கர்மயோகம் : (42 – 43)

  42

புலன்கள் மகத்தானவை என்கிறார்கள்
மனம் புலன்களை விட மகத்தானது
புத்தி மனதை விட மகத்தானது
புத்தியை விட மேலானது
அதுவே        

43

இவ்வாறு
புத்தியை விட மகத்தானதை
அறிந்தவனாக
ஆத்மாவினால்
ஆத்மாவை கட்டுப்படுத்தி
காமவடிவம் கொண்ட
கைப்பற்ற முடியாத
எதிரியை வெல்க.

உபநிடதமும் பிரம்ம வித்தையும் யோசாஸ்திரமும் கிருஷ்ண அர்ஜூன விவாதமும் ஆகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் மூன்றாம் அத்தியாயம் ஆகிய கர்ம யோகம் முடிவுக்கு வந்தது.

புலன்களுக்கு அப்பால்

இதன்பின் இந்த விவாதத்தை கவித்துவமாக இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் 42 ஆவது பாடல் தொடர்ந்து வருகிறது. ‘புலன்களை சிறந்ததென்று கூறுகிறார்கள்’ என்று கீதை கூறுவது யாரை அல்லது எதை?

கீதை அடிப்படையில் வேதங்களின் கர்ம காண்ட பகுதிக்கு எதிரானது என்பதை முன்னரே கண்டோம். வேதங்களின் கர்ம காண்டத்தில் ஐம்புலன்களையும் இன்பங்களின் வாயில்களாக கண்டு துதிக்கும் பல வரிகள் உள்ளன. புலன்கள் தேவர்களின் ஊர்திகளாக வேதங்களால் கூறப்படுகின்றன. அந்தப் புலன்களுக்கு நிறைவளிக்கும் இன்பங்களை வேதங்கள் வேண்டுகின்றன. அந்தப் புலன்மைய நோக்கு இங்கே குறிப்பிடப்படுகிறது.

புலன்களை விட மனம் மேலானது. மனதைவிட புத்தி மேலானது.  புத்தியை விட மேலானது ஆன்மா என்கிறது கீதை. புலன்கள் மேலானவை. ஆனால் புலன்களை மனம் வந்து சந்திக்கமலிருந்தால் அவற்றால் இயங்க முடியாது. ஆகவே மனம் மேலானது. மனம் தன்னிச்சையானது ஆனால் புத்தி கட்டுக்குள் நிற்பது. மனம் தர்க்கமற்றது, புத்தி தர்க்கபூர்வமானது. மனம் அந்தக் கணத்தில் நிகழ்ந்தழிவது, புத்தி நிலையானது. ஆகவே புத்தி மேலானது. அந்தப் புத்தியை விட மேலானது எது? ஆத்மாவேதான் என்கிறது கீதை.

இங்கே கவனிக்க வேண்டிய நுட்பம் என்னவென்றால் புலன்கள், மனம், புத்தி ஆகிய வரிசையில் ஒரு புலனாகவே ஆத்மாவும் கூறப்படுவதுதான். ஐம்புலன்களும் அறிதலுக்கான வழிகள். மனமும் புத்தியும் கூட அறிதல்வழிகளே. அவை இரண்டும் ஞான இந்திரியங்கள். அதேபோல அறிதலுக்கான ஒரு வழியே ஆத்மாவும். அது தன்னைத் தானே அறியும். அந்த அறிதல் மூலமே அது நமக்கு தெரிகிறது. அறிபவனாகவும் அறிபடுபொருளாகவும் தன்னை அது பகுத்துக் கொள்கிறது. அறிவும் அதுவே அறிபவனும் அதுவே அறியப்படுவதும் அதுவே. ஆகவே அதுவும் ஒரு புலனேயாகும்.

அதை அடுத்த பாடல் திட்டவட்டமாகச் சொல்கிறது. புத்தியை விட மேலான புலனாக ஆத்மாவை அறிபவனே கர்மயோகி. அவன் ஆத்மாவை சுத்தப்படுத்த ஆத்மாவையே பயன்படுத்த இயலும் என்று அறிவான். ஆத்மாவின் மீது திரையாக படரும் காமத்தின் வடிவம் கொண்ட இயற்கையின் செயலூக்கக் குணத்தை அவன் ஆத்மா என்ற புலனாலேயே அறிகிறேன். ஆத்மாவையே கருவியாக்கி அந்த செயலூக்கத்தன்மையை அவன் நிறுத்திக் கொள்ளலாம்.

