பகுதி 7 : மலைகளின் மடி – 10
ஒரு சேக்கைக்கு மட்டுமே இடமிருந்த அந்தச் சிறிய அறை அவ்வில்லத்தில் காமத்திற்குரியது என்று தெரிந்தது. அதற்கு அப்பாலிருந்த சுவர் மண்ணுடன் இணைந்திருப்பதாக இருக்கவேண்டும். மெல்லிய மரப்பட்டையால் காப்பிடப்பட்டிருந்தது. ஒரே ஒரு கம்பளிச்சேக்கை. அதன்மேல் மரவுரியாலும் கம்பளியாலும் செய்யப்பட்ட பெரிய போர்வை.
அவன் அமர்ந்ததுமே பின்னாலேயே பிரேமை காலடிகள் உரக்க ஒலிக்க ஆவலுடன் உள்ளே வந்து கதவை மூடிக்கொண்டு உரக்கச் சிரித்தபடி சிறிய துள்ளலுடன் அவனருகே வந்து அமர்ந்துகொண்டாள். கம்பளியை தன் கால்கள் மேல் ஏற்றிவிட்டு “உங்கள் ஒற்றர்தான் சொனனர். அது முத்திரை உள்ள கணையாழி என்று… அன்னை மகிழ்ந்துவிட்டாள்” என்றாள். பூரிசிரவஸ் “ஆம்” என்றான். ”நான் இதுவரை காமம் துய்த்ததில்லை. இங்கே ஆண்களே வருவதில்லை” என்றாள்.
பூரிசிரவஸ் “உன் தமையன்களுக்கு சொல்லவேண்டியதில்லையா?” என்றான். “எதற்கு?” என்றாள். பூரிசிரவஸ் “எங்களூரில் சொல்லியாகவேண்டும்” என்றான். “குழந்தை பிறப்பதைத்தான் நாங்கள் சொல்வோம்” என்றாள் பிரேமை. அவள் அவன் தோளில் கையிட்டு சற்றும் தயக்கமின்றி தழுவியபடி கரிய புருவங்களைத் தூக்கி இளநீல விழிகள் மின்ன “நான் அழகி என்று சொன்னீர்களே, அது உண்மையா?” என்றாள். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”ஆம்” என்றான். “என்னிடம் எவரும் அதை சொன்னதில்லை” என்று அவள் வாய்விட்டுச்சிரித்தாள். அவளுடைய பெரிய கைகளின் எடையில் அவன் தோள்கள் தழைந்தன.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் பிற இருவரைப்பற்றியும் சொல்லலாமா என்று எண்ணிக்கொண்டான். அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்காது என்கையில் அதை சொல்வதனால் பொருளில்லை. எத்தனை பெரிய உடல் என அவளை அருகே பார்த்தபோது அவன் அகம் வியந்துகொண்டே இருந்தது. அவன் அவள் கைகளைப் பற்றி தூக்கி நோக்கினான். “என்ன பார்க்கிறீர்கள்?” என அவள் கேட்டாள். “உன் கைகள். மிகப்பெரியவை. நீ நிற்கும்போது இரண்டு சிறுவர்கள் உன் இருபக்கமும் நிற்பது போலிருக்கிறது” என்றான்.
ஃபூர்ஜ மரப்பட்டையின் உட்பக்கம் போல மிகவெண்மையான கைகள். அவன் கைகளை விட மும்மடங்கு பெரியவை. “நீ என்னைவிட இருமடங்கு பெரியவளாக இருக்கிறாய்” என்றான். “ஆம்” என்று அவள் சிரித்தாள். மகிழ்ச்சியை சிரிப்பாக அன்றி வெளிக்காட்ட அவளுக்குத் தெரியாது என நினைத்துக்கொண்டான். கைகளை விரித்துக்காட்டி “பிதாமகர் சொன்னார். நான் அவரைப்போலவே இருக்கிறேன் என்று. என் தந்தையின் தந்தை மிகப்பெரியவர்.” அவன் அவள் கைகளை வருடி “ஃபூர்ஜபத்ரம்… எத்தனை வெண்மை!” என்றான்.
“ஃபூர்ஜமரத்தின் பட்டைகளை நாங்கள் வெட்டி சிறிய துண்டுகளாக்கி வைப்போம். கீழிருந்து வணிகர்கள் வந்து வாங்கிச்செல்வார்கள்” என்றாள் பிரேமை. “எதற்கு என்று தெரியுமா?” என்றான். “தெரியாது” என சிரித்தாள். “அது ஏடு. அதில்தான் நூல்களை எழுதுகிறார்கள்” என்றான். “நூல்கள் என்றால்?” என்றாள்.
அவன் ஒருகணம் திகைத்துவிட்டான். “உனக்கு எழுத்துக்கள் தெரியுமா?” என்றான். “வணிகர்கள் தோல்பட்டையில் எழுதுவார்களே?” என்றாள். “அது தெரியாது.” “அவை எண்கள். எழுத்துக்களும் உண்டு. அவற்றைச் சேர்த்து எழுதுவதற்குப்பெயர் நூல்” என்றான். “ஏன் எழுதவேண்டும்?” என்றாள். “நாம் இப்போது பேசுவதை முழுக்க அப்படியே எழுதிவைக்க முடியும். நீயும் நானும் முதிர்ந்து கிழங்களாக ஆனபின்னர் எல்லா சொற்களையும் அப்படியே வாசிக்க முடியும்.”
