‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27

பகுதி 7 : மலைகளின் மடி – 8

அவை நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியே சென்றபின் சலன் பூரிசிரவஸ்ஸிடம் “நாளை காலையே சௌவீரர் வருகிறார். அவை நாளைக்கு வேறுவகையில் அமையவேண்டும். அனைத்து அரசர்களும் நிகரான அரியணையில் அமரவேண்டும். அதை அமைத்தபின் நீ அறைக்கு செல். நான் உளவுச்செய்திகளை நோக்கவேண்டியிருக்கிறது” என்றபடி சென்றான்.

ஃபூரி “அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இங்குள்ளார்கள் என்று உண்மையிலேயே சலன் நம்புகிறான். இப்படி ஒரு நாடு இருப்பதை அஸ்தினபுரிக்கு கண்டுசொல்லத்தான் முதலில் ஓர் ஒற்றன் தேவை” என்றான்.

பூரிசிரவஸ் புன்னகைத்தான். சேவகர்கள் அவையை தூய்மைசெய்யத் தொடங்கினர். “நான் சென்று இளைய மத்ரர் சூதாடுவதில் விருப்புள்ளவரா என்று கேட்டுப்பார்க்கிறேன். தியுதிமான் என்று பெயருள்ளவர்கள் சிறப்பாக வெல்லக்கூடியவர்கள் என்று சொல்லிப்பார்க்கிறேன். சரியான எதிர் கை அமைந்து நெடுநாட்களாகின்றன. சல்லியர் எனக்கு மூத்தவர். அவரது மைந்தர்கள் மிக இளையவர்” என்றபின் புன்னகையுடன் “உன் இளவரசியை பார்த்தேன். கூரிய மூக்கை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யபோகிறாய்? அந்த சிபிநாட்டு இளவரசிக்கு இவளுக்கும் சேர்த்தே மூக்கு இருக்கும்” என்றான் ஃபூரி. பூரிசிரவஸ் “ஆம் மூத்தவரே” என்றான். “மூக்கு பற்றிய பூசல் தொடங்கட்டும்…” என்றபின் அவன் சென்றான்.

சேவகர்கள் அவையை தூய்மைசெய்து திரைச்சீலைகளை கட்டி முடித்து அரியணைகளை மீண்டும் ஒழுங்கமைத்து முடிக்கையில் இரவு பிந்திவிட்டது. பூரிசிரவஸ் உடலை துயில் வந்து அழுத்தியது. நேரம் செல்லச்செல்ல துயிலின் எடை கூடிக்கூடி வந்தது. எப்போது முடிப்பார்கள் என்ற சலிப்புடன் ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தான். ஐயம் போக இறுதியாக ஒருமுறை நோக்கியபின் “இதில் எந்த மாறுதல் செய்வதாக இருந்தாலும் எனக்கு தெரிவிக்கப்படவேண்டும். அரசரோ மூத்தவரோ ஆணையிட்டால்கூட” என்றான். சேவகர்தலைவன் “ஆணை” என்றான். அவன் விழிகளிலும் துயில் இருந்தது.

பூரிசிரவஸ் வெளியே வந்து அவைக்கூடத்தை பூட்டச்செய்து தாழ்க்கோலை தலைமைச்சேவகனிடம் கொடுத்தனுப்பிவிட்டு இடைநாழி வழியாக சென்றபோது மெல்லிய வளையலோசையை கேட்டான். நாகத்தை உணர்ந்த புரவி என அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. சிரித்தபடி அவன் தங்கை சித்ரிகை வெளியே வந்து “யாருடைய வளையல் என்று நினைத்தீர்கள்?” என்றாள். “இங்கே என்ன செய்கிறாய்?” என்றான். “ஏன்? நான் இங்கே வரக்கூடாதா?” என்றாள். “சற்று முன்னால் வந்திருந்தால் அவைக்கூடத்தை துடைக்கச் சொல்லியிருப்பேன்…” என்றான்.

“இத்தனை நேரம் அதைத்தான் செய்தீர்களா?” என்றாள். பூரிசிரவஸ் சிரித்தபடி அவள் செவியைப் பிடித்தபோதுதான் தூணுக்கு அப்பால் விஜயை நின்றிருப்பதை கண்டான். அவளுடைய செந்நிற பூப்பின்னல் ஆடைதான் முதலில் தெரிந்தது. சித்ரிகையின் காதை விட்டுவிட்டு “மூடத்தனமாக பேசுவாள்” என்றான். விஜயை சிறிய விழிகளால் நோக்கி புன்னகைசெய்தாள். அவள் பற்கள் மிகச்சிறியவையாக இருந்தன. தோள்கள் இடை கைகள் எல்லாமே மிகச்சிறிதாக கங்காவர்த்தத்தின் தந்தப்பாவை போலிருந்தன. ஒருகையால் அவளை தூக்கிவிடலாமென்று எண்ணினான்.

