அன்புள்ள ஜெ,
நலமா?. நித்யானந்தர் தொடர்பான உங்களுடைய கட்டுரைகளையும் திரு.சுப்பிரமணியம் அவர்களின் கேள்விக்கு தாங்கள் எழுதிய ‘ஆத்திகம் நாத்திகம்’ தொடர்பான கட்டுரையையும் வாசித்தேன். நித்யானந்தர் தொடர்பான உங்கள் கட்டுரையை வாசித்த போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதைத்தான் திரு. சுப்பிரமணியம் வேறு சொற்களில் கேட்கிறாரோ என நினைக்கிறேன்.
அதாவது ஆன்மிகவியல் குறிப்பாக இந்திய ஆனிமீகவியல் என்பதையே ஒரு அறிவுவாதமாக நிறுவ நீங்கள்முயல்கிறீர்களோ எனத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த மானுட அறிவின் அல்லது அறிதலின் சாத்தியத்தை மேம்படுத்துவது என்பது மட்டுமே நல்ல ஆன்மீகத்தின் நோக்கம் என்று நீங்கள் கூறுவது போல் தோன்றுகிறது. இது ஒருவகை தூயஅறிவுவாதம் ஆகாதா? ஆன்மிகம் என்பது காலகாலமாக இதுவாக மட்டுமே இருந்து வருகிறதா? இதை தவிற வேறு எவ்வகையிலும் மனிதகுலத்திற்கு நன்மைபயப்பதாக அது இருக்க சாத்தியம் இல்லையா? உங்களுடைய கருத்துகளைத்தான் என் தர்க்க மனமும் நம்புகிறது. ஆனால் மனதில் வேறெதுவோ நெருடுகிறது.
—
இளங்கோ கிருஷ்ணன்
அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்,
உங்களுக்கு முன்னோடியான ஒரு கவிஞன் பாடினான்
‘சுத்த அறிவே சிவமெனக் கூறிடும் சுருதிகள் கேளீரோ? -பல
பித்த மதங்களிலே தடுமாறி பெருமையழிவீரோ’
கிட்டத்தட்ட அவன் சொன்ன சொற்களையே நானும் சொல்கிறேன் என்று நினைக்கிறேன். அவருக்கு முன்பு கிட்டத்தட்ட அதையே வள்ளலார் சொன்னார். நாராயணகுரு சொன்னதும் அதையே. அவர்கள் சொன்னவற்றின் வேறுவடிவச் சொற்களே நான் சொல்வன.
இந்து சிந்தனைமரபின் ஆரம்பநிலையிலேயே சுத்த அறிவுநிலையே இறைநிலை என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் உருவாகிவிட்டன. அதுவே இந்து ஞானமரபின் உச்சநிலை தரிசனம். ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்ற செய்யுள் அந்த தரிசனத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு.
ஆனால் இந்த நிலத்தில் இருந்த பல்லாயிரம் வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் மறுத்து, அழித்து அந்த இடத்தில் அந்த தரிசனத்தை நிறுவவில்லை. மாறாக அத்தனை வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் அந்த தரிசனத்தின் அடிப்படையில் விளக்கினார்கள். அந்த தரிசனத்தைக்கொண்டு அனைத்தையும் கோர்த்தார்கள்.
அதன்மூலம் என்ன நிகழ்ந்தது என்றால் இங்குள்ள எந்த ஒரு எளிய பழங்குடிதன்மைகொண்ட வழிபாட்டிலும் தத்துவ சாராம்சமாக அந்த தூய அறிவுவாதம் இருக்கும். அதே போல தூய அறிவை முன்வைக்கும் நாராயணகுரு போன்றவர்கள்கூட சாரதாஷ்டகம் , சுப்ரமணிய சதகம் போன்ற பக்தி நூல்களையும் இயற்றினார்கள். இந்த முரணியக்கத்தையே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு சிறுதெய்வமும் ‘பரம்பொருளே’ என்றுதான் துதிக்கப்படுகிறது. இகமாக உள்ள பொருள் என்பது இந்தப் பிரபஞ்சம். இயற்பியல் சொல்லும் ‘மேட்டர்’. பரம்பொருள் என்பது அதற்கு அப்பால் இருக்கும் அறியமுடியாத பேரிரிருப்பு. அதையே வேதம் பிரம்மம் என்கிறது. அறியமுடியாதது. ஆனால் ஒவ்வொன்றிலும் உணரமுடிவது.