அவள் விழிகளை விரித்து “ஏன் அவற்றை வாசிக்கவேண்டும்?” என்றாள். பூரிசிரவஸ் அந்த வினாவை சிந்திக்கவே இல்லை. விழிகளைச் சரித்து ”அப்போது நாம் கிழவர்களாக இருந்தால் கிழவர்களின் பேச்சுகளைத்தானே அறியவேண்டும்” என்றாள் அவள். நீலவிழிகள். கள்ளமற்றவை. ஆனால் அவற்றில் அறியாமை இல்லை. அவனறியாத பலவற்றையும் அறிந்த நிறைவு ஒளிர்ந்தவை.
அவன் சிரித்தபடி “ஆம், தேவையில்லாத வேலைதான்.”என்றான். அவள் அணிந்திருந்த மரவுரியாடையை அகற்றி அவள் கைகளை முழுமையாக பார்த்தான். புயங்கள் பெரிய வெண்தொடைகள் போல உருண்டிருந்தன. தோளிலிருந்து ஆறு போல இறங்கிய பெரிய நீலநரம்பு கிளைவிரித்து முழங்கைக்கு வந்தது. தோலுக்கடியில் ஓடிய நரம்புகளை முழுக்க பார்க்கமுடிந்தது. அவளது உள்ளங்கையை விரித்தான். அவனுடைய கையை முழுமையாகவே உள்ளே வைக்க முடிந்தது. மரப்பட்டை போல காய்த்திருந்தன.
அவன் குனிந்து அவளுடைய பருத்த புயங்களை முத்தமிட்டான். அவள் கூசி ஓசையிட்டு சிரித்தாள். “அய்யோ, வெளியே கேட்கும்” என்றான். அவள் விழிகூர்ந்து ”ஏன் கேட்டாலென்ன?” என்றாள். அவன் “ஒன்றுமில்லை” என்றான். அத்தனை பருத்திருந்தாலும் புயங்கள் ஷ்யோனக மரத்தில் கடைந்தவைபோல உறுதியாகவும் இருந்தன. மாமல்லர்களுக்குரிய பெருந்தோள்கள். ஆனால் அவை முற்றிலும் பெண்மை கொண்டவை.
“என் முப்பாட்டியைப்பற்றி தந்தை சொல்வதுண்டு. இளமையில் அவர் அவளை பார்த்திருக்கிறார். அவள் தூய பால்ஹிகக்குருதி. அவள் ஒருமுறை ஒரு இறந்த எருதை தூக்கிக்கொண்டு மலையிறங்கி வந்தாளாம்” என்றான். “எருதையா?” என்றாள். “நான் பெரிய கன்றுக்குட்டியை தூக்கியிருக்கிறேன். மலையிலிருந்து இங்கே கொண்டுவந்தேன். அதன் கால் உடைந்துவிட்டது…” என்றாள்.
“உன்னைப்போல் இருந்திருப்பாள்” என்றான். “எப்படி?” என்றாள். “பெருந்தோள்கள்…” என்றான் பூரிசிரவஸ். அவள் “தோள்களா?” என்றபடி தன் மரவுரி மேலாடையை கழற்றினாள். இரு யானைத்தந்தங்கள் போல அவள் கழுத்தெலும்புகள் வளைந்திருந்தன. தோள்களை நோக்கி மார்பிலிருந்து நாகம்போல ஒரு நரம்பு ஏறியது. கழுத்தின் இருபக்கமும் நீலநரம்புகள் முடிச்சுகளுடன் கீழிறங்கின. திரண்டு விரிந்த தோள்களை இருபக்கமும் பார்க்கவே தலையை திருப்பவேண்டியிருந்தது. வெயில்படும் கழுத்துப்பகுதி சிவந்திருக்க மார்பின் பெருவிரிவு மெல்லிய செந்நிற மயிர்ப்புள்ளிகளுடன் பனிநிறமாக இருந்தது.
அவள் தோளின் எலும்புமுட்டில் மெல்ல தொட்டான். அதன் உறுதியை உணர்ந்தபடி கையை மெல்ல இறக்கி புயங்களை பற்றிக்கொண்டான். அரக்குநிறக் காம்புகள் கொண்ட சிறிய கன்னிமுலைகள். அவற்றின் மேலும் நீலநரம்புகள். அவன் அவள் தோள்களை குனிந்து முத்தமிட்டான். அவன் அவளை அணைத்துக்கொண்டபோது மலைப்பாம்புகள் வளைப்பதுபோல அவள் கைகள் அவன் கழுத்தை சுற்றிக்கொண்டன. அவள் முகமும் கழுத்தும் சிவந்து வெம்மை கொண்டிருந்தன. “நீ இங்குவரும் பிற ஆண்களுடன் காமம் கொண்டாடுவாயா?” என்றான்.
