பகுதி 7 : மலைகளின் மடி – 7
இரவிலேயே செய்திவந்துவிட்டது, மத்ர நாட்டிலிருந்து சல்லியரும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவரது இளையவரும் உத்தரமத்ரநாட்டின் அரசருமான தியுதிமானும் வந்துகொண்டிருப்பதாக. செய்திசொன்ன தூதன் மேலும் ஒரு சொல்லுக்கு தயங்க சோமதத்தர் “சொல்” என்றார். “இளவரசி விஜயையையும் தியுதிமான் அழைத்துவருகிறார். அது மரபல்ல” என்றான் தூதன். “ஆம், ஆனால் பிதாமகர் வந்திருப்பதனால் அழைத்து வரலாமே?” என்றார் சோமதத்தர். “இருக்கலாம். ஆனால்…” என்றபின் தூதன் “அரண்மனையில் நிகழ்ந்த பேச்சுகளைக்கொண்டு நோக்கினால் நம் இளையோர் பூரிசிரவஸ் அவர்களுக்கு மணமகனாக செல்லவேண்டுமென்ற விழைவு அவர்களிடமிருப்பது தெரிகிறது” என்றான்.
சோமதத்தர் குழப்பமாகி மைந்தர்களை பார்த்தார். சலன் “ஆம், நம்மில் மணமாகாதிருப்பவன் அவனே. அவ்வண்ணம் நிகழுமென்றால் நல்லதல்லவா?” என்றான். “இல்லை, நாம் மீண்டும் நமக்குள்ளேயே மணம்புரிந்துகொள்ளவேண்டுமா? ஷத்ரியர்களிடம்…” என்று சோமதத்தர் தொடங்க சலன் “இவ்வெண்ணம் தங்களிடமிருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆகவேதான் இளவரசியையும் அழைத்துக்கொண்டே வருகிறார்கள். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது பால்ஹிககுலத்தின் ஒற்றுமையைப்பற்றி. நமக்கு ஷத்ரியர் என்ற சொல்லில் இருக்கும் மையலை விலக்காமல் நம்மால் அதை அடையவே முடியாது” என்றான்.
சோமதத்தர் சினத்துடன் “அதற்காக தலைப்பாகை நீளம்கூட இல்லாத மத்ரநாட்டின் பாதியை ஆள்பவனுடைய மகளுக்கு நம் இளவரசனை அளிக்கமுடியுமா என்ன?” என்றார். “அதைப்பற்றி நாம் முடிவெடுக்கவேண்டியதில்லை. அவள் வரட்டும். இங்கு நிகழும் விழவில் அவர்கள் பேசிக்கொள்ளட்டும். விரும்பினால் மணம்கொள்ளட்டும். அதல்லவா நம்முடைய வழக்கம்?” என்றான் ஃபூரி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவையில் இருந்தாலும் இல்லாததாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் அப்போது உண்மையிலேயே அவனை பொருட்படுத்தவில்லை என்று தோன்றியது. அவர்களின் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு அவன் இளையோன் ஆகிவிட்டதுபோலிருந்தது.
சோமதத்தர் சற்று சோர்வுடன் எழுந்து “நாம் ஒற்றுமையை அடையமுடியுமா என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. நம்மில் எவர் பெரியவர் என்பது இருக்கத்தானே செய்கிறது? பால்ஹிக நாடு மற்ற அனைத்து நாடுகளைக்காட்டிலும் தொன்மையானது. அந்த வேறுபாட்டை அவர்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை” என்றார். சலன் “என்ன பேச்சு இது? இந்த உளநிலைதான் நம்மை பிரிக்கப்போகிறது. நான்முடிவெடுத்துவிட்டேன். இந்த மணவுறவு வழியாக மத்ரம் நம்மிடம் மேலும் நெருங்கும் என்றால் அவ்வண்ணம் ஆகட்டுமே” என்றான்.
அமைதியாக இருக்கும் தருணமல்ல என்று பூரிசிரவஸ் உணர்ந்தான். “தந்தையே, வணங்குகிறேன்” என்றான். அவர்களனைவரும் திரும்பி நோக்கினர். “உள்நுழைந்து பேசுவதற்கு என்னை பொறுத்தருளவேண்டும்” என்றபின் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “சிபிநாட்டு இளவரசி தேவிகையை பார்த்தேன்” என்றான். அவர்கள் முகத்தில் ஒரு திகைப்பும் பின் புன்னகையும் எழுந்தன. சலன் சிரித்தபடி “நன்று. சிபிநாடும் நமக்குகந்ததே” என்றான். சோமதத்தர் “சிபிநாட்டு இளவரசியையும் மணந்துகொள். என்னகுறை? இங்கே நீ மணிமுடிசூடப்போவதில்லை. ஆகவே பட்டத்தரசி எவர் என்ற கேள்வி எழாது” என்றார்.
பூரிசிரவஸ் “இல்லை, நான்…” என்று சொல்லத் தொடங்க “வாக்களித்துவிட்டேன் என்கிறாயா? சரி, நீ அதை விஜயையிடம் சொல். அவளுக்கு ஒப்புதலிருந்தால் மணந்துகொள். இதில் என்ன இருக்கிறது?” என்றான் சலன். சோமதத்தர் “ஆண்மகன் எத்தனை பெண்களை வேண்டுமென்றாலும் மணந்துகொள்ளலாம். அதைப்பற்றி பொய்யுரைப்பதே அகடியம் எனப்படும்” என்றார். அவர்களிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் பூரிசிரவஸ் தலைகுனிந்தான். மத்ரநாட்டின் அரசர்களை எங்கே தங்கவைப்பதென்ற பேச்சுகள் எழுந்து முடிவு எடுக்கப்பட்டபோது நிசி ஆகிவிட்டிருந்தது.