சித்ரிகை “இவள் தங்களை பார்க்க விழைகிறாள் என்று அறிந்தேன். எப்படி அறிந்தேன் என்று கேளுங்கள்” என்றாள். “சொல்” என்றான். “கேளுங்கள்” என அவள் அவன் கையை அடித்தாள்.

சித்ரிகையின் பேச்சில் எப்போதுமே இருக்கும் சிறுமிகளுக்குரிய எளிய அறிவுத்திறனும் சிரிப்பும் அவனை புன்னகைக்க வைத்தது, “சொல்லுங்கள் இளவரசி” என்றான். “இவள் இங்குள்ள சேடியிடம் கேட்டாள். சேடி என்னிடம் சொன்னாள்.” பூரிசிரவஸ் “நுட்பமாக புரிந்துகொள்கிறாய். அந்தச்சேடி உன் உளவுப்பெண்ணா?” என்றான். “எப்படி தெரியும்?” என்றாள் சித்ரிகை. பூரிசிரவஸ் சிரித்தபடி விஜயையை பார்த்தான். அவளும் சிரித்தாள். “ஆகவேதான் நான் இவளை கூட்டிவந்தேன். நான் இங்கே நிற்கலாமா?”

“மலைமகள் விரும்பியவரை பார்க்கவும் பேசவும் தடை என்ன உள்ளது?” என்றான் பூரிசிரவஸ் விஜயையை நோக்கி. “ எதற்காக இவள் உதவி?” விஜயை “உதவியை நான் கோரவில்லை. அவளே அதை அளித்தாள்” என்றாள். சித்ரிகை “நான் கதைகளிலே வாசித்தேன். தோழியின் உதவியுடன்தான் நாயகி ஆண்களை பார்க்கச்செல்லவேண்டும். தனியாக செல்பவளை அபிசாரிகை என்கிறார்கள்.”

பூரிசிரவஸ் சிரித்து அவள் தலையைத் தட்டி “சரி, நீ உன் அறைக்கு செல். நான் இவளிடம் பேசிக்கொள்கிறேன்” என்றான். சித்ரிகை “நான் உடனே துயின்றுவிடுவேன். அவளையே துயிலறைக்கு செல்லும்படி சொல்லுங்கள். நான் நாளையும் காலையில் எழுந்தாக வேண்டியிருக்கிறது” என்றபடி சென்றாள்.

“மிக எளியவள்” என்றான் பூரிசிரவஸ். “மலைக்குடிப்பெண். இளவரசி என்பது ஆடையணிகளில் மட்டுமே.” விஜயை புன்னகையுடன் “நானும் மலைக்குடிமகள்தான்” என்றாள். “நான் அதையே விரும்புகிறேன்… குறைவாக நடித்தால் போதுமே” என்றான். “தங்களை நான் சந்தித்துப்பேசி என் எண்ணத்தை தெரிவிக்கவேண்டும் என்றார் என் அன்னை. தங்களை என் மணமகனாக அவர்கள் எண்ணியிருக்கிறார்கள். அதற்காகவே வந்தேன்.”

“மலைமகளாகவே இருந்தாலும் இந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை கூடாது” என்று அவன் சிரித்தான். “வருக! நந்தவனத்தில் அமர்ந்து பேசுவோம்.” விஜயை “வெளியே குளிராக இருக்காதா?” என்றாள். “இல்லை, இங்கே மேலே கூரையிட்ட நந்தவனம் ஒன்று உண்டு. என் இளைய தமையன் கிம்புருடநாட்டில் கண்டது அது” என்றான். “கொட்டகைக்குள் தோட்டமா?” என்றபடி அவள் அவனுடன் வந்தாள்.

அரண்மனையின் பின்பக்கம் பெரிய மரப்பட்டைகளால் கூரையிடப்பட்ட பெரிய கொட்டைகை நூற்றுக்கணக்கான மெல்லிய மூங்கில்தூண்களின் மேல் நின்றிருந்தது உள்ளே மரத்தொட்டிகளில் பூச்செடிகளும் காய்கறிச்செடிகளும் இடையளவு உயரத்திற்கு வளர்ந்து நின்றன. அவள் திகைப்புடன் நோக்கி “இவற்றில் எந்தச்செடியையும் நான் பார்த்ததே இல்லை” என்றாள். “இவை கீழே கங்காவர்த்தத்தில் வளர்பவை. இங்குள்ள குளிரில் இவற்றின் இலைகள் வாடிவிடும். ஆகவேதான் கொட்டகைக்குள் வைக்கிறோம்.”

