கர்மயோகம் : (35 – 41)

35

சிறப்புற செய்யப்பட்ட
பிற அறங்களைவிட
குணம் குறைந்தது என்றாலும்
தன்னறம் மேலானதே
தன்னறம் ஆற்றுகையில் பெறும்
மரணமும் மகத்தானதே
பிற அறங்கள்
அச்ச மூட்டுபவை       

36

அர்ஜூனன் கேட்கிறான்
ஸிருஷ்ணி குலத்தில் பிறந்தவனே,
என்னுள் உள்ள புருஷன்
விரும்பாதிருந்த போதிலும் கூட
எந்தத் தூண்டுதலால்
செலுத்தப்பட்டவன் போல
பாவம் செய்கிறான்?           

37

கிருஷ்ணன் சொல்கிறான்
ரஜோகுணத்தில் உதித்த
இந்த காமமும் குரோதமும்
பெரும்பசி போன்றவை
பாவத்தில் ஆழ்த்துபவை
அவற்றை
இங்கு நீ
உன் எதிரிகள் என்றே அறிக.       

38

புகையால் தீயும்
அழுக்கால் கண்ணாடியும்
மூடப்பட்டிருப்பது போல
கருவை கருப்பை மூடியிருப்பது போல
அவ்வாறு அவற்றால்
இது மூடப்பட்டிருக்கிறது.   

39

அர்ஜூனா
நிறைத்து விடமுடியாத
அனல் போன்றதும்
காம வடிவில் உள்ளதும்
ஞானியின் நிரந்தர எதிரியும்
ஆன இது
விவேகத்தை மூடியிருக்கிறது.

40

புலன்களும்
மனமும் அறிவும்
இதன் உறைவிடம்
என்று கூறுப்படுகிறது
இது இவற்றால்
ஞானத்தை மூடிவிட்டு
உடலானவனை
ஆசை கொண்டவனாக்குகிறது.

41

ஆகவே அர்ஜூனா
நீ முதலில்
புலன்களை வென்றுவிட்டு
ஞானத்தையும் விஞ்ஞானத்தையும்
அழிக்கும்
இந்த பாவத்தை
அழிப்பாயாக.
 

செயல் மீட்பாக ஆதல்

கிருஷ்ணனின் கூற்றாகவரும் 35 ஆவது பாடல் ஏற்கனவே கூறிய விஷயத்தை மீண்டும் அழுத்திச் சொல்கிறது. ஒருவனின் தன்னறமே அவனுடைய மீட்புக்கு வழிவகுக்கும். அவனுக்கு நிறைவையும் முழுமையையும் அளிக்கும். பரதர்மம் அல்லது மாற்றுஅறம் இதைவிட மேலானதாக இருந்தாலும் ஒருவேளை இதைவிடச் சிறப்பூட்டுவதாக இருந்தாலும் தீங்கை விளைவிக்கும், அச்சம் தரும் விளைவுகளையே அது உருவாக்கும்.

பல உரைகளில், முந்தைய பாடல்களைப் போலவே, இதையும் ஒருவன் தன் பிறப்பின் வர்ணத்திற்குரிய செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் செய்யுள் வரும் இடம் அத்தகைய பொருள் கொள்வதற்குச் சற்றும் பொருத்தமற்றது என்பதையும் அவர்கள் கவனிப்பதில்லை.

கீதையில் இங்கே குறிப்பிடப்படும் தன்னறம் என்றால் என்ன என்பது பற்றி மிகமிக விரிவாகவே முந்தைய அத்தியாயத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஒருவனின் இயல்பினால் அவனுக்குரியதாக உள்ள செயலே தன்னறம். என்னுடைய தன்னறம் என்பது வாசிப்பு, எழுத்துத்தான். சேவையோ, சாகசமோ, வணிகமோ, நிர்வாகமோ அல்ல. அவை என்னைப் பொருத்தவரை மாற்றுஅறங்கள். ஒருவேளை நான் அவற்றை வெற்றிகரமாகச் செய்தாலும் கூட என் தன்னறமே எனக்குரியது, இயல்பானது, எனக்கு நிறைவை அளிப்பது. அதுவே இங்கே கீதை கூறும் பொருள்.

