங்கியும் அசைந்து ஒரு கணத்தில் கணீரென்ற ஒலியுடன் மோதிக் கொண்டன.

இரு பாம்புகளின் சண்டை போலிருந்தது அது. பாம்புகளின் நாக்குகள் போல வாள்கள். அவர்களின் மெல்லிய உடல்கள் மென்மையான கூரிய அசைவுகளுடன் நடனம் போல ஒருவர் அசைவுக்கு மற்றவர் அசைவு பதிலாக அமைய சுழன்று வந்தன. மெதுவாக யுயுத்சுவின் வேகம் ஏறி ஏறி வர, நகுலன் மூச்சுகள் சீற பின்வாங்கியபோது யுயுத்சுவின் வாள்நுனி அவன் தோள்களில் கீறிச்சென்றது. நகுலனின் பொன்னிறத்தோளில் ஒரு சிவந்த கோடு விழுந்து உதிரம் ஊறி மார்பில் வழிந்ததை கண்ட கூட்டம் வருத்தஒலி எழுப்பியது. தன் ரத்தத்தைக் கண்ட நகுலன் சட்டென்று வேகம் பெற்று ஆவேசத்துடன் தாக்க ஆரம்பித்தபோது யுயுத்சுவின் கரம் தளர்ந்து அவன் வாள் பலமுறை நகுலனின் வாளில் பட்டு தெறித்து விலகியது. நகுலன் வெகுவாக முன்னேறிச் செல்வதைக் கண்ட கூட்டம் ஆரவரித்தது. நகுலனின் வாள் யுயுத்சுவின் வாள்கரத்தை எட்ட முயன்ற ஒரு கணத்தில் என்ன நடந்தது என எவருமறியாதபடி நகுலனின் வாள் தெறித்து ஒளியுடன் சுழன்று சென்று மண்ணில் விழுந்தது. யுயுத்சுவின் வாள் அவன் கழுத்தை தொட்டு நின்றது.

மேலாடையால் முகத்தை துடைத்தபடி அரங்கை விட்டு இறங்கும் போது யுயுத்சு “உன் உதிரத்தை கவனித்த அக்கணமே நீ தோற்றுவிட்டாய்” என்றான்.

நகுலன் “ஆம் அண்ணா, என்னை மறந்துவிட்டேன்” என்றான்.

துரோணர் அருகே வந்து “வாளுடன் அரங்கில் நின்ற முதற் கணமே உன் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விட்டது நகுலா” என்றார். “அவன் உன் கண்களை மட்டுமே பார்த்தான். உன் பார்வையோ அவன் வாளில் இருந்தது.”

துரியோதனனுக்கும் பீமனுக்கும் கதாயுதப்போர் நடக்கப் போவதாக நிமித்திகன் அறிவித்தபோது அரங்கமெங்கும் முழுமையான அமைதி ஏற்பட்டது. துரியோதனன் மெல்ல தன் நகைகளைக் கழற்றி தம்பியர் கையில் தந்துவிட்டு தனக்கென கலிங்கநாட்டு சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய கதையுடன் அரங்கு நடுவே வந்தான். பீமன் தன் அருகே நின்ற மகாபாகுவின் கதையை வாங்கி ஒருமுறை சுழற்றிப் பார்த்து விட்டு அரங்கிலேறினான். காட்டில் உடலெல்லாம் மண்ணை அள்ளிப்பூசி ஒளிரும் சிறு கண்களுடன் கனத்த பாதங்கள் தூக்கிவைத்து கரிய பெருந்தசைகள் திமிறி அதிர மோதிக் கொள்ளும் கொம்பன் யானைகள் போல அவர்கள் சுற்றி வந்தார்கள். யானை முகத்து மதம் போல அவர்கள் உடலிலிருந்து வியர்வை வழிந்தது.