பூரிசிரவஸ் தன் அறைக்குச்சென்றதுமே சேவகன் உணவை கொண்டுவந்தான். அதை தன்னினைவின்றி உண்டுவிட்டு படுத்துக்கொண்டான். தன் அகம் நிலைகுலைந்திருப்பதை உணர்ந்தபடி புரண்டுபடுத்தான். தேவிகையின் முகத்தை நினைவிலெடுத்தான். அவனை நோக்கி பொய்ச்சினம் கொண்டன அவள் விழிகள். பின் இதழ்கள் விரிந்து புன்னகையாயின. கழுத்து சொடுக்கிக்கொண்டது. கன்னம் சற்றே ஒதுங்கி அவள் குறும்பாக சிரித்தாள்.
புன்னகையுடன் பெருமூச்சுவிட்டான். அத்தனை நுணுக்கமாக அவளை எங்கே நோக்கினோம் என எண்ணிக்கொண்டான். அவளுடன் இருந்ததே ஒருநாழிகைதான். ஆனால் நெடுநாட்கள் பழகியது போலிருந்தாள். மிக அண்மையில் அவளை அவன் பலமுறை நோக்கியிருந்தான். அவளுடன் இருந்த காலம் இழுபட்டு நீண்டு ஆண்டுகளாகவே ஆகிவிட்டிருந்தது என்று தோன்றியது. “இல்லை, அவள்தான்” என எண்ணியபடி கண்களை மூடினான். மத்ரநாட்டு இளவரசி விஜயையைப்பற்றி முன்னரே அறிந்திருந்தான். அழகி என்றும் நூல்கற்றவள் என்றும் மலைப்பாடகர்கள் சொல்லியிருந்தனர். முற்றிலும் மலைமகள். உத்தரமத்ரம் என்பது இமயமலையின் அடிவாரம். கரடிகள் மலையிறங்கும் ஊர்கள் கொண்டது.
ஒரு மலைமகள் ஒரு பாலைமகள் என அவன் விழிமூடியபடியே எண்ணிக்கொண்டான். அரசர்களுக்கு பல பெண்கள். ஆகவே அவர்களுக்கு காதலிக்கவே தெரியாது என்பார்கள். ஆனால் என்னால் இரண்டு பெண்களையும் விரும்ப முடியும். எனக்கு மலையும் பாலையும் பிடித்திருக்கிறது. மலையும் பாலையும். மூடிய சுவர்களின் காப்பு. விரிந்த வெளியின் திகைப்பு. இரண்டும். ஆம்… அவன் துயிலத்தொடங்கியபோது எதையோ எண்ணிக்கொண்டிருந்தான். எதை என உள்ளத்தின் ஒரு பகுதி வியந்துகொண்டும் இருந்தது.
காலையில் எழுந்ததும் முந்தையநாள் இறுதியாக எண்ணியது என்ன என்று எண்ணிக்கொண்டான். நினைவிலெழவில்லை. மிக இனிய ஒன்று. குளிர்காற்றுபோல நறுமணம் போல இளமழை போல இனியது. ஆனால் நினைவில் அந்த இனிமை மட்டுமே எஞ்சியிருந்தது. என்ன என்ன என்று சிந்தையைக்கொண்டு சித்தவெளியை துழாவிச் சலித்தபின் எழுந்துகொண்டான். சேவகனிடம் நீராட்டறை ஒருக்க ஆணையிட்டான்.
நீராடி அணிபூண்டு புரவியில் ஏறிக்கொண்டான். தன் உள்ளத்திலிருந்த எண்ணங்களும் எம்பி புரவியில் ஏறிக்கொண்டதைப்போலவே உணர்ந்தபோது சிரிப்பு வந்தது. இருபெண்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். இரண்டுபெண்களைப்பற்றி. ஒருத்தியை இன்னமும் பார்க்கவே இல்லை. சிரித்தபடி புரவியை தெருக்களில் செலுத்தினான். காலையிளவெயிலில் சிலிர்த்துக்கொண்டு கண்மூடி நின்றிருந்த பசுக்களை அதட்டி விலக்கிக்கொண்டு சென்றான்.
சிபிரரின் இல்லத்தின் முன்னால் எவருமில்லை. அவன் புரவியை நிறுத்தியபோது ஒரு முதியபெண் எட்டிப்பார்த்து “வருக இளவரசே” என்றாள். “பிதாமகர் எங்கே?” என்றான். “அவர்கள் புலரிக்குமுன்னரே மலையேறிவிட்டார்களே?” என்றாள். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து “மலையேறிவிட்டார்களா?” என்றான். “ஆம், நேற்றிரவே வேட்டைக்குச் செல்லவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார். காலையில் செல்வோம் என்றார் என் கணவர். அம்புகளையும் விற்களையும் இரவே சீர்ப்படுத்தினார்கள். கருக்கிருட்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.”
“எந்தவழியாக சென்றிருப்பார்கள்?” என்றான். “தெரியவில்லை, வேட்டைவழிகளை பெண்களிடம் சொல்வார்களா என்ன?” என்றாள். “மறிமானை உண்ணாமல் திரும்புவதில்லை என்று சொன்னார் பிதாமகர்.” பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டு “பிதாமகர் நடந்து மலையேறினாரா?” என்றான். “ஆம், அவர்தான் கூடாரப்பொதியையும் படைக்கலக்கூடையையும் எடுத்துக்கொண்டார்…” பூரிசிரவஸ் தலையசைத்துவிட்டு திரும்பிச் சென்று குதிரைமேல் ஏறிக்கொண்டான். சற்றுநேரம் என்னசெய்வதென்றே தெரியாமல் சித்தம் திகைத்து நின்றது.
