‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28

பகுதி 7 : மலைகளின் மடி – 9

ஷீரவதிக்கு அப்பால் இருந்த சரிவில் இருந்தது அந்த சிறிய கல்வீடு. தொன்மையானது என்று தெரிந்தது. மலைச்சரிவின் கற்களைத் தூக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. அந்தமலைப்பகுதிகளில் அமைக்கப்படும் மிகச்சிறந்த இல்லங்களில் ஒன்று அது. மலையின் சரிவில் இருந்த வெட்டுப்பள்ளம் போன்ற இடைவெளியில் அமைந்திருந்தது அது. சரிவில் ஒரு பெரும் பாறை உருண்டு வந்தால்கூட அந்த வீட்டின்மேல் உருண்டு கீழே சென்றுவிடுவதை அறியாமல் வீட்டுக்குழந்தைகள் துயிலமுடியும். மேலிருந்து இறங்கிவரும் பனியும் அந்த வீட்டின்மேல் சரிந்து அதற்கு கூரையாகவே அமையும்.

அங்கே சுவர்கள் எந்த அளவுக்கு பருமனான கற்களால் அமைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இல்லம் சிறந்தது. ஆகவே மேலிருந்து பெரும்பாறைகளை உருட்டிக்கொண்டுவந்து அமைத்து அந்தச் சுவர்களை கட்டுவார்கள். உருளைக்கற்களை கொண்டு சாய்வான பாதை ஒன்றை வீட்டுக்கூரைவரைக்கும் அமைத்துக்கொள்வதும் உண்டு. தடித்த சுவர்களுக்குமேல் தேவதாருவின் பெருமரங்களைப் பரப்பி அதன்மேல் மூன்றடி உயரத்துக்கு தேவதாருவின் சுள்ளிகளை செறிவாக அடுக்கி அதன்மேல் மண்போட்டு மெழுகி மூடியிருந்தனர். கூரைமண் மழைநீரில் கரையாமலிருக்க அதில் புல்வளர்க்கப்பட்டிருந்தது. அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த புகைக்குழல்வழியாக நீலநிறப்புகை எழுந்து புல்வெளியில் பரவியது

அவர்களின் புரவிகளைக் கண்டதும் அந்த இல்லத்தின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த தடித்த கம்பளியாடை அணிந்த ஏழு சிறிய குழந்தைகள் ஒன்றாகக் கூடி நின்று நோக்கின. வீட்டின் மேல் ஏறிச்சென்ற மலைச்சரிவில் செம்மறியாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இரு பெண்கள் கைகளை நெற்றியில் வைத்து நோக்கியபடி அவர்களை நோக்கி வந்தனர். அருகே வந்தபின்னர்தான் அவர்கள் மிக இளையோர் என தெரிந்தது. அவர்களின் உயரமும் பெரிய உடலும்தான் முதியவர்கள் என எண்ணச்செய்தது.

வீட்டுக்குள் இருந்து பேருருவம் கொண்ட கிழவி கையில் மண்கலத்துடன் வெளியே வந்து அவர்களை நோக்கி கையசைத்து அழைத்தாள். மரவுரி ஆடை மட்டுமே அணிந்திருந்தாள். அவள் கைகள் ஒவ்வொன்றும் பருத்த அடிமரங்கள் போலிருந்தன. கரிய புருவங்களும் நீண்ட மூக்கும் பச்சைநிறமான விழிகளும் கொண்டிருந்தாள். கழுத்தின் கீழ் தாடை பல மடிப்புகளாக தொங்கியது.

அவர்கள் அருகே சென்றதும் கிழவி “சூடான பாலும் அப்பமும் அருந்திவிட்டு எங்கள் குடியை வாழ்த்துங்கள்” என்றாள். அவள் தலை புரவிமீதிருந்த அவன் தொடைக்குமேல்உயரமிருந்தது. பூரிசிரவஸ் இறங்கிக்கொள்ள சகன் புரவிகளை பற்றிக்கொண்டு மேலே கொண்டுசென்றான். அவற்றின் சேணங்களைக் கழற்றி கடிவாளங்களை ஒன்றோடொன்று கட்டி மேயவிட்டான். பூரிசிரவஸ் கிழவியின் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் வாழ்த்துக்களைப் பெறுவது என் நல்லூழ் அன்னையே” என்றான். ”இல்லத்திற்குள் வருக!” என்றாள் கிழவி.

பூரிசிரவஸ் தன் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான். மரப்பலகை போடப்பட்ட தரையில் புல்பரப்பி மேலே கம்பளியையும் விரித்திருந்தனர். இல்லத்தின் நடுவே கணப்பு கனன்றுகொண்டிருந்தது. அதிலிருந்து புகைக்குழாய் எழுந்து சென்றது. கணப்பைச்சுற்றி அமரவும் படுக்கவும் உகந்த சேக்கைகள். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டதும் கிழவி கொதிக்கும் நீரில் முக்கிய மெல்லிய மரவுரியை கொண்டுவந்து தந்தாள். அதை வாங்கி அவன் முகத்தை துடைத்துக்கொண்டான்.