முதலில் யானைபோல பிளிறியபடி துரியோதனன் கதாயுதத்தை வீசிப் பாய்ந்தான். பீமனின் கதை அதில் பேரொலியுடன் மோதியபோது கேட்டவர் வயிறுகள் அதிர்ந்தன. புயல்காற்றில் சுழன்றுபறக்கும் ஆலமரக்கிளைகள் போல அவர்கள் கரங்கள் காற்றில் வீசின. மலைப்பாறைகள் போல கதாயுதங்கள் தீப்பொறிபறக்க முட்டித் தெறித்துச் சுழன்று வந்து மீண்டும் முட்டின. தன் அடிகளின் வலிமை துரியோதனனின் கதையில் இல்லை என்பதை பீமன் கவனித்தான். ஆனால் துரியோதனனின் ஒரு அசைவு கூட வீணாகவில்லை, அடிக்கும் கணம் தவிர மற்ற தருணங்களில் அவன் கைகளின் சக்தி கதைமீது செலுத்தப்படவேயில்லை. உண்மையில் அவனைச்சுற்றி பறக்கும் ஒரு கோளம் போலவே கதை சுழன்றது. கதையின் சுழற்சிக்கு ஏற்ப அவன் கால்கள் மிக அளவாக இடம் மாறின. துரியோதனனின் பயிற்சியின் விரிவு பீமனை வியக்க வைத்தது.

ஆனால் பீமனின் சக்தி மழைக்கால மலையருவி போல பெருகியபடியே இருந்தது. மறுபக்கம் துரியோதனனின் உள்ளிருந்து அவன் ஆத்மாவின் கடைசி உத்வேகமும் விசையாக மாறி வெளிவந்தது. போர் முடிவேயில்லாமல் நீண்டு நீண்டு சென்றது. ஆரம்பகணங்களில் இருந்த பதற்றமெல்லாம் விலகிய பார்வையாளர்கள் இருவரில் எவர் வெல்வார்கள் என வாதுகூட்ட ஆரம்பித்தார்கள். அரச மண்டபத்தில் திருதராஷ்டிரருக்கு போரை விளக்கிக் கொண்டிருந்த சஞ்சயன் பேச்சை நிறுத்தி விட, கனத்த தலையை கரங்களில் தாங்கியபடி விழியற்ற மன்னன் பெருமூச்சு விட்டு இடைவிடாத உலோக ஒலிகளை கேட்டுக் கொண்டிருந்தான். ஒலிகள் வழியாக அவனுக்குள் மேலும் உக்கிரமாக ஒரு போர் நிகழக்கண்டான். பெண்கள் அவையிலும் பெருமூச்சுகள் ஒலித்துக் கொண்டிருந்தன.

சட்டென்று பீஷ்மர் தன் கச்சையை முறுக்கியபடி எழுவதைக் கண்ட துரோணர் அஸ்வத்தாமாவை நோக்கி சைகை காட்ட அவன் முன்னகர்ந்து, போரின் வேகத்தில் இருவரும் விலகிய கணத்தில் அரங்கிலேறி, அவர்களுக்கு நடுவே புகுந்தான். “போதும். இது போர்க்களமல்ல, பயிற்சிக்களம்தான். விலகுங்கள்.”

பீமன் கதையைத் தாழ்த்தித் திரும்பி குருநாதரை வணங்கிப் பின்னகர்ந்தான், துரியோதனன் துரோணரிடம் “இன்னமும் ஒரு கணம்தான் மிச்சமிருந்தது ஆசாரியரே” என்றபடி ஆயுதம் தாழ்த்தி வணங்கி விலகினான். அரங்கமெங்கும் புயல்கடந்து சென்ற அமைதி உருவாகி, பார்வையாளர்கள் சரடு தொய்ந்த ஆட்டப் பாவைகள் போல தளர்ந்தார்கள்.