இங்கே இந்தச் செய்யுள் ஏன் வருகிறது என்பது முக்கியமான கேள்வி. இந்த இடத்தில் ஏற்கனவே கேட்கப்பட்ட வினா என்பது மனிதன் உட்பட எல்லா உயிர்களும் தங்கள் அடிப்படை இயல்புகளின் படித்தானே செல்படுகின்றன. ஏன் அவற்றைத் தடுக்க வேண்டும், தடுக்கத்தான் முடியுமா என்பதாகும். அதற்கான சுருக்கமான விடையே இவ்விருபாடல்களும்.  காமமே செயலைத்தாண்டுகிறது, தன்னியல்பில் இருந்து பிறழச் செய்கிறது என்பது முதல்பாடலின் பொருள். அப்படிப் பிறழ்வதன் மூலம் ஒருவன் தன்னறம் அல்லாத செயல்களில் ஈடுபட கூடும். அது அவனுக்கு அழிவையே உருவாக்கும் என்பது தொடர்ந்து வரும் செய்யுளின் கூற்று.

சுருக்கமான இந்த வினாக்களுக்குப் பதிலாக அர்ஜூனன் மீண்டும் ஒரு வினாவையே கேட்கிறான். இந்த வடிவ நேர்த்தி மிக அழகானதாகும். முதலில் அர்ஜூனன் கேட்கும் கேள்வி பொதுப்படையானது உயிர்களின் தன்னியல்பை ஏன் தடுக்க வேண்டும்? பதிலும் பொதுப்படையானது. அவை காமத்தால் தன்னறம் தவறக்கூடும். அது அழிவை அளிக்கும். அதன் பின்னர் அர்ஜூனன் வினாவை தன்னைச் சார்ந்ததாக அந்தரங்கமானதாக ஆக்கிக் கொள்கிறான். என்னுள் உள்ள புருஷன் செயலாற்ற விரும்பவில்லை. ஆயினும் அவன் அவனை மீறிய சக்தியால் செலுத்தப்பட்டவனைப் போல செயல்களில் ஈடுபட்டு பாவம் செய்கிறானே அது ஏன்?

வாழ்வில் அந்தரங்கமாக இந்த வினாவைக் கேட்டுக் கொள்ளாத மிகச்சிலரே இருப்பார்கள் என்றுபடுகிறது. நான் என் ஆழத்தில் எதையும் வெல்ல, எதையும் துரத்திச் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் நான் செயலாற்றுகிறேனே அதன் விளைவான பாவங்களையும் அடைகிறேனே ஏன்?

இங்கே கீதை 34ஆவது பாடலில் கூறும் ‘இவன்’ யார் என்பது தெளிவாகவே கூறப்பட்டுவிட்டது. அது ‘புருஷன்’ தான். சாங்கிய தரிசனத்தை ஒட்டியே இந்த விவாதம் அமைந்துள்ளது என்று கூறினேன். சாங்கிய தரிசனம் உருவாக்கி வளர்த்தெடுத்த இரு கருத்துருவங்களே பிரகிருதி-புருஷன். அதாவது இயற்கை-இயற்கையை அறிவது எதுவோ அது. இந்த புருஷன் (அதாவது இயற்கையை அறியும் தன்னிலை ) ஒவ்வொரு மானுடனின் உள்ளும் உள்ளது. ஒவ்வொரு உயிர்த்துளிக்கு உள்ளும் உள்ளது. அதுவே இங்கு புருஷன் என்று கூறப்படுகிறது.

எனக்குள் நான் என்று நான் உணரும் தன்னிலையாக அது இருந்தாலும் கூட இப்பிரபஞ்சமளாவி பெருகி நிறைந்து பிரபஞ்சத்தையே அறிந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் அது. இங்கே ஆற்ற வேண்டிய செயல் என ஏதுமில்லை. அதற்கு அடையவும் இழக்கவும் ஏதுமில்லை. அது ஒரு சாட்சி மட்டுமே. அந்த ‘இவன்’ எதற்காகப் பாவம் செய்கிறான்? அவனை செலுத்தும் அவனை மீறிய விசை எது?