சகன் அவர்கள் கீழே இருந்து கொண்டுவந்த உப்புக்கட்டிகள், உலர்ந்த பழங்கள், வெல்லக்கட்டிகள் அடங்கிய தோல்பையுடன் வந்தான். பூரிசிரவஸ் அதை வாங்கி கிழவியின் முன் வைத்து “என்னை வாழ்த்துக அன்னையே! நான் பால்ஹிகபுரியின் இளவரசன் பூரிசிரவஸ். தங்களைக் காணவே வந்தேன்” என்றான்.

கிழவி முகம் மலர்ந்து பொதியைப்பிரித்து ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தபடி “மகிழ்ச்சி… நீடூழி வாழ்வாய்!” என்றாள். வெளியே இருந்து இரு இளம்பெண்கள் உள்ளே வந்தனர். ஒருத்தி கையில் மஞ்சள்சரடு கட்டியிருந்தாள். அவர்கள் இருவரும் அவனை விட உயரமானவர்களாக இருந்தனர். அவர்களின் கைகளைத்தான் அவன் மீண்டும் மீண்டும் பார்த்தான். மிகப்பெரிய வெண்ணிறமான கைகள். நீண்ட விரல்கள்.

“அவள் பெயர் ஹஸ்திகை” என்றாள் கிழவி சரடு கட்டப்பட்டவளை சுட்டிக்காட்டி. “அவளைத்தான் பிதாமகர் மணந்துகொண்டார். இந்த பனிக்காலத்தில் அவளுக்கு பதினேழு வயதாகிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவளுக்குரிய கணவனை தெய்வங்களே தேடிவரச்செய்தன.” சுருக்கங்கள் அடர்ந்த கண்களை இறுக்கியபடி அவள் சிரித்தாள். “உன் மூத்தவர் இருவரையும் வணங்கு. அவரது வாழ்த்துக்களால் நீ நிறைய குழந்தைகளை பெறுவாய்!”

ஹஸ்திகை அவர்கள் இருவர் முன்னால் வந்து மண்டியிட்டு வணங்க அவன் அவள் நெற்றியைத் தொட்டு “நலம் திகழ்க!” என்று வாழ்த்தியபின் தன் கையிலிருந்த விரலாழி ஒன்றை எடுத்து அவளுக்கு அளித்து “இது உன் மூத்தானின் பரிசு. உன் குழந்தைகளுக்கெல்லாம் நான் மாதுலன்” என்றான். அவள் பச்சைக்கண்கள் ஒளிர புன்னகைசெய்தாள். செந்நிற ஈறுகளில் வெண்பற்கள் ஈரமாக ஒளிவிட்டன. சகனும் ஒரு பொன்நாணயத்தை அவளுக்கு அளித்து வாழ்த்தினான்.

பரிசுகள் ஹஸ்திகையை பூரிக்கச் செய்தன. கண்களை இடுக்கிச் சிரித்தபடி இன்னொருத்தியை பார்த்தாள். சற்று இளையவளான அவள் பரிசுகளைப் பிடுங்கி திருப்பித்திருப்பி பார்த்தாள். “அவள் பெயர் பிரேமை. இவளைவிட ஒருவயது குறைந்தவள்.” பூரிசிரவஸ் “இவளுக்குத் தங்கையா?” என்றான். “இல்லை, இவள் தமையனின் மகள் அவள். இவள் என்னுடைய மகள். எனக்கு ஏழு மைந்தர். பிரேமை என் முதல் மைந்தனின் மகள். என் பெயர் விப்ரை” என்றாள் கிழவி.

அந்தப் பெரிய அறைக்கு அப்பாலிருந்த சிறிய அறை அடுமனை என்று தெரிந்தது. பிரேமை உள்ளே சென்று அடுப்பில் கலத்தை தூக்கி வைத்தாள். மிகப்பெரிய கலத்தை விளையாட்டுச்செப்பு போல அவள் கையாண்டாள். மூங்கில் குழாயால் ஊதும் ஒலி கேட்டது.

“கீழே நிலத்தில் இருந்து பிதாமகர் வேட்டைக்குப் போகும் வழியில் இங்கே வந்தார். எங்கள் இல்லத்தின் சுவரிலிருந்து கீழே விழுந்து கிடந்த பாறை ஒன்றைத் தூக்கி மேலே வைத்தார்” என்றாள் கிழவி “இந்த இல்லத்தைக் கட்டியபோது அந்தப்பாறையை அவர்தான் மேலே தூக்கி வைத்திருக்கிறார். நான் அப்போது இல்லை. என் அன்னை சிறுமியாக இருந்தாள் என்றார். என் அன்னையின் தந்தை வாகுகரை பிதாமகருக்கு தெரிந்திருக்கிறது.” ஹஸ்திகையைப் பார்த்தபடி “இவள் நல்லூழ் கொண்டவள். நூறு யானை ஆற்றல்கொண்ட உண்மையான பால்ஹிகர்களை பெறப்போகிறாள். எங்கள் இளையோர் ஏழுபேர் சேர்ந்தாலும் அந்தப்பாறையை அசைக்க முடியாது. இந்த மலையிலேயே அவருக்கிணையான ஆற்றல்கொண்டவர் இல்லை.”