துரோணர் கையைதூக்கி, “அனைவரும் கேளுங்கள்! இதோ என் மகனைவிட எனக்கு பிரியத்துக்குரியவனாகிய அர்ச்சுனன் இப்போது அரங்கில் தோன்றபோகிறான். நீங்கள் ஒருபோதும் கண்டிருக்காத அபூர்வ வித்தைகளை அவன் இங்கு அரங்கேற்றுவான்” என்றார். அரங்கு வாழ்த்தொலிகளுடன் மீண்டும் உற்சாக நிலைக்கு மீண்டது.

வில்லாளிக்குரிய முழுப்போருடையில், காகபட்சமாக வெட்டப்பட்ட கரிய தலைமயிரில் நீர்த்துளிகள் போலச் சுடரும் மணிசரங்கள் அசைய, கைகளில் பொற்கங்கணத்தின் பதிக்கப்பட்ட வைரங்கள் ஒளிவிட, தோலுறையிட்ட கரங்களை கூப்பியபடி, நாணேற்றப்பட்ட வில்லின் துடிப்புடன் அர்ச்சுனன் களம் நடுவே வந்தபோது எங்கும் வாழ்த்தொலிகளும் மகிழ்ச்சிக் குரல்களும் எழுந்தன. அவன் துரோணரை வணங்கி அவரிடமிருந்து வில்லையும் அம்புறாத் துணியையும் வாங்கிக் கொண்டு அரங்கு நடுவே நின்று, மெதுவாகச் சுழன்று, எதிர்பாராத நொடியில் விட்ட அம்பு சீறி மேலெழுந்து, செஞ்சுடராக தீப்பற்றி எரிந்தபடி பாய்ந்து போய் வானில் பெரிய ஒலியுடன் வெடித்து அதிலிருந்து நட்சத்திரங்கள் போல சுடர்கள் தெறித்தன. கூட்டம் ஆரவாரமிட்டது.

அர்ச்சுனனின் அம்புகள் வானில் பறவைகள் போல முட்டி மோதியும் இணைந்தும் பிரிந்தும் விளையாடின. முதல் அம்பை வானிலேயே அடுத்த அம்பால் அடித்து அதை மீண்டுமொரு அம்பால் அடித்து அம்புகளால் விண்ணில் ஒரு மாலை கோர்த்துக் காட்டினான். சுவர் மீது எய்யப்பட்ட அம்பு திரும்பித் தெறித்தபோது மறு அம்பு அதன் கூர் முனையில் தன் கூர்முனை தைத்து அதை வீழ்த்தியது. சதுப்பு நோக்கிச் சென்ற ஓர் அம்பின் பின்பகுதியின் துளைவழியாக மண்ணின் ஊற்று பீரிட்டது. அம்புபோல பறக்கவிடப்பட்ட நாகணவாயின் தலையை வானிலேயே ஒரே அம்பால் சீவியபோது தலை தெறித்துவிழ, தலையற்ற பறவை அதே வேகத்தில் மேலும் பறந்துசென்று வெகுதூரம் கழித்து வேகமிழந்து மண் நோக்கி சரிந்தது.

பெண்கள் மண்டபத்தில் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் குந்தி அர்ச்சுனனைப் பார்த்திருந்தாள். துரியோதனன் பொறுமையின்றி தோள்களை அசைத்தபடியும் தன் கதையை சுழற்றியபடியும் நின்றான். துரோணர் இருகரங்களையும் தூக்கி “இவன் என் சீடன்! இந்த பாரத வர்ஷத்தில் இவனுக்கு நிகரான வில்லாளி வேறு எவரும் இல்லை என இதனால் நான் அறிவிக்கிறேன்!” என்று உரத்த குரலில் கூவியபோது அரங்கில் இருந்து ஆயிரக் கணக்கான குரல்கள் ஆரவாரமிட்டன. அரங்கின் வடக்கு மூலையில் ஒரு கலவரம் எழுவதை துரோணர் கண்டார். அவர் அதை நிதானிக்கும் முன்பு அங்கிருந்து வில்லாளிகளுக்குரிய உடையுடன், சுடர் சிந்தும் குண்டலங்களும் மின்னும் கவசமும், தோலுறைக்கரங்களுமாக கர்ணன் அரங்கு நடுவே வந்து நின்று நாணொலி எழுப்பினான். அவனை நோக்கி விரைந்த வீரர்கள் அவன் வில்லோசை கேட்டு தயங்கினர். “யார் அவன்? யார் அவன்?” “சூத புத்திரனா? இளஞ்சூரியன் போல அல்லவா இருக்கிறான்?” என்று அரங்கு கலகலத்ததை துரோணர் கேட்டார்.

