«

»


Print this Post

மதம் சார்ந்த சமநிலை


அன்புள்ள ஜெயமோகன்.

வணக்கம்.

எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை இந்த மடலை. என் ஆதர்சம் நீங்கள். என் புத்தக அலமாரியில் உங்களுக்கு என்று தனியாக இரண்டு அடுக்குகள் உள்ளன. என்னை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒருவராக உங்களை நினைக்கின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ”பசுக்கள் பன்றிகள் சூனியக்காரிகள்…” நூல் குறித்து பேச தக்கர் பாபா வித்யாலயாவிற்கு வந்திருந்தீர்கள். அன்று உங்களது பேச்சை மிகவும் ரசித்துக் கேட்டேன். உங்களுக்கு நடு இரவினில் வரும் தவறான தொலைபேசி அழைப்பில் தொடங்கி ராணி மங்கம்மாவினைப் பற்றி கூறி அங்கிருந்து ”பசுக்கள் பன்றிகள்…” நூலில் இருந்து  இரண்டு எடுத்துக்காட்டுகளை முன் வைத்து சமூக வரலாற்றையும், அதன் சிக்கல்களையும் குறித்துப் பேசினீர்கள்.

அந்த பேச்சின் சாரமாக நான் பெற்றுக் கொண்டது இது தான் : எந்த பண்பாட்டு விழுமியத்தையுமே யாரோ ஒருவரின் சதியாக புரிந்து கொள்ளக் கூடாது, அதன் பின்னிருக்கும் பல்வேறு தரப்புகளின் சிக்கல்களின் தொகையாதத்தான் பார்க்க வேண்டும். இந்துமத சாதி முறைகளைப் பற்றிய விவாதங்களிலும் நீங்கள் இதை தான் முன்வைத்தீர்கள் : சாதியை ஒரு குழுவின் சதியாக பார்ப்பது அதனை மிகவும் எளிமைப் படுத்தும் செயல்.

ஆரம்பத்தில் இருந்தே உங்கள் எழுத்தில் என்னை ஈர்த்த ஒரு விஷயம் அதன் உள்ளிருந்த அமைப்பினை, நிறுவன மயமாதலினை எதிர்க்கும் தன்மை.

வல்லிக்கண்ணன் தொகுத்த புதிய தமிழ் சிறுகதைகள் தொகுப்பில் அதுவரை நான் கேள்விப் படாத ஜெயமோகனின் ”திசைகளின் நடுவே” சிறுகதையை படித்த போது சார்வாகன் தருமனிடம் கூறும் “இந்த தங்கத்தினில் இரத்தக்கறை படிந்துள்ளது. வேறு கொடு” எனும் வரி சிலிர்க்க வைத்தது. அது வரை ஒற்றைப்படையாக நான் படித்திருந்த மகாபாரதத்தினை வேறு கோணத்தில் பார்க்க வைத்தது அந்த வரி.

விஷ்ணுபுரம் எனும் மாநகரம், பழங்குடிகளின் வழிபாட்டை, நிலத்தை கையகப் படுத்திய சூர்யதத்தனின் பொய்யின் மீதே நிற்கிறது. அத்தனை உன்னதமாக, மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்து நிற்கும் கோவிலை அதன் மறுதரப்பில் நின்றுகொண்டு நிராகரித்தபடியே உள்ளது அந்த நாவல். பின் தொடரும் நிழலின் குரல் கம்யூனிசத்தின் மீதான விமர்சனம் என்பதையும் தாண்டி, ஓர் லட்சியம் நிறுவனமயமாகும் பொழுது அதன் ஆதார கருணை இல்லாது போவதை குறித்து பேசுகின்றது. இதுவே என் வாசிப்பு.

உங்கள் ஒவ்வொரு படைப்பிலும் இதை காண முடிந்தது. பரிணாமம் சிறுகதையினில் வரும் கருங்காணிகளின் பூர்வகதையும் ஆய்வாளனின் “வரலாறு”ம் சமமாகவே பட்டது. மதமாற்ற தடை சட்டத்தினை ஜெயலலிதா அமல்படுத்திய போது அதை எதிர்த்து நீங்கள் எழுதிய கடிதத்திலும் இதே நோக்கம் தான் இருந்தது.

”மத மாற்றம் என்பது மதங்களுக்குள் நிகழும் உரையாடல். இந்து மதத்திற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நாம் களைவதன் மூலமாக மட்டுமே மத மாற்றத்தினை எதிர்கொள்ள வேண்டும். அப்படி களைய இயலவில்லை என்றால் அப்படி ஒரு மதம் இல்லாது போவதில் ஒரு வருத்தமும் இல்லை” என்பது போல எழுதி இருந்தீர்கள்.

இப்பொழுது சில மாதங்களாக உங்கள் எழுத்துக்கள் இந்த சமநிலை இல்லாது இருக்கின்றதோ என்று தோன்றுகிறது. சில விஷயங்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு எழுத்துக்குள் வருகின்றன. ஊமைச்செந்நாய் சிறுகதையில் அந்த ஆங்கில அதிகாரியின் கதாப்பாத்திரம் உறுத்தியபடியே உள்ளது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட வடிவமாகவே அந்த அதிகாரி தோன்றினார்.

இப்பொழுது மதமாற்றம் குறித்த இன்று நீங்கள் எழுதுவதிலும் இந்த எளிமைப் படுத்துதல் தெரிகிறது. முகப்பேரில் ரோமன் கத்தோலிக்க தேவாலையத்தை ஒட்டிய வீதியில் எங்கள் வீடு இருந்தது. வருடத்திற்கு ஒரு குடும்பமாவது மதமாற்றம் செய்து கொள்வதை பார்த்திருக்கின்றேன்.