ஹஸ்திகை நாணத்தால் முகம் சிவந்து பார்வையைத் திருப்பி உதடுகளை கடித்துக்கொண்டாள். பூரிசிரவஸ் புன்னகை செய்தான். ”அவருடன் இவள் காமம் நுகர்ந்ததைப்பற்றி சொன்னாள். இவளுக்கு முதலில் அச்சமாக இருந்ததாம். பின்னர் அவர் பழகிய கரடியைப்போல என்று புரிந்துகொண்டாளாம்.” ஹஸ்திகை மகிழ்ச்சியில் கண்கள் பூத்து அவனைநோக்கி சிரித்தாள். “வாழ்க!” என்று பூரிசிரவஸ் வாழ்த்தினான். “என் அன்னையின் தந்தை உண்மையான பால்ஹிகர். அதன்பின் இதுவரை உண்மையான பால்ஹிகர்கள் இந்த மலைப்பகுதிக்கு மணம் கொள்ள வரவில்லை.” ஹஸ்திகை மகிழ்ச்சி தாளமுடியாமல் தோள்குலுங்க சிரிக்கத் தொடங்கினாள்.

பிரேமை பெரிய கலத்தில் கொதிக்கச்செய்த பாலையும் மூங்கில்தாலத்தில் சுட்ட அப்பங்களையும் கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்தாள். அடுப்பில் உலர்ந்த இறைச்சிநாடாவைப்போட்டு சுடத்தொடங்கினாள். அந்த இல்லம் எத்தனை சிறந்தது என்று பூரிசிரவஸ் கண்டான். ஊன்மணம் அறைகளை நிறைத்தது. ஆனால் சற்றும் புகை மூடவில்லை. மலைப்பகுதிகளுக்கே உரிய பசி உணவை சுவைமிக்கதாக்கியது. அப்பங்களையும் ஊனையும் தின்றுகொண்டிருந்தபோது கிழவியிடம் பால்ஹிகர் யார் என்று சொல்லலாமா என்று அவன் எண்ணினான். ஆனால் அவளால் அதை புரிந்துகொள்ளமுடியாது என்று தோன்றியது.

பிரேமை வந்து அவன் அருகே அமர்ந்துகொண்டு கால்கள் மேல் கம்பளியை இழுத்து போர்த்துக்கொண்டாள். “நீங்கள் கீழே நிலத்தில் இருந்தா வருகிறீர்கள்?” என்றாள். “ஆம்” என்றான். “நான் சென்றதில்லை. ஆனால் ஒரே ஒருமுறை கீழே பார்த்திருக்கிறேன். மிகச்சிறியது” என்றாள். “அதற்கு அப்பால் மலை. அதற்கு அப்பால் அஸ்தினபுரி இல்லையா?” பூரிசிரவஸ் வியப்புடன் ”ஆம்” என்றான். “அஸ்தினபுரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” பூரிசிரவஸ் “இல்லை” என்றான். ”மிகப்பெரிய நகரம்… அதன் கோபுரங்கள் வானத்தை முட்டிக்கொண்டிருக்கும்” என்று அவள் கைகளைத் தூக்கினாள். “மலைகளைப்போல”

“ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “அங்கேதான் திரௌபதி இருக்கிறாள். மிகப்பெரிய அழகி” என்றாள் பிரேமை. “நீங்கள் அவளை பார்த்ததுண்டா?” பூரிசிரவஸ் சிரித்தபடி “ஆம்” என்றான். அவள் பரபரப்புடன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு “மிகப்பெரிய அழகியா? வெண்பனி போல இருப்பாளா?” என்றாள். பூரிசிரவஸ் கண்களில் சிரிப்புடன் “இல்லை, ஈரமான கரும்பாறை போல இருப்பாள்” என்றான். அவள் விழிகளை மேலே உருட்டி சிந்தனைசெய்து “ம்ம்” என்றாள். “தெய்வங்களைப்போல தோன்றுவாள்.”