“ஏன்?” என்று அவள் கேட்டாள். “உன்னிடமிருப்பது பால்ஹிகநாட்டின் கணையாழி. நீ அதை செய்யக்கூடாது” என்றான். “நாங்கள் அதை செய்வதில்லை. அலைந்து திரியும் இடையர்கள்தான் அப்படி செய்வார்கள்” என்றாள். “நாங்கள் கணவன் இறந்து போனபிறகுதான் வேறு கணவர்களை தேர்ந்தெடுப்போம். ஏனென்றால் பசுவும் பெண்ணும் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டுமல்லவா?” பூரிசிரவஸ் அவளை முத்தமிட்டு “ஆம்” என்றான்.
அவளுடைய மணம். வெயில்படாத தோலில் அப்பகுதி மரங்கள் அனைத்திலும் இருக்கும் பாசியின் மணமிருந்தது. “ஹஸ்திகை மகிழ்ச்சியாக இருக்கிறாளா?” என்றான். “ஆம், அவள் கணவர் யானைகளை விட ஆற்றல் கொண்டவர்” என்றாள். “நான் அத்தனை ஆற்றல்கொண்டவன் அல்ல” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நான் ஆற்றல்கொண்ட மைந்தனை பெறுவேன்” என்றாள். “ஏனென்றால் நீங்கள் என்மேல் அன்பாக இருக்கிறீர்கள். கணவன் அன்பாக இருந்தால் மலைத்தெய்வங்கள் மகிழ்ந்து அழகிய குழந்தையை அளிக்கின்றன.”
வெளியே கேட்டுக்கொண்டிருந்த காற்றின் ஓசை மிக அண்மையில் வந்தது போல் பூரிசிரவஸ் உணர்ந்தான். வெண்ணிறப் பனிக்குள் மூழ்குவது போல அவளுடைய வெம்மையான கைகளுக்குள் தன்னை ஒப்புக்கொடுத்தான். மிக அப்பால் எங்கோ ஓநாயின் ஊளை கேட்டது. மேலும் மேலும் ஓநாய்கள் ஊளையிட்டன. ”அது என்ன ஓசை?” என்றான். அவள் அவன் செவியில் மூச்சொலியுடன் “ஓநாய்கள்” என்றாள். ஓநாய்களை கேட்டுக்கொண்டே இருந்தான்.
பின் தன்னை உணர்ந்தபோது கடும் குளிர் காதுகளை நோகச்செய்தது.அவன் கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு கருக்குழந்தைபோல சுருண்டு கொண்டான். அவள் எழுந்து அவன் தலைக்குமேல் தேவதாரு மரம்போல நின்றாள். எத்தனை பெரிய உடல் என மீண்டும் அவன் அகம் திகைத்தது. ஆனால் பேருடல்களுக்குரிய ஒழுங்கின்மை இல்லை. சிற்பியின் கனவு போன்ற உடல்.
அவள் தன் ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டிருப்பதைக் கண்டு “என்ன?” என்றான். “அது அன்னை ஓநாய். பசித்திருக்கிறது. நாங்கள் உண்ணாத ஊன்பகுதிகளை கொண்டுசென்று அதற்குக் கொடுக்கவேண்டும்” என்றாள். திகைப்புடன் “ஏன்?” என்றான். “அன்னை ஓநாய் பசியில் சாகக்கூடாது அல்லவா” என்றாள். “அதன் குட்டிகள் குகைக்குள் பாலுக்காக குகைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும். அவை சாகக்கூடாது.”
அவன் புன்னகையுடன் ஒருக்களித்து “ஏன்?” என்றான். “தெய்வங்கள் சினம் கொள்ளும். அவை முயல்களையும் எலிகளையும் அனுப்பி எங்கள் கிழங்குப் பயிர்களை முற்றாக அழித்துவிடும்” என்றபின் குழலை சுருட்டிக் கட்டினாள். அவள் வெளியே சென்றபோது பூரிசிரவஸ் எழுந்து அவளுடன் சென்றான். “நானே போட்டு விடுவேன்” என்றாள். “நான் வெறுமனே பார்க்கத்தான் வருகிறேன்” என்றான். “மிதிக்காமல் வாருங்கள். குழந்தைகள் துயில்கின்றன” என்றாள்.
அடுமனைக்கு அப்பாலிருந்த சாய்வான கொட்டகையில் அவர்கள் கொன்று உரித்த பெரிய காட்டு ஆடின் எஞ்சிய உடல் கிடந்தது. அண்மையில் பார்த்தபோதுதான் அது எத்தனை பெரிய விலங்கு என்று தெரிந்தது. அதன் தோல் உரிக்கப்பட்டு தொடையிலும் விலாவிலும் இறைச்சி சீவி எடுக்கப்பட்டிருந்தது. எலும்புகளை இணைத்த தசைகள் இருந்தமையால் அது தன் வடிவிலேயே பெரிய தலையுடன் கிடந்தது. குடலும் இரைப்பைகளும் தனியாக தரையில் இருந்தன. அப்பால் காட்டுப்பூனை வாயின் கோரைப்பற்கள் தெரிய நாக்கு நீட்டிக் கிடந்தது.