‘ஆத்மானா ஆத்மரானம் சம்ஸ்தப்ய’ என்ற சொல்லாட்சி ஒரு மூலமந்திரம் அளவுக்கு முக்கியமானது நினைக்கும் தோறும் விரிவது அது ‘ஆத்மாவை ஆத்மாவால் நிறுத்தி’ என்று அதற்குப் பொருள். காமத்தின் வடிவு கொண்டவனுக்கும் கைப்பற்றி விட முடியாதவனுமாகிய எதிரி என்று இயற்கையின் ரஜோ குணத்தை கீதை கூறுகிறது.

‘துராஸதம்’ கைப்பற்ற முடியாத, பிடிக்க முடியாத, அடைய முடியாத என்ற பொருள் உடைய சொல்லாட்சி காமத்தைப் பற்றிய நுட்பமான விவரணை. தன்னுள் உறையும் காமத்தை உணர்ந்த எவருக்குமே அந்த சொல்லாட்சி துல்லியமாகப் புரியும். கண்முன் பூதாகரமாக நிற்கும் காமம் கை நீட்டிப் பிடிக்க முயன்றால் நழுவி எங்கோ மறைந்துவிடக் கூடிய ஒன்று. இல்லை என்று நாம் என்றும் இடத்தில் இருக்கும். கட்டிப்போட்டுவிட்டோம் என்று நினைக்கும் இடத்தில் தன் நிழலை மட்டுமே விட்டுச் செல்லும். வென்றுவிட்டோம் என்று சிரிக்கும்போது நம்மை நோக்கி ரகசியமாகப் புன்னகை புரியம்.

உரைகளில் இருந்து.

கர்மயோகம் குறித்து முன்னோடி அறிஞர்கள் ஞானிகள் எழுதிய உரைகளில் ஆழமான அவதானிப்புகள் பல உள்ளன. அவை அந்த ஆசிரியர்களின் கருத்துநிலைகள் மற்றும் அனுபவங்களை ஒட்டி உருவாக்க கூடியவை. நித்யசைதன்ய யதியின் கீதை உரையில் பல வரிகள் நம்மை வெட்டவெளி நோக்கிக் கொண்டு செல்லும் விவேகமோ கவித்துவமோ உடையவையாக இருக்கும் .

உதாரணமாக, 15ஆவது பாடலுக்கு உரை வகுக்கையில் நித்ய சைதன்ய யதி அன்னம் என்ற சொல் உணவை மட்டுமல்ல உடலையும் குறிக்கும் என்கிறார். ஏனென்றால் எல்லா உடலும் யாருக்கேனும் எதற்கேனும் உணவே. நாம் அனுதினமும் பலவகை செடிகள் மற்றும் உயிர்களின் உடலை உண்டு புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் பாக்டீரியாக்களுக்குமான உணவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ‘அன்னாத் பூதானி பவந்தி’ என்ற கீதை வரியை அன்னத்திலிருந்து உயிர்கள் உருவாகின்றன என்று பொருள் கொள்வது மரபு.  ‘பூமியில் உள்ள அனைத்தும் அன்னமாக உள்ளன’ என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார் நித்யா.

நாற்பதாவது செய்யுளுக்கு உரை எழுதும் நித்ய சைதன்ய யதி புலன்களில் காமம் இன்ப விழைவாக குடிகொள்கிறது என்கிறார். மனதில் தீராத சஞ்சலத்தின் வடிவில் காமம் குடிகொள்கிறது என்றும் அதேசமயம் புத்தியில் முடிவடையாத விவாதமாக குடிகொள்கிறது என்றும் விளக்குகிறார். ஆச்சரியமான, சரியான விளக்கம்.