அவள் உதட்டைச் சுழித்து “அவர்களெல்லாம் ஏராளமான அணிகளும் பட்டாடையும் வைத்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அதெல்லாம் இருந்தால் நானும்கூடத்தான் அழகாக இருப்பேன்” என்றாள். பூரிசிரவஸ் “அவை இல்லாமலே நீ அழகுதான்” என்றான். அவள் ஐயமாக தலையை சரித்து நோக்கி “உண்மையாகவா?” என்றாள். ”ஆம்” என்றான். சகனிடம் “உண்மையா? என்றாள். சகன் சிரித்து “அவர் பொய்சொல்லவில்லை இளையவளே. நீ அழகிதான்” என்றான். அவள் துள்ளி பூரிசிரவஸ்ஸின் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு “என்னிடம் யாருமே சொன்னதில்லை” என்றாள். “நான் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவள் சிரித்துக்கொண்டு திரும்பி ஹஸ்திகையிடம் “கேட்டாயா? நான் அழகி என்கிறார்” என்றாள். ஹஸ்திகை “உனக்கு அவர் பரிசுகள் தருவார். கேட்டுப்பார்” என்றாள். அவள் திரும்பி அவனிடம் “எனக்கு என்ன பரிசு அளிப்பீர்கள்?” என்றாள். பூரிசிரவஸ் தன் இன்னொரு விரலாழியை எடுத்து அவளுக்கு கொடுத்தான். உவகைக்கூச்சலுடன் அதை வாங்கி அவள் புரட்டிப்புரட்டிப் பார்த்தாள் எழுந்தோடி ஹஸ்திகையிடம் கொண்டுசென்று காட்டினாள். “எனக்கு… எனக்கு கொடுக்கப்பட்டது” என்றாள்.

அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். சிவந்த பெரிய உதடுகள். இளநீலநிறமான விழிகள். உருண்ட கன்னம் குளிரால் சிவந்து உலர்ந்திருந்தது. பெரிய உடலுக்கு மாறாக மிகச்சிறிய காதுமடல்கள். அவற்றில் ஏதோ செந்நிறமான காட்டுவிதையை அணிந்திருந்தாள். கழுத்திலும் செந்நிறக் காட்டுவிதைகளை கோர்த்துச் செய்த மாலை. வேறு அணிகளே இல்லை. சகன் மெல்ல “இளவரசே, அது முத்திரைமோதிரம்” என்றான். பூரிசிரவஸ் அவனை நோக்கியபின் தலையசைத்தான்.

சகன் அவனிடம் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் இளவரசே” என்றான். அந்த சேக்கையில் பரவியிருந்த வெம்மையும் வெளியே ஓசையிட்ட காற்றும் அவனிடம் துயில்க என்று ஆணையிட்டன. “ஆம், சற்றுநேரம் விழிமூடுகிறேன்” என்றபடி அவன் கால்களை நீட்டிக்கொண்டான். கம்பளிப்போர்வையை ஒற்றன் அவன் மேல் தூக்கிப்போட்டான். அது நனைந்ததுபோல எடையும் குளிரும் கொண்டிருந்தது.

அவன் உடலை அசைத்து வெப்பத்தை உண்டுபண்ணி அதற்குள் நிறைக்க முயன்றான். கண்களை மூடிக்கொண்டு முந்தையநாள் இரவில் அவனை மீண்டும் மீண்டும் சூழ்ந்த கனவை எண்ணிக்கொண்டான். மலைகள் மெல்ல எழுந்து வந்து சூழ்வதுபோல . கடும்குளிரான மூச்சு வந்து உடலைச்சூழவது போல.

பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது இருட்டு வரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் இருட்டாவதை பார்க்கமுடியவில்லை. மலைச்சரிவை வகுந்து சென்ற மலைநிழல் மறைந்தது. பின்னர்தான் மொத்த மலைச்சரிவும் நிழலாக ஆகிவிட்டதென்று புரிந்தது.

அவன் எழுந்து அமர்ந்து முகத்தை துடைத்துக்கொண்டு வாயில்வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். மிகமெதுவாக வடக்கிலிருந்து மூடுபனி இறங்கிவந்து அந்நிலப்பகுதியை முழுமையாகவே மூடிக்கொண்டது. ஹஸ்திகையும் பிரேமையும் ஆடுகளை தொகுத்துக்கொண்டுவந்தார்கள். அவற்றின் ஒலிகள் வெண்ணிற இருளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன. அவை இல்லத்தை கடந்துசெல்லும் குளம்போசை கூழாங்கற்கள் உருள்வதுபோல கேட்டது.

ஆடுகள் கடந்துசென்றதை உணர்ந்த பூரிசிரவஸ் “எங்கே செல்கிறார்கள்?” என்றான். “பட்டிகளுக்கு. அங்கே…” என்றாள் விப்ரை. “மலைச்சரிவில்தான் பட்டிகள் இருக்கின்றன.” ”நான் பார்த்துவிட்டு வருகிறேன்…” என அவன் எழுந்தான். நெடுநேரமாக உள்ளேயே அமர்ந்திருந்து கால்கள் கடுத்தன. “அங்கே” என்று விப்ரை சொன்னாள். ”நான் ஒலிகளை பின்தொடர்ந்தே செல்கிறேன்” என்றபடி அவன் வெளியே வந்தான்.

