ஜெ,
இச்ச்செய்தியைப் பாருங்கள். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் பேசும் முற்போக்காளர்களில் எவரேனும், ஒரே ஒருவரேனும், இந்த பெண்மணிக்காக பேசினால் உண்மையிலேயே அவர்களிடம் அடிப்படை நேர்மை உண்டு என நம்புவேன். ஜனாப் அ.மார்க்ஸோ அப்துல் ஹமீது மனுஷ்யபுத்திரனோ பேசமாட்டார்கள். மற்றவர்கள் ஒருவராவது பேசினால் நல்லது. சொல்லுங்கள். அதன்பிறகு கருத்துச்சுதந்திரம் பற்றிப்பேசுவோம்
இந்தப் பெண்மணி வேண்டுமென்றே ஏதும் செய்யவில்லை. எழுதவில்லை. அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அந்தச்செய்தியில் இணையத்தில் இருந்த ஒரு படம் இடம்பெற்றது. அந்தப்படத்தில் இருந்தவர் கையில் சார்லி ஹெப்டோ இதழின் படம் இருந்தது
அதற்காக அந்த இதழே மூடப்பட்டது. இதழ் உரிமையாளர் மன்னிப்பு கோரினார். அந்த ஆசிரியரே அந்த இதழிலேயே மன்னிப்பு கோரினார். எல்லா முஸ்லீம் அமைப்புகளுக்கும் மன்னிப்பு கோரி கடிதம் போட்டார். ஆனால் ‘மன்னிப்பு அளிக்கமாட்டோம்’ என்று அவருக்கு எதிர்ப்பாளர்கள் அறிவிதார்கள்
வெறும் மிரட்டல் அல்ல. கொலை மிரட்டல். அதிலும் உலகளாவிய நெட்வர்க் உள்ள அமைப்பின் மிரட்டல். அந்தப்பெண்மணியை மன்னித்துவிடலாம் என்று ஒரு இஸ்லாமியத் தலைவர் கூட இதுவரை சொல்லவில்லை. டிவியில் வந்துஅளவிடமுடியாத கருணை கொண்ட ஆண்டவனை வழிபடும் அமைதிமார்க்கம் என்பவர்கள் வாய் திறக்கவில்லை.
அந்த பெண்மணி தலைமறைவாகவே இனி எஞ்சிய வாழ்க்கையைச் செலவிடவேண்டும். அந்தப்பெண்மணியின் மகள்கள் கூட தலைமறைவாக வேண்டும். நீதிமன்றத்தில் ஏகப்பட்ட வழக்குகள். வழக்கை சந்திக்க வந்தால் கொலை நிகழும். அதாவது நீதிமன்றமே அவர்களை பிடித்துக்கொடுக்கப்போகிறது
ஆனால் நம் முற்போக்காளர்களுக்கு இது பத்திரிகைச் சுதந்திர விவகாரம் இல்லை. கருத்துச்சுதந்திர விவகாரம் இல்லை
உயிர்மையை விடுங்கள். அதை முஸ்லீம் முரசு பட்டியலில் சேர்த்து நாளாகிறது. தமிழ்நாட்டில் மற்ற சிற்றிதழ்கள் காலச்சுவடு, உயிர்எழுத்து,தீராநதி,அமிருதா, அந்திமழை என்று பெருமாள்முருகனுக்காக பொங்கிக்கொந்தளித்த ஏதாவது ஒரு இதழ் ஒரு கட்டுரை இதைப்பற்றி போட்டால் எனக்கு ஒரு செய்தி கொடுங்கள்.
உண்மையிலேயே கேட்கிறேன். இங்குள்ள எழுத்தாளர்கள் நடுநிலை வாசகன் என்பவன் இதையெல்லாம் பார்க்கிறான் என்று நினைக்கிறார்களா?
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்
அந்த இணைப்பில் உள்ள கட்டுரையில் கடைசியில் என்.டி.டி.வி கொடுத்துள்ள டிஸ்கிளெயிமர் தான் எனக்கு முக்கியமாகப் பட்டது
நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிடுகிறேன். என் டிஸ்கிளெய்மர். இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகப்பேசும் ஆற்றல் எனக்கு இல்லை. எந்த நாளிதழுக்கும் இல்லை. இந்திய அரசுக்கே இல்லை.அப்புறமென்ன?
பிற முற்போக்கு அறிவுஜீவிகளைப்போல அதனிடமே போய் கைநீட்டாமலிருக்கும் நேர்மை மட்டும் இருக்கிறது.
ஜெ