சொல்வெளியும் நிலவெளியும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

சவுதியிலிருந்து சிவக்குமார், நாங்கள் குடும்பத்துடன் நலமாக உள்ளோம். உங்கள் குடும்பத்தின் நலனுக்கும் மகிழ்வுக்கும் வாழ்த்துகள்.

புத்தாண்டும் உறுதிமொழியும் கட்டுரை படித்தேன். என் கடந்தகால வாழ்வை நினைத்து சிரிப்பு வந்தது. ஓய்வு நேரங்களை டிவி பார்த்துக்கொண்டு வெட்டியாக அமர்ந்து கழித்த நாட்கள் அவை.

கடந்த வருடம் 11 புத்தகங்களை படித்தேன். அதில் நம் வெண்முரசு நாவல் வரிசையும் , ஆழிசூழ் உலகு நாவலும் முக்கியமானது.

வெண்முரசை ஒலிவடிவமாக படிக்கத்துவங்கி இருக்கிறேன். முதல் பத்து பகுதிகள் லேப்டாப்பில் பதிவு செய்தேன். அது சுமாராக வந்தது. அதன் பின் அதற்க்கான உபகரணங்களை வாங்கி பதிவு செய்ய துவங்கி இருக்கிறேன்.
வெண்முரசு தமிழை படிக்க , சமஸ்கிருத வார்த்தைகளை உச்சரிக்க சிரமமாக இருந்தது , இப்போது பரவாயில்லை.

கொஞ்ச காலம் முன்பு கல்வி பற்றிய உங்கள் மேடை உரையை கேட்டேன். அதில் ஒரு வார்த்தை வந்தது ” கல்வி கற்ற பாமரன் ” . அந்த வார்த்தை என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறது. என்னை முன்னகர்த்துகின்றது.

நானும் என் இரு நண்பர்களும் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கலாம் என மாதாமாதம் ஒரு சிறு தொகையை சேர்க்கத்துவங்கி இருக்கிறோம். அந்த அமைப்பின் மூலம் 20 கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து உண்மையான கல்வி பற்றி அவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகத்தை கொடுத்து, ஒரு ஆண்டு கல்விக்கு தேவையான பொருட்கள் மற்றும் பண உதவி செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்த அமைப்பு ஒரு பெரிய கல்விக்கூடமாக மலர வேண்டும் என்பது என் ஆசை.

எங்கள் ஆண்டு விடுமுறை ஜூன் மாதம். அதனால் விஷ்ணுபுரம் விழா, ஊட்டி இலக்கிய நிகழ்வு எதிலும் கலந்துகொள்ள முடியவில்லை. அது பெரும் இழப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. முக்கியமான விவாதங்கள் , உரைகள் ஆடியோ அல்லது விடியோ வடிவில் கிடைத்தால் எங்களைப்போன்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அன்புடன் & நன்றியுடன்

சிவகுமார்

அன்புள்ள சிவக்குமார்

முன்னரே ஒரு திட்டத்துடன் இருப்பதும் செயல்களை வகுத்திருப்பதும் நிறைவளிக்கிறது. வாழ்த்துக்கள்

இந்தவருடம் மேலும் அதிகம் வாசியுங்கள். மேலும் அதிகம் பயணம் செய்யுங்கள். சொல்வெளியும் நிலவெளியும் கலக்கவேண்டும். அதுவே நிறைவளிக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 8
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24