வெண்மூட்டத்திற்குள் ஒலிகள் மிக அண்மையில் என கேட்டன. நீர்போல பனிப்புகை காதுகளையும் அழுத்தி மூடியிருந்தமையால் ஒலிகளை உடலால் கேட்பதுபோல தோன்றியது. காலணிகளை அணிந்துகொண்டு அவன் தொடர்ந்து சென்றான். பஞ்சுபோன்ற வெளியில் கைகளை அசைத்துச் சென்றபோது நீந்திச்செல்வதாக உணர்ந்தான்.

அப்பால் கூச்சல்களும் சிரிப்பும் கேட்டன. எதிர்ப்பக்கமிருந்தும் ஆடுகளுடன் பலர் வருவதை உணரமுடிந்தது. அந்தக் குடியில் ஏராளமான மைந்தர்களும் மகளிரும் உள்ளனர் என எண்ணிக்கொண்டான். மலைச்சரிவுக்கு அப்பால் ஒரு கொட்டகை இருப்பது தெரிந்தது. அவன் அருகே சென்றுகொண்டிருந்தபோதே மேலிருந்து குளிர்ந்த காற்று அவனுடைய கம்பளியாடையை ஊடுருவி ஊசிகளாக குளிரை உள்ளே இறக்கியபடி கடந்துசென்றது. பனிப்புகை இழுபட்டபடியே சென்று காட்சி துலங்கியது.

எடையற்ற மெல்லிய மரப்பட்டைகளை இணைத்து இணைத்து கூரையிடப்பட்ட பெரிய கொட்டகை. அத்தகைய கொட்டகைகளை பலமுறை பார்த்திருந்தபோதிலும் அதை அமைத்திருக்கும் விதம் அப்போதுதான் வியப்பூட்டியது. சிறிய அலகுகளாக இணைத்துக்கொண்டே செல்லக்கூடிய அமைப்புகொண்டிருந்தது. ஒவ்வொரு மரப்பட்டையும் ஒன்றுடன் ஒன்று சிறிய மூங்கிகளால் இணைக்கப்பட்டு மண்ணில் நாட்டப்பட்டிருதது. தேவையானபடி விரிவாக்கலாம். கழற்றி அடுக்கி கொண்டுசெல்லலாம்.

உடன்பிறந்தார் என முகமே சொன்ன பன்னிரு சிறுவர்களும் ஏழு பெண்களும் அங்கே இருந்தனர். அனைவரும் கம்பளி அணிந்து தலையணி போட்டிருந்தனர். குளிரில் வெந்த முகங்கள். நான்கு ஆண்கள் ஆடுகளை ஒவ்வொன்றாக எண்ணி உள்ளே அனுப்பினர். அவன் வருவதைக்கண்டு அனைவரும் திரும்பி அவனை நோக்க ஒரு பெண் கைசுட்டி அவனைக்காட்டி ஏதோ சொன்னாள். அவள் இல்லத்துக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.

அவர்களில் மூத்தவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. என்பெயர் கலன். மூத்தவன்” என்றார். ”என் தந்தையும் மூன்று இளையோரும் தூமவதிக்கு அருகே ஆட்டுப்பட்டி போட்டிருக்கிறார்கள். அவரது தந்தையும் எனது இரு மைந்தரும் அதற்கும் அப்பால் சத்ராவதியின் கரைக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வர பலநாட்களாகும். தங்களை சந்திக்கும் பேறு அவர்களுக்கு அமையவில்லை.” பூரிசிரவஸ் அவருக்குத் தலைவணங்கி முறைமைசெய்தான்.

“எத்தனை ஆடுகள் உள்ளன?” என்றான் பூரிசிரவஸ். “நாநூற்றி முப்பத்தாறு ஆடுகள் இங்குள்ளன. அவர்களுடன் அறுநூற்றெட்டு” என்றார் கலன். ஆடுகளெல்லாம் முடிவெட்டப்பட்டு சிறியதாக இருந்தன .அதை நோக்கிவிட்டு அவர் “சற்று முன்னர்தான் முடிவெட்டினோம். நாங்கள் வெட்டுவதில்லை. கீழிருந்து வணிகர்கள் முடிவெட்டுபவர்களை கூட்டிவருவார்கள். இந்தமுறையும் சிறந்த ஈடு கிடைத்தது. நிறைய ஊனும் கொழுப்பும் வெல்லமும் உப்பும் சேர்த்துவிட்டோம். குளிர்காலம் மகிழ்ச்சியாக செல்லும்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.

