இந்தியா கடிதங்கள்

ஐயா,

உங்கள் இந்தியா கட்டுரைக்கு வந்த கடிதங்களைப்படித்தபோது சில கருத்துகள் (கல்வி என்ற பெயரில் சில பல கணினிக் குறியீடுகளை கற்றுக் கொண்டதன் மூலமும்) வந்திவிழுந்திருந்தன. அதுகுறித்தும் இந்தக்கடிதம்.

உடல் உழைப்பை மட்டுமே உழைப்பாக எண்ணிக்கொண்டிருக்கும் கூட்டம் என்று ஒன்று இன்னும் இருக்கிறது போலும். அவர்களுக்கு முன்னம் அரசு அதிகாரிகளையும், சினிமாக்காரர்களையும், மொத்தமாக பணக்காரர்களையும் கரித்துக்கொட்டுவது வேலையாக இருந்தது. இப்போது அதில் கணிப்பொறியாளர்களும் சேர்ந்துவிட்டனர்.

ஒருமுறை ஆட்டோக்காரர் ஒருவர் கேட்டார், “அவங்க எல்லாம் ஏசி ரூம்ல, குஷன் சேர்ல உக்கார்ந்து வேலை பார்க்குறாங்க. ஒரு நாள் இந்த ஆட்டோவுல உக்காந்து ஓட்டிப்பார்த்தால் எங்கள் கஷ்டம்தெரியும்” என்று. எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா  இரண்டுமணி நேரம் ஒரு தத்துவப்புத்தகத்தை வாசிப்பது அதே நேரம் ஒரு வாகனத்தை செலுத்துவதை விட அயர்ச்சி தருவது என்று? அதை எடுத்துச்சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

விவசாயம் கடினமான பணிதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக உடலாலல்லாமல், அதிகமான அறிவு சார்ந்த பணிகளான ஆசிரியர் பணி முதல் கணிப்பொறி,  ஐ.ஏ.எஸ் பணி வரை இருக்கும் மன அயர்ச்சியை (mental fatigue) புறங்கையால் தள்ளிவிடும் மனப்பான்மை இப்போதெல்லாம் வெகுவாக முன்வைக்கப்படுகிறது.

கணிப்பொறித்துறை வந்ததிலிருந்து கிராமப்புறத்திலிருந்து நகரம் வரை பெரும்பாலும் பற்பல சமூகங்கள் சார்ந்த மக்களும் பயன் பட்டிருக்கிறார்கள். பொதுவாக முழுமையாக வரி பிடித்தம் செய்யப்பட்ட சம்பளமே கணிப்பொறியாளர்களுக்கு வழங்கப்படும். ஒரு பேச்சுக்கு ஒரு கணிப்பொறியாளர் ஒருவர் மாதம் 1000 ரூ (எனக்குத்தெரிந்து 18 ஆயிரம் வரி செலுத்துபவர்களும் இருக்கிறார்கள்) செலுத்துகிறார் என்று வைத்துக்கொண்டால், சுமாராக தமிழ்நாட்டில் 5 லட்சம் கணிப்பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் 5,00,000,000 ரூ வரி வசூலாகிறது. இதை வைத்து மக்களுக்கு அரசு ஏதேனும் நல்லது செய்திருக்கலாம்.

1. விதை நெல்லை இலவசமாக கொடுத்திருக்கலாம்

2. கிராமப்புரங்களில் குடிநீர்/நீர்ப்பாசன வசதிகள் செய்துகொடுத்திருக்கலாம்

3. இயற்கை உரங்கள் தயாரித்து, குறைந்த விலையில் விநியோகித்திருக்கலாம்.

4. புதிய குளங்கள் ஏரிகள் கட்டமைத்திருக்கலாம்

5. காடு வளர்ப்பில் செலவிட்டிருக்கலாம்

6. கால்நடை பராமரிப்பில் செலவிட்டிருக்கலாம்.