நமது மனதில் காமம் எப்போதுமே சஞ்சலமாகவும் நிலையில்ன்மையாகவும் மட்டுமே காணப்படுகிறது. உத்வேகம் மிக்க தருணங்களில் கூட நாம் நிலையழிதலையே உணர்கிறோம். காமத்துடன் உரிமை பாராட்டலும் அதன் விளைவாக ஐயப்படுதலும் இணைந்துள்ளது. காமத்திலிருந்து அவற்றை பிரிக்கவே முடியாது. தூயகாமம் என்பது அனேகமாக சாத்தியமே இல்லை. காரணம் நமக்குள் உள்ள அகங்காரம் எதனுடனும் சென்று சேர்ந்து அதை பிரம்மாண்டமாக வளர்த்துவிடும் தன்மை கொண்டது. காமத்துடன் இணைந்த அகங்காரமே அதை பூதாகாரமாக நம்மில் நிறுவியிருக்கிறது.

அதேபோல புத்தி காமத்தால் இரண்டாகப் பிளவுண்டுவிடுகிறது. செய் செய்யாதே என இரண்டு தரப்பாக நின்று அது விவாதிக்கிறது. அந்த விவாதம் முடிவிலாமல் நீளும். இருதரப்புமே சோர்வடையாது. விரும்பும் எதையும் புத்தி நியாயப்படுத்திக் கொள்ளும். புத்தியில் காமல் தராசுமுள்ளின் ஓயாத அலைபாய்தலாகவே வாழ்கிறது என்கிறார் நித்யா.

வீட்டு வாசல்களிலும் ஜன்னல்களிலும் கர்ப்பூரத்தை கட்டி தொங்கவிட்டால் வீடு முழுக்க கற்பூர வாசனையே வீசும். வேறு வாசனையே உள்ளே வராது. அதேபோல புலன்களில் குடியேறிய காமம் உள்ளூர காமத்தையே நிறைக்கும். என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் வெளியே செல்வதும் அதே கற்பூர வாசனையாக இருக்கும். அது வீட்டின் வாசனையா வெளி உலகின் வாசனையா என்று கண்டுபிடிக்கவே முடியாது.

வேதாந்த மூவர் உரைகளில் ஆத்மா என்பதைப் பற்றிய விரிவான விவாதங்கள் தொடர்கின்றன. இராமானுஜர் தன் உரையில் 3.ஆவது பாடலை மிக முக்கியமாக எடுத்து விவாதிக்கிறார். ‘ஆத்மாவிடம் மட்டுமே சிந்தனையை நிறுத்தி , பற்று விலக்கி உன் செயல்களை என்னிடம் அர்பணிப்பாயாக’ என்று கிருஷ்ணன் கூறுவதை ஆத்மாவும் பரம்பொருளும் ஒன்றே என்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார்.

மேலும் தைத்ரீய ஆரண்யகத்தில் ‘அனைத்திற்கும் உள்ளே நுழைந்து அவற்றை நியமிப்பதனால் அவனே சர்வாத்மாகவாக இருக்கிறான்’ என்று கூறப்படும் வரிகளையும் பிரகதாரண்யக உபநிடதம், ‘யார் ஆத்மாவின் உள்ளும் புறமும் இருக்கிறானோ யார் ஆத்மா அறியாமல் ஆத்மாவாக இருக்கிறானோ ஆத்மா யாருக்கு உடலாக உள்ளதோ ஆத்மாவை நியமிப்பவன் யாரோ, அவன் அனைத்திலும் உறைபவனாக உள்ளான்’ என்று கூறுவதையும் பகவத் கீதையே பதினைந்தாம் அத்தியாயத்தில் ‘அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆத்மா நானே’ என்று கூறுவதையும் ராமானுஜர் எடுத்துக்காட்டுகிறார்.

ஆகவே இங்கே ‘ஆத்மாவில் சிந்தனைகளை செலுத்து’ என்று கிருஷ்ணன் சொல்வது கிருஷ்ணனில் சிந்தனைகளை செலுத்து என்றே பொருள்படும் என்கிறார். ‘எனக்கு செயல்களை அர்ப்பணி’ என்று கிருஷ்ணன் கூறுவது அதனாலேயே என்கிறார்.

ராமானுஜர் 34ஆவது பாடலுக்கு அளிக்கும் உரையில் ஒரு ஆர்வமூட்டும் புதிய விஷயம் உள்ளது. வாய், கை, கால், ஆசனவாய், காம உறுப்பு ஆகியவற்றை ஐந்து செயற்புலன்களாகவும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவற்றையும் ஐந்த அறிவுப்புலன்களாகவும் (கர்ம இந்திரியம், ஞான இந்திரியம்) முன்வைக்கிறார். இந்தப் பிரிவினை தாந்த்ரிக மரபால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. புராதன தரிசன மூலநூல்களில் இது இப்படி இல்லை.

