அன்புள்ள திரு. ஜெயமோகன்,
உங்கள் வலைதளத்தை நாலைந்து வருடங்களாக வாசித்து வருகிறேன் ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுதியை வாசித்துள்ளேன். எனினும் உங்களுக்கு எழுதுவது இதுவே முதல் தடவை.
இது ஓ.வி.விஜயனின் ’கசாக்கின் இதிகாசம்’ பற்றி உங்கள் தளத்தில் வெளியாகியிருக்கும் கடிதம்/உங்களது பதில் பற்றியது. எண்பதுகளில், டெல்லியிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஓ.வி.விஜயனின் கேலிச்சித்திரங்களைப் பார்த்து ரசித்ததுண்டு. ஆர்.கே.லக்ஷ்மண், அபு ஆப்ரஹாம், ரவிஷங்கர், சுதிர் தர் போலவே இந்தியாவின் சிறந்த கார்ட்டூனிஸ்டுகளில் ஒருவராக விஜயனை நான் மதிக்கிறேன். அவர் மாத்ருபூமி போன்ற மலையாளப் பத்திரிக்கைகளில் கதைகள் எழுதிவருவது குறித்து இலக்கிய ரசனை உடைய மலையாளி நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன்.
ஒருமுறை டெல்லியில் அவரைப் பார்க்கவும் நேர்ந்திருக்கிறது. அக்டோபர் 26 அல்லது 27, 1984 என்று ஞாபகம். டெல்லியின் மௌலாங்கர் ஆடிட்டோரியத்தில் நான் என் மனைவியுடன், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தேன். அப்போது அங்கு தென்பட்ட சுவாரஸ்யக் கலவையான பிரமுகர் கூட்டத்தில் ஓ.வி.விஜயன், அருண் ஷோரி போன்றோரை அடையாளம் கண்டுகொண்டேன்.
ஓ.வி.விஜயனை நான் இதுவரைப் படித்ததில்லை. மேற்குறிப்பிட்ட வாசகர் கடிதம், அதற்கான உங்களது விரிவான பதிலால், கசாக்கின் இதிகாசம் பற்றி, விஜயனின் எழுத்துபாணி பற்றி மனதில் ஒரு பிம்பம் இப்போது உருவாகியுள்ளது. பேச்சுமொழி பற்றி நீங்கள் ‘மக்களில் மிகச்சிலரே மொழி குறித்த பிரக்ஞை உடையவர்கள். பாடுவதுபோல, வரைவதுபோல அது ஒரு தனித்திறன்’ என்று குறிப்பிட்டிருப்பதும், உயர்குடிக்கொச்சை, அடித்தளக்கொச்சை’ பற்றி எழுதியிருப்பதும் மிகவும் சரியான அவதானிப்பு என்றே கொள்கிறேன்.
உங்களது பதில் பகுதியில் நீங்கள் காட்டியிருக்கும் மஹாத்மா காந்தி பற்றிய கார்ட்டூன் ஓ.வி.விஜயன் வரைந்ததல்ல என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது எண்பதுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக வரைந்துகொண்டிருந்த இன்னொரு புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ரவிஷங்கர் வரைந்த கார்ட்டூன்.
அன்புடன்,
ஏகாந்தன், டெல்லி.
04-02-2015
அன்புள்ள ஏகாந்தன் அவர்களுக்கு,
நன்றி. அந்த கார்ட்டூன் விஜயன் வரைந்ததில்லை. கவனக்குறைவுதான். விஜயனின் பாணியிலேயே வரைந்த அவரது மருமகனாகிய ரவிஷங்கர் வரைந்தது அது.
விஜயனின் கதைகள் தமிழில் சிலவே வந்துள்ளன. அவரது பொதிச்சோறு என்றகதையை 1984ல் நான் மொழியாக்கம் செய்துள்ளேன் மஞ்சரி இதழுக்காக
விஜயனை நீங்கள் தமிழில் வாசிக்கலாம் என்பது நல்லவிஷயம்தான்
ஜெ
பதிலுக்கு மிகுந்த நன்றி.
நீங்களும், யூமா வாசுகியும் விஜயனைத் தமிழில் தந்திருக்கிறீர்கள். ஆதலால் மொழியாக்கம் அசலை ஒட்டியே நகலாது இருக்கும். விஜயனைத் தமிழில் வாசிக்க முயல்வேன்.
வெளிநாட்டுப்பணியிலிருந்து டெல்லி திரும்பியபின், கடந்த ஒரு வருடமாக ஏகாந்தன் என்கிற பெயரிலேயே வலைப்பூவில்- மென்கவிதைகளாகவும், சிறு கட்டுரைகளாகவும் மனதில் எழுபவற்றை அவ்வப்போது பதிந்து வருகிறேன். நேரமிருப்பின் பார்க்குமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்
ஏகாந்தன்.
aekaanthan.wordpress.com