மீண்டும் அரண்மனைக்குச் சென்று காவலர் சாவடியை அடைந்து இறங்கிக்கொண்டு “ஒற்றர்தலைவர் சலகரை நான் பார்க்கவிழைவதாக சொல்” என்று சேவகனை அனுப்பிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். அந்த இடைவெளியில் இரு பெண்களின் நினைவும் முட்டி முன்வந்தன. அவற்றை உள்ளே அனுப்ப விழைவதுபோல தலையில் தட்டிக்கொண்டான். ஒன்றுமில்லை, இன்னும் சற்று நேரத்தில் திரும்பிவிடுவார்கள். இப்போதுதான் வெயில் வந்திருக்கிறது. அவருக்கு வெயில் உகந்ததல்ல. திரும்பி வந்துவிட்ட செய்தி எப்போதும் வரும்.
சலகரிடம் சிபிரரின் இல்லத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படியும் அவரோ பிதாமகரோ திரும்பி வந்துவிட்டால் செய்தி அறிவிக்கும்படியும் ஆணையிட்டான். அப்போதே தெரிந்துவிட்டது, அவர்கள் உடனே திரும்பி வரப்போவதில்லை என்று. வீரர்களை அறியப்பட்ட அனைத்து வேட்டைவழிகளிலும் அனுப்பி தேடும்படி சொன்னான். ”அரசர் அவைகூடச் சொன்னாரா?” என்றான். “இல்லை, இன்றுமாலைதான் அவைகூடுவதாக ஆணை” என்றார் சலகர்.
அரசரிடம் சென்று பிதாமகரை காணவில்லை என்று சொல்லலாமா என்று எண்ணினான். ஆனால் அவர் மேலும் பதற்றம் கொள்வார் என்று தோன்றியது. “மூத்தாரிடம் இச்செய்தியை சொல்லிவிடுங்கள்” என்று சலகரிடமே சொல்லிவிட்டு திரும்பி தன் அறைக்கு சென்றான். நூல்கள் எதையாவது வாசிக்கலாமென ஏட்டுப்பெட்டியைத் திறந்து புராணகதாமாலிகாவை எடுத்துக்கொண்டு அமர்ந்தான். ஆனால் ஏடுகளை வெறுமனே மறித்தபடி சாளரத்தின் ஒளியைத் துழாவியபடி ஆடிக்கொண்டிருந்த மரக்கிளைகளை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.
உச்சிவேளையில் முதல்செய்தி வந்தது. பிரக்யாவதியின் வலப்பக்கமாக தூமவதி நோக்கிச்செல்லும் வேட்டைப்பாதையில் அவர்கள் இருவரும் செல்வதை இறங்கிவந்துகொண்டிருந்த இடையர்கள் நால்வர் பார்த்திருக்கிறார்கள். “இருவரும் ஊக்கத்துடன் மலையேறிச்சென்றதாக சொல்கிறார்கள் இளவரசே” என்றார் சலகர். ”நூற்றைம்பது வயதானவர். வியப்புதான்” என்றான். “இங்குள்ள தூய பால்ஹிகர்கள் நூறுவயதுக்குமேலும் ஆற்றலுடன் இருக்கிறார்கள், நான் பலரை அறிவேன்” என்றார் சலகர்.
அதற்குமேல் பாதை இல்லை. தூமவதியின் மடி குற்றிச்செடிகளின் மாபெரும் வெளி. அங்கே சென்று தேடுவதற்கு பெரும் படையே தேவைப்படும். “மறிமான்களை வேட்டையாடுவதென்றால் மலை ஏறி இறங்கி மறுபக்கம் சென்று மேலும் செங்குத்தான சரிவில் ஏறிச்செல்லவேண்டும். மறிமானுக்காக சென்று உயிரிழந்தவர்கள் பலர்” என்றார் சலகர். “அவர் இறக்கமாட்டார் சலகரே. அவரது ஊழ்நோக்கம் அது அல்ல. ஆனால் மத்ரரும் சௌவீரரும் வரும்போது அவரும் வந்தாகவேண்டும்” என்றான் பூரிசிரவஸ்.
மாலைவரை செய்தி ஏதும் வரவில்லை. மத்ரநாட்டு அரசப்படை நெருங்கிவிட்டது என்று செய்தி வந்தது. சலன் தன் சேவகனை அனுப்பி அவனை அரசரின் அறைக்கு வரச்சொன்னான். பூரிசிரவஸ் அரசரின் மஞ்சத்தறைக்குச் சென்றபோது அங்கே அந்தச் சிறிய அறைக்குள் ஃபூரியும் சலனும் அமர்ந்திருந்தனர். அருகே பேரமைச்சர் கர்த்தமர் நின்றிருந்தார். அவன் உள்ளே நுழைந்ததும் சோமதத்தர் “நான் அப்போதே சொன்னேன். இதெல்லாம் தேவையில்லை என்று. இந்த மனம்பிறழ்ந்த முதியவரைக்கொண்டு நாம் என்னசெய்யப்போகிறோம்?” என்றார்.
“என்ன நிகழ்ந்துவிட்டது? பிதாமகர் திரும்பி வந்துவிட்டார். அவர் சென்றபோதிருந்த இடத்தில் இருந்து வாழத்தொடங்கிவிட்டார்” என்றான் பூரிசிரவஸ். “நடுவே நூறுவருடங்கள் கடந்துவிட்டன. அதை அவர் அறியவேயில்லை.” ஃபூரி புன்னகைசெய்தான். சலன் “ஆம் தந்தையே, இளையோன் சொல்வதிலும் உண்மை உண்டு. அவர் இங்கே ஒரு சிறந்த பால்ஹிகவீரரைப்போல் இருப்பதில் என்ன பிழை? அவர்கள் வரட்டும். பிதாமகர் வேட்டையாடச்சென்றிருக்கிறார் என்றே சொல்வோம். அதைவிட அவரைப்பற்றி நாம் சிறப்பாகச் சொல்லும்படி என்னதான் இருக்கிறது?” என்றான்.