இன்று யோசிக்கும் பொழுது அதை வெறும் “காசு வாங்கிக்கொண்டு மாறி விட்டார்கள்” என்று எளிமையாக முடிவு செய்ய முடியவில்லை. கணவனை இழந்து இரண்டு குழந்தைகளை வளர்க்க பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு சாய்ந்துகொள்ள, சொல்லி அழ ஒரு தோள் தேவைப் பட்டிருக்கலாம். இந்து மதத்தை காட்டிலும் தன் வாழ்வின் மேல் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடிய, பாதுகாப்பு உணர்வினை தரக்கூடிய கடவுளையும், அமைப்பையும் அவரது மனம் தேடி இருக்கலாம். கத்தோலிக்க சர்ச் அந்த பெண்ணுக்கு கூட்டிற்குள் இருக்கும் கதகதப்புணர்வை தந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதற்கான மாற்றாகத் தான் மேல்மருவத்தூர் தொடங்கி இன்றைய பல இந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று தோன்றுகிறது. இந்த முறை சென்னை சென்ற போது கல்கி பூஜை, மேல்மருவத்தூர் ஆனந்த ஜோதி, வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை கலை என ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு விதத்தில் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் இருந்து கொண்டிருந்தன. இவை ஏதோ ஒரு சமூகத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கிருத்துவ மதத்துடனான உரையாடலின் விளைவு என்றே தோன்றுகிறது. இந்த வகையிலும் சமூக நிகழ்வுகளைப் பார்க்கலாம் என்று உங்களின் மூலமாகவே கற்றேன்.

ஆனால் இன்று உங்களது கட்டுரையில் ”அப்படி பணம் கொடுக்கும் போது கூட மனிதாபிமானத்தால் கருணையால் கொடுக்க மனம் வரவில்லை. மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையில்லாமல் பத்து பைசா அளிக்கக்கூட இவர்களின் கை நீளவில்லை. அப்படியானால் அது வணிகம். பணம் கொடுத்து மக்களை வாங்குகிறார்கள். இந்த முதலீடு நாளைக்கு ஒட்டு மொத்தமாக லாபம் தரும் என்று நினைக்கிறார்கள்” என்று எழுதி இருந்தீர்கள். இதை படித்ததில் இருந்து uneasyயாக உணர்கின்றேன்.

கட்டுரையில் ஒட்டுமொத்த செய்தியான “இந்தியாவின் பன்மைத் தன்மை” குறித்து ஒத்து போகிறேன். ஆனால் மேற்கூறிய வரி பிரச்சனையின் முழு பரப்பினையும் பார்க்காமல் சொல்லப்படும் வரியாகவே படுகிறது. வேறு யாராவது பேசி இருந்தால் தாண்டி சென்றிருப்பேன். இது உறுத்திக் கொண்டே இருக்கின்றது.

சித்தார்த்.

http://angumingum.wordpress.com

 

அன்புள்ள சித்தார்த்,

உங்கள் கடிதம் கண்டேன்.

ஓர் எழுத்தாளனாக மட்டுமல்லாமல் தனிமனிதனாகவும் என்னுடைய கொள்கை என்பது சமரசம்தான். சமநிலைதான் என் இலக்கும். அது எங்காவது தவறுவது போல இருந்தால் அது என் பிழை என்றே கொள்வேன். நீங்கள் சொன்ன விஷயங்களைக் கவனித்தேன். என் சொற்களின் வேகம் அப்படி ஒரு எண்ணம் உங்களில் உருவாக வழியமைத்திருக்கலாம். மீண்டும் என்னை சரியாகப் பதிவுசெய்ய, சரி செய்து கொள்ள வாய்ப்பு என இதைக் கொள்கிறேன்.

மதமாற்றத் தடைச் சட்டம் வந்தபோது எனக்கிருந்த அதே நிலைபாடு, அதே உறுதி இப்போதும் உள்ளது என்று கூற விரும்புகிறேன். அக்கட்டுரையை அப்படியே மீண்டும் இப்போதும் எழுதவே துணிவேன்.

கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் அடிப்படையிலேயே ‘ஒரே உண்மை’ என்ற கருத்தாக்கம் உள்ளது. அந்த மதங்களை ஒருவர் ஏற்றுக் கொண்டால் அந்த உண்மையை அவர் ஏற்றுக் கொள்கிறார். பிறவற்றை அவர் நிராகரிக்கிறார். அத்தகைய தீர்க்கதரிசன மதங்களில் அந்த மதத்தின் உண்மையை ஏற்றுக் கொள்பவர் பிறரிடம் அதைக் கொண்டு செல்லும்படிப் பணிக்கப் பட்டிருக்கிறார். அது அவரது உரிமை மட்டும் அல்ல அந்த மத நம்பிக்கையின்படி கடமையும்கூட.

ஆகவே மதப் பரப்பு செய்வதும் என்பதும் , பிறரை மதமாற்றம் செய்வது என்பதும் இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்களை நம்புபவர்களின் அடிப்படை உரிமை. அவற்றைத் தடைசெய்வதென்பது அந்த மதங்களைத் தடைசெய்வதுதான். அதன்பின் மதச்சார்பின்மை பேசுவதில் பொருளே இல்லை.

ஆகவே இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் தங்கள் மதங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதை நான் வரவேற்கிறேன். அவற்றுடன் ஒத்துழைக்கவும் நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன். குறிப்பாக கிறிஸ்துவின் மாபெரும் மானுடநேயச் செய்தி இந்தியாவில் உண்மையான தீவிரத்துடன் கொண்டு வரப்படவேண்டும் என்றும், அதனுடன் இந்து ஞானமரபுகள் அனைத்தும் ஆக்கபூர்வமான விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

தங்கள் மதங்களின் சாராம்சமான செய்தியை ஒரு இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் எடுத்துச் சொல்வது வரவேற்புக்குரியது. அதை ஏற்று தன் ஆன்மீகத் தேடலின் விளைவாக ஒரு இந்து அல்லது பௌத்தர் மதம் மாறுவார் என்றால் அது மிக இயல்பான ஒன்றேயாகும். அந்த வாய்ப்புள்ள நாடாக இருக்கும்போது மட்டுமே இங்கே மதச்சுதந்திரம் உள்ளதென அர்த்தம்.

