வாசிப்பை நிலைநிறுத்தல்…

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நீண்ட நாட்களாக தங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

இன்றுள்ள சூழ்நிலையில் நாம் பணிபுரியும் துறை சார்ந்தோ அல்லது நம் சுயம், ஆன்மிகம் குறித்த புரிதல் பொருட்டோ நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. வாசிப்பு குறித்து நிறைய திட்டமிடுகிறோம் .இவ்வளவு புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும் என்று சூளுரைத்து தொடங்குகிறோம். திட்டமிட்டபடி செயல்படுத்தி முடிக்கின்றோமா என்றல் அது கேள்விக்குறியே .

பல்வேறு காரணங்களின் பொருட்டு சில புத்தகங்களை முடிக்க முடியாமல் பாதியில் கைவிடுகிறோம். சில புத்தகங்கள் நம்மை ஆழமான மன பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. அது நம் வாசிப்பு செயலில் ஒரு தொடர்சியின்மையை எவ்வாறோ ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக இளம் பருவத்தில் இந்த மனக்கொந்தளிப்பு மிக அதிகமாக உள்ளதென நினைக்கிறேன்.

துறை சார்ந்த தொழிநுட்ப நூல்களின் வாசிப்பு ஒருபுறம் இலக்கிய நூல்களின் வாசிப்பு மறுபுறம் இவ்விரு வாசிப்புகளுக்கு இடையேயான switching மனதிற்கு ஒரு சவாலாகவே உள்ளது.

அடுத்த தடை வாசித்தவற்றை நினைவில் கொள்வது. ஒரு புத்தகத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் படித்திருப்போம் . சிறிது காலம் கழித்து அதே புத்தகத்தை மறுவாசிப்பு செய்கையில் முதலில் வாசித்த எந்த கூறுமின்றி முற்றிலும் புதியதாக தோன்றுகிறது. இது ஒருவித அச்சத்தையும் மனசோர்வையும் வெறுமையையும் அளிக்கிறது.

வாசிப்பில் இந்த தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது?

தங்கள் பதிலில் ஒரு திறப்பு ஏற்படும் என்று நம்புகிறேன் .பல முறை தங்களின் எழுத்தின் வாயிலாக அது எனக்கு நிகழ்ந்திருக்கிறது

மிக்க அன்புடன்,
மணியன்

அன்புள்ள மணியன்

இன்று நம்மையறியாமலேயே வாசிப்பு பெருகியிருக்கிறது. மும்மடங்கு வாசிக்கிறோம். தொழிலுக்காக. கேளிக்கைக்காக

ஆகவே வாசிப்பு மேம்போக்கானதாக ஆகிவிடுவதை தடுக்கமுடியாது. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாசித்தது எதுவும் நினைவில் தங்காது. வாசித்ததை ஒட்டி நீங்கள் சிந்தித்தது மட்டுமே உங்கள் நினைவில் தங்கும்

ஆகவே வாசித்ததை எழுதி, பேசி சிந்தனைகளாக ஆக்கிக்கொள்ளுங்கள். தன்னிச்சையாக சிந்தனை ஓடுவதற்குப்பெயர் சிந்தனை அல்ல. அது எண்ணம்

சிந்தனை என்பது முறைமைபப்டுத்தி மூளையில் தொகுப்பது. அதற்கு பேச்சோ எழுத்தோ தேவை. அதைச்செய்யுங்கள். ஒருநூலைப்பற்றி நீங்கள் சிந்தித்து ஒரு கட்டுரை எழுதிவிட்டால், ஒரு குறிப்பை எழுதிவிட்டால் அது உங்களுடையது. அதை நீங்கள் கடந்தும் செல்லமுடியும். அடுத்த நூலுக்கு இயல்பாகச் செல்லமுடியும்

புத்தகங்களை முடிக்காமல் விடக்கூடாது என சபதம்செய்தாலொழிய பல நூல்களை முடிக்கமுடியாதென்பது உண்மை. காரணம் மூளையில் அடைசல்

வாசித்தவற்றை சீராக சிந்தனையில், தாளில் பதிவுசெய்யத் தொடங்கினால் மூளையில் நம்பமுடியாத அளவுக்கு இடமிருப்பதை உணரமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 9