மணிக்கழல் ஒலிக்க நடந்து வரும் கர்ணனை அர்ச்சுனன் கொந்தளிக்கும் மனத்துடன் பார்த்து நின்றான். அவனுக்கு நிகரான பேரழகனை அதுவரை பார்த்ததில்லை என்று அப்போதுதான் அவன் மனம் அறிந்தது. முன்பு பார்க்கும்போதெல்லாம் எதிரியை வேவு பார்க்கும் கண்களுடன் அவனுடைய தசை வலிமையை மட்டும் அளவிடவே அவன் முயன்றிருக்கிறான். அவனுடைய உயரத்தின் நிமிர்வு, ராஜநாகம் போல நீண்டு தொங்கும் கரங்கள், வேங்கைக்குரிய இடை, இளம்புரவியின் மென் நடை… கர்ணன் அரங்கு நடுவே நின்று உரத்த குரலில் “பார்த்தா, நீதான் உலகின் பெரும் வில்லாளி என்று உன் ஆசிரியர் சொன்னால் போதாது, உலகம் சொல்லவேண்டும். இதோ நீ செய்த அத்தனை வித்தைகளையும் உன்னைவிட சிறப்பாக நான் செய்யச் சித்தமாக இருக்கிறேன்…” என்றான்.

அனைவரும் தங்களை மறந்து நிற்க கர்ணன் நாகணவாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூட்டை தன் அம்பால் உடைத்தான். காற்றில் எழுந்து பாய்ந்த குருவியின் ஒரேயொரு இறகை மட்டும் அப்பறவையே அறியாமல் அவனுடைய அம்பு சீவி வீழ்த்தியது. காற்றில் தத்தளித்து சுழன்று இறங்கிய இறகை இன்னொரு சரம் மென்மையாகத் தொட்டு எடுத்து சுழன்று வந்து கர்ணனின் கரங்களுக்குக் கொண்டுவந்தது. அவன் அவ்விறகை எடுத்துத் தன் தலைமயிர் கட்டில் சூடிக் கொண்டான்.

சுண்டிப்போன முகத்துடன் அர்ச்சுனன் நிற்க அரங்கு தயங்கி கலைசலான ஒலியை எழுப்பியது. பின்வரிசையிலிருந்து ஏதோ இளைஞன் திடீரென வெறிபிடித்தவன் போல எழுந்து கர்ணனுக்கு வாழ்த்து கூறி கூவ, குழப்பம் மெல்ல விலகி மெதுவாக அரங்கு மொத்தமாக வாழ்த்துக் கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தது. பின்பு அதுவரை கேட்காத உக்கிரம் கொண்ட வாழ்த்தொலிகளால் அப்பகுதியே முரசுத்தோல் பரப்பு போல அதிர்ந்தது.

புன்னகையுடன் கர்ணன் கையசைத்து அமைதியை உருவாக்கி விட்டு “பார்த்தா, இது என் அறைகூவல். நீ வீரனென்றால் என்னுடன் விற்போருக்கு வா” என்றான்.