அதேபோல இந்து மதம் தன் ஒருபகுதியினரை புறக்கணிக்கும் என்றால், அவமதிக்கும் என்றால், அந்த மக்கள் தங்களுக்கான சம உரிமை நாடி, பொருளியல் உரிமை நாடி மதம் மாறினால் அதையும் இயல்பான ஒன்றாகவே நான் எண்ணுவேன். அது இந்து சமயத்துக்கு ஓர் அறைக் கூவலாக நிகழட்டும் என்றே எண்ணுவேன்.

ஆகவே ஒருபோதும் மதம் மாறுபவர்களை பணம் மற்றும் பொருளுக்காக மதம் மாறுபவர்கள் என நான் கூற மாட்டேன். இக்கட்டுரையிலும் அதைச் சொல்லவில்லை என்றே எண்ணுகிறேன்.மத நம்பிக்கை என்பது ஒருவரது உரிமை. மதம் மாறுவதும் பிறப்புரிமை.

ஆனால் ஒருவரை அவரது வறுமையை அல்லது பிற இக்கட்டுகளைப் பயன்படுத்தி மதம் மாற்ற முயல்வதென்பது அடிப்படையில் ஆன்மாவற்ற ஒரு செயல் என்றே நினைக்கிறேன். குறிப்பாக, கிறிஸ்துவின் பெயரால் அப்படிச் செய்யப் படுமென்றால் அது கிறிஸ்துவை அவமதிப்பதாகும் என்றே நினைக்கிறேன்

அதற்கிணையாகவேப் பிற மதங்களைத் திரித்து, அவதூறு செய்து, அவநம்பிக்கையை வளர்த்து மதமாற்றம் செய்யப் படுவதும் கீழ்த்தரமான ஒருசெயலே. கிறிஸ்துவுக்காக அது செய்யப்படவில்லை, அவரைத் தங்கள் அதிகாரச் சின்னமாகக் கொண்ட அமைப்புகளின் நலனுக்காகவே செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்.

தன் மத நம்பிக்கையை ஆத்மார்த்தமாக சகமனிதனுக்குச் சொல்லும் ஒரு மதநம்பிக்கையாளருக்கும், தொழில்முறை மதப்பரப்பு அமைப்புகளுக்கும் இடையே உள்ள இந்த வேறுபாட்டை நாம் எப்போதுமே தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை நான் சொன்ன இத்தனை விஷயங்களையும் ஏறத்தாழ இப்படியே காந்தி சொல்லியிருக்கிறார். அவரது சொற்கள் வழியாக என் நிலைபாட்டை நான் மீண்டும் திடமாக உறுதிச் செய்துக் கொண்டேன்.

தாமஸ் கிறித்தவம் என்ற பேரில் செய்யப்பட்ட மோசடியைப் பற்றி எழுதிய கட்டுரையை நினைவு கூர்வீர்கள் என நினைக்கிறேன். அக்கட்டுரையின் முடிவிலும் கிறிஸ்துவை பிரச்சாரம் செய்யுங்கள் என்றே முடித்திருந்தேன், அவரது உண்மையான மானுடச் செய்தியைச் சொல்லுங்கள், மோசடி செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

என்னுடைய இந்தக் கட்டுரையிலும் எப்போதும் நான் சொல்லும் அந்த விஷயமே ஒலிக்கிறதென நினைக்கிறேன். பெரும் அமைப்புகள் மானுடத்தை முன்வைப்பதில்லை, அதிகாரத்தையே முன்வைக்கின்றன. அந்த விதி திருச்சபைகளுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறீர்களா என்ன?

கோடானுகோடி ரூபாய்கள் பெரும் வணிக நிறுவனங்களிடம் இருந்து திரட்டப் பட்டு இந்தியா போன்ற நாடுகளில் கொட்டப் பட்டு நவீன நிர்வாக-பிரச்சார முறைகளைப் பயன்படுத்தி செய்யப் படும் மதமாற்றம் என்பது ஓர் ஆன்மீகச் செயல்பாடு என நான் நினைக்கவில்லை. அதைச் செய்பவர்களின் நோக்கங்கள் ஆன்மீகமானவை என்றும் நினைக்கவில்லை. அது ஒரு முதலீடு மட்டுமே. பிறிதொன்றுக்கு ஒருபோதும் ஏகாதிபத்தியம் அத்தனை செலவிடாது. இந்த உண்மையை உணர நமக்கு மதச்சார்பின்மை தடையாக இருக்க வேண்டியதில்லை.

அந்த திட்டமிட்ட மாபெரும் தாக்குதலை உணர்ந்திருக்கா விட்டால், அதற்கு எதிரான விழிப்புணர்வு இருக்கா விட்டால், அதன் தேசிய இழப்புகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்று இரு கிறிஸ்துக்கள் உள்ளனர். சிலுவையில் மாண்ட மனித குமாரன் ஒருவர். ஏகாதிபத்தியத்தின் முகப்படையாளமாக உள்ள கிறிஸ்து இன்னொருவர். இரு கிறிஸ்துக்களையும் வேறுபடுத்திப் பார்க்க இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களாலும் முடிய வேண்டும் என்று நினைக்கிறேன்.

அந்த தெளிவு இருக்கும் என்றால் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றையே திட்டமிட்டு திரிக்கக் கூடிய முயற்சிகளுக்கு எதிராக கவனமாக இருக்கலாம். திரு பாஸ்கி சுட்டிக் காட்டியதுபோல இந்துமதம் மற்றும் இந்து அமைப்புகள் மீது பரப்பப்படும் ஆதாரமற்ற அவதூறுகளை திடமாக எதிர்க்கவும் செய்யலாம். அதே சமயம் அந்த எதிர்ப்பு கிறிஸ்துவின் ஆன்மீகச் செய்திக்கு எதிரானதாக இல்லாமல் இருக்கவும் கவனம் கொள்ளலாம். நான் அதற்காகவே முயல்கிறேன்.

எளிமையாகவே யோசியுங்கள். இந்துமத நிறுவனங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே அரசின் பிடியில் உள்ளன. அவற்றின் நிதி முழுக்க அரசால் எடுத்துக் கொள்ளப் படுகிறது. பிறமத நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் கட்டுப் படுத்தப் படாத செல்வம் இருக்கிறது. அந்தப் பணம்மூலம் அவை செய்யும் சேவைகளை மனக்குறுகல் காரணமாக இந்து அமைப்புகள் செய்வதில்லை என்று அதே அமைப்புகள் குற்றம் சாட்டி பிரச்சாரமும் செய்கின்றன. என் கட்டுரை அந்த அவதூறுக்கான பதில் மட்டுமே.

