பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று NDTV ஊடகத்தில் வந்த இந்த செய்தியை படித்தேன் .மிகுந்த வியப்பாகவும்,நம்புவதற்கு தயக்கமாகவும் இருக்கிறது.200 வருடங்கள் கடந்த நிலையிலும் அவர் கால மாற்றத்தால் அவ்வளவு பாதிப்படையவில்லை எனவும்,அவர் குறிப்பிட்ட வகை தியானத்தில் இருந்தார் (இருக்கிறார்?)என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல்.
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி
அது தியானமெல்லாம் இல்லை. புராதனமான பாடம்செய்யும் முறை. அதைப்பற்றி விரிவாகவே விஷ்ணுபுரத்தில் வருகிறது. பவதத்தரின் உடல் இதேபோல பாடம்செய்யப்பட்ட நிலையில் ஆலயத்தின் கருவறையில் அமர்ந்திருக்கிறது. அதற்கு நகம் கூட வளர்வதாகவும் அவர் இறக்காமல் யோகநிஷ்டையில் இருப்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது
ஆந்திராவில் பாலயோகி என்பவர் அப்படி இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு.
ஜெ