பெண்கள் மண்டபத்தில் கலவர ஒலிகள் எழுந்ததை கிருபர் கண்டார். குந்தி நினைவிழந்து விழ அவளை சேடிப்பெண்கள் சூழ்ந்து கொண்டு நீர்தெளித்து ஆசுவாசப்படுத்தினர். இரு கரங்களையும் விரித்தபடி கிருபர் கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடுவே வந்து நின்றார் “இரட்டையர் போருக்கு மரபு சில நிபந்தனைகளை விதித்துள்ளது இளைஞனே. சமானமானவர்கள் மட்டுமே அப்படி போர் புரிய முடியும். இவன் குந்தியின் மகன், குரு வம்ச இளவரசன், இந்திரனை ஞானத்தந்தையாக கொண்டவன். நீ யார்? உன் பெயர் என்ன? உன்குலம் என்ன? உன் ஆசிரியர் பெயர் என்ன?”

கர்ணனின் கரங்களில் இருந்த வில் தாழ்ந்து மண்ணைத் தொட அதன்நாண் விம்ம் என ஒலித்தது. சீற்றத்துடன் துரியோதனன் முன்னால் நகர்ந்தான் “நல்ல மரபு குருநாதரே. போர்க்களத்தில் இலச்சினை மோதிரத்தைக் காட்டாத எவரிடமும் மோத ஷத்ரியன் மறுத்துவிடலாம்! என்ன அருமையான உத்தி!” என்று கூவி சொல்லிவிட்டு துரோணரிடம் திரும்பி “ஆசாரியாரே உங்கள் சொற்களை திருத்திக் கொள்ளுங்கள். அர்ச்சுனன் பாரதவர்ஷத்தின் வில்லாளியல்ல, இந்த அரண்மனையிலேயே பெரிய வில்லாளி, அவ்வளவுதான்.”

“இது ரணகளமல்ல சுயோதனா. களத்தில் எவருக்கும் உரிய பாடத்தை கற்பிக்கும் தகுதிஎன் சீடனுக்கு உண்டு. இது அரங்கேற்றக் களம். அரச மரியாதை இல்லாத எவரும் இங்கு அரங்கேற முடியாது…” என்றார் துரோணர்.

பீமன் கோபத்துடன் கையை நீட்டியபடி “நீ யார்? உன் குலமென்ன, சொல்” என்றான்.

கர்ணனின் கண்கள் கோபத்துடன் எரிந்தன “வீரர்கள் வாயால் வெற்றிபெற எண்ணுவதில்லை” என்றான் மெல்லிய குரலில்.

“குருநாதரே, இவன் மாவீரன். சிம்மம் தன் வல்லமையாலேயே வனராஜனாகிறது. உங்களுக்கு என்ன தேவை, இவன் மன்னனாக வேண்டும்; அவ்வளவுதானே? என் அன்னை வழியாக எனக்கு கிடைத்த அங்க நாட்டுக்கு இதோ இக்கணமே இவனை மன்னனாக்குகிறேன். எங்கே விதுரர்? இங்கேயே அபிஷேகம் நடக்கட்டும். தம்பி அந்த அங்கதேச மணிமுடியை கொண்டுவா!” என்றான் துரியோதனன் உரத்த குரலில். தன் மார்பில் கையால் முட்டியபடி “இம்முடிவை எதிர்க்கும் எவர் இருந்தாலும் அது என் தந்தையாகவே இருப்பினும் இப்போதே என்னிடம் போருக்கு வரச்சித்தமாகட்டும்” என்று அறைகூவினான்.

விகர்ணன் மணிமுடியுடன் வருவதற்குள் அட்சதையும் மலரும் நிரம்பிய தட்டுகளையும் அபிஷேக நீர்க்குடங்களையும் விதுரர் தலைமையில் சேடியர் களத்துக்கு கொண்டுவந்தார்கள். துரியோதனன் கர்ணனை தோள்களைப் பற்றித் தழுவிக் கொண்டான் “இந்த கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை! என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை” என்றான். அப்போது அவன் தன் தோள்களில் கர்ணனின் தோள்களின் தகிப்பை உணர்ந்தான்.