என்னுடைய இந்தக் கட்டுரையில்கூட என்னுடைய வழக்கமான தரிசனமே உள்ளதென நான் நினைக்கிறேன். மாபெரும் அமைப்புகளின் கிறிஸ்துவுக்கு மாற்றாக தனிமனித மனங்களுடன் உரையாடும் கிறிஸ்துவையே இக்கட்டுரையும் முன்வைக்கிறது. தல்ஸ்தோயின் கிறிஸ்து. இந்த இணைய தளத்தில் பல்வேறு கட்டுரைகள், கதைகள் வழியாக மீண்டும், மீண்டும் பேசப்பட்ட தரிசனம் அது.

‘ஊமைச்செந்நாய்’ கதையின் உங்கள் வாசிப்பு அது. ஆனால் அந்த கதாபாத்திரம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி அல்ல என்றே அக்கதை சொல்கிறது. ஆங்கில ஏகாதிபத்தியத்தால் சுரண்டப் பட்டு ஒடுக்கப்பட்ட வேறு வகையான அடிமைகளில் ஒருவன் மட்டும்தான் அவன்.

என் மீதுள்ள உங்கள் நம்பிக்கை எனக்கு ஊக்கமூட்டுகிறது. ஒவ்வொரு முறையும் என் கருத்துக்களையும், உணர்வுகளையும் மீண்டும் பரிசீலனை செய்து கொள்கிறேன்.

நன்றி

ஜெ

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

வெளியே செல்லும் வழி – 1

வெளியே செல்லும் வழி 2

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7124/

15 comments

Skip to comment form

 1. sitrodai

  திரு ஜெமோ,

  மத மாற்ற தடை சட்டம், கட்டாய மத மாற்றத்தை மட்டும்தானே தடுத்தது. மற்றபடி மதம் மாறும் அடிப்படை உரிமையை அது தடுக்கவில்லையே. அந்த சட்டம் தொடர்ந்திருந்தால், தாங்கள் விரும்பியபடி ‘மத மாற்ற வணிகத்தைதானே’ தடுத்திருக்கும்?

 2. jasdiaz

  J,

  I also feel you are simplifying the conversions by painting a broad brush scenario. By stating that a Hindu converts to Christianity for material gains, we are insulting their intelligence. Even extremely poor and illiterate people have amply demonstrated again and again that they can think logically and they know what is good for them. Along with this another question comes i.e if a Hindu converts to Christianity for say Rs 2000/- then why can’t he be converted back to Hinduism by paying Rs 2500/- Normally this does not happen.

  So something more than material gains and missionary money is involved. Pl think this over.

  jas

 3. aravindan neelakandan

  ஜெயமோகன் மதமாற்றத்தைக் குறித்து பேசவில்லை மதமாற்ற முயற்சிகளின் பின்னாலிருக்கும பெரும் அரசியலை , அதன் கடல் கடந்த வர்த்தக தொடர்புகளை குறித்துதான் சொல்கிறார். மதச் சுதந்திரமும், மதத்திலிருந்து (மார்க்சியம் உட்பட) சுதந்திரமும் ஒரு சமுதாயத்தின் ஆன்மிக சுதந்திர சூழலுக்கு அவசியம் என அவர் உணர்ந்தவர். உள்நாட்டு தொழில்களை தேங்க விட்டு வெளிநாட்டு பெரும் முதலை அனுமதிப்பதற்கும் உள்நாட்டு ஆன்மிக மரபுகளை தேங்க விட்டு வெளிநாட்டு மதமாற்ற சக்திகளை அனுமதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தனிமனித உரிமையை எதிர்ப்பது ஆகாது.

 4. jasdiaz

  I find a number of people have written about the foreign hand behind the conversions. Frankly I am puzzled. Having been lived in UK & USA for quite some time, my impression is no one cares about religion in UK / Europe (the great sufferings during the two world wars have turned the people into cynics and atheists) and those who care in USA are poor whites / blacks. In the UK, churches are being closed due to paucity of funds and quite a number of Hindu temples are ex-churches. Frankly who cares for religion or for that matter the next door neighbour?

  Do we really believe that foreign funds can convert Hindus in 21st century when British rulers failed to convert even 5% of the population during their 200 years rule? Are Americans foolish enough to throw away money on such silly projects? It appears something similar to CIA blamed for everything in 60s & 70s and now ISI. Whatever money coming is for NGO activities and not for conversions and of course the funds are looted by priests/pastors.

  jas

 5. kalyaanan

  ஜெமோ கட்டுரையிலேயே அது தெளிவாக உள்லது. இந்து மதத்தின் பணம் அரசாங்கத்துக்கு சொந்தம். மற்ற மதங்கள் அதைவிட 500 மடங்கு அதிகம் பணம் வைத்துள்ளன. அந்த மதங்கள் திட்டமிட்டு மதத்தை பரப்பலாம். இந்துமதம் அப்படி பரப்ப முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

  அந்த மதங்கள் பணத்தை வழங்கிவிட்டு இந்துமதம் பணம் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றன. அதையே தங்கள் மதம் மாற்றுவதற்கான காரணமாகவும் சொல்கின்றன. அறிவுஜீவிகளும் அதை சொல்கிறார்கள். இதுதான் இங்கே உள்ள பெரிய அநியாயம்

  இந்து மதத்தில் உள்ள தனியார் அமைப்புகள் பிற மதங்கள் செய்வதை விட அதிகமாக சேவை செய்தாலும் அது இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

  இந்த உண்மையை நாம் ஏன் மதச்சார்பின்மை முகபோடி போட்டு மறைக்க வேண்டும்? இதுதான் கேள்வி

  கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி திட்டம் போட்டு மதத்தை பரப்புவது ஆன்மீகமானது அல்ல. இதை காந்தி சொல்லவேன்டியது இல்லை நமக்கே தெரியும்