“ஆனால்…” என்று ஏதோ சொல்லவந்த சோமதத்தர் “எனக்குப்புரியவில்லை. ஏதேனும் செய்துகொள்ளுங்கள்” என்றார். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அரசே. தாங்கள் அமைதியாக இருங்கள்” என்றார் அமைச்சர். சோமதத்தர் “இதெல்லாம் சிறப்பாக நிகழுமென்ற எண்ணமே என்னிடமில்லை. ஏதோ பெரும் பிழை நிகழத்தான் போகிறது” என்றார்.
சலன் “அவர் திரும்பி வந்தபின் நாம் விழவறிவிப்போம். அதுவரை இச்செய்தியை முறையாக அறிவிக்கவேண்டியதில்லை. ஆனால் வந்திருப்பவர் நம் ஏழுகுடிகளின் முதல்தந்தை என்ற செய்தியை ஒற்றர்கள் பரப்பட்டும். இன்னும் ஓர் இரவு முடிவதற்குள் அவர் மாபெரும் புராணக்கதைமாந்தராக ஆகிவிடுவார். அவரைப்பற்றி வியப்புக்குரிய கதைகளை நாம் கேள்விப்படுவோம். அந்தக்கதைகளைப்போல நமக்கு ஆற்றலளிக்கும் விசை வேறில்லை” என்றான்.
“ஆம், உயிருடன் ஒரு தெய்வம். அதைவிட என்ன?” என்று பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். பூரிசிரவஸ் சலனின் தடுமாற்றமில்லாத சிந்தனையை வியந்தான். அவனால் எப்போதுமே அப்படி நடைமுறை சார்ந்து எண்ணமுடிவதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றென்று சிந்தனைகள் தொட்டுத் தொடர்ந்து எங்கோ சென்று முட்டி நிற்க ஓர் எண்ணம் தோன்றும். அதையே அவன் முடிவாக எடுத்துக்கொள்வான். அது சிந்தனையின் விளைவல்ல. சிந்தனைக்கு அப்பாலிருந்து வந்து அவன்முன் விழுவது.
சலன் “அவர்களின் நகர்நுழைவுக்கான அனைத்தும் சித்தமாகட்டும். நாளை விடியலின் முதல்கதிரில் மத்ரர்கள் நகர்நுழைகிறார்கள்” என்றான். “இளவரசி வருவதனால் அரண்மனையிலிருந்து பெண்கள் சென்று எதிரேற்க வேண்டும். அவர்களை முறைமைசெய்வதற்காக நாளை காலையிலேயே அவைகூடும். ஐந்துசபையினரும் குடித்தலைவர்களும் அணிக்கோலத்தில் வந்தாகவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “ஆணை இளவரசே” என்றான். ஃபூரி சிரித்தபடி “ஒற்றை அணியாடைகள் வைத்திருப்பவர்களிடம் சொல்லிவிடுங்கள், மறுநாள் காலையே சௌவீரர்களும் வந்துவிடுவார்கள், அவர்களுக்கும் அதே முறைமைகள் உண்டு என்று” என்றான்.
அன்று அரசவை கூடவேண்டியதில்லை என்று சலன் ஆணையிட்டான். ஃபூரி “முதியவர் மறிமான்களை வேட்டையாடிவிட்டுத் திரும்புவார் என்பது உறுதி என்றால் அவர் சென்றதிசையில் ஒரு கல்லை நாட்டி அதுவே அவர் என நாம் உருவகம் செய்யக்கூடாதா என்ன?” என்றான். சலன் “மூத்தவரே, நாங்கள் வேறு உளநிலையில் இருக்கிறோம்” என்றான். ஃபூரி “எனக்குப்புரியவில்லை. உளநிலை குழம்பிய முதியவரைவிட கல் உறுதியானது அல்லவா?”எ ன்றான்.
பூரிசிரவஸ் அன்றிரவு ஒருமுறை புரவியில் நகரை சுற்றிவந்தான். குளிர் தொடங்கியிருந்ததனால் நகரத்தெருக்கள் ஒழிந்துவிட்டிருந்தன. வீடுகளும் ஒளியடங்கி துயின்றன. சில வீடுகளுக்குள் கைக்குழந்தைகளின் அழுகையொலியும் அன்னையர் குரல்களும் கேட்டன. சேவகர்கள் நகரெங்கும் மூங்கில்களை நட்டு தோரணங்களையும் கொடிகளையும் கட்டிக்கொண்டிருந்தனர். நகர்முகப்பில் ஏழன்னையர் ஆலயத்திற்கு அருகே பெரிய வளைவு ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
பூரிசிரவஸ் திரும்ப தன் அறைக்கு வந்தபோது குளிர்ந்துவிறைத்திருந்தான். ஆடைகளை மாற்றிவிட்டு உணவருந்தி படுத்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டபோது அன்றைய நிகழ்ச்சிகள் குறுகிய பாதையில் தேங்கி நின்று ஒன்றன்மேல் ஒன்றாக ஏறமுயலும் ஆட்டுமந்தை போல குழம்பின. புரண்டுபடுத்தபடி சிபிநாட்டின் விரிந்த பாலைவெளியை நினைவில் விரித்தான். கண்களுக்குள் ஒளி நிறைந்தது. அது முகத்தை மலரச்செய்தது. ஒரு காலடித்தடம் கூட இல்லாத விரிந்த வெறும்வெளி. மென்மையான பாலைமணலில் காற்று புகைபோல கடந்துசென்றது. மலையிடுக்குகளில் ஓசையின்றி மென்மணல் பொழிந்துகொண்டிருந்தது.