அதேபோல ‘இந்திரியஸ்ஸ இந்த்ரியஸ்ஸ அர்த்தே ராகத் வேஷ’ என்ற வரியை புலன்கள் விருப்பு வெறுப்பு கொண்டவை என்று பொருள் கொண்டு செயற்புலன்கள் ஞானப் புலன்கள் இரண்டையும் சுட்டிக்காட்டவே இரண்டுமுறை இந்திரயஸ்ஸ என்ற சொல் வந்தது என்கிறார் ராமானுஜர். இது தென்னிந்திய மொழியிலக்கணம் சார்ந்த புரிதல். ‘புலன்கள் புலன்களில் உறைகின்றன’ என்பதே அவ்வரிகளின் பொருளாகும்.

கர்மயோகம் சாங்கிய யோகத்தில் கூறப்பட்ட ‘பற்றிலாது பெருஞ்செயல் புரிதல்’ என்ற அறை கூவலை இன்னும் விரிவாக ஆராய்கிறது. அப்படி செய்ய காம வடிவம் கொண்ட ரஜோ குணமே தடை அது இயற்கையின் நியதிகளில் ஒன்று. அதை ஆத்மாவை ஒர் அறிவுப்புலனாக ஆக்கி ஆத்மாவை அறிந்து அதில் ஆழ்பவன் வெல்ல முடியும். காமத்தை வென்று, செயலாற்றுபவனே கர்மயோகி-கீதையின் இந்த அதிகாரம் கூறுவது இதையே.

கர்மயோகம் என்றால் இந்த எதிரியை வென்ற பிறகு ஆற்றும் செயல் மட்டுமே என்பதே கீதையின் கூற்று. இந்த முடிவுச் செய்யுளில் இருந்து முன்னால் நகர்ந்து இந்த அதிகாரம் முழுக்கக் கீதை சொல்வது என்ன என்று பாருங்கள். அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் தர்க்கபுத்தி உடையவர்களுக்காகவே கர்மயோகம் சொல்லப்பட்டிருக்கிறது. வேள்வி என்ற நிலையில் ஆற்றப்படும் பெரும் செயல்களை அவர்கள் ஆற்ற வேண்டும் அதுவே அவர்கள் விடுதலை செய்யும். பிற எல்லா செயல்களும் அவர்களை கட்டுகளுக்குள் பிணைக்கும்.

வேள்வி எனப்படுவது  தனக்கெனச் செய்யப்படாதது. அத்தகைய  பயன்கருதா பெருஞ்செயல்களின் பொருட்டே மானுடன் இயற்கையின் படைப்புச்சக்தியாகிய பிரஜாபதியால் உருவாக்கப்பட்டிருக்கிறான். பெருஞ்செயல்கள் வழியாகவே பிரபஞ்சத்தின் படைப்பாற்றல் மையம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆகவே பெருஞ்செயல்கள் பிரபஞ்ச சக்தியை நிகழச்செய்பவை.

அத்தகைய செயல்களை செய்பவன் தன் புலன்களின் இன்ப நாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. தன் ஆத்மாவே தான் என்று உணரந்து அதிலேயே தன் இன்பத்தையும் முழுமையையும் காண்பவனாக அவன் இருக்க வேண்டும். ஆத்மா இங்கே செய்வதற்கு எதுவுமில்லை. அடையவும் எதுவும் இல்லை. ஏனென்றால் பிரபஞ்சத்தின் அழியா சாட்சியாகிய புருஷன் தான் அது.

அது வெறும் சாட்சி மட்டுமே ஆயினும் மானுடர் செயலாற்றியாக வேண்டும் ஏனென்றால் செயலே பிரபஞ்சத்தின் இயல்பு . செயல் மூலமே பிரபஞ்ச சாரமான பரம்பொருள் தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே கர்மயோகி செயலாற்றியாக வேண்டும். தன் செயல்களில் பற்றிலாது, அவை தான் செய்யும் செயல்களல்ல பிரபஞ்சத்தின் பெரு நிகழ்வின் பகுதிகளே என்று உணர்ந்து செயலாற்ற வேண்டும் அவன். இயற்கையின் அடிப்படைக் கட்டுமானத்திலேயே உள்ள முக்குணங்களின் சமநிலை தேடும் இயல்பினால் இச்செயல்கள் நிகழ்கின்றன என்று அவன் உணர்ந்திருக்க வேண்டும்.