 6. V.Ganesh

  Also Mr.Jas
  you must appreciate one thing. If you observe DD-Pothigai, they run christian missionary programmes during morning and evening between 6.30 to 7.00 AM or some other time and also at 10.30 PM night daily. This was not the case before. Yesterday in Tamilnadu assembly one MLA wanted the TN government emblem (gopuram) to be changed as he felt that it is not reflecting ‘True Secular’ character of the state. The question is how much marketing is required? All back door entries…. As jeyamohan puts it, for christians converting others are mandatory. But given the economic situation today how you can “convert” others, if you do not have funds. And there is steady pattern by which christian convert others that too silently. They are ready to wait for another 300 years to ensure that only christian religion remain. I am really amazed about their zeal and enthu. You may think UK/USA nobody bothers about religon because they are the majority and also they are economically superior as of today.
  End of the day it is up to any individual to decide what he wants. But that is applicable only for people like us who sit in front of laptop and type letters in a luxary room

 7. jasdiaz

  /இந்து மதத்தின் பணம் அரசாங்கத்துக்கு சொந்தம்/

  Is it? If you mean the income from the temples go to Govt public expenditure, I do not see any such details in the yearly budget ‘Revenue Income & expenditure’ columns. May be some reader from revenue dept can clarify. Or I will use RTI to find out the details.

  /மற்ற மதங்கள் அதைவிட 500 மடங்கு அதிகம் பணம் வைத்துள்ளன./

  But it is in the form of real estate & immovable property (Churches, convents, colleges, hospitals, orphanages etc). Where is the cash to pay for mass conversions? Vast Prime land such as Loyala college in Nungambakkam, Chennai is worth hundreds of crores today, but it can not be sold or mortgaged to raise cash for conversions.

  /இந்து மதத்தில் உள்ள தனியார் அமைப்புகள் பிற மதங்கள் செய்வதை விட அதிகமாக சேவை செய்தாலும் அது இருட்டடிப்பு செய்யப்படுகிறது/

  By whom? Church does not own any TV / printed media. If Pranoy Roy of NDTV or any such person praises Christian services, does it mean he is less of a Hindu or he got paid from Christian missionaries.

  jas

 8. Wilting Tree

  காசு கொடுத்து ஓட்டு வாங்கிய கட்சிக்கு, காசு வாங்காமலேயே ஓட்டுப் போட்டவர்களும் உண்டு. ஆனால், அவர்களும் கூட அந்த கட்சி, வருங்காலத்தில் தனது பொருளாதாரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில்தான் ஓட்டுப் போட்டிருப்பார்கள். இவர்கள் தவிர, அந்தக் கட்சி நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஓட்டுப் போட்ட ஒரு சிலரும் இருப்பார்கள் – மிகக் குறைந்த அளவில்.

  காசு வாங்கிக்கொண்டு, ஓட்டுப் போட்டு, வெற்றியைத் தருகிறவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் காசுக்காக இல்லை, காசு பணம் போன்ற காரணங்கள் தாண்டிப் புனிதமான ஒரு உன்னதத்தைக் கண்டறிந்த புத்திசாலித்தனத்தால்தான் ஓட்டுப் போட்டார்கள் என்று சொல்லுவதும், மதம் மாறுபவர்கள் கர்த்தரின் உண்மை ஒளியைக் கண்டுணர்ந்த பின்னரே மதம் மாறினார்கள், மாறுகிறார்கள் என்று சொல்லுவதும் ஒரே வாதம்தான் என்று எனக்குப் படுகிறது.

  பெற்றோர்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டார்கள் என்பதை நேரில் பார்த்த பிள்ளை, அதை வெளியே சொல்ல வெட்கப்படுவான். அவர்களது பேரனோ தனது மூதாதையர்கள் நியாயமான காரணங்களால்தான் அந்த கட்சியை ஆதரித்தார்கள் என்று நம்புவான்.

  நம்பிக்கைகள் கெடுவது துயரமானது. ஆனால், அது தற்காலிகத் துயரம் மட்டுமே – ஒரு நாள் விரதம் போல. ஆனால், ஜனநாயகம் வியாபாரமாக இருப்பதை எதிர்க்காமல், கட்சிக்கு ஓட்டுப் போட மட்டுமே நம்பிக்கை பயன்படுவதற்குப் பதில் அந்தத் தற்காலிகத் துயரத்தை அனுபவிப்பது சிறந்தது.

  இந்த ஜனநாயக வியாபாரம் போல, ஒரு வியாபாரமாக, மத மாற்றமும் ஆகிவிட்டது என்பதுதான் ஜெயமோகன் அவர்கள் வருந்தும் விஷயம் என நான் புரிந்துகொள்கிறேன்.

  அதை வைத்து அவரை இந்து மத வெறியர் என்று எளிதாக முத்திரை குத்தி விடுகிறார்கள். ஆனால், அவர் அந்த இந்துத்துவர்களிடம் இருந்து வெளிப்படையாகவே வேறுபடுகிறார்.

  “ஒரு மதம், ஒரு கட்சி, ஒரு அமைப்பு பெரும்பான்மையாக என்ன விளைவினை நெடுங்காலத்தில் ஏற்படுத்துகிறது என்பதை வைத்துத்தான் அது சரியா தவறா என்று சொல்ல வேண்டும். சிலுவையும், பிறையும், அரிவாள் சுத்தியலும் சென்ற இடங்களில் எல்லாம் பெரும்பான்மையாகக் கொடூரமான விளைவுகளையே, நெடுங்கால அவதிகளையே ஏற்படுத்தின” என்பது இந்துத்துவவாதிகளின் வாதம். இந்த வாதம் முற்றிலும் தவறு என்று ஜெயமோகன் சொல்லி வருகிறார்.

