பூச்சிகள் -பேட்டி

அன்பு ஜெயமோகன்,

சமீபமாய் சன் தொலைக்காட்சியின் விருந்தினர் பக்கத்தில் செல்வம் என்பவரின் நேர்காணலைக் கண்டேன். பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மிக எளிமையான தமிழில் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சிறப்பாக இருந்தன. பூச்சிக்கொல்லிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் சிலந்தி, குளவி போன்ற பூச்சிகளின் வாழ்வியல் குறித்துப் பேசினார். சிலந்தி வலை, குளவிக்கூடு போன்றவற்றின் பின்னிருக்கும் வாழ்வியல் நுட்பங்களை அவர் அழகாக விளக்கினார். மனித வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நன்மை பயக்கும் பூச்சிகள், தீமை பயக்கும் பூச்சிகள் என்று பூச்சிகளை வகைப்படுத்தியே அவர் பேச ஆரம்பித்தார்.

துவக்கத்தில் வேம்பு இலைகளையும், வேம்பு சார்ந்த கரைசல்களையுமே வேளாண்மைக்குப் பயன்படுத்தினர் என்பதில் துவங்கி தன் மொழியால் அவர் என்னை வசீகரித்துக் கொண்டே இருந்தார். மேலும், வீரிய ஒட்டு ரகங்கள் வருகையும் செயற்கை உரங்களுமே நம் மண்ணையும் பயிர்களையும் பாழ்படுத்தியதாக அவர் தெளிவாக விளக்கினார். நாம் சாப்பிடும் காய்கறிகளைப் பற்றி அவர் உதாரணங்களுடன் விளக்கியதும் சிறப்பு. கொசுக்களை விரட்டுவதைப் பற்றிய அவர் குறிப்புகளும் பயனுள்ளவை.

மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் மண்ணின் உயிர்த்தன்மை சிர்கெடுவது குறித்து அங்கலாய்த்தார். அப்போது அவர் மண்ணின் இயல்புகளை ஒரு கதைசொல்லியின் குரலில் வியந்தோதவும் செய்தார். சுவாசிக்கும், உண்ணும், இடம்பெயரும் மண்ணைப் பற்றி அவர் பேசும்போது நான் அவற்றை எனக்குள் காட்சிகளாக்கிக் கொண்டேன். மிக நல்ல இலக்கிய அனுபவமாக அவரின் நேர்காணல் எனக்குள் சேகரமாகி இருக்கிறது.

பூச்சியியல் வல்லுநர் செல்வத்தின் நேர்காணலுக்கான சுட்டி : https://www.youtube.com/watch?v=QTYInyzP2iM

முருகவேலன்

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 12
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28