பித்தனின் பத்துநாட்கள்

waan

நாவல் எழுதுதையும் வாசிப்பதையும் போல உல்லாசம் நிறைந்த பணி பிறிதில்லை. இந்த அற்பமான, சில்லறைத்தனமான, அடிப்படையில் உள்பொருளென ஏதுமற்ற, ஒழுங்குகளற்ற, உலகை விட்டு விலகி நமக்கென்றொரு உலகை ஆக்கிக்கொள்கிறோம். ஒழுங்கும் பொருளும் கொண்ட ஆழமான உலகம் அது. அந்தக்கனவைப்போல் வாழ்க்கையை முழுமையாக நிறைக்கும் ஒன்றை நான் அறிந்ததில்லை.

ஆனால் அது நிகர்வாழ்க்கை. இவ்வாழ்க்கையின் அனைத்தும் அங்கும் உண்டு. துயரம், அவமதிப்பு, தனிமை, கசப்புகள். கூடவே செறிவான வாழ்க்கையும். ஆகவே அனைத்து உணர்ச்சிகளும் செறிவாக ஆகிவிடுகின்றன. சுழற்றியடித்துவிடுகின்றன, பித்துப்பிடிக்க வைக்கின்றன. நான் உண்மையில் வாழ்வது அதில். ஆகவே இங்கே இதில் என் செயல்களுக்கு பொருளிருப்பதில்லை. இங்குள்ளவர்கள் என்னை வெறுப்பது நியாயம். அதற்காக அவர்களிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டியதுதான். ‘மன்னிக்கவும் ஒரு சின்ன குளறுபடி. இது வேறு மனிதன், வழிதவறி வந்தவன்’

வெண்முகில்நகரம் தொடங்கியதுமே கதை அக்னியில் இருந்து எழுந்தது. அதை ஒரு உத்வேகமூட்டும் அனுபவம் என்பேன். ஆனால் எரிதலேதான். காமத்தை ஒவ்வொரு இதழாகத் தொட்டு விரித்து விரித்துச் செல்லும் பயணம். இறுதியில் அது ஒரு தாந்த்ரீக அனுபவமாக ஆகி முடிந்தது.

முன்பொருநாள் அ.கா.பெருமாள் அவரது இல்லத்தில் கொண்டுவைத்திருந்த சில தாலியோலைச் சுவடிகளை காட்டினார். யாரோ கொடுத்தவை. கன்யாகுமரியிலிருந்த தொல்பொருள்நிலையம் அவற்றை வாங்க முடியாது என்று சொல்லிவிட்டது- நிதி இல்லை. சும்மா கொடுத்தாலும் வாங்கமுடியாது – இடமில்லை. தூக்கிப்போடவும் மனமில்லை.

அனைத்துமே தாந்த்ரீகச் சுவடிகள். “என்ன செய்ய சொல்லுங்கோ? நான்குநாட்களாகிறது. கெட்ட கனவா வருது. ரூம்பிலே ஒரு நடமாட்டம் இருக்கு.. இதிலே என்னவோ இருக்கு. வீட்லே வச்சுக்கிட முடியல்ல கேட்டேளா?” என்றார் அ.கா.பெருமாள்.

நான் “அதெல்லாம் வெறும் சைக்காலஜிக்கல் விஷயம் சார். என்ன நடக்குதுன்னு நான் சொல்றேன். நம்ம ஆழ்மனசு இருக்கே…” என்று ஆரம்பித்தேன்.

கேட்டு முழுமையாக ஏற்றுக்கொண்டு “செரி, அப்டீன்னாக்க எல்லாத்தையும் நீங்க கொண்டு போறேளா?” என்றார் அ.கா.பெருமாள்.

“அய்யய்யோ” என்று சொன்னேன். ”எனக்கு அந்த கொள்கைகளெல்லாம் தெரியும். ஆனால் பேயெல்லாம் என்னைத்தான் ரொம்ப சுத்திவரும்” என்றேன்.

“ஸ்ரீம்” என்ற மந்திரம் தேவிக்குரியது. அந்த மந்திரத்தை யோகசாதகன் அன்றி எவரும் சொல்லக்கூடாது என்பார்கள். “தட்டளிஞ்ச குதிரையாக்கும்” என்று சாக்த யோகியான குமாரன் அண்ணா சொல்வார்.