“வெயில்?” என்றாள். “ஒவ்வொருநாளும் இவற்றை வெளியில் அப்படியே இழுத்து வைத்துவிடுவார்கள்” என்றான். அவள் அப்போதுதான் அந்தத் தொட்டிகளுக்கு அடியில் சக்கரங்களை பார்த்தாள். புன்னகையுடன் “நல்ல திட்டம்” என்றாள். “அரண்மனை என்றால் ஏதாவது ஆடம்பரமாக தேவை என்று மூத்தோர் நினைத்தார். ஆனால் நான் இதை விரும்பத் தொடங்கிவிட்டேன்” என்றான். “இவற்றில் பெரும்பாலான செடிகள் குளிர்காலத்தில் குறுகிவிடும். சிலசெடிகள் மறையும். ஆனால் கோடையில் மீட்டு கொண்டுவரலாம்.”

அவள் செடிகளை நோக்கிக்கொண்டே சென்றாள். “காலையில் பார்த்தால் வண்ணங்கள் நிறைந்திருக்குமென நினைக்கிறேன்.” பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “அரண்மனைப் பெண்களைப்போல வெளிக்காற்றுக்கு அஞ்சி சிறைப்பட்டவை…” என்றாள். “இங்கே நம் மலைக்குடிகளில் இற்செறிப்பு என ஏதுமில்லை. கங்காவர்த்தத்தின் ஷத்ரிய இளவரசிகள் மூடுபல்லக்கில் மட்டுமே வெளியே செல்லமுடியும்.”

அவள் இயல்பாக “எல்லோருமா?” என்றாள். “காம்பில்யத்தின் இளவரசியைப்பற்றி அவ்வண்ணம் கேள்விப்படவில்லையே!” மிக நுட்பமாக அவள் அங்கே வந்துசேர்ந்ததை உணர்ந்ததும் அவன் புன்னகைசெய்தான். “என்ன கேள்விப்பட்டாய்?” என்றான். “பேரழகி என்றார்கள். ஆனால் ஆண்களைப்போல போர்க்கலையும் அரசுசூழ்தலும் அறிந்தவள். எங்கும் முன்செல்லும் துணிவுள்ளவள். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக ஆகப்போகிறவள்.” பூரிசிரவஸ் வாய்விட்டு சிரித்தான்.

“என்ன?” என்று அவள் புருவத்தை சுளித்துக்கொண்டு கேட்டாள். “ஒன்றுமில்லை. அவளைப்பற்றி அரண்மனைப் பெண்கள்தான் கூடுதலாக அறிந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம் அதிலென்ன? அரண்மனைப்பெண்களெல்லாம் அவளைப்போல் ஆக ஏங்குபவர்கள்தானே?” அவன் அவளை கூர்ந்து நோக்கி “ஏன்?” என்றான். “ஐந்து கணவர்கள் காலடியில் கிடக்கிறார்கள். ஒரு பேரரசின் மணிமுடி. வேறென்ன வேண்டும்?” பூரிசிரவஸ் புன்னகைத்து “ஐந்து கணவர்கள் வேண்டுமா உனக்கும்?” என்றான்.

அவள் சீற்றத்துடன் திரும்பி “வேண்டாம். ஏனென்றால் எனக்கு அதற்கான திறன் இல்லை” என்றாள். “ஆனால் நான் பொறாமைப்படுவேன்.” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “சிரிப்பு எதற்கு?” என்றாள். “கீழே ஆரியவர்த்தத்தின் அரசிகள் இத்தனை வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.” அவள் சற்று சீற்றத்துடன் “இல்லை, எல்லா ஆண்களும் ஓர் இளிவரலாகவே அதை சொல்லத் தொடங்கிவிட்டனர். இங்கே மலைமேல் பத்துகணவர்களைக்கொண்ட பெண்கள்கூட உள்ளனர். என் பாட்டிகளில் இருவருக்கு நான்கு கணவர்கள் இருந்தனர்” என்றாள். “நான் இளிவரலாக அதைச் சொல்லவில்லை” என்றான் பூரிசிரவஸ்

