ஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)

111

“மனித மனமே பிரபஞ்ச அனுபவத்தை முழுமையாக அடையத் தவித்தபடியே உள்ளது. புலன்களை மீட்டி மீட்டி அனுபவங்களை ஒன்றோடொன்று கலந்து அம்முழுமையை நோக்கி அது நகர்கிறது. இந்த ஆலயமே அத்தகையதோர் முயற்சிதான். இங்கு தத்துவமும் கலையும் கவிதையும் ஒன்றாகின்றன”
(திருவடிக்கும் பீதாம்பரம் மாமாவுக்குமான உரையாடலில் ஒரு பகுதி)

சிறுவயதில் தட்டானைப் பிடித்து ஒரு கயிற்றில் கட்டி அது பறக்கும் அழகை வேடிக்கை பார்ப்போம். அதனால் ஒரு எல்லைக்கு மேல் பறக்க முடியாது. அதற்காக சோர்ந்தும் விடாது. மேலெழும்பி பறக்க முயற்சித்துக் கொண்டே இருக்கும். அதன் தவிப்பு எங்களுக்கு மகத்தான வேடிக்கையாக இருக்கும். கொஞ்ச நேரத்திலேயே அதன் தவிப்பைக் கண்டு தாளாமல் கயிற்றிலிருந்து விடுவித்து விடுவோம். வேகமாக அது பறந்து சென்று உயரமான மரத்தின் கிளையொன்றில் அமர்ந்து ஆசுவாசப்படும். அப்போது தட்டானின் தவிப்போ, ஆசுவாசமோ என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு விளையாட்டு.

கல்லூரி முடித்த நேரத்தில் அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தபோது உள்ளுக்குள் சிறுவயது தட்டான் ஞாபகத்துக்கு வந்தது. அதன் தவிப்பை அன்றுதான் என்னால் ஓரளவு விளங்கிக்கொள்ளவும் முடிந்தது. எனக்கான கிளை தெரியும்வரை ஆசுவாசம் கிட்டாது என்பதும் புரிந்தது. பாதுகாப்பு வளையத்தில் இருந்ததாக நான் நம்பியது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்பது உறைத்த பொழுதில் வாழ்வு திகைக்க வைப்பதாய் மாறத்துவங்கியது. கல்லூரிக்கல்விக்குப் பின் என் தனிப்பட்ட வணிக முயற்சிகளில் எனக்கு வெற்றியே கிட்டவில்லை. அதற்காகத் துவண்டு விடவில்லை. சில மனிதர்கள் வழி நான் பெற்றிருந்த இலட்சியவாதக்கருத்துக்களால் தொடர்முயற்சிகளை மேற்கொண்டபடி இருந்தேன். தேவையான அளவு என்னால் பொருளாதார நிறைவு பெற முடியாவிட்டாலும் போதுமானதாக இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். சமூகம் அதை ஒப்புக்கொள்ளவேயில்லை என்பது தனிக்கதை.

நான் அடைய விரும்பிய கனவுகளை அடைந்து விடலாம் எனும் இலட்சியக்குரல் வலுவிழந்து வருவதை சில ஆண்டுகளுக்குப்பின் தெளிவாகவே என்னால் உணர முடிந்த்து. ”வாழ்வு என்பது குறிப்பிட்ட இலக்கை முன்வைத்ததாக இருக்க வேண்டும்” எனும் நம்பிக்கை வாழ்வை இறுக்கமாகவே வைத்திருந்தது. முயற்சிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டாலும் தோல்விகள் ஏற்படக் காரணம் என்ன எனும் கேள்வியால் அலைக்கழிக்கப்பட்ட சமயங்களில் தட்டானின் தவிப்பு இருந்ததை இப்பொழுது உணர்கிறேன்.

வாழ்வு என்பதை நான் பகுதியாக மட்டுமே பார்த்து வந்த கோமாளித்தனத்தை முருகன் எனக்கு உணர்த்திய பொழுதில் என்னைப் பிணைத்திருந்த கயிறு முற்றிலும் அறுந்தது போலிருந்தது. விட்டு விடுதலையான தட்டானாகவும் உணர்ந்தேன். முருக வழிபாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ளத் துவங்கியபோதுதான் வழிபாடு என்பது பக்தி மட்டுமன்று என்பது புரிந்தது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த இனக்குழுவின் வாழ்முறை மரபாகி.. மரபு வழிபாடாகி.. வழிபாடு சமயமாகி.. சமயம் இன்று மதமாகியிருக்கும் தொடர்ச்சியைக் காண முடிந்தது. நாமோ இன்றைக்கிருக்கும் மதத்தை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டு கடவுள் இருக்கிறார் இல்லை என சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். வணிகத்தளத்திலும், வாழ்வியல் தளத்திலும் என்னைச் சூழ்ந்திருந்த இறுக்கம் முற்றிலும் கலைந்தது போலிருந்தது.