கிருஷ்ணன் 34ஆவது பாடலில் கூறிய அதே பதிலை இப்போது அர்ஜூனனின் அந்தரங்கமான கேள்விக்குரிய அந்தரங்கமான பதிலாக மீண்டும் கூறுகிறான். சாங்கிய தரிசனத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் பாடலுக்கான பொருளை முழுக்கப் புரிந்து கொள்ள முடியும். அந்த பின்புலப்புரிதல் இல்லாத பொதுபுத்தி விளக்கங்களை நாம் தொடர்ந்து வாசிக்கிறோம். உதாரணமாக பல உரைகளில் ‘ரஜோ குணத்தில் உதித்த இந்த காமம்’ என்ற வரியானது அர்ஜூனனின் (அல்லது மனிதனின்) ரஜோ குணத்தில் உருவானதுதான் காமம் என்று பொருள் கூறப்பட்டிருக்கும். அது மிகப் பிழையான ஒன்று.

ஏற்கனவே அர்ஜூனன் கேட்ட கேள்விக்கான பதில்தான் இங்கு கூறப்பட்டிருக்கிறது. மனிதனில் உள்ள காமமும் குரோதமும் பெரும் பசி போன்றவை. மனிதனை பாவத்தில் ஆழ்த்துபவை. அவற்றை நீ உன் எதிரியாக எண்ண வேண்டும். அந்தக் காமம் எங்கிருந்து உதயமாகிறது? அது ரஜோ குணத்தில் உதித்தது. அந்த ரஜோ குணம் எங்குள்ளது?சாங்கிய தர்சனத்தின்படி இயற்கையின் மூன்று குணங்களில் ஒன்று ரஜோ குணம். ஆதி இயற்கையிலேயே அது உள்ளது. ஆதி இயற்கையைப் போல புருஷனைப் போல அதுவும் எப்போதுமிருப்பது, அழியாதது.

அதாவது காமம் என்பது மனிதன் உருவாக்கிக் கொண்ட ஒன்றல்ல. அவனுள் அவன் சேர்த்துக்கொண்ட தீமை அல்ல அது. அது அந்தப் பிரபஞ்ச சக்தியின் ஒரு வடிவம் மட்டுமே என்கிறது கீதை. 34ஆவது பாடலில் ‘அஸ்ய’ (இவன்) என்று கூறப்பட்டிருப்பது இந்தப் பாடலால் நீ என்று கூறப்பட்டிருக்கிறது. வித்தி என்ற சொல் அறிவாயாக என்று அர்ஜூனனையே முன்னிலைப்படுத்துகிறது. பலகோணங்களில் சிந்தித்தபடியே செல்ல வேண்டிய ஒரு செய்யுள் இது.  நவீன உளவியலை துணைக்குக் கொண்டு இதை விரிவாக்கம் செய்யும்போது பல்வேறு வகை புரிதல்கள் நமக்குக் கிடைக்கும். அது வாசகனின் கற்பனை, சிந்தனைத்திறன் சார்ந்தது.

நாம் எதற்காக செயல்புரிகிறோம்? அதற்கு விடையாக காமத்தால் என்கிறது கீதை. காமம் என்பது இங்கே இச்சை (Will) என்று நவீன உளவியல் கூறும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. இன்றும் துல்லியமாக இன்பத்திற்கான இச்சை (Will for Pleasure) என்று கூறலாம். அந்த இச்சையானது எங்கிருந்து வருகிறது? அது இயற்கையில் உறைந்துள்ளது. இயற்கையில் உறைந்துள்ள செயலுக்கத்தன்மையே நம்மில் இன்பவிழைவாக, காமமாக செயல்படுகிறது என்பது ஒரு பெரிய தரிசனம்.

