புனித துக்கம்

download

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பனிமனிதன். நான் படித்த முதல் தமிழ் நாவல். இதனால், சிறு பிள்ளையாகவே இலக்கியத்தினுள் நுழைவதாக உணர்கிறேன். இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். தங்களுக்கு எழுத வேண்டுமென்று பல நாட்களாக நினைத்துகொண்டிருந்தேன். அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்ற பயமும் தயக்கமும் என்னை தடுத்துக்கொண்டிருந்தன. நேற்று உச்ச்வழு வாசித்ததின் அனுபவத்தை எழுதியே ஆகவேண்டுமென்று எழுதினேன். தங்கள் பதில் தயக்கத்தை உடைத்து என்னை ஊக்குவித்துவிட்டது. நன்றியைக் தங்களுக்கு கூற இல்லை என்னிடம் வார்த்தைகள், நன்றி என்ற வார்த்தையை தவிர.

அக்கதையை படித்து ஏழெட்டு மாதங்களுக்கும் மேல் ஆகின்றது. ஒரு முறை தான் படித்தேன். அக்கதையின் எழுத்து நடை குறித்தோ, உயிரின் இத்தனை பெரிய தத்துவத்தை இவ்வளவு எளிதாக சுவையாக சுவாரசியமாக எழுத்துக்களால் தாங்கள் சித்தரித்திருப்பது குறித்தோ விமர்சிக்க எனுக்கு எந்தவிதமான தகுதியும் அனுபவமும் இல்லை. எனினும் அச்சிறு புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய ஓர் பேரமைதியையும் பாதிப்பையும் குறித்து நான் கூற விழைகிறேன்.

எப்போதும் எதையோ தேடிக்கொண்டே இருக்கின்றது என் மனம். காணும் கேட்கும் உணரும் ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்களை தேட முற்படுகிறது. உயிரின், பிறப்பின் காரணங்களை ஆராய்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்வு என்பது எதற்காக, எதை நோக்கிச் செல்கிறது ஏன் அவ்வாறாக செல்கிறது ஏன் ஒவ்வொருவருக்கும் அது மாறுபடுகின்றது, மாறுபடினும் அனைத்தும் ஏன் ஏதோ ஒன்றை மட்டும் நோக்கிச் செல்கிறது அது என்ன போன்ற கேள்விகள் எந்நாளும் ஓய்வதே இல்லை. கிடைக்கும் பதில்கள் அனைத்தும் ஒருபோதும் முழுமையாக கிடைத்ததில்லை. அவை பொதுவானவையாகவும் இருப்பதே இல்லை.

எந்த ஒரு சித்தாந்தத்தையும் முழுமையாக கற்றிலேன் எனினும் அவற்றை அறிந்து கொள்ள மனம் என்றுமே ஒப்புக்கொள்வதில்லை. காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் கூட அவை மாறுபவையாகவே இருக்குமென்று உறுதியாக மனம் அறைகிறது; விரக்தி அடைந்து பின் பிடியற்று உலாவுகிறது. இப்படி ஒரு மன நிலையில் பனிமனிதனின் ஓத்த சிந்தனை, அனைத்து உயிர்களும் சமம், ‘ஒரு புழுவும் நானும் ஒன்றே’ என புத்தர் கூறுவது மனதிற்குள் ஒரு பேரமைதியை பரவச் செய்கிறது.நன்றி.

அதே சமயத்தில் இவ்வாறு நம் உலகில் என்றுமே நடக்கப்போவதில்லை என்ற தீரா பெருவருத்தத்தையும் தந்து நிற்கிறது. மீண்டும் கேள்விகள் தலைதூக்குகின்றன. ஞானத் தேடல் என்ற சொல்லை விஷ்ணுபுரத்தின் மூலமாக நான் என்னுடன், எனக்கானதாகப்பொருத்திக்கொண்டேன். அந்தத்தேடல் பலவறாக இழுத்துச் செல்லினும் பாதை என்று ஒன்று எனக்கு இன்னும் கிட்டவில்லை. பாதையே கிட்டாதநிலையில் சேரும் இடம் பற்றி நினைக்கையில் மனம் பதறுகின்றது. அப்படி ஒன்று உண்டா என்றும் வினவுகின்றது. தங்கள் எழுத்துக்கள் வழியாக இலக்கியத்திற்குள் நுழைகிறேன் தேடலுடன்.
நன்றி.

– சாலினி

அன்புள்ள சாலினி

தேடலின் புனித துக்கம் என்று சுந்தர ராமசாமி இதைச் சொல்கிறார். இலக்கியம் இத்தகைய மனம் கொண்டவர்களுக்குரியது.

இது அமையாதபோதுதான் வாசிப்பின்பம் என்ற வகையிலேயே இலக்கிய ஆர்வம் நின்றுவிடுகிறது. அத்தகைய வாசிப்பு மூன்று முனைகளில் சென்று முட்டி முடியும்.

ஒன்று மிதமிஞ்சிய அறிவுவிளையாட்டு. வெறுமே உத்திகளை தந்திரங்களை ரசிப்பது. வாசிப்பை ஒரு சதுரங்கமாக ஆக்கிக்கொள்வது. அதுவரை வாசித்த பெரிய தொகுப்பை சுமந்தலைவது.

இரண்டாவது அரசியல் வாசிப்பு. உகந்த அரசியல் உகக்காத அரசியல் என ஆரம்பித்து வெறுப்பைக் கக்குவதில் முடிவது.

மூன்றாவது பாலியல் கிளர்ச்சியை மட்டுமே இலக்கியம் என நம்பிக்கொண்டிருப்பது.

உங்களுக்கு தொடக்கமே சரியாகத்தான் இருக்கிறது.வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14
அடுத்த கட்டுரைகடிதங்கள்