எனக்கு ‘ஜாலியான’ புகைப்படங்கள் குறைவு. ஏனென்றால் புகைப்படம் எடுக்கும் சூழலில் நான் வாழவில்லை. எருமைமாடு மேய்வது போல சுவையின் தடத்தில் அதுபாட்டுக்கு போகும் வாழ்க்கை. ஆனால் அவ்வப்போது சில படங்கள் சிக்கிவிடும்
சென்ற நாளில் சில படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வயதாகிவிட்டதென்று தெரிகிறது. வேறுவழியில்லை. கொஞ்சம் கௌரவமானவனாக நடந்துகொள்ளவேண்டியதுதான் என முடிவு செய்தேன்.
ஆனால் அதற்கு நாள்தோறும் ஷேவ் செய்துகொள்ளவேண்டும். அதைவிட காலையிலேயே பல்தேய்க்கவேண்டும். நாளிதழ்களை வாசிக்கவேண்டும். பெரிய சீண்ட்ரம். இப்படியே இருந்துவிடலாம் என்று முடிவுசெய்தேன்
ஆனால் படங்களில் பார்த்தால் தொப்பை. ஏற்கனவே சைதன்யா பலமுறை சொல்லியிருக்கிறாள். “பாப்பா, ஒரு உலகப்புகழ்பெற்ற ரைட்டர் பற்றி அவனோட இலட்சிய வாசகி அவதூறா பேசலாமா?”என்று அறிவுறுத்தியபோது அடங்கிவிட்டாள்.இப்போது எடைகுறைப்பு பயிற்சி. வெண்முரசுக்காக இருந்து இருந்து வயிறு கொஞ்சம் பெருத்ததை தொப்பை என்றெல்லாம் சொல்லக்கூடாதுதான். ஆனாலும் வேறுவழியில்லை
என்ன சிக்கல் என்றால் என்னால் அசைவமற்ற உணவை நீண்டநாள் தாங்கமுடியாது.நண்பர் சுகா வற்புத்தினார். இளையராஜாவே சொல்லிப்பார்த்தார். அசைவமன்றி ஓரணுவும் அசையாது. சாப்பிடாவிட்டால் கனவில் வரும். அது இன்னும் எடையைக்கூட்டும்
அசைவ டயட் ஒன்று உள்ளது என்றார் மிஷ்கின். [அவர் ஒரு மானுட பலூன். ஆறுமாசம் பெரிசாக இருப்பார். ஆறுமாசம் சுருங்கியிருப்பார்] அது எனக்குப்பிடித்திருந்தது. அதை இப்போது கடைப்பிடிக்கிறேன் பதினைந்துநாட்களாக.
காலையில் ஐந்து முட்டைகளின் வெள்ளைக்கரு வேகவைத்து டிபன்.மதியம் உப்பிட்டு ஆவியில் வேகவைத்த மீன். அல்லது இரண்டே இரண்டு துண்டு சிக்கன். ஆவியில் வேகவைத்துதான். கூடவே காய்கறி சூப். மாலையில் மீண்டும் காய்கறி சூப். பழங்கள். ஸ்டார்ச் சுத்தமாக கிடையாது.
சீனி,பால் பொருட்கள் கிடையாது. அடிக்கடி ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வாயில்போட்டுக்கொள்ளும் எதுவும் கிடையாது. முக்கியமாக தேங்காய் கிடையாது. ஆகவே மலையாளமே வாசிக்கமுடியவில்லை என்றால் நம்புவீர்கள்.
பசிக்கவில்லை. எடையும் குறைகிறது.நல்ல விஷயம்தான். ஆனால் 40 நாட்களுக்குமேல் ஸ்டார்ச் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. குடல் அதற்கேற்ப ஆகிவிடுமாம்.
காய்கறி சூப் செய்வது எளிது. நானேதான் செய்வேன்- ‘ஆப்செண்ட் மைண்டாக’ சமைத்தால் சிறப்பாகவே அமைகிறது.. கைக்குக்கிடைத்த எல்லா காய்கறிகளையும் கண்டமானிக்கு வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைப்பேன். ஒரே ஒரு டீஸ்பூன் பருப்புப்பொடி. உப்பு, மஞ்சள்தூள், கொஞ்சம் மிளகாய்ப்பொடி
சாம்பாரோ என்ற சந்தேகமெழுப்பும்படி, இல்லை என்ற எண்ணம் வரும்படி, ஆம் என்று ஏப்பம் விடும்படி இருக்கும். அது சலிக்காமலிருக்க ஒருதுண்டு சிக்கன் போடலாம் என்று அசுரத்தனமாக எடை குறைத்த அரவிந்தசாமி சொன்னார். [அரங்கசாமி இல்லை, அவருக்கு இந்த ஜென்மத்தில் டயட் இல்லை] அது பிடித்திருந்தது
ஆனால் ஒருநாள் ஃப்ரிட்ஜில் சிக்கன் இல்லை. பக்கத்துக்கடையில் போய்ப்பார்த்தேன். கருவாடு இருந்தது. “ஒய்நாட்? ஐ சே ஒய் நாட்?” என எனக்குள் வாழும் மல்லு சொல்ல வாங்கிக்கொண்டுவந்து கொதிக்கும் சூப்பில் போட்டேன். வெந்தபோது நாவில் எச்சில்.பக்கத்தில் நின்ற டோராவுக்கும்தான்.
எடை கீழிறங்குகிறது. இப்போது இயல்பாக மேலும் விரைவாக நடக்கிறேன். 13 ஆம் தேதி வடகிழக்குப்பயணம் எளிதாக இருக்குமென நம்புகிறேன்
அருண்மொழியை சினேகிதி இதழுக்காக பேட்டி எடுத்த திருவட்டார் சிந்துகுமாருடன் நான் நிற்கும் படத்தை எடுத்தது அருண்மொழி. என் கண்களில் தெரியும் ஞானஒளி இந்த கடும் டயட்டால் வந்தது என்பதைவிட பெரிய நிறைவு என்ன?