பிரபஞ்சப் பெருவிரிவாக உள்ள முடிவிடாத பருப்பொருள் வெளியில் உறைந்துள்ள செயல் நாட்டமே இயற்கையிலும் வெளிப்படுகிறது. எந்தச் செயலூக்கம் கருத்துளைகளின் கருப்பையில் இருந்து நட்சத்திரங்களை விண்மீன்களை (Galaxy) உருவாக்குகிறதோ அதே செயலுக்கமே சாலையில் சந்தித்த பெண்ணை பின்னால் தொடர்ந்து செல்லும் பதின்படுவத்துப் பையனின் உடலிலும் உள்ளத்திலும் செயல்படுகிறது. ரஜோகுணம் என்பது இயற்கையில் உள்ள நேர்நிலை ஆற்றல். அதுவே பிரபஞ்சத்தை செயல்படச் செய்கிறது. அதில் இருந்து நம்முன் உறையும் புருஷன் தப்பவே முடியாது என்கிறது கீதை. சாங்கியத்தரிசனத்தின் சாரம் இது.

பார்ப்பவன்

புருஷன் பிரபஞ்சத்தின் சாட்சி. நம்முன் இருக்கும் நாமும் நம் பிரபஞ்சத்தின் சாட்சி மட்டுமே. சாட்சி பூதம் என்ற சொல்லாடசியை கேள்விப்பட்டிருப்பீர்கள்-யோசித்திருக்க மாட்டீர்கள். நிலம், நீர், எரி, வளி, விசும்பு என்று பூதங்கள் ஐந்து. இந்த ஐந்தையும் வெறுமே வேடிக்கை பார்க்கும் ஆறாவது பூதம்தான் நமது அகம்-சாட்சி பூதம். அவன் எதையுமே செய்ய வேண்டியதில்லை. எதிலுமே ஈடுபடுவதில்லை. அவனுக்கு உண்மையில் வெளியே நிகழும் எதுவும் ஒரு பொருட்டல்ல.

எப்போதாவது அவன் இருப்பை நாம் கவனித்தால் உண்மையிலேயே பீதி அடைந்துவிடுவோம். நான் 1984ல்  என் அம்மா தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்தபோது மனம் பேதலிக்கும் அதிர்ச்சியை அடைந்தேன். ஆனால் அந்த அதிர்ச்சியை எனக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தேன். ஆம், என் அழுகை, கதறல் அனைத்தையுமே நான் வேடிக்கை பார்த்தேன். ஒரு விபத்து நிகழும் போது கவனியுங்கள், அந்த ஒரே ஒரு நொடியில் உங்களுக்கு நிகழ்வதை அதில் சம்பந்தமே இல்லாதவனாக உங்களுக்கு இருந்து நீங்களே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். எந்த வலியும் அவமானமும் இழப்பும் உள்ளே வேடிக்கை பார்க்கும் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவன் வெறும் சாட்சி மட்டுமே.

அந்த அவனைப் பற்றி 38ஆவது பாடல் பேசுகிறது. புகையால் தீயும், அழுக்கால் கண்ணாடியும், கருப்பையால் கருவும் மறைக்கப்பட்டுள்ளது போல புருஷன் காமத்தால் மறைக்கப்பட்டுள்ளான். சம்பந்தமில்லாத மூன்று உவமைகள். ஆனால் யோசிக்கத்தக்கவை.

பொதுவாக பழங்கால நூல்கள் பெரிய குருகுல விவாதங்களுக்குப் பிறகு உருவானவை. ஆகவே அவற்றின் உவமைகள் பல தளங்களில் விவாதித்து அடையப்பட்டவையாக இருக்கும். மேலும் பழங்காலத்தில் உவமைகள் என்பவை வெறுமே புரிந்து கொள்ளும் முயற்சிக்காகக் கூறப்படுபவன அல்ல. அவை உண்மையை நிரூபிக்கும் வழிமுறைகளும் கூட. நியாயமரபின் படி உவமம் என்பது ஒரு அருவமான விஷயத்தை புறவயமாக நிரூபிக்கக்கூடிய வழிமுறைகளில் ஒன்று. ஆகவே பழங்கால நூல்களில் உள்ள உவமைகளை மிக விரிவாகப் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று உவமைகளும் வரிசையாக வருகின்றன. முதல் உவமை தீயும் புகையும். புகை தீயில் இருந்தே உருவாவது. அது தீயின் விளைவு. அதேபோல புருஷனை மறைக்கும் திரை அவனில் இருந்தே உருவாவது.

