ஜெமோ
உங்களை ஒருவன் அடித்துவிட்டான் என்று எழுதியிருந்தீர். சமீபகாலத்தில் வாசித்தபோது நான் மகிழ்ச்சியில் சிரித்த ஒரு செய்தி என்றால் இதுதான். மிகச்சிறந்த இலக்கிய விமர்சனம் அது. பலபேர் செய்ய நினைத்து தவிர்த்ததை ஒருவன் செய்திருக்கிறான்.செய்யவேண்டிய விஷயம். நல்ல விஷயம். அடி தவிர எதைக்கொண்டும் உங்களைப்போன்றவர்களைத் திருத்தமுடியாது.நண்பர்களுக்குச் செய்தியைப் பகிர்ந்துகொண்டே. மகிழ்ச்சி அடைந்தார்கள். நல்ல விஷ்யம். மிகச்சிறப்பானது. நாகர்கோயில்காரர்களுக்கு அறிவுண்டு என்று தெரிகிறது
ஜான் செல்வா
அன்புள்ள செல்வா
கூர்மையான விமர்சனமாக இருந்தது. உங்களைப்போலவே படிக்காமல் செய்யப்பட்டது எனும்போது இன்னும் மதிப்பு அதிகம்
ஜெ
*
ஜெமோ
பரிதாபம் தேடிக்கொள்வதற்காக நீங்கள் உங்களை ஒருவன் அடித்துவிட்டான் என்று எழுதியிருந்தீர்கள். நீங்க்ள் எழுத்தாளர்கள் எல்லாம் பெரிய புடுங்கிகள் என்று ஏழை எளிய மக்களை வசைபாடுவீர்கள். அவன் கேட்டுக்கொண்டு சும்மா போவானா. அடிக்கத்தான் செய்வான். அவன் தான் ஆண்மையுள்ள தமிழன். அவனை ஏமாற்ற காவிவேட்டி கட்டவெண்டும் என்று சொல்கிறாய். நீ எழுதும் குப்பையை வாசித்திருந்தால் அவன் இன்னும் ரெண்டு அடி கூடவே போட்டிருப்பான். உன் மூஞ்சியிலே கையை வைத்த அந்த நண்பனை மானசீகமாகக் கட்டிப்பிடிக்கத் தோன்றுகிறது. உன்னைப்பொன்ற அறிவாளிகளுக்கு இதுதான் சுரணையுள்ள தமிழ்ச்சமூகம் அளிக்கும் பரிசு
கௌதமன்
அன்புள்ள கௌதமன்
நன்றி. உங்கள் நாள் சிறப்பாக அமைந்தமைக்கு
*
ஜெமோ
நீங்கள் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு நான் சிரித்ததில்லை. இந்தக்கட்டுரைக்குச் சிரித்தேன். தகுதியான அடி. நான் தபாலில் அந்த அடியை அனுப்பியதாக நினைத்துக்கொள். நானும் நண்பர்களும் இன்றைக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்
சிவா
அன்புள்ள சிவா
வந்து சேர்ந்தது – acknowledgement
ஜெ