தேவிகையின் முகத்தை மிக அண்மையில் பார்த்தான். அவளுடைய தூயபால்நிறம் அவள் முகத்திலிருந்த மென்மயிர்பரவலை நீலநிறமாகக் காட்டியது. மேலுதட்டிலும் கன்னங்களிலும் நெற்றிவிளிம்பிலும். அவள் காதோரமும் முன்னெற்றியிலும் சுழிகள் இருந்தன. சிறிய செந்நிறப்புள்ளிகளாக பருக்கள். பருக்கள் ஏன் பெண்களை உணர்ச்சிகரமானவர்களாக காட்டுகின்றன? அவன் அவளை நோக்கியபடி துயிலில் ஆழ்ந்தான்.
காலையில் சேவகன் வந்து மணியோசை எழுப்பி அழைக்க எழுந்துகொண்டான். “இன்னும் விடியவில்லை அரசே. ஆனால் மூத்தவர்கள் நீராடி அணிகொண்டிருக்கிறார்கள்” என்றான் சேவகன். அவன் எழுந்து கைகளை உரசிக்கொண்டு புன்னகைசெய்தான். ஒவ்வொருநாளும் துயில்கையில் அவள் நினைவுடன் ஆழ்ந்து அவள் நினைவுடன் எழுந்துகொண்டிருந்தான். ஒரு பெண்ணை அப்படி அவனால் நினைக்கமுடியுமென்பதை எண்ணவே வியப்பாக இருந்தது. புன்னகையுடன் சென்று நீராடி உடைமாற்றினான். உணவருந்திக்கொண்டிருக்கையில் வெளியே முரசுகள் முழங்கக்கேட்டான்.
வெளியே அரண்மனையின் பிறைவடிவ முற்றம் முழுக்க வண்ணத்துணித்தோரணங்களாலும் கொடிகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. எந்த ஒழுங்குமில்லாமல் சேவகர்களும் வீரர்களும் முட்டிமோத தலைப்பாகைகள் அஞ்சிய பறவைக்கூட்டம் என காற்றில் சுழன்றன. படைக்கலங்கள் மோதி ஒலித்தன. ஒரு குதிரை வீரன் அவனிடம் “அகன்றுசெல் மூடா” என்றபின் “பொறுத்தருள்க இளவரசே” என்றான்.”பொறுத்தருள்க! “என்றபடி குதிரையிலிருந்து இறங்கினான்.
பூரிசிரவஸ் அக்குதிரைமேல் ஏறிக்கொண்டு “நான் அணிச்செயல்களை பார்த்துவருகிறேன்” என்று சொல்லி கிளம்பினான். நகரம் பதற்றமும் பரபரப்புமாக முட்டிமோதுவதை கண்டான். புரவிக்கு வழிவிட எவராலும் முடியவில்லை. மலைமக்கள் தன்னந்தனிமையில் மலைகளில் வாழ்பவர்கள். அவர்கள் ஊருக்கு வருவதே முட்டிமோதுவதற்காகத்தான். அல்லது அவர்களுக்கு கூட்டமாக திரளவோ செயல்படவோ தெரியவில்லை. அனைவரும் கிளர்ச்சிகொண்ட வாத்துக்கள் போல தலையை நீட்டி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.
ஏழன்னையர் கோயிலருகே அணிவாயில் எழுந்திருந்தது. அதில் மறிமான் பொறிக்கப்பட்ட பால்ஹிகக்கொடியுடன் மத்ரநாட்டு கலப்பைக்கொடியும் பறந்தது. அவனைக்கண்டதும் அங்கே நின்றிருந்த சுதாமர் அருகே வந்து வணங்கி “கணவாயை கடந்துவிட்டார்கள் இளவரசே. வரவேற்புப்படை சென்றிருக்கிறது” என்றார். “சாலையில் நின்றிருக்கும் பசுக்களை அகற்றக்கூடாதா?” என்றான் பூரிசிரவஸ். சுதாமர் சஞ்சலத்துடன் நோக்கியபின் “பசுக்களையா?” என்றார். அவர் அதை சிந்தித்திருக்கவில்லை என்று தெரிந்தது.
”ஆம், பசுக்கள் சாலையில் நின்றால் எப்படி அணியூர்வலம் சாலையில் செல்லமுடியும்? செய்யுங்கள்” என்றான். பின்னர் “பிதாமகரைப்பற்றிய செய்தி ஏதேனும் கிடைத்ததா?” என்றான். “இல்லை இளவரசே” என்றார் சுதாமர். “ஒற்றர்கள் செல்லாத இடமில்லை. சூக்ஷ்மபிந்துவின் உச்சியில் ஏறிக்கூட நோக்கிவிட்டார்கள். எங்கும் அவர்கள் தென்படவில்லை.” பூரிசிரவஸ் “மறிமான் வேட்டையாட செல்லக்கூடிய இடங்களென சில மட்டும்தானே உள்ளன?” என்றான். “அவ்விடங்களிலெல்லாம் நோக்கிவிட்டார்கள்” என்றார் சுதாமர். பூரிசிரவஸ் தலையசைத்தான்.