இரண்டாவது உவமை கண்ணாடியும் அழுக்கும். அழுக்கு கண்ணாடிக்கு வெளியே இருந்து அதன் மீது படிவது. புருஷனை மறைக்கும் காமத்திரை அவன் காணும் வெளிப்பிரபஞ்சம் அவன் மீது படியச் செய்வதாக ஆகலாம்.

மூன்று கருப்பையைம் குழந்தையும் கருப்பை குழந்தையின் உறைவிடம். அதன் பாதுகாப்பு. குழந்தை முதிர்வதுவரை அதன் வீடு. அதேபோல புருஷனுக்கு மாயை என்பது உறைவிடம். கவசம். ஆனால் முதிர்ந்தபின் அவன் வெளியே வந்து விடவேண்டும். வேறு வழியே இல்லை. உள்ளே இருக்கும் புருஷன் மீது படிந்த அவனை மறைக்கும் காமம் என்ற ராஜேகுணத்தின் மூன்று இயல்புகள் இவை.

இந்த உவமையை இன்னும் துல்லியமாக ஆக்கலாம். உள்ளிருக்கும் புருஷனின் மூன்று இயல்புகளும் இதில் சொல்லப்பட்டுள்ளன. புருஷன் தீயைப் போன்றவன். தனக்கான ஒளியை தானே கொண்டவன். பருப்பொருளை எரித்து அதில் நிகழ்ந்துகொண்டிருப்பவன். எந்தப் பொருளாலும் மறைக்க முடியாதவன்.மறைத்தாலும் எரிந்து வெளி வந்தேதீருபவன்.

புருஷன் கண்ணாடியைப் போன்றவன். தனக்கென வடிவமோ நிறமோ இல்லாதவன். எதைப் பிரதிபலிக்கிறானோ அதுவே அவன். பிரதிபலிக்காத புருஷனை நாம் அறியவே முடியாது. புருஷன் கருக்குழந்தை போன்றவன். பிறக்கவிருப்பவன். நிகழப்போகிறவன். உள்ளே தியானத்தில் ஆழ்ந்திருப்பவன்.

புருஷனை மூடும் அந்த மூன்று உறைகளில் முதலில் உள்ளது புகை, காற்றுவடிவமானது. இரண்டாவது அடுக்கு, திரவ வடிவமானது. மூன்றாவது கருப்பை, பரு வடிவமானது. புருஷனுக்கு அவனை மூடும் காமத்திற்குமான உறவை இந்த ஒரே பாடலின் உவமைகளை வைத்து பக்கம் பக்கமாக முழுமையாக விளக்கிவிட முடியும்.

அணையா நெருப்பு

முப்பத்தொன்பதாவது பாடலில் மனிதனை செயலில் ஆழ்த்தும் அந்த விசையை – இயற்கையின் செயலூக்க குணத்தை – வரையறை செய்கிறது கீதை. அதை அணையாத அனல் என்கிறது. பல்வேறு சொற்கள் இருக்க அனல் என்றே கீதை பயன்படுத்துகிறது. சமஸ்கிருதத்திற்குச் சென்ற தமிழ்ச் சொல் இது. இதற்கு தீ என்றல்ல, கங்கு என்றே பொருள். இயற்கையில் உள்ள அந்த செயலூக்கம் காம வடிவில் வெளிப்படுகிறது. ‘காமரூபேண’ என்கிறது கீதை. காமம் அல்ல. காம வடிவில் வருவது.

அது ஒரு கங்கு. கங்கு என்பது நெருப்பல்ல, நெருப்புக்கான விதை. பெருநெருப்புக்கான சாத்தியக்கூறு அது. ‘தும்பூரேண’ என்ற கீதைச் சொல் மிக அழகானது. அனலை ஒரு பள்ளம் என்று வைத்துக் கொண்டால் எதை வைத்து அதை நிரப்ப முடியும்? எதைப் போட்டாலும் அது அதை உண்டு அழிக்கும். ஆகவே எதுவுமே அதை நிரப்பாது. வேதங்கள் தீயை ஒரு பசியாக, அனைத்தையும் உண்ணும் வாயாக, நாவாக உருவகப்படுத்தியுள்ளன. அந்த உருவகமே இங்கு உள்ளது. 37ஆவது பாடலில் அனைத்தையும் உண்ணும் பசி கொண்டது காமம் என்ற வரியுடன் இது இணைய வேண்டும். மஹாசன: என்று கீதை கூறுவது இந்த தீயைப் பற்றியே. ஞானியின் நிரந்தர எதிரி இது என்கிறது கீதை. விவேகத்தை மூடியிருக்கும் திரை இது.