கண்முன் இருக்கும் செவ்வந்தி பூ சூடிய சின்னஞ்சிறு கல் அலகிலா பிரபஞ்சத்தின் சாரமாக இருக்கும் அறியமுடியாத ஒன்றாக ஆவது இவ்வாறுதான். இந்த நுண்மையைப் புரிந்துகொண்டால் இந்திய மெய்ஞானத்தின் பெரும்பாலான சிக்கல்களை விளக்கிவிடலாம்.
பிளவுபட்ட, தன்வயமான அறிவு நம்மை சிறையிடுகிறது. அதன் மூலம் உருவாவதே துயரம் என்பது. முழுமையான, தன்சாராத அறிவை அடைவதன்மூலம் பெறுவதே விடுதலை. அதுவே முக்தி என்று சொல்லப்படுகிறது. இந்து ஆன்மீகம் என்பது இதுவே. வேதங்களில் உபநிடதங்களில் கீதையில் முன்வைக்கப்படுவது இதுவே.கொரு பாக்டீரியாவில் பிரபஞ்சவிதியைக் காணும் அறிவியலாளன் உணரக்கூடிய முழுமை என்று இதைச் சொல்லலாம்.
ஆனால் நடைமுறையில் இந்து மதம் என்பது இதுதானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். அதன் சடங்குகள் நம்பிக்கைகள் ஆகியவை தத்துவதரிசனத்தை உதறி கண்மூடித்தனமாக மாறும்போது அறிவுக்கே எதிரானவையாக ஆகின்றன. மானுடவிரோதத் தன்மைகூட கொள்கின்றன. இன்று அவையே அதிகமும் நம் கண்ணுக்குப் படுகின்றன.
இன்று இந்து மரபின் மெய்ஞான சாரம் முழுமையாகவே மறைந்திருக்கின்றது. இந்துமதத்தையே சோதிடர்களும் புரோகிதர்களும் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்பட்டமான சுயநலம் பக்தியாக வேடம் பூண்டு எங்கும் நிறைந்திருக்கிறது. அறிதலும் உணர்தலும் மறைந்து வேண்டுதல் மட்டுமே ஓங்கி நிற்கின்றது.
மெய்யறிதலுக்கான அமைப்புகள் எல்லாம் சீரழிந்து விட்டிருக்கின்றன. தத்துவங்களையும் தரிசனங்களையும்கூட நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் சீரழித்து விற்பனைச் சரக்காக ஆக்கலாமென்றாகிவிட்டிருக்கிறது. இந்துமதத்தின் அமைப்புகள் எல்லாம் ஆன்மா அழிந்து நிற்கின்றன. கோயில்கள், மடங்கள், குருகுலங்கள்….
இந்நிலையில் தீவிரமாக இந்து ஞானமரபின் தத்துவ சாரத்தை முன்வைக்க வேண்டியிருக்கிறது. வழிபாடுகளும் நம்பிக்கைகளும் வெளிவிளக்கங்களே என்று கூறவேண்டியிருக்கிறது. ஒருவேளை வரட்டு அறிவுவாதம் மேலோங்கி உணர்வும் நெகிழ்வும் இல்லாமலாகி கலைகளுக்கு இடமில்லாத நிலை உருவாகியிருந்தது என்றால் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் முன்வைக்கவேண்டியிருக்கும்.
ஆகவேதான் முழுமையான அறிவு என்பதை இந்து ஞானமரபின் சாரம் என்று கூறுகிறேன். அது இங்குள்ள இந்து மத அமைப்புகள் பெரும்பாலானவற்றை நிராகரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பது இயல்பே. அவை எவற்றிலும் எனக்கு இடமில்லை. ஞானம் என்பது அமைப்புகளுக்கு வெளியே மட்டுமே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஜெ