அன்புள்ள ஜெ,
நலமா?. நித்யானந்தர் தொடர்பான உங்களுடைய கட்டுரைகளையும் திரு.சுப்பிரமணியம் அவர்களின் கேள்விக்கு தாங்கள் எழுதிய ‘ஆத்திகம் நாத்திகம்’ தொடர்பான கட்டுரையையும் வாசித்தேன். நித்யானந்தர் தொடர்பான உங்கள் கட்டுரையை வாசித்த போது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதைத்தான் திரு. சுப்பிரமணியம் வேறு சொற்களில் கேட்கிறாரோ என நினைக்கிறேன்.
அதாவது ஆன்மிகவியல் குறிப்பாக இந்திய ஆனிமீகவியல் என்பதையே ஒரு அறிவுவாதமாக நிறுவ நீங்கள்முயல்கிறீர்களோ எனத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த மானுட அறிவின் அல்லது அறிதலின் சாத்தியத்தை மேம்படுத்துவது என்பது மட்டுமே நல்ல ஆன்மீகத்தின் நோக்கம் என்று நீங்கள் கூறுவது போல் தோன்றுகிறது. இது ஒருவகை தூயஅறிவுவாதம் ஆகாதா? ஆன்மிகம் என்பது காலகாலமாக இதுவாக மட்டுமே இருந்து வருகிறதா? இதை தவிற வேறு எவ்வகையிலும் மனிதகுலத்திற்கு நன்மைபயப்பதாக அது இருக்க சாத்தியம் இல்லையா? உங்களுடைய கருத்துகளைத்தான் என் தர்க்க மனமும் நம்புகிறது. ஆனால் மனதில் வேறெதுவோ நெருடுகிறது.
—
இளங்கோ கிருஷ்ணன்
அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்,
உங்களுக்கு முன்னோடியான ஒரு கவிஞன் பாடினான்
‘சுத்த அறிவே சிவமெனக் கூறிடும் சுருதிகள் கேளீரோ? -பல
பித்த மதங்களிலே தடுமாறி பெருமையழிவீரோ’
கிட்டத்தட்ட அவன் சொன்ன சொற்களையே நானும் சொல்கிறேன் என்று நினைக்கிறேன். அவருக்கு முன்பு கிட்டத்தட்ட அதையே வள்ளலார் சொன்னார். நாராயணகுரு சொன்னதும் அதையே. அவர்கள் சொன்னவற்றின் வேறுவடிவச் சொற்களே நான் சொல்வன.
இந்து சிந்தனைமரபின் ஆரம்பநிலையிலேயே சுத்த அறிவுநிலையே இறைநிலை என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் உருவாகிவிட்டன. அதுவே இந்து ஞானமரபின் உச்சநிலை தரிசனம். ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்ற செய்யுள் அந்த தரிசனத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு.
ஆனால் இந்த நிலத்தில் இருந்த பல்லாயிரம் வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் மறுத்து, அழித்து அந்த இடத்தில் அந்த தரிசனத்தை நிறுவவில்லை. மாறாக அத்தனை வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் அந்த தரிசனத்தின் அடிப்படையில் விளக்கினார்கள். அந்த தரிசனத்தைக்கொண்டு அனைத்தையும் கோர்த்தார்கள்.
அதன்மூலம் என்ன நிகழ்ந்தது என்றால் இங்குள்ள எந்த ஒரு எளிய பழங்குடிதன்மைகொண்ட வழிபாட்டிலும் தத்துவ சாராம்சமாக அந்த தூய அறிவுவாதம் இருக்கும். அதே போல தூய அறிவை முன்வைக்கும் நாராயணகுரு போன்றவர்கள்கூட சாரதாஷ்டகம் , சுப்ரமணிய சதகம் போன்ற பக்தி நூல்களையும் இயற்றினார்கள். இந்த முரணியக்கத்தையே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு சிறுதெய்வமும் ‘பரம்பொருளே’ என்றுதான் துதிக்கப்படுகிறது. இகமாக உள்ள பொருள் என்பது இந்தப் பிரபஞ்சம். இயற்பியல் சொல்லும் ‘மேட்டர்’. பரம்பொருள் என்பது அதற்கு அப்பால் இருக்கும் அறியமுடியாத பேரிரிருப்பு. அதையே வேதம் பிரம்மம் என்கிறது. அறியமுடியாதது. ஆனால் ஒவ்வொன்றிலும் உணரமுடிவது.
கண்முன் இருக்கும் செவ்வந்தி பூ சூடிய சின்னஞ்சிறு கல் அலகிலா பிரபஞ்சத்தின் சாரமாக இருக்கும் அறியமுடியாத ஒன்றாக ஆவது இவ்வாறுதான். இந்த நுண்மையைப் புரிந்துகொண்டால் இந்திய மெய்ஞானத்தின் பெரும்பாலான சிக்கல்களை விளக்கிவிடலாம்.
பிளவுபட்ட, தன்வயமான அறிவு நம்மை சிறையிடுகிறது. அதன் மூலம் உருவாவதே துயரம் என்பது. முழுமையான, தன்சாராத அறிவை அடைவதன்மூலம் பெறுவதே விடுதலை. அதுவே முக்தி என்று சொல்லப்படுகிறது. இந்து ஆன்மீகம் என்பது இதுவே. வேதங்களில் உபநிடதங்களில் கீதையில் முன்வைக்கப்படுவது இதுவே.கொரு பாக்டீரியாவில் பிரபஞ்சவிதியைக் காணும் அறிவியலாளன் உணரக்கூடிய முழுமை என்று இதைச் சொல்லலாம்.
ஆனால் நடைமுறையில் இந்து மதம் என்பது இதுதானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். அதன் சடங்குகள் நம்பிக்கைகள் ஆகியவை தத்துவதரிசனத்தை உதறி கண்மூடித்தனமாக மாறும்போது அறிவுக்கே எதிரானவையாக ஆகின்றன. மானுடவிரோதத் தன்மைகூட கொள்கின்றன. இன்று அவையே அதிகமும் நம் கண்ணுக்குப் படுகின்றன.
இன்று இந்து மரபின் மெய்ஞான சாரம் முழுமையாகவே மறைந்திருக்கின்றது. இந்துமதத்தையே சோதிடர்களும் புரோகிதர்களும் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்பட்டமான சுயநலம் பக்தியாக வேடம் பூண்டு எங்கும் நிறைந்திருக்கிறது. அறிதலும் உணர்தலும் மறைந்து வேண்டுதல் மட்டுமே ஓங்கி நிற்கின்றது.
மெய்யறிதலுக்கான அமைப்புகள் எல்லாம் சீரழிந்து விட்டிருக்கின்றன. தத்துவங்களையும் தரிசனங்களையும்கூட நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் சீரழித்து விற்பனைச் சரக்காக ஆக்கலாமென்றாகிவிட்டிருக்கிறது. இந்துமதத்தின் அமைப்புகள் எல்லாம் ஆன்மா அழிந்து நிற்கின்றன. கோயில்கள், மடங்கள், குருகுலங்கள்….
இந்நிலையில் தீவிரமாக இந்து ஞானமரபின் தத்துவ சாரத்தை முன்வைக்க வேண்டியிருக்கிறது. வழிபாடுகளும் நம்பிக்கைகளும் வெளிவிளக்கங்களே என்று கூறவேண்டியிருக்கிறது. ஒருவேளை வரட்டு அறிவுவாதம் மேலோங்கி உணர்வும் நெகிழ்வும் இல்லாமலாகி கலைகளுக்கு இடமில்லாத நிலை உருவாகியிருந்தது என்றால் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் முன்வைக்கவேண்டியிருக்கும்.
ஆகவேதான் முழுமையான அறிவு என்பதை இந்து ஞானமரபின் சாரம் என்று கூறுகிறேன். அது இங்குள்ள இந்து மத அமைப்புகள் பெரும்பாலானவற்றை நிராகரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பது இயல்பே. அவை எவற்றிலும் எனக்கு இடமில்லை. ஞானம் என்பது அமைப்புகளுக்கு வெளியே மட்டுமே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஜெ
8 comments
Skip to comment form ↓
viththakan
April 11, 2010 at 12:26 am (UTC 5.5) Link to this comment
கடைந்தெடுத்த நாத்திகனான எனக்கு உங்களது இது போன்ற கட்டுரைகள் சுவாரசியமாகவும் அறிவுபூர்வமாகவும் தென்படுகின்றன. இறை நம்பிக்கை உள்ளோருக்கு உங்கள் மீது சந்தேகம் வருவதில் ஆச்சரியம் இல்லை.
senthilkumar
April 11, 2010 at 10:02 am (UTC 5.5) Link to this comment
/இதை தவிற வேறு எவ்வகையிலும் மனிதகுலத்திற்கு நன்மைபயப்பதாக அது இருக்க சாத்தியம் இல்லையா? /
ஏன் இளேங்கோ அறிவு மனித குலத்திற்கு நன்மைபயபதக இல்லை என எண்ணுகிறீர்கள்?
அறிவும் அன்பும் கலந்த எந்த ஒரு விசயமும் மானுடம் செழிக்க உதவும் என்பதில் ஏன் ஐயம் ?
sundar kurukkal
April 11, 2010 at 12:33 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ஜெ,
“இந்தியாவில் உள்ள எந்த ஒரு சிறுதெய்வமும் ‘பரம்பொருளே’ என்றுதான் துதிக்கப்படுகிறது. இகமாக உள்ள பொருள் என்பது இந்தப் பிரபஞ்சம். இயற்பியல் சொல்லும் ‘மேட்டர்’. பரம்பொருள் என்பது அதற்கு அப்பால் இருக்கும் அறியமுடியாத பேரிரிருப்பு. அதையே வேதம் பிரம்மம் என்கிறது. அறியமுடியாதது. ஆனால் ஒவ்வொன்றிலும் உணரமுடிவது.”
இங்கு உணர்வதுடன் இந்து மதம் தன்னை நிறுத்தி கொள்வதாக எனக்கு தோன்றவில்லை. எதை உணர்கிறோமோ அதுவாகவே மாறுவதற்கு அல்லது அதனுடன் இணைவதற்கே நம்மை இட்டு செல்கிறது என்றே எனக்கு படுகிறது . அந்த நிலைக்கு நம்மை தயார் செய்வதற்கே நம்பிக்கைகள் இங்கு ஏற்படுத்த பட்டிருக்கிறது
சடங்குகள் மற்றும் கோவில்களின் சமூக பங்களிப்பை நீங்கள் மறுக்க முடியுமா?
தனி மனிதனின் அன்றாட பிரச்சினைகளை( அகம் மற்றும் புறம்) மனதில் கொள்ளாமல் தத்துவ தரிசனத்திற்கு அவனை இழுத்து செல்ல முயன்றால்
அவனால் ஈடுகொடுக்க முடியுமா?
“தத்துவங்களையும் தரிசனங்களையும்கூட நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் சீரழித்து விற்பனைச் சரக்காக ஆக்கலாமென்றாகிவிட்டிருக்கிறது”
இதற்க்கு காரணம் நமது பழைய சடங்குகளோ அல்லது நம்பிக்கைகளோ காரணம் அல்ல, நம்முடைய கல்வி முறை, அதனிடம் இருந்து நாம் பெற்று கொண்டதாக எண்ணிய அறிவு, மேற்கத்திய மதங்களின் தாக்கம், இதன் மூலம் நாம் இந்து மதத்தை புதியதாக,அல்லது தற்காலத்திற்கு ஏற்ற (அறிவியல் சார்ந்த) மதமாக மாற்ற எண்ணி , அதற்கு ஏற்ற குருமார்களையும் மடங்களையும் நிறுவியதுதான் காரணம்.
இவர்கள் முதலில் அத்தனை சடங்குகளையும் நம்பிக்கைகளையும் மறுத்தார்கள். இது அதிகம் செல்லுபடியாகததால் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் வேறு வடிவத்தில் (அறிவியல் துணையுடன் ) மாற்றினார்கள்.
இங்கு புரோகிதர்கள் எந்த காலத்திலேயும் சமய குருமார்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கோவில்களில் அவர்களின் வேலை நித்ய பூஜைகள் செய்வது மட்டுமே. வருகின்ற பக்தர்களை கவனிப்பது இரண்டாவதே, அனால் காலத்தின் கட்டாயம் காரணமாக இரண்டாவது முன்னுரிமை பெற்றிருகிறது .
அதே போன்று வீடுகளிலும் அவர்கள் சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் , அவ்வளவே.
sundar kurukkal
April 11, 2010 at 12:39 pm (UTC 5.5) Link to this comment
sorry due to connection problem (translation is not happening)i couldnt complete..
continued ..
tamilsabari
April 11, 2010 at 1:44 pm (UTC 5.5) Link to this comment
நெடுநாளைய காத்திருப்பின் சந்திப்பிற்கு பிறகு ஆத்ம நண்பன் கேட்டான் “கடவுளை தேடவோ நாம் பிறந்திருக்குறோம் ?”
நவின்றேன் நான் “கடவுள் எப்படி கடவுளை தேட முடியும் ?”
மேலும் நண்பனும், கடவுளும் [http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post_11.html]
tamilsabari
April 11, 2010 at 1:50 pm (UTC 5.5) Link to this comment
//இன்று இந்து மரபின் மெய்ஞான சாரம் முழுமையாகவே மறைந்திருக்கின்றது. இந்துமதத்தையே சோதிடர்களும் புரோகிதர்களும் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்பட்டமான சுயநலம் பக்தியாக வேடம் பூண்டு எங்கும் நிறைந்திருக்கிறது. அறிதலும் உணர்தலும் மறைந்து வேண்டுதல் மட்டுமே ஓங்கி நிற்கின்றது.//
உண்மையை தவிர வேறில்லை
//தத்துவங்களையும் தரிசனங்களையும்கூட நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் சீரழித்து விற்பனைச் சரக்காக ஆக்கலாமென்றாகிவிட்டிருக்கிறது. இந்துமதத்தின் அமைப்புகள் எல்லாம் ஆன்மா அழிந்து நிற்கின்றன. கோயில்கள், மடங்கள், குருகுலங்கள்….//
என்னுடைய பழைய பதிவிலிருந்து
//இத்தர்மமே அழியக்கூடிய நிலையில் இருப்பதற்கு காரணம்? இன்றைய சூழ்நிலையில் இத்தர்மம் இரு தாக்குதல்களை எதிர் நோக்குகிறது.
1. கண்மூடி தனமாக வெறும் உயிரற்ற சடங்குகளை பின்பற்றி மதத்தின் பெயராலேயே அதை அழிப்போர்.
2. குருட்டுதனமான சடங்குகளை வைத்து அதன் பின் உள்ள அறிவியலையும் பகுத்தறிவின் பெயரால் ஏற்க மறுப்போர்.
//
சாதி இழிவு முறைமை தேவையா ? [ http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html ]
ramkathir
April 19, 2010 at 5:43 pm (UTC 5.5) Link to this comment
// “இந்து மதத்தின் சடங்குகள் நம்பிக்கைகள் ஆகியவை தத்துவதரிசனத்தை உதறி கண்மூடித்தனமாக மாறும்போது அறிவுக்கே எதிரானவையாக ஆகின்றன. மானுடவிரோதத் தன்மைகூட கொள்கின்றன. இன்று அவையே அதிகமும் நம் கண்ணுக்குப் படுகின்றன.
இன்று இந்து மரபின் மெய்ஞான சாரம் முழுமையாகவே மறைந்திருக்கின்றது. இந்துமதத்தையே சோதிடர்களும் புரோகிதர்களும் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்பட்டமான சுயநலம் பக்தியாக வேடம் பூண்டு எங்கும் நிறைந்திருக்கிறது. அறிதலும் உணர்தலும் மறைந்து வேண்டுதல் மட்டுமே ஓங்கி நிற்கின்றது.
மெய்யறிதலுக்கான அமைப்புகள் எல்லாம் சீரழிந்து விட்டிருக்கின்றன. தத்துவங்களையும் தரிசனங்களையும்கூட நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் சீரழித்து விற்பனைச் சரக்காக ஆக்கலாமென்றாகிவிட்டிருக்கிறது. இந்துமதத்தின் அமைப்புகள் எல்லாம் ஆன்மா அழிந்து நிற்கின்றன. கோயில்கள், மடங்கள், குருகுலங்கள்….
இந்நிலையில் தீவிரமாக இந்து ஞானமரபின் தத்துவ சாரத்தை முன்வைக்க வேண்டியிருக்கிறது. வழிபாடுகளும் நம்பிக்கைகளும் வெளிவிளக்கங்களே என்று கூறவேண்டியிருக்கிறது”.//
சுத்தஅறிவு சடங்குகள் அனைத்தையும் உருட்டி விபூதி, லட்டு, பஞ்சாமிர்தம், நெய் போன்ற பிரசதமாக தின்பண்டமாக மாற்றிவிட்டார்கள்.
இந்துமதம் போலிகளாலும், சுயநலவாதிகளாலும் சீரழிக்கப்படும் சூழ்நிலையில், ஒவ்வொரு இந்துவும் உங்கள் எழுத்துக்களை தவறாமல் வாசிக்கவேண்டும்.
//”ஒருவேளை வரட்டு அறிவுவாதம் மேலோங்கி உணர்வும் நெகிழ்வும் இல்லாமலாகி கலைகளுக்கு இடமில்லாத நிலை உருவாகியிருந்தது என்றால் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் முன்வைக்கவேண்டியிருக்கும்”.//
என்ன ஒரு தொலைநோக்குப்பார்வை கொண்ட சாரமான விதைபோன்ற வரிகள். அறிவுவாதத்தின் பரப்புகளை விளக்கிவிட்டு அதன் எல்லைக்கோட்டையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
கதிரேசன், ஒமன்
kthillairaj
July 26, 2010 at 8:23 pm (UTC 5.5) Link to this comment
இது எத்ததனை பேருக்கு புரியும். எல்லோருக்கும் யாரவது ஒருவர் தன் சுயங்களை இழந்து தவத்தால் உயர்ந்து வருபவரிடம் காசு கொடுத்து சுகங்களை பெற்று கொள்ளலாம் என்றே காதிருபவர்களிடம் தங்கள் உயர்ந்த கருத்துக்கள் வீண்.