காமவடிவம் கொண்ட இதன் உறைவிடம் புலன்கள், மனம், புத்தி ஆகியவை. ஐம்புலன்களையும் செயல்புலன்கள் என்றும் மனம், புத்தி இரண்டையும் அறிவுப்புலன்கள் என்றும் தரிசனங்கள் கூறுகின்றன. நம்முடைய அறிதல்கள் அனைத்துமே இந்த ஏழு புலன்கள் வழியாக நிகழ்கின்றன. கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள் என்ற இந்த ஏழும் சேர்ந்து ஒரே இடமாகக் கொள்ளலாம். இதுதான் வாசல். உள்ளே இருக்கும் உடலாக ஆன புருஷனை வெளியே இருந்து ஞானம் வந்து தீண்டும் வழி இது. இங்கே வந்து அமர்ந்த கொள்கிறது இது. அவ்வாறு அது ஞானத்தை முழுமையாக மூடிவிட்டு புருஷனை ஆசை கொண்டவனாக ஆக்கிவிடுகிறது.

ஆகவே அந்த ஏழு புலன்களையும் வெல்ல வேண்டும் என்று கீதை கூறுகிறது. இங்கே உள்ள ஞான, விஞ்ஞான என்ற சொல்லாட்சி கவனிகத்தக்கது. ஞானம் என்றால் அறிவு. விஞ்ஞானம் என்றால் என்ன? சாரம்சமான அறிவு ஞானம் எனப்படுகிறது. அந்த சாரம்சமான அறிவு விரிவாகி நடைமுறை அறிவுகளாக மாறினால் அது விஞ்ஞானம் (விஞ்ஞானம் என்ற சொல்தான். ஆனால் ஏற்கனவே அது இங்கு அறிவியல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த உச்சரிப்பு மாற்றம் அளிக்கப்படுகிறது.)

விஞ்ஞானம் என்றால் காடு. ஞானம் அதன் விதை. இந்தப் பிரபஞ்சம் நமது விக்ஞானத்தின் விளைவு மட்டுமே என்று கூறும் பெளத்த மதத்தின் தரப்பு உண்டு. அதற்கு விஞ்ஞானவாதம் என்று பெயர். திக்நாதர், அசங்கர், வசுபந்து ஆகியோரால் உருவாக்கப்பட்டது அது. சூனியவாதத்தில் இருந்து கிளைத்தது. சாரம்சம் என்பது அறிதலுக்கு அப்பாற்பட்டது. அதுதான் நாகார்ஜூனர் முதலியோரால் சூனியம் எனப்பட்டு சூரனியவாதம் ருவாக்கப்பட்டது. அந்த சூனியம் அல்லது ஞானத்திற்கு அதீதமானதுதான் இந்த பிரபஞ்சமாக மாறியிருக்கிறது, அப்படி மாற்றுவது நம் விக்ஞானமே என்கிறார்கள் விக்ஞானவாதிகள்.

இங்கே கீதை ஞான-விக்ஞான என்ற ஒரே சொல்லில் இரண்டையும் இணைக்கிறது. மெய்ஞானமும் நடைமுறை ஞானமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களே என்ற தரிசனம் இந்த சொல்லாட்சியில் உள்ளது. மெய்ஞானத்தையும் நடைமுறை ஞானத்தையும் காமம் மறைத்துவிடும் என்கிறது கீதை. அதை பாவம் என்கிறது. ‘பாபமானம்’ என்ற சொல்லை பாவமளிப்பது, பாவமாக மாறுவது என்ற இரு அர்த்தத்திலும் பொருள் கொள்ளலாம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகும்பமேளா – 6
அடுத்த கட்டுரைகளம் [சிறுகதை]