7. சாலையோர மரங்கள் நடவும் செய்திருக்கலாம்

8. கிராமங்களில் சிமிண்ட் கட்டிட பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கலாம்

9. ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுத்தாவது கிராமங்களில் பணிபுரிய வைத்திருக்கலாம்

10. மாநிலத்தின் உள்கட்டமைப்புகளை முன்னேற்றியிருக்கலாம்

11. அரசுத்துறைகளை கணினி மயப்படுத்தியிருக்கலாம்

12. இலவச மருத்துவ வசதிகளைப்பெருக்கியிருக்கலாம்.

இன்னும் பல செய்திருக்கலாம்… சட்டென தோன்றுவது இவையே….

இவையேதும் செய்யாமல் அரசு அப்பணத்தை இலவச கலர் டிவி, யானைகள் முகாம், சமத்துவபுரம் (இது ஒரு தோல்வியடைந்த திட்டம்) விளம்பரம், ஆடம்பரம் போன்றதில் செலவிட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. உதாரணமாக, படம் இணைத்துள்ளேன் பார்க்கவும். எத்தனை கோடி. எத்தனைக் கேடு. ஒரே காசோலையில் இலவச டிவிக்காக கொடுக்கப்பட்டது. (என் வரிப்பணமும் இதில் இருக்கிறது. இதுவரை நான் எந்த விதத்திலும் ஒரு பைசாகூட வரி மிச்சப்படுத்தியதில்லல.. அரசு அனுமதித்திருந்தபோதும் பல்வேறு சேமிப்புக்காட்டி வரியை குறைத்ததும் இல்லை… எவ்வளவு வரி அசலாக இருக்கிறதோ, அத்தனையும் அப்படியே கொடுத்துவிடுவேன். நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை. அதற்கான என்னாலான பங்கு என்று. ) இதற்கு பதில் வீட்டிற்கொரு இயந்திரம், நெசவோ, குடிசைத்தொழிலுக்கு பயன்படுவதோ கொடுத்திருந்தால், அவர்களுக்கு வேலைவாய்ப்பாவது கிடைத்திருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டின் தலைவர் எவருக்கும் ஏழைகளையோ, கிராமங்களையோ முன்னேற்றவேண்டும் என்ற நோக்கம் சிறிதும் கிடையாது.  மக்களை அரசாங்கத்தை மட்டும் நம்பியிருக்கும், கேவலமான நிலையிலே, இன்னும் சொல்லப்போனால், இலவசங்களை நம்பி வாழும் ஒரு அவல நிலையிலேயே வைத்திருக்கிறது. அவ்வாறு வைத்திருப்பதினால்தான் இவர்களால் ஓட்டு அறுவடையும் செய்யமுடிகிறது. ஏனெனில் இருவருக்கும் ஆதாயமிருக்கும் ஒரு நிலை அப்போதுதான் ஏற்படுகிறது. சொந்த உழைப்பில் நின்றுவிட்டால், அவர்களுக்கு இவர்களை நம்பிக்கிடக்கவேண்டிய நிலை இருக்காதே.

மேலும் இவர்கள் சாதியை ஒரு பிரிவினைவாத கத்தியாகவே பயன்படுத்தியும் வருகிறார்கள். சாதியை ஒரு சமூக முதலீடாக பார்த்த சமூகங்கள் அரசின் தயவு பெரிய அளவில் இல்லாமலே வளர்ந்துவிட்டனர். உதாரணமாக நாடார், கவுண்டர், ஜாட், படேல் சமூகங்கள் அரசிடம் பெரிய அளவில் இடஒதுக்கீடோ, இலவசங்களோ பெற்று வளர்ந்தவர்கள் இல்லை. சாதியை சமூக முதலீடாக இல்லாமல், பிரிவினைவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள், அனைத்திற்கும் அரசின் கையை எதிர்ப்பார்த்து நிற்கும் நிலையையும் பார்க்கிறோம்.

எனக்கென்னமோ… கோர்வையாக எழுத வரவில்லை… சொல்ல நிறைய இருந்தாலும் எழுத்தில் சொல்லத்தெரியவில்லை. எத்தனையோ இளைஞர்களின் உழைப்பும், ஆசைகளும், விவேகமும், வீணாகிக்கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு அரசும் இதை வேடிக்கைத்தான் பார்க்கிறது.

