அன்புள்ள ஜெ
தங்களின் மனப்பாடம் பற்றிய பதிவை பார்த்தேன். எனக்கு மனனம் செய்வதில் சிறு தயக்கம் இருந்தது. அது இப்பொழுது நீங்கியது. சென்ற ஆண்டு நானும் எனது நண்பரும் நாளும் ஒரு திருக்குறள் கற்க வேண்டும் என்று முடிவு செய்து, அக்குறளை பற்றிச் சற்று ஆராய்ந்து, அதற்கு ஒரு உதாரணம் கண்டுக்கொண்டு எங்களது வலைப்பூவில் பதிவு செய்துவந்தோம் (மேற்படிப்பின் காரணமாக இடைவேளை ஆனால் வெண்முரசுவிற்கு அல்ல).
துவக்க காலத்தில் நான் எல்லா குறள்களையும் மனனம் செய்து வந்தேன். அது எனக்கு நன்கு நினைவில் உள்ளது. உதாரணமாக நான் துவக்கக் காலத்தில் மனனம் செய்த குறள் – “உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து”. ஒரு யானைப் பார்க்கும் பொழுது குறிப்பாக கோயில்களில் பாகனுடன் பார்க்கும் பொழுது அது இன்னும் ஆழமாய் நன்கு செல்கிறது. பின்பு எப்பொழுது கேட்டாலும் அக்குறளை அசைப் பிரித்து பொருள் சொல்ல முடிந்தது.
ஆனால், ஏன் மனனம் செய்ய வேண்டும்? என்னை மேம்படுத்திக்கொள்ளத் தானே பிறருக்கு சொல்வதற்கு/காட்டிக்கொள்வதற்கு இல்லையே என்று தோன்றத் துவங்கியப் பின்னர் மனனம் செய்வதைப் பெரும்பான்மையாக தவிர்த்து விட்டேன். அதனுடைய விளைவை நான் சில மாதங்கள் பின்பு தான் உணர்ந்தேன். குறள்களின் பொருள் (common sense-ஆக )நினைவில் இருந்தாலும் குறள் ஒரு படிமமாக நினைவில் இல்லாமல் ஒரு திறப்பாக இல்லாமல் இருந்தது. அது எவ்வளவுப் பெரிய தவறு. தியானத்திற்கு மனனம்-னும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களது பதிவை கண்டப்பொழுது உணர்ந்தேன்.
நன்றி.
அன்புடன்
ராஜேஷ்