“குளிர்காலத்தில் நாங்கள் மைந்தருடன் மகிழ்ந்திருப்போம். விழித்திருக்கும் நேரமெல்லாம் கதைகள்தான் பாடுவோம். இம்முறை நூறுகதைகளை நான் கற்றுவந்திருக்கிறேன். கீழே ஊரில் இருந்து. போரின் கதைகள். நாககன்னியின் கதைகள்.” கண்களை இடுக்கியபடி கலன் சிரித்தார்.

“இக்குளிர்காலத்தில் எங்களுடன் பிதாமகரும் இருப்பார் என்று சொன்னார். அது மேலும் உவகை அளிக்கிறது. குளிர்காலம் முடியும்போது குடியில் மேலும் ஒரு குழந்தை வந்துவிடும்” என்றான் அவர் அருகே நின்ற இளையவன். பிறர் புன்னகைசெய்தனர்.

“இங்கே ஆடுகளை விட்டுவிடுவீர்களா?” என்றான் பூரிசிரவஸ். “எப்படி முடியும்? வசந்தம் முடிந்துவிட்டது. ஓநாய்கள் குட்டி போடும் காலம். பசிவெறிகொண்ட அன்னை ஓநாய்கள் மலைச்சரிவெங்கும் அலையும். இரவெல்லாம் பந்தங்களுடன் நான்குமுனையிலும் நால்வர் இங்கே காவலிருப்போம்.”

இளையவன் “பகலில் ஆடுகளை விட்டுவிட்டு முறைவைத்து துயில்வோம்” என்றான். “போதிய அளவுக்கு புல்லை சேர்த்துக்கொண்டால் குளிர்காலத்தில் இவற்றை தக்க வைத்துக்கொள்ள முடியும். குளிர்காலத்தில் இவை குறைவாகவே உண்ணும்…” ஆடுகளை உள்ளே கொண்டுவந்ததும் பட்டியை மரப்பலகைகளால் மூடினர். உள்ளே இருந்த பெரிய குழியில் விறகு அடுக்கி அதில் அரக்கைப்போட்டு கல்லை உரசி தீ எழுப்பினர். ஆடுகள் நெருப்பை அணுகி ஆனால் பொறி மேலே விழாதபடி விலகி நின்றன. பின்னால் நின்ற ஆடுகள் முட்டி முட்டி முன்னால் சென்றன. அவற்றின் குரல்கள் எழுந்து சூழ்ந்து ஒலித்தன.

“நான் அஸ்தினபுரியைப்பற்றி பதினேழு கதைகளை கற்றேன்” என்றார் கலன். “அஸ்தினபுரியில் பாண்டவர்கள் முடிசூடிவிட்டனரா?” என்றான் இளையவன். பூரிசிரவஸ் புன்னகையுடன் “இல்லை” என்றான். “அவர்களுக்குத்தான் மணிமுடிக்கு உரிமை என்றார் தென்திசை வணிகர் ஒருவர். அவர்களிடமிருந்து மணிமுடியைக் கவர விழியற்ற அரசர் முயல்கிறார் என்றார். உண்மையா?” பூரிசிரவஸ் புன்னகையுடன் “இருக்கலாம். அங்கே அதிகாரப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். கலன் “விழியிழந்தவர்கள் தீயவர்கள்” என்றார்.

“யாதவகிருஷ்ணனின் நகரத்தைப்பற்றியும் அறிந்தோம். அதை தூய பொன்னாலேயே செய்திருக்கிறாராம். அங்கே சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் மணிகளின் ஒளியால் இரவிலும் நீலநிறமான ஒளியிருக்கும் என்றார்கள்” என்றான் இன்னொரு இளையவன். பூரிசிரவஸ் “நான் பார்த்ததில்லை. ஆனால் அங்கே நிறைய செல்வம் குவிவதாக சொன்னார்கள்” என்றான். “நிறைய செல்வம் தீமை மிக்கது” என்றார் கலன். நான்கு முனைகளிலும் சிறுவர்கள் தீ பொருத்தினர்.

“குளிரில் எப்படி துயில்வீர்கள்?” என்றான் பூரிசிரவஸ். “குளிரும். ஆனால் இது கோடைகாலமல்லவா? கம்பளிகள் வைத்திருக்கிறோம். நெருப்பும் இருக்கிறது” என்றார் கலன். ”இரவில் கதைகளை சொல்வோம். நேற்று நான் பாஞ்சாலியின் மணநிகழ்வு பற்றிய கதையை சொன்னேன். அந்த மாபெரும் வில்லின் பெயர் கிந்தூரம். அதற்கு உயிருண்டு. பாதாளநாகமான கிந்தூரிதான் பாஞ்சாலனின் வைதிகர்களால் வில்லாக ஆக்கப்பட்டிருந்தது.” பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

இருட்டு சூழ்ந்துகொண்டது. பனிப்படலமும் இருட்டாக ஆகியிருந்தது. நெருப்பைச்சுற்றி அது பொன்னிற வட்டமாக தெரிந்தது. அதில் பொற்துகள்களாக நூற்றுக்கணக்கான பூச்சிகள் சுழன்று பறந்தன. அப்பால் மலையுச்சிகள் மட்டும் செம்பொன்னொளியுடன் அந்தரத்தில் மணிமுடிகள் போல நின்றன. அவன் திரும்பி நடந்தான்.