“சொல்லுங்கள். அவள் எப்படி இருந்தாள்?” பூரிசிரவஸ் ஒருகணம் சிந்தித்து “அவளை அழகு என்று சொல்லமாட்டேன். நோக்கும் எவரையும் அடிபணியவைக்கும் நிமிர்வு அது. தெய்வங்களுக்கு மட்டும் உரிய ஒரு ஈர்ப்பு…” என்றான். அவள் “அதைத்தான் அழகு என்கிறார்கள். அவளையே கொற்றவை வடிவம் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள். அவள் விழிகள் மாறுபட்டன “நீங்கள் வில்தீண்டவில்லையா?” என்றாள். “இல்லை. நான் வெறுமனே விழவுகளுக்காகவே சென்றேன்.” அவள் விழிகளை பூக்களை நோக்கித் திருப்பி “ஏன்? அவளை நீங்கள் விழையவில்லையா?” என்றாள்.

“இல்லை என்று சொன்னால் பொய்யாகும். ஏனென்றால் எந்த ஆணும் தன்னை சக்ரவர்த்தியாகவே தன் பகல்கனவில் எண்ணிக்கொள்கிறான்…” என்றான். “ஆனால் அவளை நேரில் கண்டதுமே ஒன்று தெரிந்துகொண்டேன். நான் மிக எளியவன். அந்த உண்மையை நான் இல்லை என கற்பனைசெய்துகொள்வதில் பொருளில்லை. ஆகவே களமிறங்கவில்லை” அவள் ஓரவிழியால் அவனை வந்து தொட்டு “இங்கே நீங்கள் இளவரசர் மட்டுமே என்பதனாலா?” என்றாள்.

“அதில் எனக்கு இழிவென்பது ஏதுமில்லை. என் தமையனுக்கு கீழ்ப்பட்டிருப்பதில் நிறைவே” என்றான். “ஆனால் என் அகம் சொல்கிறது, நான் எங்கோ நாடாள்வேன் என. அது எங்கே என எனக்குத் தெரியாது. ஆனால் மணிமுடி சூடுவேன். போர்களில் இறங்குவேன். என் வாழ்க்கை இந்த மலைநாட்டைவிட பெரியதுதான்.” பூரிசிரவஸ் அவள் முகம் சிவப்பதைக் கண்டான். மூச்சுத்திணறுபவள் போல நெஞ்சில் கைவைத்தாள். அப்போதே அவள் கேட்கப்போவதென்ன என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.

“அது சிபிநாடாக இருக்குமா?” என்றாள். ஒரு கணம் அவனை நோக்கிவிட்டு விழிதிருப்பிக்கொண்டாள். பூரிசிரவஸ் புன்னகைத்து “நான் எதையும் மறைக்க விழையவில்லை. சிபிநாட்டுக்குச் சென்றேன். அங்கே அரசரின் மகள் தேவிகையை பார்த்தேன். சற்றுநேரம்தான் பேசினோம், இதைப்போல. அவளை நான் விரும்பினேன். அவளைத் தேடி திரும்பவருவேன் என ஒரு சொல் அளித்து மீண்டேன்” என்றான். “அப்படியென்றால்…” என அவள் சற்று தடுமாறி உடனே விழிதூக்கி அவனை நோக்கி “என்னைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?” என்றாள்.

“உன்னையும் நான் விரும்புகிறேன். நீ வருவதற்குள்ளே உன்னைப்பற்றிய கனவுகளை வளர்த்துக்கொண்டேன்” என்றான். “எனக்கு இருவருமே வேண்டுமென்று தோன்றுகிறது.” அவள் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “ஆம், அரசகுடிகளில் அப்படித்தான். ஆனால்…” என்றபின் “என்னைப்பற்றி அவளுக்கும் தெரியவேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். அதற்கு முன் என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றான். அவள் சீற்றத்துடன் தலைதூக்கி “அதைக்கூட தெரிந்துகொள்ளாத மூடரா நீங்கள்?” என்றாள்.

அவன் சிரித்தபடி “அப்படியென்றால் சரி” என்றான். “என்ன சரி? இனிமேல் எத்தனை இளவரசிகளைக் கண்டு விருப்பம் கொள்வதாக திட்டம்?” என்றாள். “இனிமேல் எவருமில்லை” என்றான். “அது ஒரு வாக்கா?” என்றாள். “ஆம், இந்த காற்றும் மலர்களும் அறியட்டும்.” அவள் நிமிர்ந்து அவனை சிலகணங்கள் நோக்கிவிட்டு “எனக்கு ஏனோ படபடப்பாக இருக்கிறது. நான் நினைத்ததுபோல இது இல்லை” என்றாள்.