அவற்றை அவள் எடுத்து வெளியே போடப்போகிறாள் என்று அவன் நினைத்தான். ஆனால் அவள் அவற்றை எடுத்து அருகே இருந்த காட்டுக்கொடியாலான கூடையில் வைத்தாள். “என்ன செய்யப்போகிறாய்?” என்றான். “நெருப்பு மணமிருப்பதனால் இங்கே ஓநாய்க்கூட்டம் வராது. அவை நிற்குமிடத்திற்கு கொண்டுசென்று போடவேண்டும். அன்னை ஓநாயை தனியாக அழைத்து உணவை அளிக்கவேண்டும். பிற ஓநாய்களை கல்வீசி துரத்தாவிட்டால் அன்னை ஓநாய்களை உண்ணுவதற்கு அவை விடா” என்றாள்.
பூரிசிரவஸ் திகைப்புடன் “நீ தனியாகவா செல்கிறாய்?” என்றான். வெளியே இளநீல நிறமான பனிப்புகையின் திரை மட்டும்தான் தெரிந்தது. “ஏன்? எனக்கு இந்தக் காட்டை நன்கு தெரியும். இந்த ஆட்டையே நான்தான் கண்ணிவைத்துப்பிடித்தேன்…” என்றபடி அவள் கூடையை முதுகில் தூக்கிக் கொண்டாள். “நான் வர நேரமாகும். ஓநாய்கள் தொலைவில் மலைச்சரிவில் நிற்கின்றன” என்றபின் அவனை நோக்கி புன்னகைத்தபின் ஒரு பெரிய கழியுடன் திரைக்கு அப்பால் சென்றாள்.
அவளுடன் செல்ல ஒருகணம் அவன் உடல் அசைந்தது. ஆனால் செல்லமுடியாதென்று அவன் அறிந்திருந்தான். குளிரைத் தாளமுடியாமல் அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. பற்கள் கிட்டித்து தாடை இழுத்துக்கொள்வது போலிருந்தது. அப்பால் ஓநாய்களின் ஓசை கேட்டது. பூரிசிரவஸ் கதவைமூடிக்கொண்டு திரும்ப வந்து சேக்கையில் படுத்துக்கொண்டு கால்கள்மேல் கம்பளியை போர்த்திக்கொண்டான். ஓநாய்களின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் செல்வதை அவை அறிந்துவிட்டன.
ஏராளமான ஓநாய்கள் இருக்கும் என தோன்றியது. பசித்த ஓநாய்களின் விழிகள் மட்டும் பனித்திரைக்கு அப்பால் மின்னுவதை அவன் அகத்தில் பார்த்தான். மின்மினிக்கூட்டங்கள் போல அவை சூழ்ந்துகொண்டன. அவற்றின் மூச்சொலியை கேட்டான். அவை மேலும் மேலும் அவனைச்சூழ்ந்து அணுகி வந்தன. “பிரேமை” என்றபடி அவன் விழித்துக்கொண்டான். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சிலகணங்கள் இருளை நோக்கி படுத்திருந்தான்
இருளில் கையருகே ஒரு மரவுரியாடை தட்டுப்பட்டது. அவள் இடையில் சுற்றியிருந்தது அது என உணர்ந்தான். அதை கையில் எடுத்தான். முகர்ந்து பார்த்தான். அவளுடைய மணம் அதிலிருந்தது. பசும்புலின் தழைமணம். ஊன்மணம். வியர்வையின் உப்பு மணம். அவள் முலைகளின் பாசிமணம். அவன் அதை தன் முகத்தின்மேல் போட்டுக்கொண்டான்.
மிகவெண்மையான ஃபூர்ஜமரப்பட்டையில் நீலநரம்புகள் போல எழுதப்பட்ட வாக்கியங்களை அவன் வாசிக்கத் தொடங்கினான். வாசித்தபோதும்கூட பொருள் கொள்ளமுடியவில்லை. பொருள்கொள்ள கூர்ந்தபோது அவை அழிந்தன. ஃபூர்ஜமரப்பட்டை உயிருடன் இருந்தது. மெல்ல நெளிந்தது. தொட்டபோது பட்டு போல மென்மையாக குழைந்தது. நீலநரம்புகள். மிகமென்மையானவை. அவன் அவற்றை வாசிக்கமுயன்றபடியே இருந்தான். மிகப்பெரிய நூல் அது.
பேச்சொலிகளைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டபோது அறைக்குள் இளவெயில் நிறைந்திருந்தது. கண்கள் கூச திரும்பவும் மூடிக்கொண்டான். விப்ரை வந்து கதவருகே நின்று “பாலும் அப்பமும் உள்ளன இளவரசே” என்றாள். அவன் எழுந்து கம்பளியை இடைவரை போர்த்தியபடி அமர்ந்து “பிரேமை எங்கே?” என்றான். “அவள் காலையிலேயே ஆடுகளுடன் சென்றுவிட்டாளே” என்றாள் விப்ரை.