பொற்தாலத்தில் அங்கநாட்டு மணிமுடி செங்கழுகின் இறகுடன் வந்து சேர்ந்தது. பார்வையாளர் பகுதியெங்கும் பேரரவம் அருவியொலி போலக் கேட்டது. “என் நண்பன் இதோ மண்ணும் விண்ணும் சாட்சியாக மணிமுடிசூடுகிறான். தேவர்கள் அருள்க, குலதெய்வங்கள் அருள்க” என்று கூவியபடி அந்த மணிமுடியை கையிலெடுத்தான் துரியோதனன்.

அப்போது லாயத்துக்கு திறக்கும் பாதை வழியாக குதிரைச்சாணம் படிந்த அழுக்கு உடையுடன் மெலிந்த உடல் கொண்ட முதியவனாகிய அதிரதன் பதறியபடி ஓடி வந்து “கருணை காட்டுங்கள்! அவனைக் கொன்றுவிடாதீர்கள். எங்கள் முதுமைக்கு அவனே ஆதாரம்… இளமைத்துடிப்பால் ஏதோ பேசிவிட்டான்…” என்று துரோணரிடம் கண்ணீர் வழிய துடிக்கும் உதடுகளுடன் கைகூப்பினான்.

“யார் நீ?” என்றார் துரோணர் அதிர்ச்சியுடன்.

“இவர் என் தந்தை. இவரது தோள்களிலேயே நான் வளர்ந்தேன். இவருடைய பாவ புண்ணியங்களுக்குத்தான் நான் வாரிசாவேன்” என்றான் கர்ணன் நிதானமாக.

அரங்கு சிலைத்து அமைதிகொண்டது. அந்த மௌனத்தில் “குதிரைக்காரனின் மகனா நீ?” என்றார் துரோணர் இளநகையுடன்.

“ஆம், இவரே என் தந்தை! கருணையே ஆண்மையின் உச்சம் என்று எனக்குக் கற்பித்த ஞானகுருவும் இவர்தான்” என்றான் கர்ணன்.

“இளைய கெளந்தேயரிடம் இவன் போர் புரியப்போவதாக சொன்னார்கள். வேண்டாம், என் மகனை விட்டு விடுங்கள்..” என்று அதிரதன் மன்றாடியபடி துரோணர் காலில் விழப்போனான்.

“மூடா, உன் மகனை இப்போதே கூட்டிச்செல். இல்லையேல் அவன் தலை இந்த மண்ணில் உருளும்” என்றார் கிருபர். அதிரதன் நடுங்கும் உடலுடன் கைகூப்பினான்.

“குருநாதர்களே, பூமாதேவி வலிமையானவனுக்குரியவள் என்று எனக்குக் கற்பித்தவர்கள் நீங்கள். இதோ அங்கநாட்டு மகுடத்தை நான் கர்ணன் தலையில் சூட்டுகிறேன். மறுப்பவர் தங்கள் வாட்களுடன் களம் புகட்டும்” என்று துரியோதனன் அறைகூவினான். சில கணங்கள் களத்தைச் சுற்றி நோக்கி விட்டு மணிமுடியை கர்ணனின் சிரத்தில் வைத்தான்.

விதுரர் மலரும் அரிசியும் தூவினார். அரண்மனை வைதிகர் மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தார்கள். மங்கல முரசுகள் முழங்கின. சபையோர் வாழ்த்தொலி எழுப்பினர். “அங்க நாட்டரசனுக்கு வெற்றி வெற்றி வெற்றி” என்று நிமித்திகன் கூவினான். மணியோசைகள் அதை ஆமோதித்தன.