ஆனால் இப்புனைவு வழியாக நான் சென்று இறங்கியது அதில். நாட்கணக்கில் உச்சாடனம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக பித்தேறி, ஒருகட்டத்தில் வாசனைகள் வரத்தொடங்கின. கனவுகள் உருவெளித்தோற்றமாக மாறின. விழித்திருக்கையிலேயே உண்மையில் நிகழ்வதுபோலவே கனவுகள் கடந்துசென்றன.

கீழ்மையின் அடித்தளம் – அவ்வளவுதான் சொல்லமுடியும். என்னசெய்வதென்று தெரியவில்லை. எங்கே நிறுத்துவதென்றும் தெரியவில்லை. நிறுத்த முயலலாம் என்றால் அதற்கான மனம் என என்னிடம் ஏதுமில்லை. முக்கியமாக எங்கும் அமர்ந்திருக்க முடியவில்லை. நாகர்கோயிலில் பேருந்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். எப்போதுமே கொந்தளிப்பான நிலை.

waan2,1

அதை இப்போது விளக்கமுடியாது. இப்போது சொல்வதெல்லாம் நினைவுகூரல். அல்லது நினைத்து உருவாக்கிக்கொள்ளல். எக்கணமும் எவரையும் கொல்லக்கூடும் என்ற நிலை. ஓடும் சக்கரங்களின் கீழே நூறுமுறையாவது விழுந்து எழுந்திருப்பேன். எழுதித் தொலையலாம் என்றால் எதுவுமே வரவில்லை. திரும்பத் திரும்ப அந்த மந்திரம்தான். ஓம்!ஸ்ரீம்!ஹம்!. பின்னர் ஒரு சொற்றொடர். ஓம்! சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்!

நான் சொல்வது எவருக்காவது புரியுமா என்று தெரியவில்லை. மந்திரங்கள், அவை எவையாக இருந்தாலும், ஆழ்மனதை ஆக்ரமிப்பவை. வெளியே செல்ல விடாமல் அள்ளிச் சுழற்றுபவை. டி.எஸ்.எலியட்டின் வரிகளும் பிரமிளின் வரிகளும்கூட எனக்கு மந்திரங்களாகியிருக்கின்றன.

ஆனால் இது அப்படி அல்ல. இது நூற்றாண்டுகளாக எவரெவரோ சொட்டிய நெஞ்சக்குருதியில் நனைந்தது. சொட்டும் குத்துவாள். உண்மையில் ஒருகட்டத்தில் நான் வெளியே செல்ல விரும்பி, ஏங்கி, ஆனால் விடாமல் அதைச் சொல்லிக்கொண்டிருந்தேன். சொல்லவே வேண்டியதில்லை அதுவே ஓடும். இதென்ன கிறுக்குபிடித்துவிட்டதா என்ற அச்சமும் கூடவே ஓடி, ஒரு கட்டத்தில் அச்சம் மறைய, அது மட்டும் ஓடும். விழித்தால் நாகர்கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் இருப்பேன்.

சகமனிதர்கள் மேல் அத்தனை உக்கிரமான வெறுப்பு ஏன் வந்தது? கேட்கும் ஒவ்வொரு குரலும் கல்லைத் தூக்கி மேலே வீசுவதுபோல. ஆனால் பல்லாயிரம் பேர் வெறிகொண்டு கூச்சலிடும் ஓசை எனக்குள்ளே. பஸ்ஸில் ஒருவன் பையை நீக்கியபடி என்னிடம் “காலை எடுங்கசார்” என்றான். “டேய் நாயே பாத்துப்பேசுடா. செருப்பாலே அடிப்பேன்” என்றேன். எழுந்து கத்த ஆரம்பித்தான். நானும் கத்த படபடவென்று முகத்தில் அடித்துவிட்டான். திகைத்தபின் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வெயிலில் நடந்து திரும்பினேன்

ஆனால் இது ஒருபக்கம். இன்னொருபக்கம் காய்கறி வாங்கினேன். சமைத்து சாப்பிட்டேன். தொலைபேசியில் பேசினேன். சிரித்தேன். அது வேறு ஒரு முகம். அதன் நடுவேகூட இது ஓடிக்கொண்டிருக்கும். அப்படியே எகிறி மேலேறிவிடும். பின்னிரவில் விண்மீன்களுக்குக் கீழே நின்றிருப்பேன். ஆடைகள் அணியாமல். ஆடையைப்போல அருவருப்பாக ஏதுமில்லை என்று தோன்றும்.