இவ்வாறு இயற்கையின் இயல்பே அதன் செயலாக மாறுகிறது என்று அறிந்தவனுக்கு தன் வாழ்வின் செயல்களில் பெரிய பற்று இருக்காது. ஆனால் அவற்றை அவள் பற்றுடன் செயலாற்றுபவர்கள் அளவுக்குத் திறம்படச் செய்யவும் முடியும். ஆனால் அப்படிப்பட்ட செயலை என் உயிர்கள் செய்ய வேண்டும்? அவை அவற்றின் இயல்புகள் என்றால் பற்று வைக்கக்கூடாது என்று தடுப்பது என்ன பயனை உருவாக்கும்?

செயல் என்பது இயற்கையில் உள்ள மூன்று குணங்கள் தங்கள் சமநிலை இழப்பதன் விளைவு. அந்த மூன்று குணங்களில் முதன்மையானதாகிய ரஜோ குணம் மட்டுமே மேலோங்கிய நிலையே காமம். காம வடிவமாக ரஜோ குணம் நம் ஐம்புலன்களிலும் மனம் புத்தி ஆகியவற்றிலும் குடியேறி நம்முன் உள்ள புருஷனை மறைத்து விடுகிறது. காமமே நம்மை செயலில் பற்றுள்ளவர்களாக்குகிறது. அதுவும் இயற்கையின் அந்த முக்குணங்களில் ஒன்று என்றறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆத்மா புலன்களில் சிறந்த புலன். ஆத்மாவை ஆத்மாவாலேயே வெல்ல முடியும். அப்படி வென்றால் மட்டுமே பற்றிலாது செயலாற்ற முடியும். பற்றிலாது ஆற்றும் பெருஞ்செயலே கர்மயோகம்.

ஒட்டுமொத்தமாக இதுவே கர்மயோகத்தின் சுருக்கமாகும். கர்மயோகத்தின் கடைசிக் செய்யுளின் கடைசி வரியை கவனியுங்கள். ‘சத்ரூம் ஜஹி’ என்று முடிகறிது அது. ‘எதிரியை வெல்க’ அந்த எதிரி வெளியே உள்ள ஒன்று அல்ல. அது ஒவ்வொருவருக்கும் உள்ளே உறைகிறது. முடிவில்லாத ஆதி இயற்கையில் இருந்து நம் ஒவ்வொருவரின் உடலிலும் உள்ளத்திலும் குடியேறி இருக்கும் இயல்பு அது. அந்த எதிரியை வெல்வதே உண்மையில் கர்மயோகம். அதைவென்றால் நாம் பிற அனைத்தையும் வெல்ல முடியும் என்கிறது கீதை.

செயலெனும் யோகம்

கர்மயோகம் என்றால் காமம் என்னும் எதிரியை வென்ற பிறகு ஆற்றும் செயல் மட்டுமே என்பதே கீதையின் முடிவான கூற்று. இந்த முடிவுச் செய்யுளில் இருந்து முன்னால் நகர்ந்து இந்த அதிகாரம் முழுக்கக் கீதை சொல்வது என்ன என்று பாருங்கள். அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் தர்க்கபுத்தி உடையவர்களுக்காகவே கர்மயோகம் சொல்லப்பட்டிருக்கிறது. வேள்வி என்ற நிலையில் ஆற்றப்படும் பெரும் செயல்களை அவர்கள் ஆற்ற வேண்டும் அதுவே அவர்கள் விடுதலை செய்யும். பிற எல்லா செயல்களும் அவர்களை கட்டுகளுக்குள் பிணைக்கும்.

வேள்வி எனப்படுவது  தனக்கெனச் செய்யப்படாதது. அத்தகைய  பயன்கருதா பெருஞ்செயல்களின் பொருட்டே மானுடன் இயற்கையின் படைப்புச்சக்தியாகிய பிரஜாபதியால் உருவாக்கப்பட்டிருக்கிறான். பெருஞ்செயல்கள் வழியாகவே பிரபஞ்சத்தின் படைப்பாற்றல் மையம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆகவே பெருஞ்செயல்கள் பிரபஞ்ச சக்தியை நிகழச்செய்பவை.