அவன் எழுந்து அருகே சென்றுகொண்டிருந்த ஓடையில் முகம்கழுவி திரும்பிவந்து அப்பத்தையும் பாலையும் உண்டான். வெளியே வந்தபோது சகன் நின்றுகொண்டிருந்தான். “நான் கிளம்புகிறேன் இளவரசே” என்றான். பூரிசிரவஸ் “நான் பிதாமகருக்காக காத்து இங்கேயே இருக்கிறேன் என்று சொல்க” என்றபின் புன்னகையுடன் “எவருக்கும் எதையும் ஒளிக்கவேண்டியதில்லை” என்றான். சகன் “அது இங்கு வழக்கம்தான் இளவரசே” என்றபடி தலைவணங்கிவிட்டு புரவியில் ஏறிச்சென்றான்.
பிரேமை ஹஸ்திகையுடன் கருக்கிருட்டிலேயே எழுந்து கன்றுகளுக்கு பால்கறந்து கொண்டுவந்து வைத்துவிட்டு ஆடுகளுடன் மலைச்சரிவுக்குச் சென்றாள். இரண்டாம் நாள்முதல் அவனும் உடன் சென்றான். ஹஸ்திகை அவர்களை விட்டுவிட்டு விலகிச் செல்ல அவனும் அவளும் மட்டும் மலைச்சரிவில் அமர்ந்திருந்தனர். ஆடுகள் இளவெயிலில் மேய காலமே அற்றதுபோல மலைச்சரிவு விரிந்துகிடக்க அவளுடன் இருக்கையில் எதைப்பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. அவனறிந்த அனைத்தும் பொருளற்றுப்போயிருந்தன.
மீண்டும் மீண்டும் அவள் உடலை நோக்கியே அவன் சித்தம் சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் அவளுடைய பெரிய கைகளைப்பற்றியே பேசினான். “கைகளைப்பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்” என்று அவளே சிரித்துக்கொண்டு சொன்னாள். “ஆம், அவற்றைப்பற்றி ஒரு காவியம் எழுதினால்தான் என்னால் நிறுத்திக்கொள்ள முடியும்” என்றான். “காவியம் என்றால்?” என்று அவள் கேட்டாள். “நீளமான கதைப்பாடல். நூறுநாள் பாடினாலும் தீராத கதை.” அவள் விழிகளை விரித்து “அப்படி ஒரு பாடல் உண்மையில் உண்டா?”என்றாள்.
“ஆம், நிறைய” என்றான். அவள் தலைசரித்து சிந்தித்து “மனிதர்களுக்கு அத்தனைபெரிய கதை எங்கே இருக்கிறது?” என்றாள். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்தான். பிறகு வாய்விட்டுச்சிரித்தபடி “ஆம் உண்மைதான். மிகச்சிறிய கதைதான். ஆனால் சொல்வதற்கு நிறைய நேரமிருக்கிறதே. ஆகவே நீளமாக சொல்கிறோம்” என்றான்.
இரண்டுநாட்களிலேயே அவளுடைய உடல் அவனுக்குப் பழகியது. அதன்பின் அவள் விழிகளை நோக்கி பேசத்தொடங்கினான். தன் கனவுகளையும் இலக்குகளையும் பற்றி. “எனக்கு என ஒரு நிலம். அங்கே நான் அரசனாவேன். ஆனால் அங்குள்ள மக்களைக் கேட்டுதான் ஆட்சி செய்வேன். இன்றுவரை இங்கே வேளாண்மை செய்பவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே நல்லுறவு இருந்ததில்லை. வேளாண்குடிகளை தொல்லைசெய்பவர்கள் என்றே அரசர்கள் எண்ணுகிறார்கள்.”
”பாரதவர்ஷத்தின் எல்லா அரசுகளும் வணிகர்களுக்குரிய அரசுகளே. ஏனென்றால் அவர்கள்தான் அரசர்களுக்கு நிதி அளிக்கிறார்கள். ஆகவே அரசர்கள் வணிகர்கள் வேளாளர்களிடமிருந்து பொருள் கொள்ள ஒப்புகிறார்கள். நான் வேளாண்குடிகளுக்குரிய அரசொன்றை அமைக்க விழைகிறேன். அவர்களுக்கு நலம்செய்யும் ஓர் அரசு. ஏன் வணிகர்களை அரசுகள் வளர்க்கவேண்டும்? அரசே ஏன் வணிகம்செய்யக்கூடாது?”
அவள் அவன் பேசுவதை புன்னகை நிறைந்த விழிகளுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் பேசுவது புரிகிறதா என்ற ஐயம் எப்போதும் அவனுக்கு வரும். ஒவ்வொருமுறையும் அவள் அதை உடைத்து அவனை திகைக்கச் செய்வாள். “அரசே சந்தைகளை நடத்தலாம். இந்த வணிகர்கள் எந்த முறைமையும் இல்லாமல் இன்று செய்துகொண்டிருக்கும் வணிகத்தைவிட அது மேலானதாகவே இருக்கும்” என்றான்.