“ஏன்?” என்றான். “இந்தத்தருணம். இதை நான் சொல்லும் நேரம்… என் நெஞ்சு தித்திக்கும் என்று நினைத்தேன்.” பூரிசிரவஸ் குனிந்து “இல்லையா?” என்றான். “இல்லை. எனக்கு அச்சமாக இருக்கிறது. வல்லமை வாய்ந்த எவரோ மறுபக்கம் நின்று இதைக்கேட்டு புன்னகை செய்வதுபோல.” பூரிசிரவஸ் “வீண் அச்சம் அதெல்லாம்” என்றான். “இல்லை… என்னால் அச்சத்தை கடக்கவே முடியவில்லை” என்றபின் அவள் தலைகுனிந்து “சிபி நாட்டுக்குச் சென்ற செய்தியை நான் அறிந்தேன். ஆகவேதான் நானே அன்னையிடம் சொல்லி கிளம்பி வந்தேன்” என்றாள்.

“நீ…” என்றதுமே அவன் புரிந்துகொண்டு “ஆனால்…” என்றபின் சொற்களை விட்டுவிட்டான். “எனக்கு இந்தச் சொற்கள் போதும்” என்றபோது அவள் விசும்பிவிட்டாள். அவன் அதை எதிர்பாராமல் திரும்பி நோக்கிவிட்டு “என்ன இது?” என்றான். அவள் அவனை திரும்பிப்பாராமல் ஓடி இடைநாழியைக் கடந்து மறைந்தாள். அவன் அங்கேயே பூக்கள் நடுவே நின்றிருந்தான். கூரைக்குமேல் மலைக்காற்றில் வந்த மழைத்துளிகள் சுட்டுவிரலால் முழவை அடிப்பதுபோல ஒலித்துக்கொண்டிருந்தன.

பின்னர் அவன் குழம்பிய சித்தத்துடன் நடந்து தன் அறைக்கு சென்றான். அவள் சொன்னபின் அந்த அச்சம் தன்னுள்ளும் குடியேறியிருப்பதை உணர்ந்தான். எவருக்கான அச்சம்? அல்லது எதற்கானது? மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். கண்களை மூடியதுமே சிபிநாட்டின் செந்நிறப் பாலைநிலம் விரிந்தது. தேவிகையின் முகம் தெரிந்தது. அவள் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு உணர்ச்சியுடன் எழுந்து வருவதாக எண்ணிக்கொண்டான். அவளுக்கு அவன் விஜயையிடம் பேசியது தெரியுமா என்ற எண்ணம் வந்தது. என்ன எண்ணம் அது என்ற வியப்பு வந்தது.

அந்த வியப்புடன்தான் காலையில் விழித்துக்கொண்டான். சேவகன் அவனை மணியோசையால் எழுப்பி “ஒற்றர்தலைவர் வந்திருக்கிறார், தங்கள சந்திக்க விழைகிறார்” என்றான். எழுந்து முகத்தைத் துடைத்தபடி “வரச்சொல்” என்றான். ஒற்றர்தலைவர் சலகர் உள்ளே வந்து வணங்கிவிட்டு நேரடியாகவே சொல்லத் தொடங்கினார். “இளவரசே, பால்ஹிகர் இருக்குமிடம் தெரிந்துவிட்டது…” பூரிசிரவஸ் நெஞ்சு படபடக்க “உயிருடன் இருக்கிறாரா?” என்றான். சலகர் புன்னகைத்து “மறுபிறப்பு எடுத்துவிட்டார்” என்றார்.

பூரிசிரவஸ் நோக்க சலகர் “அவரும் சிபிரரும் மறிமான்வேட்டைக்குச் செல்லும் வழியில் மலைச்சரிவில் ஓர் இடையன் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மலைமேலேயே வாழும் பூர்வபால்ஹிக குடியான துர்கேச குலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் குலத்தில் ஓர் இளம்பெண்ணை அன்றுமாலை பால்ஹிகர் மணம்புரிந்திருக்கிறார்.”

பூரிசிரவஸ் சிலகணங்கள் சிந்தையே ஓடாமல் நின்றபின் “யார்?” என்றான். “பிதாமகர்தான். அவர் அந்தப்பெண்ணை கேட்டிருக்கிறார். அவளுக்கும் அவரை பிடித்திருக்கிறது. அவர் கையில் நீலமணி பதிக்கப்பட்ட சிபிநாட்டு முத்திரைகொண்ட விரலாழி இருந்திருக்கிறது. அதை அவள் தந்தைக்கு கன்யாசுல்கமாக அளித்து அவரைப் பெற்றார். அதுதான் அவர்கள் முறைப்படி மணம் என்பது. அன்றிரவு அவளுடன் தங்கியிருக்கிறார். அந்தத் தந்தையிடம் மணிகொண்ட விரலாழி இருப்பதைக் கண்டு நம் ஒற்றர்கள் கேட்டிருக்கிறார்கள்…”