  ஏழைகளின் மீது நிஜமாகவே இரக்கம் கொண்டு உழைத்த கிறுத்துவப் பாதிரிகளின், கன்னியாஸ்த்ரீகளின் உழைப்பை, துயரத்தை புறங்கையால் ஒதுக்கக்கூடாது என்கிறார். “அதல்லாம் இல்லை. அந்த நல்ல செயல்களும்கூட இயல்பான மானுட உணர்வால் எழுந்ததேயன்றி, மத உணர்வால் எழுந்தது இல்லை” என்று தீவிர இந்துத்துவவாதிகள் சொல்லுவதையும் அவர் மறுக்கிறார். அதையெல்லாம் அந்த நல்லவர்கள் பைபிள் படித்துத்தான் தெரிந்துகொண்டார்கள் என்று நம்புகிறார். எழுதுகிறார்.

  அதனால், இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன்பு சாத்தானுக்கு எதிராக நடக்கப் போகும் போரில் கடவுளின் பக்கம் ஆட்களைச் சேர்க்கிறோம் என்று சொல்லி மதம் மாற்றினால், அதைக் குறை சொல்ல அவசியம் இல்லை என்பது அவர் கருத்து என வாசகனாக நான் புரிந்துகொள்கிறேன்.

  குருடனைப் பார்க்கச் செய்த, தண்ணீரில் நடந்த ஏசு எனது வாழ்க்கையிலும் அற்புதத்தை நிகழ்த்தினார், அதனால் மதம் மாறினேன் என்று ஒருவர் சொன்னால் அதை அங்கீகரிக்க வேண்டும். ஆனால், ஆயிரம் ரூபாய் பணம் கட்டி குருஜி ஒருவரின் யோகா க்ளாஸ் சென்றதால் எனது வாழ்க்கை முன்னேறியது என்று சொல்லுவதை மட்டும் வேதாந்த ரீதியில் அங்கீகரிக்கக்கூடாது என்பது அவர் வாதம். எனவே, அவர் ஒரு செக்யூலர்வாதி என்றறிக. ;)

  இப்படிப்பட்ட ஒரு நல்ல மதச்சார்பற்ற எழுத்தாளரை மதம் மாற்றிகள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் மாட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. “உலகம் உங்களது இன்பத்திற்காகப் படைக்கப்பட்டது. இதில் எனது சாதியினருக்கு மற்றவர்கள் அடிமை. எனது பிள்ளைகள் அனுபவித்தது போக மிஞ்சி இருப்பதுதான் மற்றவர்களுக்கு” என பைபிளில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். வெளிப்படையாகச் சொல்வதில்லை. சொன்னால், ஜெயமோகனுக்குத்தான் ப்ராண சங்கடம். காந்தியை நம்பினோர்…. … :)

  எனது புரிதலின்படி, இந்திய மரபு “மதம்” என்பதை ஒருவனுடைய “கருத்து” என்று மட்டுமே வரையறுக்கிறது. ஆனால், ஆபிரகாமிய மரபின்படி மதம் என்றால் “அமைப்பு”. ஆபிரகாமியம் இந்தியாவிற்கு நுழைவதற்கு முன்னால், பௌத்தரும், சைவரும், அத்வைதிகளும், சமணரும் உரையாடி, “கருத்து மாறியதற்கும்”, கிறுத்துவ இசுலாமிய மதங்கள் வலியுறுத்தும் “அமைப்பு மாறுதலுக்கும்” பெரிய வேறுபாடு உண்டு. ஆனால், ஜெயமோகன் “அதுதான் இது” என்று சொல்லுகிறார்.செந்தில்-கவுண்டமணி வாழைப்பழ ஜோக்கு போல.

  அவர் சொல்லும் கிறுத்துவம் டால்ஸ்டாய் புத்தகத்தின் முதல் அட்டையில் ஆரம்பித்துக் கடைசி அட்டைக்கு முன்பாகவே முடிந்துவிடுகிறது என்று நான் எண்ணுகிறேன். எனது அறிதலின்படி, கிறுத்துவ இறையியல் தூண்டுதலால்தான் மதம் மாற்றம் பொருளாதார அடிப்படையில் நடைபெறுகிறது.

  உலகம் முழுதும் உள்ள ஏக இறை மறுப்பாளர்களும் இதையே சொல்லுகிறார்கள். இப்படி வியாபாரமாக இல்லாமல் வேறு வகையில் இந்த அளவு மதம் மாற்றுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று அவர்களும் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட மதமாற்றம் தப்பு.

  இந்தியாவில் இப்படிச் சொல்லுபவர்களை இந்துத்துவர்கள் என்று கெட்ட முத்திரை குத்திவிடுகிறார்கள். ஏனெனில், மதச் சார்பு கொண்டவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகவும், ஆழமாகவும் உள்ளது. இவற்றை எதிர்த்து ஜெயமோகன் விளக்கம் சொல்லியே வாழவேண்டும் என்பது காலத்தின் கட்டளை…. :) !!

  அவருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு.

 9. senthilkumarav

  நல்ல கட்டுரை ஆரோக்கியமான விவாதத்திற்கு ஏற்றது. நாம் இதில் மிக வசதியாக ஒன்றை மறந்துவிடுகிறோம். அது அரசியல். இந்த அரசியல் நாம் சுதந்திரம் அடைந்து 60௦ வருடம் ஆகியும் நம்மை நம் மக்களை வறுமையிலேயே வைத்திருகிறார்கள். வறுமைதான் அனைத்திற்கும் காரணம்.

 10. shivakumar Kuppusamy

  அன்புள்ள ஜெயமோகன்,

  ‘ஒரே உண்மை’ என்ற கருத்தாக்கம் உள்ள தீர்க்கதரிசன மதங்கள் பிறரிடம் அதை எடுத்து செல்வது இயல்பானதே.அதை கடமையாக அவர்கள் எண்ணுவதும்,அது அவர்களின் உரிமையென்பதும் ஏற்றுக்கொள்ளகூடியதே.அதன் போக்கில் பிறவற்றை நிராகரிப்பதும் இயல்பே.ஆனால், இத்தகைய, பிறவற்றை நிராகரிக்கும் இயல்புள்ள தீர்க்கதரிசன கருத்துக்களில் உள்ள மாணுடநேய கருத்துக்களை மட்டும் பிரித்தரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய திறனற்ற சாதரனவர்களிடம் தீர்க்கதரிசன பரப்புரை செய்வதும்,அவர்களை தீர்க்கதரிசன(அடிப்படை)வாதிகள் ஆக்குவதும் சரியானதா? உவப்பான கருத்தின் துணையோடு நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பது மூளைசலவையாகதா?