அவள் “ஆடுகளில் சில தற்செயலாக பாறையிடுக்குகளில் விழுந்து குவிந்திருக்கும் காய்களை தின்பதை பார்த்திருக்கிறேன். அதன்பின் அவை பாறையிடுக்குகளை முதலில் தேடிச்செல்லும். பிற ஆடுகளுக்குத்தெரியாமல் அவை செல்வதை கண்டிருக்கிறேன்” என்றாள். அவள் சொல்லவருவது அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவள் எப்போதுமே நுட்பமான எதையோ சொல்லக்கூடியவள் என்று அறிந்திருந்தான்.
“வணிகர்கள் செய்யும் வணிகத்தை யார் செய்வார்கள்” என்றாள். “அரசின் ஊழியர்கள்” என்றான். உடனே அவள் கேட்கவருவதை அவன் புரிந்துகொண்டான். அவள் “அவர்கள் வணிகர்களாக ஆகமாட்டார்களா?” என்றாள். அவன் சற்று கழித்து “ஆம், உண்மை” என்றான். மேலும் சிந்தித்து “ஆம், வணிகர்கள் என்பவர்கள் குலங்கள் அல்ல. மானுடரும் அல்ல. சில இயல்புகள்தான் வணிகம். அதைக்கற்றவர்கள் அதற்குரிய அனைத்து இயல்புகளையும் சேர்த்தே அடையமுடியும்.” என்றான்.
பிரேமை ”இங்குவரும் வணிகர்கள் எங்களிடம் பொருள்கொள்ளும்போது எங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனாலும் நாங்கள்தான் அவர்களுக்கு உணவும் இடமும் அளிக்கிறோம்” என்றாள். அவள் சொல்வதை அவன் புரிந்துகொண்டான். “ஆம், ஒவ்வொரு தொழிலும் அதற்கான அகநிலையை உருவாக்குகிறது. வணிகம் வணிகர்களை உருவாக்குகிறது.” பிரேமை சிரித்து “ஆடுகள் ஆடுமேய்ப்பவர்களை உண்டுபண்ணுகின்றன” என்றாள். “இதைச்சொன்னால் என் தந்தை மகிழ்வார்.”
ஏழாம்நாள் பிரேமையுடன் மலைச்சரிவில் அமர்ந்திருந்தபோதுதான் சிறுவன் சிவஜன் சிவந்த தலைமயிர் பறக்க சரிவில் ஓடிவந்தான். மூச்சிரைக்க “இளவரசே, உங்களைத்தேடி சகன்” என்றான். பூரிசிரவஸ் “யார்?” என்றான். “சகன்… இங்கிருந்து சென்றாரே அவர்தான்… மீண்டும் உப்பும் வெல்லமும் கொண்டுவந்திருக்கிறார். நீங்கள் உடனே வரவேண்டும் என்று என்னிடம் சொல்லியனுப்பினார்.” பூரிசிரவஸ் சிரித்தபடி “சரி நீ போ… நான் ஆடுகளுடன் வருகிறேன்” என்றான்.
பிரேமை “அவர் அதற்குள் சென்று மீண்டுவந்துவிட்டாரே. நான் நீங்கள் இங்கே கோடைகாலம் முழுக்கவும் இருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “ஆம், கோடைகாலம் முழுக்க இருப்பேன்” என்றான் பூரிசிரவஸ். அவள் ஆடுகளை நோக்கியபின் “நீங்கள் சென்று ஒற்றரிடம் பேசுங்கள்… நான் மாலை வருகிறேன்” என்றாள். பூரிசிரவஸ் அவளைப்பார்த்து ஒருகணம் தயங்கி பின் “பிரேமை, நான் இன்றே ஒற்றனுடன் கிளம்பிச்செல்லவேண்டியிருக்கலாம்” என்றான். அவள் “எங்கே?” என்றாள். “பால்ஹிகபுரிக்கு.” அவள் கையிலிருந்த வளைதடி தாழ்ந்தது. உதடுகள் மெல்ல அதிர்ந்தன. “எப்போது வருவீர்கள்?” என விழிகளை விலக்கியபடி கேட்டாள்.
“வருவேன். அங்கே எனக்கிருக்கும் பணி என்ன என்று தெரியவில்லை. நான் பிதாமகரை அழைத்துசெல்வதற்காக வந்தவன். ஏழுநாட்களாக இங்கே இருக்கிறேன். அங்கே மூன்று அரசர்களும் எனக்காக காத்திருக்கிறார்கள். நான் சென்று ஆற்றவேண்டியபணிகள் பல உள்ளன…” என்றான். “ஆனால் ஓரிரு நாட்கள்தான். மீண்டு வருவேன். இந்தக்கோடைகாலம் உனக்குரியது…” அவள் உதடுகளை மடித்து கடித்துக்கொண்டாள். கண்கள் மெல்ல கலங்கி நீர்மைகொண்டன. பெருமூச்சுடன் ஆடுகளை நோக்கி சிலகணங்கள் கண்களைக் கொட்டி விட்டு சீழ்க்கை அடித்தாள்.
ஒரு ஆடு தலைதூக்கி நோக்கியது. பிற ஆடுகளும் ஓசையிட்டன. அவள் நாக்கைமடித்து ஒலியெழுப்ப முதல் சில ஆடுகள் திரும்பி மேடேறத்தொடங்கின. மற்ற ஆடுகளும் முண்டியடித்துக்கொண்டு ஓடைநீரலைகள் போல சென்றன. அவள் திரும்பி “செல்வோம்” என்றாள். அவன் அவளுடன் நடந்தபடி “என்மேல் சினம் கொள்ளக்கூடாது. நான்…” என்றான். அவள் “சினம் எதற்கு? எங்கள் துர்கேசகுலம் என்றும் இப்படித்தான் இருந்திருக்கிறது. பெண்கள்தான் இங்கே இருப்போம். நாங்கள் காடுபோல என்று என் அன்னை சொல்வாள். வேட்டைக்காரர்கள் வந்து மீண்டு செல்வார்கள்.”
“நான் திரும்பி வருவேன். நான்குநாட்களில்…” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் திரும்ப வராமலும் போகலாம். நான் அதை அறிவேன். துர்கேசிகள் அதற்கும் சித்தமாகத்தான் இருக்கவேண்டும்…“ என்றபின் சிரித்து “அதைப்பற்றி நாங்கள் துயருறுவதில்லை. நீங்கள் உங்கள் கடமைகளை செய்யலாம்” என்றாள். அவன் அவளருகே சென்று அவள் கைகளைப்பற்றி “நான் உன்னை விரும்பவில்லை என்று நினைக்கிறாயா?” என்றான். “இல்லை… விரும்புகிறீர்கள்… அதுகூட பென்ணுக்குத்தெரியாதா என்ன?”
”அப்படியானால்…” என்றான் பூரிசிரவஸ். அவள் “நாம் இதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?” என்றாள். இருவரும் ஆடுகளுக்குப்பின்னால் சென்றனர். பூரிசிரவஸ் கால்கள் தளர தலைகுனிந்து நின்றான். பின்னர் ஒரு எட்டில் முன்சென்று அவளை அள்ளி இடைவளைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டான். அவள் இதழ்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். அவள் துயர் மிகுந்த முகத்துடன் அந்த முத்தங்களை வாங்கிக்கொண்டாள். ஈரத்தரைமேல் கனிகள் உதிர்வதுபோல அவள்மேல் முத்தங்கள் விழுந்துகொண்டிருந்தன.
பின்னர் அவன் நீள்மூச்சுடன் அடங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான். அவளுடைய பெரிய கைகள் அவன் தலைமயிரை வருடின. அவன் காதில் “ஆண்கள் துயரம்கொள்ளக்கூடாது. ஆண்களுக்கு துயரமளிக்கும் பெண்களை மூதன்னையர் விரும்புவதில்லை” என்றாள். அவன் “ம்” என்றான். அவள் “நீங்கள் திரும்பிவருவீர்கள்… எனக்குத்தெரிகிறது” என்றாள். “ஏன்?” என்றான். “தெரிகிறது” என்றாள். “எப்படி?” என்றான். “இப்போது…” என்றபடி அவன் தோளை விலக்கினாள்.
அவன் அவள் தோளில் முகம் புதைத்து “நான் நீ இல்லாமல் வாழமுடியாதவனாக ஆகிவிட்டேன்” என்றான். பிரேமை “அதெப்படி?” என்றாள். “ஏன்?” என்றான். “ஒருவர் இல்லாமல் இன்னொருவர் ஏன் வாழமுடியாது?” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “வாழலாம்… நான் வெறுமனே சொன்னேன்” என்றபின் “எப்போதாவது நீ என்னை உலகம் தெரியாத சிறுவன் என எண்ணியிருக்கிறாயா?”என்றான்.
“எப்போதுமே” என்றாள் அவள். ஒருகணம் சினந்து உடனே அவள் கண்களில் சிரிப்பை நோக்கி “கொன்றுவிடுவேன்” என்று கூவியபடி அடிக்கப்போனான். அவள் சிரித்தபடி சரிவில் ஏறி ஓடினாள். மறுபக்கம் ஏறி மலைச்சரிவில் தொலைவில் சிறிய புள்ளியாகத் தெரிந்த இல்லத்தை நோக்கி சென்றார்கள். அவள் அவனிடம் “அங்கே ஊரில் உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று கேட்டாள்.
அவள் எப்போதும் கேட்க எண்ணியது அது என உணர்ந்தான். அதை இத்தனைநாள் கேட்காமல் தவிர்த்திருக்கிறாள். ”எவருமில்லை” என்றான் அவள் கைகளைப்பற்றி “நீதான் முதல்” என்றான். அவள் புன்னகைசெய்தாள். ஆடுகள் தொலைவில் வீட்டைக்கண்டதும் விரைந்து ஓடத்தொடங்கின. “நீர் அருந்த விழைகின்றன” என்றபடி அவள் நாவொலி எழுப்பி அவற்றைத் தொடர்ந்து சென்றாள்.
சகன் அவனுக்காக காத்து நின்றிருந்தான். புரவிகள் சேணமிடப்பட்டிருந்தன. பூரிசிரவஸ் அருகே சென்றதும் அவன் தலைவணங்கி “நாளைமாலை சௌவீரர் அவருடைய நாட்டுக்கு கிளம்புகிறார் இளவரசே” என்றான். பூரிசிரவஸ் “ஏன்?” என்றான். “இத்தனைநாள் காத்திருந்தார்கள். பிதாமகர் வருவதை இனிமேலும் எதிர்பார்க்கமுடியாது. அவர் மணம்புரிந்துகொண்ட செய்தியும் அவர்களுக்கு தெரிந்துவிட்டது” என்றான் சகன். “ஆகவே ஒரு விழவு எடுத்து பிதாமகரை வணங்கிவிட்டு திரும்பலாமென்று எண்ணியிருக்கிறார்கள்.”
“என்றைக்கு விழவு?” என்றான். “நாளை காலை” என்றான் சகன். ”ஏழன்னையர் ஆலயமுகப்பில் ஒரு பீடம் அமைத்து அதில் பிதாமகரின் கால்களை குறியாக நிறுவி மூன்று அரசர்களும் மலர்வணக்கம் செய்கிறார்கள். தங்கள் மணிமுடிகளை அதன்முன் வைத்து வணங்கிவிட்டு செல்கிறார்கள்…” பூரிசிரவஸ் “உண்மைதான். இனிமேலும் பிதாமகரை காத்திருப்பதில் பொருளில்லை” என்றான்.
அவன் உள்ளே சென்று தன் ஆடைகளை அணிந்துகொண்டான். பிரேமை இளஞ்சூடான நீரை தாலத்தில் கொண்டுவந்து நீட்டினாள். அதில் முகத்தையும் கழுத்தையும் கழுவிக்கொண்டான். இல்லத்தில் விப்ரை மட்டுமே இருந்தாள். அவள் கொண்டுவந்த வஜ்ரதானியப்பொடி இட்டு கொதிக்கவைக்கப்பட்ட பாலை அருந்திவிட்டு வணங்கி விடைபெற்றுக்கொண்டான். மீண்டும் வருக என்ற சொல்லையே அவளோ பிரேமையோ சொல்லவில்லை. அவன் பிரேமையின் கைகளைப்பற்றி “வருகிறேன்” என்று சொன்னபோது அவள் விழிகள் இயல்பான சிரிப்புடன்தான் இருந்தன.
புரவிமேல் ஏறிக்கொண்டபோது அவன் நெஞ்சில் துயர் நிறைந்தது. அது ஒற்றையடிப்பாதையில் இறங்கி பாதைநோக்கி சென்றபோது குருதி வழியும் தசைநார்களை ஒவ்வொன்றாக இழுத்து அறுத்துச்செல்வதாக உணர்ந்தான். கவண் வைத்திருந்த சிறுவன் அதை எப்படிச் செய்வான் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். அது மாட்டின் இதயத்தசையால் ஆனது. இதயம் குருதிசொட்டும்போதே அதை வளையமாக ஒற்றை நீள்சரடாக வெட்டிவிடவேண்டும். பின் நிழலில் இட்டு உலர்த்தி எடுத்து நன்றாக முறுக்கினால் இழுவிசைகொண்ட கவண்சரடாக ஆகிவிடும். பூரிசிரவஸ் புன்னகைத்துக்கொண்டான்.
மலைச்சரிவின் பாதையில் புரவிகள் நெட்டோட்டம் ஓடின. அவற்றின் குளம்படியோசை வெவ்வேறு திசைகளிலிருந்து மீண்டுவந்துகொண்டிருந்தது. புரவிகள் நுரைகக்கியபோது சற்று நின்று அவற்றை இளைப்பாறச்செய்தபடி மீண்டும் சென்றார்கள். மாலையிலேயே பால்ஹிகபுரி வந்துவிடுமென எண்ணிக்கொண்டான். மலைச்சரிவில் இப்போது வெள்ளிநிறமான வெயில் பொழிந்துகொண்டிருக்கும். “மீன்வெயில்” என்று அதை அவள் சொன்னாள். ”மாலைவெயில்?” என்றான். ”பூவெயில்” என்றாள். ஒவ்வொன்றுக்கும் அங்கிருந்தே சொற்களை எடுத்துக்கொண்டாள். அவள் மலைப்பாறையில் அமர்ந்து தன் வளைதடியில் முகம் சேர்த்து அரைத்துயிலில் இருப்பாள் என்று எண்ணிக்கொண்டான்.
மீண்டு வரவேண்டும். நான்கு நாட்களில். அது அவளுக்களித்த சொல். நான்கே நாட்கள். அச்சொற்களின் முடிவில் அவன் நினைவுகூர்ந்தான் அந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் பால்ஹிகபுரியையோ பிற நிலங்களையோ எண்ணிக்கொள்ளவில்லை.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்