பூரிசிரவஸ் எழுந்துகொண்டு “எங்கே? எந்த இடம்?” என்றான். ”பிரக்யாவதியின் மறுகரையில்… அந்த இல்லத்தை கண்டுபிடிப்பது கடினம்.” பூரிசிரவஸ் “நான் செல்லவேண்டும், உடனே” என்றான். “பிதாமகர் அங்கே இல்லை. அவரும் சிபிரரும் தூமவதிக்கு சென்றுவிட்டார்கள்.” பூரிசிரவஸ் “அவர் அங்கேதான் தங்குவார். ஊருக்கு மீண்டுவரமாட்டார். அவர் வரவேண்டுமென்றால் நானே சென்று அழைக்கவேண்டும்” என்றான். “ஒற்றனை துணைக்கு அனுப்புகிறேன் இளவரசே” என்றார் சலகர்.

பூரிசிரவஸ் அரைநாழிகைக்குள் புரவியில் ஏறிவிட்டான். “சௌவீரர் இன்று வருவார். வரவேற்பு நிகழ்விலும் அவைகூடலிலும் நான் இல்லாதது குறித்து மூத்தவர் கேட்டால் சொல்லிவிடுக!” என்றபடி குதிரையை கிளப்பினான். அவனை மலைநாட்டை அறிந்த ஒற்றன் சகன் சிந்தாவதியின் கரைவழியாகவே இட்டுச்சென்றான்.

இரண்டாம்நாள் கொண்டாட்டம் கொஞ்சம் ஊக்கம் குறைவாக இருப்பதை நகரில் காணமுடிந்தது. சாலையோரங்களில் முந்தையநாள் மதுஅருந்தியவர்கள் பஞ்சடைந்த கண்களுடன் இளவெயிலில் குந்தி அமர்ந்து ஆர்வமே இல்லாமல் பார்த்தார்கள். பசுமாடுகள் மட்டும் வழக்கம்போல வெயிலை உடலால் வாங்கிக்கொண்டிருந்தன. உடலுக்குள் வெயில் நிறைய நிறைய அவை எடைகொண்டு வயிறு தொங்க உடல் சிலிர்த்து அமைதிகொண்டன.

சிந்தாவதி ஷீரவதிக்கும் பிரக்யாவதிக்கும் நடுவே இருந்த மலையிடுக்குக்குள் இருந்து யானைத்தந்தம் போல வெண்மையாக எழுந்து இருபத்தெட்டு சிறிய பாறைப்பள்ளங்களில் சிறிய அருவிகளாகக் கொட்டி வெண்ணிறமான சால்வைபோல இறங்கி வந்து பள்ளத்தாக்கை அடைந்து தேங்கி சிறிய மூன்று ஓடைகளாக ஆகி உருளைக்கல் பரப்பில் பேரோசையுடன் நுரைத்துச் சென்றது .ஆற்றின் கரைவழியாக ஏறிச்சென்றால் பதினேழாவது வளைவில் ஷீரபதம் என்னும் கணவாயை காணமுடிந்தது. அதனுள் மண்சாலை சென்று மறைய அப்பால் தூமவதியின் வெண்ணுரைசூடிய மணிமகுடம் தெரிந்தது.

குதிரை நுரைகக்கத் தொடங்கியதும் நின்று அதை இளைப்பாற்றி அங்கே சாலையோரம் தோண்டப்பட்டிருந்த சிறு ஊற்றில் நீர் அருந்தச்செய்தார்கள். பூரிசிரவஸ் சாலையோரத்துப் பாறையில் நின்றபடி கீழே சிந்தாவதி வெண்ணிறத்தில் பிரிந்தும் இணைந்தும் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தான். ஆங்காங்கே அது அருவிகளாகக் கொட்டும் இடம் மட்டும் வெண்ணிறமாக விரிந்து தெரிந்தது. அதன் நீர் அப்பாலிருக்கும் பனிமலைகள் உருகி வருவது என்று சொல்லி அறிந்திருந்தான். அந்தப்பனிமலைகளை மாமுனிவர்களே சென்று தொடமுடியும். கின்னரர்களும் கிம்புருடர்களும் வாழும் உச்சி அது.