சிறுவர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். ஒருவன் “உங்களுக்கு பாடத்தெரியுமா?” என்றான். “இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவன் ஏமாற்றத்துடன் “நீங்கள் இளவரசர் என்று இவன் சொன்னானே?” என்றான். ”என் தமையன் பாடுவார்” என்றான் பூரிசிரவஸ். “நான் குழலிசைப்பேன்” என்றான் அவன். இன்னொருவன் “நீங்கள் வளைதடி எறிவீர்களா?” என்றான். பூரிசிரவஸ் ”இல்லை” என்றான். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தயங்கினார்கள். ஒருவன் “நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றான்.

“வில்லில் அம்பு தொடுப்பேன்” என்றான் பூரிசிரவஸ். ”வில் கையில் இல்லாவிட்டால்? அப்போது ஓநாய் உங்களை தாக்கவந்தால்?” என்றான் முதல் சிறுவன். “நீ என்ன செய்வாய்?” என்றான் பூரிசிரவஸ். “என்னிடம் கவண் உள்ளது” என்று சொல்லி தூக்கிக் காட்டினான். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சரி, நான் உன்னை தாக்கவந்தால் என்ன செய்வாய்?” என்றான். “கவண்கல் உங்கள் மண்டையை உடைக்கும்” பூரிசிரவஸ் புன்னகையுடன் “என்னை கல்லால் அடி பார்ப்போம்” என்றான்.

சிறுவன் தயங்கினான். “அடி” என்றான் பூரிசிரவஸ். அவன் சற்று தள்ளி நின்று எதிர்பாராத கணத்தில் தன் ஆடையிலிருந்து கல்லை எடுத்து கவணில் வைத்து செலுத்தினான். பூரிசிரவஸ் மிக இயல்பாக வளைந்து அதை தவிர்த்தான். அவன் திகைத்து வாய் திறந்தான். “மீண்டும் அடி” என்றான். அவன் அடித்த அடுத்த கல்லையும் பூரிசிரவஸ் தவிர்த்தான். “முடிந்தவரை விரைவில் முடிந்தவரை கல்லால் அடி” என்றான். கற்கள் அவனை குளவிகள் போல கடந்து சென்றன.

சிறுவன் வியந்து கவண் தாழ்த்தி “நீங்கள் மாயாவி” என்றான். பூரிசிரவஸ் “இல்லை, இதுதான் வில்வித்தையின் முதன்மைப்பாடம். அம்புகள் என்மேல் படக்கூடாதல்லவா?” என்றான். “எனக்கும் இதை கற்றுத்தர முடியுமா?” என்றான். “ஏன்? நீ ஆடுமேய்ப்பதற்கு கவண்கல்லே போதுமே” என்றான். “நான் கீழே வந்து போர் செய்வேன்.” பூரிசிரவஸ் அவன் தலையைத் தொட்டு “போர்செய்யாமல் வாழ்பவர்கள்தான் விண்ணுலகு செல்லமுடியும்” என்றான்.

ஒரு சிறுமி அவன் அருகே வந்து “எனக்கும் கணையாழி தருவீர்களா?” என்றாள். “என்னிடம் வேறு கணையாழி இல்லையே. திரும்பி வரும்போது தருகிறேன்” என்றான். “நீங்கள் திரும்பி வரும்போது நான் பெரிய பெண்ணாக இருப்பேன். அப்போது நான் உங்களுடன் இரவு படுத்துக்கொள்வேன்” என்றாள். அவன் அவள் தலையைத் தொட்டு “யார் சொன்னது இதை?” என்றான். “நீங்கள் பிரேமை அத்தைக்கு விரலாழி கொடுத்தீர்கள். அவள் இன்று உங்களுடன் காமம் துய்க்கப்போகிறாள்.”

பூரிசிரவஸ் நெஞ்சு அதிர்ந்தது. சில கணங்களுக்குப்பின் “யார் சொன்னது?” என்றான். “இவள்தான் வந்து சொன்னாள். ஆகவேதான் பிரேமை அத்தை நீராடி கூந்தலில் அரக்குப்புகை போடுகிறாள்.” பூரிசிரவஸ் தன் கால்கள் தளர்ந்து நிற்கமுடியாதவன் ஆனான். பெண்குழந்தைகள் ஆவலாக அவனருகே வந்தன. “பிரேமை அத்தைக்கு உங்கள் குழந்தை பிறக்கும்போது அதுவும் இளவரசராகவா இருக்கும்?” என்றாள் ஒரு சிறுமி. “ஆம்” என்றான். “பெண்குழந்தை என்றால்” “இளவரசி” என்றான் பூரிசிரவஸ்.