திரும்ப அரண்மனைக்கு வந்தான். ஏதோ ஒருவகையில் அன்றைய நாள் களியாட்டத்திற்குரியது என மக்கள் முடிவெடுத்துவிட்டிருந்தனர். கோடைகாலத்தில் அவர்கள் களியாட்டத்திற்கான நாட்களை தேடிக்கொண்டிருந்தார்கள். ஆகவே வண்ண உடைகளுடனும் கூந்தல்களில் மலர்க்கொத்துக்களுடனும் தெருக்களில் முட்டிமோதிக்கொண்டிருந்தனர். புதைக்கப்பட்ட மதுக்கலங்களெல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன என்று மணம் சொல்லியது. சாலையில் பார்த்த பெரும்பாலானவர்கள் வாயை அழுத்தி உதட்டை விதவிதமாக நெளித்து புருவத்தை தூக்கியிருந்தார்கள்.
அரண்மனை முற்றத்திற்கு அவன் செல்லும்போது சோமதத்தர் கிளம்பிக்கொண்டிருந்தார். அவன் அன்னை சுதுத்ரியும் தங்கை சித்ரிகையும் அணிக்கோலத்தில் வந்து இடைநாழியில் நின்றிருக்க உள்ளிருந்து தந்தை மிகமெல்ல நடந்துவந்தார். தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டே சால்வையை அள்ளி அள்ளி போட்டபடி தலைமையமைச்சர் கர்த்தமர் வந்தார். பட்டு மேலாடையை எப்படி போடுவதென்று அவருக்குத்தெரியவில்லை. அனைத்து ஆடைகளையும் இறுக்கமாக உடலுடன் சுற்றிக்கொண்டுதான் அவருக்குப் பழக்கம். ஆடைகள் தழைந்தபடியே இருக்கவேண்டும் என அணிச்சேவகன் சொல்லியிருந்தான். சரியும் ஆடை அவரை நிலையழியச்செய்தது.
ஃபூரி அவனருகே வந்து “நீர்மலம் கழிக்கும் குழந்தையை கையில் வைத்திருக்கும் அன்னையை போலிருக்கிறார் தந்தை” என்றான். பூரிசிரவஸ் பல்லைக்கடித்தான். எப்படி இவரால் எப்போதும் இந்த விழிகளுடன் இருக்கமுடிகிறது என எண்ணிக்கொண்டான். அவருடைய துணைவியாகிய சிவி அரசிளங்குமரி சதயை உள்ளிருந்து சேடியுடன் வந்தாள். ஒவ்வொன்றும் எல்லாவகையான குழப்பங்களுடனும் தடுமாற்றங்களுடனும் நிகழ்வதை பூரிசிரவஸ் கண்டான். பாஞ்சாலத்தில் நூறுமுறை ஒத்திகைபார்க்கப்பட்ட நாடகம்போல நடந்தவை அவை. பேரரசி இடைநாழியில் காத்து நின்றிருப்பதை எங்கும் நினைத்தே பார்க்கமுடியாது. அவள் தன் மேலாடை நுனியை கையால் சுழற்றிக்கொண்டிருப்பதை கவிஞர்கள் மட்டுமே கற்பனைசெய்ய முடியும்.
சோமதத்தர் சலனிடம் ஏதோ ஆணையிட்டுவிட்டு வந்து சுற்றும் நோக்கினார். அதன்பின்னர் எவரோ கைகாட்ட மங்கல இசை முழங்கியது. வாழ்த்தொலிகள் எழுந்தன. அவர் தன் புரவிமேல் ஏறிக்கொண்டதும் கோல்காரன் முன்னால் நின்ற புரவியில் ஏறிக்கொண்டான். அவனுக்குப்பின்னால் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் சிறிய குழுக்களாக வந்து நின்றனர். ஃபூரி “எதையோ மறந்துவிட்டார்கள். முக்கியமான ஒன்று” என்றான்.
சலன் சினத்துடன் பின்னாலிருந்து கைகாட்டி ஆணையிட ஒருவன் ஓடிச்சென்று ஓரமாக வைக்கப்பட்டிருந்த பால்ஹிக நாட்டுக்கொடியை எடுத்துவந்தபோதுதான் அது என்ன என்று பூரிசிரவஸ்ஸுக்கு புரிந்தது. கொடியுடன் அவன் தடுமாறி அழைக்க கொடிச்சேவகன் ஓடிச்சென்று தன் குதிரையில் ஏறி வந்து கோல்காரனுக்குப்பின்னால் கொடியுடன் நின்றுகொண்டான். சலன் சினத்துடன் ஏதோ சொன்னபடி உள்ளே சென்றான்.
ஃபூரி “இப்போதே போவது எதற்காக? அங்கே சென்று வெயிலில் காத்து நிற்கவா?” என்றான். “இல்லை, இன்று ஊர் இருக்கும் நிலையில் அங்கே செல்வதற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். அணியூர்வலம் முன்னால் சென்றது. “நானும் செல்லவேண்டும். பட்டத்து இளவரசன் எங்கே என்று மத்ரர் கேட்டால் தந்தை அருகே நிற்கும் வேறு எவரையாவது சொல்லிவிடுவார்” என்றபடி ஃபூரி ஓடிச்சென்று அவனுக்காக சேவகன் பிடித்திருந்த குதிரையில் ஏறிக்கொண்டான். அரண்மனை மகளிர் அவர்களுக்கான அணிமஞ்சல்களில் ஏறிக்கொண்டனர். ஊர்வலம் குதிரைகள் ஒன்றை ஒன்று இடிக்க அரண்மனை முற்றத்தைக் கடந்தது.
பூரிசிரவஸ் உள்ளே சென்றான். சலிப்பாக இருந்தது. தன் அறைக்குச் சென்று முடங்கிவிடத்தான் தோன்றியது. ஆனால் வேறுவழியில்லை. சேவகன் அவனிடம் “மூத்தவர் தங்களை அழைத்தார்” என்றான். பூரிசிரவஸ் சென்றபோது அரசவையில் சலன் நின்றிருந்தான். சினத்துடன் இடையில் கையை வைத்து கூவிக்கொண்டிருந்தான். “மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். “வந்துவிட்டாயா? இந்த அரசவையை நீ நின்று ஒழுங்குசெய். பலமுறை சொல்லியிருந்தேன், வழக்கமான அரியணையில் அரசர் அமரப்போவதில்லை என்று. மூன்று அரசர்களுக்கும் நிகரான அரியணைகளை கீழே போடு என்றேன். அதைச்செய்துவிட்டு அரசியின் அரியணையை மட்டும் மேலே இருக்கும் அரியணைக்கு அருகிலே போட்டிருக்கிறார். ஒழிந்த அரியணைக்கு அருகில் அரசி அமர்ந்திருக்க வேண்டுமாம்… மூடர்கள்…”
பூரிசிரவஸ் “நம் அரசில் இதெல்லாம் புதியவை அல்லவா மூத்தவரே?” என்றான். “எனக்கு உண்மையிலேயே அச்சம் இளையோனே. நம்குடிகளை நாம் நம்ப முடியாது. பத்துகுலங்களும் ஒன்றாகிறோம். அதைக்கேட்டு அஸ்தினபுரியோ துவாரகையோ படைகொண்டுவந்தால் என்ன செய்ய? இவர்களை அழைத்துக்கொண்டு போருக்குச் செல்லமுடியுமா? போர்க்களத்தில் இரண்டு குலங்கள் எங்களுக்கு வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பு வரவில்லை என்று சினந்து திரும்பிவிடுவார்கள். மூடர்கள், மலைமூடர்கள்.”
பூரிசிரவஸ் புன்னகைத்தான். “நீயே ஒழுங்கு செய். மேலிருக்கும் அரியணை பால்ஹிகருக்கு. பிறர் கீழே அமர்கிறார்கள். மூன்று அரியணைகளில் தந்தையும் சல்லியரும் அவரது இளையோன் தியுதிமானும் அமர்வார்கள். நாளை இன்னொரு அரியணை தேவை. சௌவீரர் அவர் மட்டும்தான் வருகிறார்” என்றபின் திரும்பியபோது நிழல் ஒன்று சரிந்தது. ஓரிரு குரல்கள் ஒலித்தன. ”என்ன என்ன?” என்றான் சலன். “பாவட்டா ஒன்று அவிழ்ந்து விழுந்துவிட்டது இளவரசே, இதோ கட்டுகிறோம்.”
”பார்த்தாயா? அது மத்ரரின் தலையில் அவிழ்ந்து விழாமலிருந்தது என் நல்லூழ்” என்றபடி சலன் உள்ளே சென்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சேவகன் அவன் சிரிப்பதைக் கண்டு தானும் சிரித்து “அது நான்குமுறை அவிழ்ந்து விழுந்துவிட்டது… அதைக்கண்டு மூத்தவர் மாளிகையே மதுவருந்தியிருக்கிறது. இடையில் ஆடை நிற்கவில்லை என்கிறார்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.
அவன் அவையை ஒழுங்குசெய்து முடித்தபோது எரியம்புகள் வானில் வெடிக்கும் ஒலியும் நகரமே மழை எழுந்ததுபோல ஓசையிடுவதும் கேட்டது. வெளியே வந்தான். “அவர்கள் நகர்நுழைகிறார்கள் இளவரசே” என்றான் சேவகன். “நகர்ச்சாலைகளை பசுக்களை ஒதுக்கி சீரமைக்கச் சொன்னேனே?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், செய்துவிட்டோம். பசுக்கள் நின்றவரை நன்றாக இருந்தது. இப்போது அந்த இடத்தில் குடிகாரர்கள் நிற்கிறார்கள். அவர்களை அகற்றுவது கடினம்” என்றான் சேவகன்.
பூரிசிரவஸ் தன் புரவியில் ஏறி நகருக்குள் நுழைந்தான். அது நகரமாகவே இருக்கவில்லை. ததும்பும் மக்கள்திரள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் நோக்கி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். மரவுரியாடைகளும் கம்பளியாடைகளும் அணிந்த குழந்தைகள் தந்தையர் தலைமேல் மிதந்து அமர்ந்து விழித்து நோக்கின. வானில் எரியம்புகள் எழுந்து வெடித்தபடியே இருந்தன. நகரின் கூச்சலில் முரசுகளும் கொம்புகளும் எழுப்பிய பேரொலி மறைந்தது.
அவன் ஏழன்னையரின் ஆலயமுற்றத்துக்குச் சென்றபோது மத்ர மன்னர்கள் இருவரும் வந்து முறைமைகளும் முகமன்களும் முடிந்திருந்தன. உரிய குளறுபடிகளுடன் என்று அவன் நெஞ்சில் கரந்த புன்னகையுடன் எண்ணிக்கொண்டபோதே சுதாமர் ஓடிவந்து “இளவரசே, இரண்டு பொற்தாலங்கள்தான் வந்தன. ஒன்று வரவில்லை. ஆகவே மத்ரமன்னர்களை மட்டுமே தாலமுழிந்து வரவேற்றோம். இளையோரை விட்டுவிட்டோம்” என்றார். பூரிசிரவஸ் சினத்தை அடக்கினான். “பிற தாலங்களை அரண்மனையிலேயே விட்டுவிட்டார்கள்.” பூரிசிரவஸ் “சரி, நமது முறைப்படி இளவரசர்களை அரண்மனை வாயிலில்தான் தாலமுழிந்து வரவேற்போம் என்று சொல்லிவிடலாம்… அதற்கு ஆவன செய்யுங்கள்” என்றான்.