வேல் மயில் சேவல் மற்றும் பாம்புடன் சிலையாய் நின்ற முருகனுக்குள் பாதுகாப்பாய்ப் பேணப்பட்டிருந்த எம்முன்னோர்களின் வாழ்வைத் தொகுத்துக் கொண்ட கணம் என் வாழ்வில் அதிமுக்கியமானது. என் தந்தையின் பெயர் ஆறுமுகம். என் பெயர் சக்திவேல். முன்னோர்களின் பெயரைச் சூடும் மரபின் அடிப்படையில் முருகன் என் முப்பாட்டன் என்பதைத் தெரிந்த பொழுதில் பிறவிப்பயனின் பொருள் அறிந்தேன். அவனை முப்பாட்டன் என்பதோடு நிறுத்திக் கொள்வதிலும் ஆபத்து இருக்கிறது. கால இட எல்லைகளுக்குள் இருந்து அவற்றைக் கடந்திருக்கும் பரப்புக்கும் என்னைக் கூட்டிச் சென்றவன் முருகன். பகுத்தபடியே இருந்த என்னைத் தொகுத்துப் பார்க்கத் தூண்டியவனும் அவனே. முருகனின் சிலை எனக்குள் விரித்ததை “ஆதிமெய்ப்பொருள் > பிரபஞ்சம் > கதிரவக்குடும்பம் > உலகம் > உயிர்கள் > மனிதர்கள் > இனக்குழுக்கள் > தமிழகம் > தமிழ் > முன்னோர்கள் > வாழ்வு” என்பதாகவே முன்வைக்கிறேன். பகுத்தபடியே இருக்கச் சொல்வது அறிவின் புறம்; தொகுத்து நிறைவாவதே உணர்வின் அகம். பகுப்பது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் குறித்துக் கவலைப்பட்டபடியே இருக்கும்; தொகுப்பதோ நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இலகுவாய் இருக்கும். பகுப்பது சமூகத்துக்குப் பயன்படலாம்; தொகுத்துக் கொள்வதே தனிமனிதனுக்குப் பயன்படும். பகுப்பதை யாராவது சொல்லிக்கொடுத்துப் புரிய வைத்து விடலாம். தொகுப்பதை நீங்களேதான் செய்ய வேண்டும். விஷ்ணுபுரம் போன்ற படைப்புகள் அதற்கு நம்மைத் தூண்ட மட்டுமே செய்யும். மற்றபடி, எல்லாம் நம் கையில்தான்.

முருகனை தத்துவம் கலை கவிதை கலந்த குறியீடாகவும் என்னால் சுட்டிவிட முடியும். அவன் சொன்ன தத்துவமாக நான் கருதுவது ஞானம். ஞானத்தை புனிதச் சொல்லாகக் கருதி குருவிடம் தீட்சை பெற்றால் கிடைப்பது என மனப்பால் குடிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். யாராலும் நமக்கு ஞானத்தை வழங்கிவிட முடியாது; வேண்டுமானால் தூண்டலாம். விதை முளைத்து மரம் வளர்ந்தபின் ஏற்றுக்கொள்வது அறிவு; முளைக்காத விதையில் இருக்கும் மரத்தை கிளைகளை இலைகளை கனிகளைக் கண்டு கொள்வதே என்னைப் பொறுத்தமட்டில் ஞானம். முருகனுக்கு வருகிறேன். திருமுருகாற்றுப்படையில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுவது திருவாவினன்குடி. பழனியின் அடிவாரக் கோவில். அங்கிருக்கும் முருகன் குழந்தை வேலாயுதன். குழந்தை மனோநிலையில் இருப்பவர்களுக்கே ஞானம் கைகூடும் என்பதற்கான வடிவமாக அது எனக்குப் படுகிறது. வேலன் வெறியாட்டம் குடைக்கூத்து துடிக்கூத்து குன்றக்குரவை காவடியாட்டம் மயிலாட்டம் போன்ற கலைகளாகவும் அவனைக் காண்கிறேன். “மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்” எனும் அருணகிரிநாதனின் வரிகளில் அவனைக் கவிதையாகக் காண்கிறேன்.

’முழுமை’ ஒவ்வொரு கணத்திலும் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அதை அடையப்போராட வேண்டியதில்லை. கொஞ்சம் ’பகுதி’களிலிருந்து விடுபட்டாலே போதும். ”எங்கும் நிறைந்திருப்போன் / எட்டியும் எட்டாதிருப்போன்” எனும் வரிகள் அதையே உணர்த்தி நிற்கின்றன.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 18
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 3