இந்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று சத்தியமாகத் தெரியவில்லை.

-ராம்

அன்புள்ள ராம்

உங்கள் கடிதத்தின் ஆதார உணர்ச்சியுடன் எனக்கு உடன்பாடே. பொதுவாக இப்போது கணனித்துறையில் இருப்பவர்கள்மேல் ஒரு வகை வெறுப்பு திட்டமிட்டு உருவாக்கபப்டுகிறது. அதன் அடிபப்டை பெரும்பாலும் பொறாமையும் காழ்ப்புமே ஆகும். எந்த சமூகத்திலும் உடல் உழைப்பு முக்கியமானதே. ஆனால் அதைவிட திறன் உழைப்பு முக்கியமானது. அதைவிட சிந்தனை உழைப்பு முக்கியமானது. அதுவே ஒரு சமூகம் முன்னேறுவதற்கான இயங்கியல். ஆக்கபூர்வமான சமூகங்கள் அனைத்துமே அவ்வாறுதான் இயங்குகின்றன. சிந்தனையை தொழில்திறனை வெறுக்கும் சமூகம் நாசத்தை தேடியே செல்கிறது.

இதேபோல இந்தியாவை விட்டு வெளியே செல்பவர்களைப்பற்றியும் ஒரு காழ்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏதோ இங்கே இருப்பவர்கள் எல்லாம் நாட்டுக்காக உயிரைக்கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் போல. அதுவும் வெறும் காழ்ப்பின் விளைவேயாகும். உள்ளூரில் ஒரு கடைவைத்து கூட்டுமுறைகேடும், வரி ஏய்ப்பும் செய்யும் வணிகர்க¨ளைப்பற்றி எவருக்கும் எந்த குறையும் இல்லை.

இந்தியா 80களில் வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சிக்குச் சென்றது. அது என் தலைமுறையினருக்கு தெரியும்.. தெரியாதவர்கள் பாலைவனச்சோலை போன்ற படங்களைப் பார்க்கலாம். சுப்ரமணிய ராஜூ போன்றவர்களின் கதைகளைப் படிக்கலாம். அந்த சிக்கலில் இருந்து இந்தியா மீண்டது நம் இளைஞர்கள் அவர்களின் திறனையே ஒரு ஏற்றுமதிப்பொருளாக ஆக்கியதன்மூலம்தான். இந்தியாவின் மானுவளமும் அறிவாற்றலும் ஒரு பெரும் தேசிய சொத்து என நிறுவியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இந்தியாவின் அனைத்து தளங்களும் கடன்பட்டிருக்கின்றன என்றே எண்ணுகிறேன்.

எதிர்காலத்திலும் இந்தியாவின் செல்வமாக நம் இளைஞர்களின் உழைப்பும்  அறிவாற்றலுமே இருக்கப்போகிறது. இன்றைய இந்தியாவில் நம்பத்தக்க முதன்மைச்சக்தியே அவர்கள்தான்.

ஜெயமோகன்

8888888

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் பாரதம் எனக் குறிப்பிட்டது நிச்சயமாக இந்துத்துவ அமைப்புகளின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு அகண்ட நிலப்பரப்பு இல்லை என்கிற புரிதல் இருக்கிற போதும் நான் அப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக வருந்துகிறேன். உங்கள் சொல்லாடல்களும் அவர்களுடையதும் சம காலத்தில் இந்து மதத்தைக் குறிக்கிறவைகளாக இருக்கின்றன. நீங்கள் காணும் இந்து மதம் காந்தி கண்டதற்கு பெரிதும் வேறுபாடற்றது என நான் நம்புகிறேன். நவீன ஜனநாயகம் மதத்தைத் துறந்துவிட்டுத்தான் மேடேற முடியும் என்பது என் திட நம்பிக்கை.  உலக மதங்கள் அனைத்துமே கீழைத்தேயத்தில் தோன்றியவை. தொழில்புரட்சியின் பிள்ளையான மேற்கு ஜனநாயகத்தில் மற்ற எந்த அமைப்புகளைக் காட்டிலும் தீமைகள் குறைவாகவே இருக்கின்றன.  உலகமயமாக்கலுக்குப் பின் முதிர்ச்சியடைந்த என் சமகால தலைமுறை பெரிதும் மேற்கத்திய சாயலாக மாறிக் கொண்டிருக்கிற சூழலில் சமூகத் தளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட வேண்டியது பொருளியல், சமூகவியல், அரசியல் பிரச்சனைகளே அன்றி மதமல்ல.