அவன் அரசரின் அகம்படியினரின் பின்நிரையில் சென்று நின்றான். மத்ர மன்னர்களை சோமதத்தர் வரவேற்று முடிந்ததும் ஃபூரி அவர்களை கால்தொட்டு வணங்கினான். பின்னர் சல்லியரின் மைந்தர்களான ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் தழுவி வரவேற்றான். அவர்களிடம் அவன் ஏதோ சொல்ல அவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கினர். முரசுகளும் கொம்புகளும் மங்கலஇசைக்கலங்களும் வாழ்த்தொலிகளும் சூழ்ந்த பேரொலிக்குள் ஒரு குழந்தை வீரிட்டலறியது.
அரசி முன்னால் சென்று சல்லியரின் துணைவி விப்ரலதையை வணங்கி முகமன் சொல்லி வரவேற்றாள். அருகே தியுதிமானின் துணைவி பிரசேனை நின்றிருந்தாள். அப்போதுதான் பூரிசிரவஸ் விஜயையை நினைவுகூர்ந்தான். அவன் நினைவுகூர்ந்ததை எவரேனும் கண்டிருப்பார்களோ என்ற ஐயத்துடன் அவன் சுற்றிலும் நோக்கினான். அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. மறுபக்கம் அணிப்பரத்தையர் கூடி நின்றிருந்தனர். அனைவருமே அரசிகளாக தோன்றினர்.
குளிர்ந்த காற்று ஒன்று வீசி அவன் உடல் சிலிர்த்தது. உண்மையிலேயே காற்று வீசியதா என்று மீண்டும் எண்ணிக்கொண்டான். குழல் அசைந்தபோதுதான் காற்று வீசியதென்று தெரிந்தது. அவன் தங்கை சித்ரிகை கையில் தாலத்துடன் முன்னால் சென்றாள். எதிரில் அணிப்பரத்தையர் நடுவே இருந்து உயரமற்ற சிறு பெண் ஒருத்தி வந்து நின்றாள். பீதர்களின் சாயல் கொண்டவள். மிகச்சிறிய பரந்த மூக்குகொண்ட மஞ்சள்செப்பு முகம். கன்னங்கள் சிவந்திருந்தன. பீதர்களுக்குரிய சிறிய விழிகள். கரிய நேர்குழல்கற்றைகளை பின்னால் கட்டி இறக்கி அவற்றில் மணிச்சரங்களால் அணிசெய்திருந்தாள்.
பூரிசிரவஸ் ஏமாற்றத்துடன் விழிகளை விலக்கிக்கொண்டான். சித்ரிகை அவளுக்கு குங்குமம் இட்டு மலர் அளித்து வரவேற்றாள். அவன் மீண்டும் அவளை நோக்கினான். பெண் என்றே அவளை நினைக்கத் தோன்றவில்லை. மரச்செப்புபோலவே இருந்தாள். அல்லது தந்தப்பாவை போல. பொன்மூங்கில் போன்ற கைகள். பீதர்களின் நீள் கலம் போன்ற மெலிந்த கழுத்து. சிறிய செம்மலர் போன்ற உதடுகள். அவள் கண்களும் துழாவிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.
அவன் உள்ளத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று நினைத்துக்கொண்டு அவன் நோக்கி நின்றான். அவள் நோக்கு அவன் நோக்கை வந்து தொட்டது. அவள் சற்றே அதிர்வதும் விழிகளை விலக்கிக்கொள்வதும் தெரிந்தது. அத்தனை தொலைவிலேயே அவள் கழுத்தில் ஏற்பட்ட புளகத்தை காணமுடிந்தது. அவன் உள்ளத்திலும் இளங்குளிர்காற்று பட்டது போலிருந்தது. அவன் அவளிடமிருந்து நோக்கை விலக்கிக்கொண்டான். சல்லியரும் தியுதிமானும் சோமதத்தரும் ஏழன்னையர் ஆலயத்திற்குள் நுழைந்தனர்.
தொடர்ந்து அவன் அன்னையும் தங்கையும் மத்ரநாட்டு அரசியர் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றனர். அவள் திரும்பிப்பார்ப்பாள் என்று பூரிசிரவஸ் எண்ணினான். பார்க்கிறாளா என்று அவனுள் சிறிய பதற்றம் எழுந்தது. அவள் தலைகுனிந்து ஆடையை கையால் தூக்கியபடி ஆலயத்தின் வளைப்பின் படியை நோக்கியபின் திரும்பி அவனை நோக்கினாள். மலையுச்சி திரும்புகையில் ஆழத்தில் அடிவாரத்தின் நீர்ச்சுனை மின்னுவதுபோல மெல்லிய புன்னகை அவள் இதழில் வந்து சென்றது. உள்ளே சென்றபோது அவள் உடலில் ஒரு சிறிய துள்ளல் இருந்தது.
பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். சுதாமர் அவனருகே வந்து “இளவரசே, குடிகாரர்கள் என்னையே அடிக்க வருகிறார்கள். அத்தனைபேரும் மலைப்பழங்குடிகள்… அவர்களை அடிக்க நம்மால் முடியாது” என்றார். பூரிசிரவஸ் வெடித்துச்சிரித்து “சரி அவர்களிடமே கூட்டத்தை கட்டுப்படுத்தச் சொல்லிவிடுங்கள்” என்றான். சுதாமர் திகைத்து நோக்க சிரித்தபடியே புரவியைத் தட்டினான். அவளுடைய சிறிய செப்புடல் கண்ணில் எஞ்சியிருந்தது. அது மிக அழகானதாக ஆகிவிட்டிருந்தது.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்