  சிவக்குமாரசாமி.
  திருப்பூர்.

 11. Muthu

  It’s so much interesting to note such innocent thumb-sucking kids as jasdiaz reading Jeyamohan.

 12. Prasanna

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
  இனிய மாலை வணக்கம். சற்று நீண்ட இடைவெளி விழுந்து விட்டது தங்கள் வாசிப்புகள் இல்லாமல்….
  மதம் பற்றியும் மதமாற்றம் பற்றியும் நம் மக்களுக்கு இன்னும் பல விசயங்களை நாம் விளக்கியாக வேண்டி உள்ளது. நம் இந்திய தேசத்தில் மதம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஏன் எனில் பரம்பொருளை அடைவதர்க்கான வழி இங்கே அனைவருக்கும் பொதுவாகத்தான் வழங்க பட்டு இருந்தது ஆரம்ப காலத்தில். நம் நாட்டிற்க்குள் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமான போது தான் இந்து மரபு எங்கே மறைந்து போய் விடுமோ என்ற வீண் பயத்தில் உருவானது தான் பல சடங்குகளும் சம்ப்ரதாயங்களும். இதன் வளர்ச்சி இந்து மதம் என்பது வசதி படைத்தவன் கையில் ஆடும் பொம்மையாய் மாறி போனது.
  தற்போதய நிலையில் ஒப்பிட்டு பார்த்தால் இந்து மதத்தை விட மற்ற மதங்கள் பொருளாதார கருத்து சுததந்திர நிலையில் வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பது போல தெரியலாம். ஆனால் இந்து மதத்தில் நம்மை இறுக்கி பிடிக்கும் கட்டுபாடுகள் என ஒன்றை கூட எடுத்து காட்ட நம்மால் முடியாது. ஆனால் மாற்றங்கள உண்டு பண்ண முயற்சிக்கும் ஏனைய மதங்கள் அனைத்திலும் முதலில் இருக்கும் கனிவு இறுதி வரை இருக்குமா என நிச்சயம் கூற முடியாது.
  பொருளாதாரம் தவிர்த்து அக வளர்ச்சி தான் தன்னுடைய தேவை என இருப்பவர்களுக்கு எந்த மதமும் தடை கல்லாக இருக்க முடியாது. ஆனால் தான் முதல் தேவை பொருளாதாரம் என இருப்பவ்ரக்ளுக்கு மாறும் மதம் ஒரு வேளை சிறைச்சாலை ஆக கூட மாறலாம்.
  ஒன்று தேர்ந்தெடுபவர்கலுக்கு கவனம் வேண்டும், அல்லது அரசாங்கங்கள் இத்றக்கென ஒரு சரியான சட்ட முன்வடிவமாவது ஏற்படுத்தி தர வேண்டும்
  இரண்டில் ஒன்றாவது நடைபெறாத வரை மதமும் மாறும் மதமும் நம்முடைய தீராத தலை வலியாக தான் இருக்கும்.

 13. senthilkumar

  ஜெய மோகன்
  இந்த கட்டுரைகள் படிக்கும் பொழுது எனது பள்ளி பருவத்தில் (7 வது) என்னை மதம் மாற்ற முயற்சிதா நண்பன் ஹென்றி ,
  2௦௦௦ தில் உலகம் அழிந்துவிடும் judgement டே யில் நல்லவனாக இருந்தாலும் இயேசு வை பிரார்திக்கவிட்டால் நரகம் நிச்சியம் என்ற நண்பரின் முயற்சியும்.
  இயேசுவை துதிpபதின் முலம் நான் முதல் மதிப்பெண் வகுகிறேன் என்ற பையனை மிகுந்த முயற்சியின் முலம் இரண்டாம் இடம் தள்ளி அல்லுலய பாட விடாமல் செய்த பையன் என பல நினைவுகள் .
  அநேகமாய் தமிழ் Chuழலில் இந்த அனுபவங்கள் இல்லாமல் வளர்ந்து வந்தவர்கள் குறைவு என நினைக்கிறன்.
  சிறு சிறு உதவிகள் அத்தனை உதவிகளின் முடிவிலும் சர்ச்க்கு வாருங்கள் என்ற நேச அழைப்பு ,தொடர்கின்ற பலரின் மூளை சலவை.
  பெரும்பான்மை இந்துவின் வீட்டில் மதம் ஒரு பண்டிகையிலும் வெள்ளிகிழமைகளிலும் தான் இருகின்றது. அதனால்
  வெகு எளிதாய் மாயங்களை நம்பும் நமது எளியவர்கள் மாறி விடுகிறார்கள்

 14. Tharamangalam Mani

  பெரும்பான்மயனவர்களுக்கு எல்லா மதங்களிலும் இறைவன் “தேவைக்கும்” “பயத்திற்கும்” மட்டுமே தேவைப்படுபவனாக இருக்கிறான். இவற்றைத்தாண்டி இறைவனை தேடும்போது மதம் செல்லாக்கசகிவிடுகிறது. அப்போது, ஹிந்து, கிறிஸ்டியன் முசல்மான் எல்லாவற்றையும் தாண்டிவிட முடிகிறது.நாம் எதற்காக் மேடம் மாற்றத்தைப்பற்றி ஜல்லி அடித்துக்கொண்டு நமது பயம்களை கடை விரிதுப்பரப்ப வேண்டும் எனபது எனது சிற்றறிவுக்கு என்று எட்டுமோ யாம் அறியேன் பரம் பொருளே!