சிந்தாவதியின் பால்ஹிகபுரியின் பக்கத்து கரையில் காய்கறித்தோட்டங்களின் பச்சை செறிந்திருந்தது. அப்பால் மலையடிவாரத்தில் ஷீரவதியின் அடிச்சாரலில் பசும்புல் சிவப்பாக பூத்திருந்தது. இத்தனை இரைச்சலிடும் ஒரு ஆற்றுக்கு யார் சிந்தாவதி என்று பெயரிட்டிருக்கக் கூடும் என அவன் எண்ணிக்கொண்டான். அத்தனை பெயர்களுமே ரிஷிகளிட்டவை போல இருந்தன. நினைக்கநினைக்க சிந்தையில் வளர்பவை. அவை தங்கள் பெயரை அவர்களின் கனவில் வந்து சொல்லியிருக்கக் கூடும்.

ஷீரவதியை ஏன் பால்மகள் என்று சொல்கிறார்கள் என்பது மேலும் சென்றபோது தெரிந்தது. முழுமையாகவே வெண்ணிறமான மூடுபனி வந்து சரிவுகள் மறைந்தன. முன்னால் சென்ற ஒற்றனின் புரவியின் பின்பக்கத்தை மட்டுமே நோக்கிக்கொண்டு பயணம் செய்யவேண்டியிருந்தது. குதிரையின் காலடிஓசை பின்பக்கம் எங்கோ கேட்டு எவரோ தொடர்ந்து வருவதுபோல எண்ணச்செய்தது. பனிப்புகை மேல் பரவிய ஒளி அதை பளிங்குபோல சுடரச்செய்தது. பனிவெளிக்கு மேலே வெள்ளிமுடி சூடி அமைதியில் அமர்ந்திருந்த தூமவதியை நோக்கியபடியே சென்றான்.

சக்ரவர்த்திகளுக்குரிய அமைதி என எண்ணிக்கொண்டான். சக்ரவர்த்திகள் எப்படி இருப்பார்கள்? அவன் எவரையும் பார்த்ததில்லை. அவன் பார்த்தது சக்ரவர்த்தினியை. அவள் சக்ரவர்த்தினி என அத்தனை பேரும் அறிந்திருக்கின்றனர். அத்தனை பெண்களும் அவளையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். வழிபாட்டுடன் பொறாமையுடன் கசப்புடன்.

சக்ரவர்த்தினி என்பதில் ஐயமே இல்லை என அவன் எண்ணிக்கொண்டான். இந்தப்பெண்களில் எவரிலும் இல்லாத ஒன்று அவளில் இருந்தது. ‘அவள்’ என்று நினைத்தபோதே அவள் முகம் மலைமுடி எழுந்து முன்னால் திசை நிறைத்து நிற்பதுபோல சிந்தையில் எழுவதைக் கண்டான். மிகத்தொலைவில்தான் அவளை நோக்கினான். கருவறை அமர்ந்த தெய்வச்சிலையை பார்ப்பதுபோல. ஆனால் அவள் விழிகளின் ஒவ்வொரு சிறு அசைவையும், முகத்தின் சிறிய பருவைக்கூட பார்க்கமுடிந்தது.

அவளைப்போல வேறெந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை என்று அவன் உணர்ந்தான். அவன் உள்ளத்திலும் அவளே பெண்ணென்று இருந்தாள். பிறர் எல்லோரும் தொலைவில் எங்கோதான் இருந்தனர். அதை அவர்களும் அறிவார்கள் போலும். ஆகவேதான் அவன் விழிகளைப் பார்த்ததுமே அவர்கள் அவளைப்பற்றி கேட்கிறார்கள். அவளைப்பார்த்த விழிகள்.

மூன்றுமுறை அமர்ந்து ஒய்வெடுத்தபின் பனிப்படலத்தை கடந்தனர். நான்குபக்கமும் குறுமுள்செடிகளும் உருண்டு வந்து நிலைத்த பாறைகளும் மட்டும் அடங்கிய நிலச்சரிவின் பாதியில் பக்கவாட்டிலிருந்த மலையின் நிழல் விழுந்து கிடந்தது. எஞ்சியபகுதி ஒளியில் நனைந்து கண்கூசியது. பாறைகளின் நிழல்கள் நீண்டு கிடந்தன. நிழலில் இருந்து ஒளிக்குள் நுழைந்தபோது சிலகணங்கள் காட்சியே மறைந்தது. பின்னர் மீண்டும் நிழலுக்குள் நுழைந்தபோது குளிர்ந்தது. காலடிச்சுவடுகள் எங்கெங்கோ விழுந்து எதிரொலித்து திரும்பி வந்தன.