மெலிந்து நடுங்கும் கைகளை கூப்பியபடி நின்ற தன் தந்தைகாலில் கர்ணன் முதலில் விழுந்து வணங்கிய போது அவர் விம்மிவிம்மி அழுதார். கர்ணன் எழுந்து அவரை மார்புறத்தழுவிக் கொண்டபோது இருவர் கண்ணீரும் கலந்தன. பார்வையாளர் அரங்கிலிருந்து எதிர்பாராதவகையில் வெடித்துக்கிளம்பி வானை அறைந்த வாழ்த்தொலிகள் பீமனை கோபத்தால் துடிக்கச் செய்தன. அர்ச்சுனன் தன் வில்லை இறுகப்பற்றி நிமிர்ந்து நின்றான்.

“இதோ அங்கநாட்டு அதிபனாகிய கர்ணன். இந்த மாவீரனுடன் மோதும் வலிமை உள்ளவன் யார் இங்கே?” என்று துரியோதனன் அறைகூவினான்

“இந்த குதிரைக்காரனிடமா குருகுல இளவரசன் போர் புரிவது? நெறிகளை மீறுவதற்கு இவ்வரங்கு அனுமதிக்கிறதா?” என்றார் கிருபர் அரங்கைநோக்கி. அரங்கில் கலைசலான ஒலிகள் எழுந்தன.

பீமன் அதிரச் சிரித்தபடி “பிடரி மயிர் சூடிய நாய் சிம்மமாகிவிடாது சுயோதனா” என்றான்.

அர்ச்சுனன் நாணை சுண்டியபோது அரங்கில் அனைவர் வயிறிலும் அவ்வதிர்வு பரவியது “நான் இவ்வறைகூவலை ஏற்கிறேன்” என்றான். கர்ணனும் தல் வில்லை சுண்டினான்.

அதிரதன் தன் புதல்வனின் கரங்களை பற்றிக் கொண்டார் “இந்த ஏழைக்கு நீ ஒரு வரம் அளிக்கவேண்டும். இப்போது நீ கெளந்தேயர்களுடன் போரிடலாகாது.”

கர்ணன் அவரை கூர்ந்து பார்க்க, அவர் “என்னை நீ அறிவாய்” என்றார்.

“ஆம் தந்தையே, உங்களுக்கு நிகரான விவேகியை நான் கண்டதில்லை! உங்கள் ஆணையே என் கடமை” என்றான்.

அவை மெல்ல வேகமடங்கியது. குருநாதர்கள் அசைந்து அமர்ந்தார்கள். பீஷ்மர் கண்காட்ட “சூரியன் மறைந்துவிட்டதனால் இத்துடன் சபை முடிந்தது” என்று கிருபர் சொன்னதும் பெருமுரசங்கள் அதிர ஆரம்பித்தன. கர்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தபடி கூட்டம் கலைய ஆரம்பித்தது.

தருமன் எழுந்து தலைகுனிந்தபடி நடக்க பின்னால் வந்து சேர்ந்த அர்ஜுனன் “அண்ணா அந்தச் சூதன் மகனை நினைத்து கலங்காதீர்கள். அவன் அளிக்கும் தைரியத்தில் துரியோதனன் நம்மை எதிர்க்கலாம். ஆனால் என்றாவது அவனை நான் களத்தில் கொன்று வீழ்த்துவேன்” என்றான்.

தருமன் நின்று “ஆம் தம்பி நாம் வெல்வோம்…” என்றான். “இன்று எனக்கு அது தெரிந்தது. சுயோதனன் இந்த ஒரு சூதன் மகனை நம்பி அத்து மீறுவான். நம்மிடம் தோற்பான். ஆனால்– “ அர்ஜுனன் எதிர்பார்ப்புடன் நின்றான். “… தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி.” என்றான் தருமன். பார்வையை விலக்கித் தலைகுனிந்து அவன் சொன்னான் “இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்.”

குனிந்த தலையுடன் செல்லும் தர்மனை நோக்கி அர்ஜுனன் சில கணங்கள் தனித்து நின்றான்.

முந்தைய கட்டுரைகர்மயோகம் : (35 – 41)
அடுத்த கட்டுரைதுவாரபாலகன்