 15. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ.,
  உங்கள் விளக்கம் அருமை. எனது அனுபவத்தை சொல்வதன் மூலமாக , உங்கள் விளக்கத்தை மேலும் ‘விளக்க’ முடியும் என்று நம்புகிறேன்.
  இருபது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு வெள்ளிக்கிழமை நாள், காலை நேரம். வயதான ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்தார். கையில் கனமான புத்தகம் வைத்திருந்தார். யாரென்று கேட்பதற்கு முன்னரே, வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டார். பத்திரிகை படித்துக் கொண்டிருந்த என் அம்மாவுக்கு திகைப்பு. எங்கள் முகத்தைப் பார்த்து புரிந்துகொண்ட அந்தப் பெண்மணி, ”நான் பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன். கர்த்தரின் நற்செய்தியை உங்கள் வீட்டுக்கு எடுத்துச் சொல்ல வந்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு ஹாலில் அமர்ந்தார்.
  எங்களுக்கோ தர்மசங்கடம். வீட்டுக்கு வந்தவரிடம் எப்படி முகத்தில் அடித்தது போல மறுப்பது என்று. அதைப் பற்றி எல்லாம் அந்தப் பெண்மணி சட்டை செய்யவே இல்லை. யோவானின் சுவிசேஷம் என்று நினைவு… படிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு கோபம் வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டேன். (எங்கள் வீட்டில் வேளாங்கண்ணி மாதாவின் மெழுகுச் சில்லை ஒன்று இருந்ததுண்டு).
  பத்து நிமிடம் இருக்கும்; பைபிள் படித்து முடித்த பிறகு, எங்கள் இருவரையும் பார்த்த அந்தப் பெண்மணி, ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றார். நாங்களும் அதைத் திருப்பிச் சொன்னால், தேவன் கிருபை இந்த வீட்டில் பொழியும் என்றார் அவர்.
  அதுவரை பொறுமை காத்த எனக்கு, அதற்கு மேல் தாங்கவில்லை. ”நீங்கள் யார்? அழையா விருந்தாளியாக வந்து நாகரிகம் இல்லாமல் பிரசாரம் செய்கிறீர்களே? இதைத்தான் கர்த்தர் செய்யச் சொன்னாரா?” என்று கோபமாகக் கேட்டேன். என்னை என் அம்மா அமைதிப் படுத்தினார். அந்தப் பெண்மணி சிறிதும் கோபப்படவில்லை. அதிர்ச்சியும் அடையவில்லை. மறுபடியும் உலக இரட்சகரைப் பற்றி பேசத் துவங்கி விட்டார்.
  அப்போது மின்னல் போல என் மனதில் ஒரு சிந்தனை. ”பொறுங்கள் அம்மா (வந்திருந்த அம்மையாரைத் தான்). நீங்கள் என்ன படித்தாலும் கேட்கிறோம். கூடவே ஸ்தோத்திரமும் செய்கிறோம். அதற்கு முன், நாங்கள் தினமும் பாடும் சிவபுராணப் பாடலைப் பாடுகிறேன். அதை நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் சொன்னதை இதுவரை நாங்கள் அமைதியாகக் கேட்டது போல, நீங்களும் கேட்க வேண்டும். அப்படியானால், நாங்களும் உங்களுடன் பைபிள் படிக்கிறோம். எங்கள் வீட்டிலேயே புதிய வேதாகமம் உள்ளது” என்றேன்.
  ”நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க” என்று பாடவும் ஆரம்பித்து விட்டேன்.
  அது வரை புன்னகையுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி, விருட்டென்று எழுந்தார். வீட்டை விட்டு வெளியேறினார்; ஒரு வார்த்தை பேசவில்லை.
  இந்த சம்பவம் கதையல்ல… நிஜம். இப்போது எழும் கேள்விகள்:

  அ. அந்தப் பெண்மணிக்கு எங்கள் வீட்டில் அழையா விருந்தாளியாக நுழைந்து, எங்கள் கருத்து பற்றிய கவலையின்றி பைபிள் படிக்க முடிகிறது. ஆனால், சிவபுராணம் கேட்க அவருக்கு பிடிக்கவில்லை. அதாவது எனது வழிப்பாட்டிற்குரிய தெய்வமும் மதமும் அவருக்கு கேவலமானது. அதே சமயம் அவரது கர்த்தரை நான் ஏற்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இது எவ்வகையில் சமநிலை கொண்டது?
  ஆ. இவ்வாறு பிறர் வீட்டிற்குள் புகுந்து அவர்கள் மதத்தை மாற்று என்று தேவன் இயேசு கூறி இருக்கிறாரா? அவ்வாறெனில், ‘அயலானையும் நேசி’ என்ற அவரது உபதேசம் ஊருக்கு மட்டுமா?
  இ. மதம் மாறுவதால் பண்பாடும் மாறி விடுமா? புதியவர ஒருவரது வீட்டுக்குள் இவ்வாறு நுழைவதற்கு நமது மண்ணில் ஒரு பழமொழி இருக்கிறதே. நாயும் கூட விரட்டினால் வாசலுக்கு ஓடி விடும். மதப்பற்று, பகுத்தறிவையுமா முடக்கி விடும்?
  – இப்படி பல்வேறு கேள்விகள் எழுந்தன.

  அன்றே என் வீட்டில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை (அம்மாவின் எதிர்ப்பை மீறி) எனது கிறிஸ்தவ நண்பரிடம் கொடுத்துவிட்டேன் (கவனிக்கவும்: உடைக்கவில்லை).
  இது எனது பால்யகால அனுபவம். இதற்குப் பிறகும், பஸ் ஸ்டாண்டில், கோயில் வாசலில், மருத்துவமனையில், தெருமுனையில்… பல இடங்களில் இத்தகைய மதப் பிரசாரத்தை கடந்துகொண்டு தான் இருக்கிறேன். ஆனால், மதச்சார்பின்மை பேசுபவர்கள் ‘சமநிலை’ குறித்து உபதேசிக்கிறார்கள்….

  ”தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று தேவமைந்தனும் மனிதகுமாரனும் ஆன இயேசு சிலுவையில் அரற்றியது ஏன் என்று இப்போது தான் புரிகிறது.
  இவர்களது அரற்றல்கள், அலட்டலகளுக்காக நீங்கள் கவைப்பட வேண்டியதில்லை. ”சத்யமேவ ஜெயதே” என்ற உபநிடதப் பெரு வாக்கியம் போதும் – நம்மை வழி நடத்த.
  -வ.மு.முரளி.

Comments have been disabled.