கீழே பால்ஹிகபுரி கையிலிருந்து கொட்டிய பொரி போல தெரிந்தது. அவன் புரவியை நிறுத்தி நோக்கினான். அத்தனை சிறிய காட்சியிலேயே தூமபதக் கணவாயிலிருந்து கிளம்பி நகரத்தை நோக்கிச் சென்ற சௌவீரர்களின் அணியூர்வலத்தை காணமுடிந்தது. சிறிய செந்நிற எறும்பு வரிசை. கூர்ந்து நோக்கியபோது கொடிகளைக்கூட காணமுடிந்தது. அவர்களை எதிர்கொள்ள நகரிலிருந்து செல்லும் அணிநடையை கண்டான். அதன்முன்னால் சென்ற பால்ஹிகக் கொடி காற்றில் பறந்தது.

இருள்படர்ந்தபோது அவர்கள் சாலையோரத்தில் பாறையில் குடையப்பட்ட வணிகர்களுக்கான சத்திரத்தை அடைந்தனர். செவ்வக வடிவமான சிறிய குகைக்கு தடித்த மரத்தால் கதவிடப்பட்டிருந்தது. அதனருகே இருந்த சிறிய பாறையில் இருந்து நீர் ஊறி சொட்டிக்கொண்டிருக்க கீழே கற்களால் அந்த நீர் தேங்குவதற்கு சிறிய குட்டை அமைக்கப்பட்டிருந்தது. குதிரைகள் மூச்சு சீறியபடி குனிந்து நீர் அருந்தின.

பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டான். உடலில் குதிரையின் அசைவு எஞ்சியிருந்தது. சகன் அங்கே கிடந்த சுள்ளிகளை கொண்டுசென்று குகைக்குள் தீயிட்டான். தீ கொழுந்துவிட்டெரிந்ததும் குகையின் பாறைகள் சூடேறத்தொடங்கின. அதன்பின் நெருப்பை அணைத்து தணலாக ஆக்கினான். அதன்பின் அவர்கள் உள்ளே நுழைந்து கதவை மூடிக்கொண்டனர். கதவருகே நெருப்பின் வெம்மை ஏற்கும்படி புரவிகளை கட்டினர். அவை உடலை கதவின் விரிசல்களில் சேர்த்து வைத்து நின்று பெருமூச்சுவிட்டன.

தணலின் செவ்வொளியில் அமர்ந்து பையிலிருந்த உலர்ந்த பழங்களையும் சுட்ட ஊன் துண்டுகளையும் உண்டு நீர் அருந்தினர். வெளியே குளிர்ந்த வடகாற்று ஓசையிட்டபடி மலையிறங்கிச் சென்றது. நெடுந்தொலைவில் ஓநாய்களின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அவை புரவிகளின் மணத்தை அறிந்துவிட்டிருந்தன. ஆனால் அனல் மணம் இருக்கும் வரை அவை அண்டமாட்டா என அவன் அறிந்திருந்தான். புரவிகள் தோல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டு கால்களால் தரையை தட்டிக்கொண்டிருந்தன.

அவன் கால்களை நீட்டிக்கொண்டான். அதற்குள் ஐந்துபேர் உடலை ஒட்டிக்கொண்டு படுக்க இடமிருந்தது. அவர்களின் கம்பளியாடைகள் அனலால் சூடேறியிருந்தன. அவன் உடலை நன்றாக ஒட்டிக்கொண்டு கண்களை மூடி துண்டுதுண்டாக சிதறிச்சென்ற எண்ணங்களை நோக்கிக்கொண்டிருந்தான். புரவியில் வந்தபடியே சிந்திப்பதுபோல உடல் உணர்ந்துகொண்டிருந்தது. கண்களைத் திறந்து பாறைக்குடைவுக்கூரையை நோக்கினான். சிபிநாட்டின் விரிந்த பெரும்பாலையை நினைத்தான். அது அவனுள் சித்திரமாக வரவில்லை. ஒரு நினைவுமட்டுமாகவே எஞ்சியது.

இருமுறை உடலை அசைத்து பெருமூச்சுவிட்டான். பின்னர் விஜயையை எண்ணினான். அந்த மலர்வெளி நடுவே அவள் நின்றகாட்சி தெளிவாக விழிகளுக்குள் எழுந்தது. அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். நீர்ப்பாவை போல மெல்ல நெளிந்தபடி அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ஓசையேதும் இல்லாத இதழசைவு. உறக்கத்தில் அவனை மலைகள் சூழ்ந்து குனிந்து நோக்கி கடும்குளிராக மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் கனவை மீண்டும் மீண்டும் கண்டான்.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 11
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 12