உங்கள் இணையதளத்தில்  நவீன வாழ்வு சந்திக்கும் மேற்கண்ட சிக்கல்கள் குறித்து விவாதங்களை முன்னடத்தி சென்றால் இளைய தலைமுறையின் நெருக்கடிக்கு பதில் கூறுவதாக இருக்கும்.

உங்கள் கருத்துகளிலிருந்து நான் பெரிதும் வேறுபட்டாலும் உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறவன் என்கிற தகுதியில் தமிழில் நேர்மையாக இயங்கக்கூடிய எழுத்தாளர் என்கிற மையலும் உங்கள் மேல் உண்டு.

தனக்கு பிடித்தமான எழுத்தாளன் தான் முன்னுரிமை கொடுக்கிற விசயங்களை எழுத ஆசைப்படுவது ஒரு வாசகனின் எளிய வாசிப்பு சார்ந்த ஆசைகளில் ஒன்று. ஆனால் எழுத்தாளருக்கு அவருடைய் தேர்வுகள்தான் முக்கியமானவை என்பதும் புரிந்துகொள்ள முடிகிறது.

கடுமை கூடின எனது பதில் எனது கருத்துகள் சார்ந்த மன எழுச்சியில் எழுதியவை. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மன நெருக்கடி உண்டாக்கியிருந்தால் நான் குறைந்தபட்ச பொறுப்பே ஏற்க முடியும்.

விமர்சனங்களுடனும் பிரியங்களுடனும்

பாலசுப்ரமணியன்

பெங்களூர்

******
அன்புள்ள நண்பருக்கு,

தங்கள் கடிதம்.

ஐரோப்பா பற்றி நீங்கள் சொன்னமையால். தொழில்புரட்சி என்ற ஒற்றைச்சொல்லால் ஐரோப்பாவின் வெற்றியைச் சொல்லிவிடமுடியாது. தொழில்புரட்சி காலனியாதிக்கத்தைக் கட்டாயமாக்கியது–சந்தைகளுக்காகவும், மூலப்பொருட்களுக்காகவும். இன்றைய அமைதியான அழகான ஐரோப்பாவுக்குப் பின் ஆப்ரிக்க ஆசிய தென்னமேரிக்க நாடுகளை காலனியாக்கி  ஒட்டச்சுரண்டி அவர்களை பட்டினியின் இருளுக்குள் தள்ளிய வரலாறு உள்ளது. அது வெறுமே அறிவியலின் வெற்றி மட்டுமல்ல, அது சுரண்டலின் வெற்றியும்கூட. அத்தகைய வெற்றி நமக்கும் தேவையா என்று கேட்டால் அதைவிட பட்டினி கிடப்போம் என்றே நான் சொல்வேன். காந்தி அதைச் சொல்லியிருக்கிறார். ஒரு பிரிட்டன் வல்லரசாக முப்பது நாடுகள் அடிமையாக வேண்டியிருந்தது. இந்தியா அதே போல ஆகவேண்டுமென்றால் உலகமே போதாது என்றார் காந்தி.