ஒரு புள்ளியில் அந்த மந்திரத்தையே திரும்பத்திரும்ப ராமஜயம் போல எழுதியபோது சொற்கள் வந்தன. எழுதி முடித்தேன். ஒருநாள் முழுக்க தூக்கம். ஆனால் மீண்டும் எழுந்தபோது அதே நிலை நீடித்தது. என்னசெய்வதென்று தெரியவில்லை. என்ன செய்தாலும் அதேதான். நாம் சிறைப்பட்டிருக்கும் தனியறையில் டிவியை ஆஃப் செய்யவே முடியாமல் போனால் எப்படி அதுதான்.

ஒன்று தோன்றியது. எப்போதோ நித்யாவின் மாணவர் ஒருவர் அந்தவழியை சொல்லியிருந்தார். பல சாமியார்கள் வழிதவறி விழும் குழியும் அதுதான். போர்ன் சைட் ஒன்றுக்கு போனேன். எனக்குள் ஓடிக்கொண்டிருந்தவை நூறுநூறு மடங்கு பெரிய போர்ன். அந்த எளிய மானுட உடல்களின் அசைவு வலுக்கட்டாயமாக என் மிருகத்தை அதை நோக்கி ஈர்ப்பதைக் கண்டேன். முதன்முறையாக இன்னொன்றில் இறங்கமுடிந்தது.

பார்த்தால், எனக்கு நன்கு தெரிந்த மலையாள நடிகை! பாலியல்படங்களில் நடிப்பாள் என தெரியும், அத்தகைய வேடத்துக்குத்தான் அவளிடம் பேசினோம். கலைப்படத்தில் அப்படி ஒரு வேடம் அவளுக்கும் கௌரவம் என நினைத்திருப்பாள். ஆனால் அவள் இந்த எல்லைவரை நடிப்பாள் என்று தெரியாது.

மூளை அணைந்தது. ஒரு நீண்ட நடைக்குப்பின் கிட்டத்தட்ட சுமுகமாகி அதிலிருந்தும் மீண்டேன். அவளை ஃபோனில் அழைத்து என்ன இதெல்லாம் என்று கேட்டேன். ஒரே அழுகை. ’சாரி ஜெயேட்டா” என்று கொஞ்சல். மீண்டும் மீண்டும். ஃபோனில் அழைப்பு.

(ஆனால் இனி அவள் நடிக்கமுடியாது. அரங்கில் கூச்சல் வரும். எனக்குத்தான் தெரியவில்லை. படத்துடன் சம்பந்தப்பட்ட எவருக்குமே தெரியவில்லை என்பது ஆச்சரியம். கலைப்படம் எடுப்பவர்கள் வாழும் உலகமே வேறு)

அவ்வளவுதான். மீண்டும் அன்றாட வாழ்க்கை. மீண்டும் அந்த அத்தியாயத்தை எடுத்துப்பார்த்தேன். ஒரே உளறல். நாலைந்துமுறை வாசித்து அதிலுள்ள அர்த்தங்களை எடுத்து அதனடிப்படையில் ஒரு வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி வெண்முகில்நகரில் இணைத்தேன். ஆசுவாசமானேன்.

ஒருநாள் முழுக்க என்ன செய்வதென்று தெரியவில்லை. உஷ்ணம் உஷ்ணேன சாந்தி என்பார்கள். ஆகவே வெண்முகில் நகரத்திலேயே அடுத்த கட்டத்தை எழுத ஆரம்பித்தேன். இனிமையான உற்சாகமான ஒரு காதல்கதையின் அத்தியாயங்கள். மீண்டுவிட்டேன்.

இத்தனை வதைகளுக்கும் அப்பால் இது பயனுள்ளதே. இது வாழ்க்கையை விரியவைப்பது. முழுமையாக்குவது. சாலையில் செல்லும் எனக்குள் குமுறும் தேவியை அருகே ஹார்ன் அடித்து “ஓத்தா பாத்துப்போடா” என்று சொல்லும் பைக் ஆசாமி அறியவே முடியாது. என் நண்பர்கள் சிலரன்றி அறியமுடியாது. அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் மட்டுமரியாதைகளை, இடக்கரடக்கல்களை நான் ஒருவழியாக நடித்துக் கொடுத்துவிடுவேன்.

ஆனால் இந்தக்காரணத்துக்காகத்தான் அந்தக்காலத்தில் காவி அணிந்தார்கள் போல. நானும் ஒரு காவியைக் கட்டியிருந்தால் பேருந்தில் அந்த ஆசாமி கைநீட்டியிருக்க மாட்டான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Feb 7, 2015 

முந்தைய கட்டுரைஇரட்டைமுகம்
அடுத்த கட்டுரைஅரசியலும் இலக்கியமும் -கடிதம்