அத்தகைய செயல்களை செய்பவன் தன் புலன்களின் இன்ப நாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. தன் ஆத்மாவே தான் என்று உணரந்து அதிலேயே தன் இன்பத்தையும் முழுமையையும் காண்பவனாக அவன் இருக்க வேண்டும். ஆத்மா இங்கே செய்வதற்கு எதுவுமில்லை. அடையவும் எதுவும் இல்லை. ஏனென்றால் பிரபஞ்சத்தின் அழியா சாட்சியாகிய புருஷன் தான் அது.

அது வெறும் சாட்சி மட்டுமே ஆயினும் மானுடர் செயலாற்றியாக வேண்டும் ஏனென்றால் செயலே பிரபஞ்சத்தின் இயல்பு . செயல் மூலமே பிரபஞ்ச சாரமான பரம்பொருள் தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே கர்மயோகி செயலாற்றியாக வேண்டும். தன் செயல்களில் பற்றிலாது, அவை தான் செய்யும் செயல்களல்ல பிரபஞ்சத்தின் பெரு நிகழ்வின் பகுதிகளே என்று உணர்ந்து செயலாற்ற வேண்டும் அவன். இயற்கையின் அடிப்படைக் கட்டுமானத்திலேயே உள்ள முக்குணங்களின் சமநிலை தேடும் இயல்பினால் இச்செயல்கள் நிகழ்கின்றன என்று அவன் உணர்ந்திருக்க வேண்டும்.

இவ்வாறு இயற்கையின் இயல்பே அதன் செயலாக மாறுகிறது என்று அறிந்தவனுக்கு தன் வாழ்வின் செயல்களில் பெரிய பற்று இருக்காது. ஆனால் அவற்றை அவள் பற்றுடன் செயலாற்றுபவர்கள் அளவுக்குத் திறம்படச் செய்யவும் முடியும். ஆனால் அப்படிப்பட்ட செயலை என் உயிர்கள் செய்ய வேண்டும்? அவை அவற்றின் இயல்புகள் என்றால் பற்று வைக்கக்கூடாது என்று தடுப்பது என்ன பயனை உருவாக்கும்?

செயல் என்பது இயற்கையில் உள்ள மூன்று குணங்கள் தங்கள் சமநிலை இழப்பதன் விளைவு. அந்த மூன்று குணங்களில் முதன்மையானதாகிய ரஜோ குணம் மட்டுமே மேலோங்கிய நிலையே காமம். காம வடிவமாக ரஜோ குணம் நம் ஐம்புலன்களிலும் மனம் புத்தி ஆகியவற்றிலும் குடியேறி நம்முன் உள்ள புருஷனை மறைத்து விடுகிறது. காமமே நம்மை செயலில் பற்றுள்ளவர்களாக்குகிறது. அதுவும் இயற்கையின் அந்த முக்குணங்களில் ஒன்று என்றறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆத்மா புலன்களில் சிறந்த புலன். ஆத்மாவை ஆத்மாவாலேயே வெல்ல முடியும். அப்படி வென்றால் மட்டுமே பற்றிலாது செயலாற்ற முடியும். பற்றிலாது ஆற்றும் பெருஞ்செயலே கர்மயோகம்.

ஒட்டுமொத்தமாக இதுவே கர்மயோகத்தின் சுருக்கமாகும். கர்மயோகத்தின் கடைசிக் செய்யுளின் கடைசி வரியை கவனியுங்கள். ‘சத்ரூம் ஜஹி’ என்று முடிகறிது அது. ‘எதிரியை வெல்க’ அந்த எதிரி வெளியே உள்ள ஒன்று அல்ல. அது ஒவ்வொருவருக்கும் உள்ளே உறைகிறது. முடிவில்லாத ஆதி இயற்கையில் இருந்து நம் ஒவ்வொருவரின் உடலிலும் உள்ளத்திலும் குடியேறி இருக்கும் இயல்பு அது. அந்த எதிரியை வெல்வதே உண்மையில் கர்மயோகம். அதைவென்றால் நாம் பிற அனைத்தையும் வெல்ல முடியும் என்கிறது கீதை.

[கர்ம யோகம்  நிறைவு]

முந்தைய கட்டுரைகும்பமேளா – 8
அடுத்த கட்டுரைவணக்கம்