வளர்ச்சி பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் என்பது ஓர் உண்மை. ஆனால் தன் சமூக வன்மங்களையும் உள்மோதல்களையும்  ஓரளவேனும் தீர்த்துக்கொண்ட சமூகங்களே வளர்ச்சி பெற முடியும் என்பதும் ஓர் உண்மை. அல்லது ஐரோப்பா போல சுரண்டிக் கொண்டுவந்த செல்வத்தால் சமூக முரண்பாடுகளை மழுங்கடிக்க வேண்டும். சமூக முரண்பாடுகளை நேரடி வன்முறைக்கும் அவநம்பிக்கைக்கும் கொண்டுபோகாமலிருந்தாலே போதும், அவை சமூகத்தை மூன்னே கொண்டுசெல்லும் முரணியக்க விசைகளாக ஆகும் என்றே நான் எண்ணுகிறேன். தென்மாவட்டங்களில் நாடார்- தேவர் மோதல் ஒருகாலத்தில் பெரும் அழிவுசக்தியாக இருந்தது. ஆனால் அந்த மோதல் வணிகப்போட்டியாக ஒரு கட்டத்தில் உருமாறியபோது தென்மாவட்டங்களை தொழில்மயமாக்கிய சக்தியாக அது மாறியது.

நீங்கள் சிந்தனைகளைப்பற்றிக் கொண்டிருக்கும் எண்ணமல்ல என்னுடையது. அறிவியல் இலக்கியம் கலைகள் தத்துவம் என எல்லா அறிவியக்கங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவையே. ஒன்றை இன்னொன்றுடன் இருந்து அர்த்த பூர்வமாக பிரித்துவிட முடியாது.  ஒன்றுக்கொன்று நிரப்பும்தன்மை கொண்டவை அவை. மேலும் நான் என்னுடைய தனித்திறன் உள்ள தளத்திலேயே தீவிரமாகச் செயல்பட முடியும். அறிவியலைப்பற்றிஎழுது என்றால் எழுத எனக்கு அறிவு போதாது.

நட்புடன்
ஜெ

88888888888888

அன்புள்ள ஜெ

இத்துடன் சில இணைப்புகள் அனுப்பியிருக்கிறேன். பாருங்கள்

இவர்கள் அனைவரும் வெவ்வேறு கருத்துத்தரப்பு உள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள். புரட்சியாளர்கள் நடுநிலையாளர்கள். ஆனால் அனைவருமே ஒரே குரலில் பேசுகிறார்கள். அருந்ததி ராய்,[ சர்வதேச  கிறித்தவ மத அமைப்புகளுடன் நெரூக்கமான தொடர்புடைய கிறித்தவர் இந்த பெயரைச் சூட்டிக்கொண்டிருப்பதில் ஒரு நுட்பமான மோசடி உண்டு] அரிந்தம் சக்ரவர்த்தி [சண்டே இண்டியன்] ஆகியோர் ஏதோ மாபெரும் தேசியப்பிரச்சினை போல காஷ்மீருக்கு விடுதலை என்று முழங்கியதுமே அத்தனை சிற்றிதழ்களும் ஒரே பெரிய திட்டத்தின் பகுதிகளைப்போல ஒரே குரலில் முழங்குவதைக் கவனியுங்கள். அனைவருடைய சொல்லாட்சிகளும் எப்படி மாறியிருக்கின்றன என்று பாருங்கள். பிரிவினைவாதம் அல்ல சுதந்திரப்போர். தீவிரவாதிகள் அல்ல போராளிகள். காஷ்மீர் போராட்டத்தில் உள்ள மதவெறியை, அதே மதவெறி இந்தியாமுழுக்க தூண்டப்படுவதை எப்படி இவை மறைக்கின்றன! இவர்கள் அனைவரையும் பல அமைப்புகள் காஷ்மீருக்கு கொண்டுசென்று ‘காட்டுகின்றன’ இந்த திட்டம் இந்தியாவுக்கு வெளியே போடப்படுவது, நம் அறிவுஜீவிகள் அதன் ஐந்தாம்ப்டையினர் என்பதை நாம் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது

www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1051&It…

www.kalachuvadu.com/issue-106/page12.asp

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_17.html

செல்வம்
சென்னை

முந்தைய கட்டுரைகீதை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொட்டம்சுக்காதி