அவர்கள் குடிலுக்கு வந்தபோது குடிலுக்குள் முன்னரே குழந்தைகள் நிறைந்திருந்தனர். அவர்களும் உள்ளே நுழைந்தனர். சகன் “இளவரசே, நான் பட்டியில் அவர்களுடன் இருக்கிறேன்” என்றான். பூரிசிரவஸ் ஏதோ சொல்ல “எனக்கு இக்குளிர் நன்கு பழகியதுதான்” என்றபடி அவன் பெரிய கம்பளிப்போர்வையுடன் வெளியே சென்றான். வீட்டுக்கதவுகளை மூடினார்கள். உள்ளே கனலின் செவ்வொளி மட்டும் நிறைந்திருந்தது. அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்துகொண்டார்கள். ஆடுகள் போல முட்டிமோதி நெருப்பருகே சென்றனர்.

ஹஸ்திகை உள்ளிருந்து அப்பங்களை சுட்டுப்போட விப்ரை அவற்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் அதை கீழே வைப்பதற்குள் பாய்ந்து எடுத்துக்கொண்டனர். “விருந்தினருக்கு… விருந்தினருக்கு” என்று விப்ரை கூவிக்கொண்டே இருந்ததை எவரும் செவிமடுக்கவில்லை. ஏதோ விலங்கை வேட்டையாடி கொண்டுவந்திருந்தனர். அந்த ஊனைச் சுட்டு கொண்டுவந்தபோது தீயில் போட்டதுபோல அது ஆடிய கைகளில் விழுந்து மறைந்தது.

“என்ன ஊன் அது?” என்றான் பூரிசிரவஸ். “காட்டுப்பூனை… பெரியது” என்றாள் விப்ரை. ”பொறியில் சிக்கியது. நீங்கள் அஞ்சவேண்டாம் இளவரசே. இன்னொரு காட்டு ஆடும் உள்ளது.” பூரிசிரவஸ் “பூனையை உண்ணலாமா?” என்றான். “நாங்கள் பல தலைமுறைகளாக உண்கிறோமே” என்றாள் விப்ரை.

அவர்கள் உண்ணும் விரைவு குறைந்து வந்தது. அதன்பின் அமர்ந்துகொண்டு பேசியபடியே மெல்லத் தொடங்கினர். பிரேமை அவனுக்கு பெரிய தாலத்தில் சுட்ட அப்பமும் ஊனும் கொண்டுவந்தாள். ஊன் மெல்லிய தழைமணத்துடன் கொழுப்பு உருகிச் சொட்ட இருந்தது. உப்பில்லாத ஊனை முதல்முறையாக உண்கிறோம் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். ஆனால் சற்றுநேரம் மென்றபோது நேரடியாகவே ஊனின் சுவை நாவில் எழுந்தது.

பிரேமை அவனுக்கு பால் கொண்டுவந்தாள். அவள் விழிகளை நோக்கியபின் அவன் தலைதாழ்த்திக்கொண்டான். அவள் நீராடி ஆடைமாற்றி குழலை சிறிய திரிகளாகச் சுருட்டி தோளிலிட்டிருந்தாள். மகிழ்ச்சியால் மலர்ந்த முகத்துடன் அவனையே விழிகளை விரித்து நோக்கிக்கொண்டிருந்தாள்.

உணவுண்டதுமே குழந்தைகள் சேக்கைகளில் ஒட்டி ஒட்டி படுத்துக்கொண்டார்கள். விப்ரை “இளவரசே, தாங்கள் அந்த துணை அறையில் படுத்துக்கொள்ளுங்கள். பிரேமையும் தங்களுடன் வந்து படுத்துக்கொள்வாள்” என்றாள். பூரிசிரவஸ் அந்த நேரடித்தன்மையால் கைகள் நடுங்க விழிகளை தாழ்த்திக்கொண்டான். “தாங்கள் நிறைவாக காமம் துய்க்கவேண்டும். இவளை தாங்கள் கணையாழி அளித்து வேட்டது எங்கள் குடிக்கு சிறப்பு. நல்ல மைந்தர் இங்கே பிறக்கவேண்டும்.”

பூரிசிரவஸ் எழமுடியாமல் அமர்ந்திருந்தான். நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் அவனை புன்னகையுடன் நேராக நோக்கி நின்றிருந்தாள். அவன் மெத்தையை கைகளால் சுண்டிக்கொண்டான். பிரேமை அவனிடம் “எழுந்து வாருங்கள்” எனறாள். அவன் திகைத்து அவளை நோக்க அவள் கைகளை நீட்டி சிரித்தாள். விப்ரையும் சிரித்தாள். அவன் எழுந்ததும் இருவரும் ஓசையிட்டு நகைத்தனர்.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைபூச்சிகள் -பேட்டி
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 13