31
கவனமுள்ளவனாக
பொறாமையற்றவனாக
எனது இந்த தரப்பை
என்றும் கடைப்பிடிப்பவன்
செயற்சுழலில் இருந்து
விடுதலையாகிறான்.
32
எனது இந்தத் தரப்பை
பொறாமை கொண்டு
கடைப்பிடிக்காமலிருப்பவன்
அறியாமை மிக்கவன்
விவேகமற்றவன்
அவன்
அழிந்துவிட்டவன் என்று அறிக.
ஓர் அறைகூவல்
இந்த இரு பாடல்களிலும் தத்துவ விவாதத்தில் தொடர்ச்சிக்காகவும் ஒரு மையத்தை வலியுறுத்துவதற்காகவும் எழுதப்பட்டவை என்றுபடுகின்றன. இத்தகைய இணைப்பு மற்றும் வலியுறுத்தல் வரிகள் அவ்வப்போது கீதையில் வரும். பொதுவாக ஒரு விவாதம் முடிந்து அடுத்த விவாதம் தொடங்கும் போதுதான் இவை வருகின்றன என்பதைக் காணலாம். கீதையில் இதுவரை கூறப்பட்ட விவாதம் ஒரு ழுழுமையான பகுதி. ஒரு அத்தியாயம் போன்றது. அடுத்து வேறு உருவில் கீதையில் பேசுபொருள் விரிவடைகிறது. அதன்முன் இந்த வரிகள் வருகின்றன.
பொருட் குழப்பம் வரும் இரு சொல்லாட்சிகள் உண்டு . கீதையில் கிருஷ்ணன் ‘மே இதம் மதம்’ என்கிறார். எனது இந்த மதத்தை என்று மொழிபெயர்க்கலாம். இதை இன்றைய பொருளில் மதம் [ ரிலிஜியன்] என்று புரிந்து கொள்ளக்கூடாது. மதம் என்ற சொல்லுக்கு தரப்பு என்றே பொருளாகும். விரும்பப்பட்ட தரப்பு என்று நுண் பொருள். கீதை இங்கே வைணவம் வேதாந்தம் அல்லது இந்துமதம் எதையும் குறிக்கவில்லை.
பொதுவாக கீதையில் இத்தகைய இணைப்புச் செய்யுட்களில் உள்ள கவித்துவம் காணப்படுவதில்லை. மொழியின் அமைப்பும் வேறுபடுகிறது. இவ்வரிகள் கீதையின் பிற்காலத்தைய செருகல்களாக இருக்கலாம். ‘கவனத்துடனும் பொறாமை இன்றியும் இந்த தரப்பை கடைப்பிடிக்க வேண்டும்’ என்கிறது கீதை. இங்கே ‘அனசூயந்த:’ என்ற சொல்லுக்கு அசூயை இன்றி என்றே பொருள். பொறாமை இங்கே எங்கே வந்தது?
சங்கரர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் இதற்கு எளிய விளக்கம் அளித்து மேலே செல்கிறார்கள். மெய்ஞானத்தை பார்த்து பிறருக்கு உருவாகும் பொறாமையை இது குறிக்கிறது என்பவர்கள் உண்டு. உலகியல்பற்றின் அடிப்படையே பொறாமைதான் என்று விளக்குபவர்கள் உண்டு. ஆனாலும் கீதையின் பிற வரிகளில் உள்ள தத்துவ ரீதியான கனகச்சிதத் தன்மை இவ்வரிகளில் இல்லை. பல்லாயிரம் முறை யோசித்து ஒவ்வொரு சொற்றொடரும் அமைக்கப்பட்டிருப்பது போன்ற முழுமையை இந்த வரிகளில் உணர இயலவில்லை.
அதேபோல கீதையின் முந்தைய வரிகளுடன் இவ்வரிகள் முரண்படுவதையும் வாசகர்கள் கவனிக்கலாம். முந்தைய வரிகளில் கிருஷ்ணன் ஆத்மஞானம் பெற்று குண-கரும உறவை அறிந்தவன் அறியாதவர்களை குழப்பலாகாது என்கிறார். அவர்கள் தங்கள் செயலைச் செய்வதற்கு அனுமதிப்பதே நல்லது என்கிறார். ஆத்மஞானி தன் செயலை செவ்வனே ஆற்றி அந்த அறியாத மக்களையும் தன் செயலில் ஈடுபடுத்த வேண்டும் என்கிறார். அதாவது அறியாமையை வேறு ஒரு தளமாக மட்டுமே அப்பாடல்களின் கீதை அணுகுகிறது. நிராகரிப்பதோ நிந்திப்பதோ இல்லை. அறியாமையை பாவமாக கண்ணன் கருதவும் இல்லை.]
ஆனால் இப்பாடலில் இந்த தரப்பை நம்பாதவர்கள் விவேகமும் அறிவும் அற்றவர்கள், அழிந்து போகிறவர்கள் என்ற சாபம் கீதையின் தத்துவ நிலைக்கு உரியது அல்ல. 30,31,32 ஆகிய மூன்று செய்யுள்களும் கீதை எனும் தூய ஞான நூலில் பிற்பாடு சேர்க்கப்பட்டவையாகவே இருக்கும். அதிலும் 31, 32 இரு பாடல்களும் மிகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. கீதையின் ஒருமைக்கும் அழகுக்கும் தரிசனத்திற்கும் ஒவ்வாமல் துருத்தி நிற்பவை இவை.
அர்ஜூனன் கேட்கிறான்.
33
ஞானமுள்ளவன்
தன் இயல்புக்கு ஏற்ப
செயல்படுகிறான்.
உயிர்கள் அனைத்துமே
தங்கள் இயலாமையே
செயல்படுத்துகின்றன
இதில் தடைகள் என்ன செய்ய முடியும்?
34
பதிலுக்கு கண்ணன் கூறுகிறான்.
புலன்களுக்கு
புலனின் பங்களில்
விருப்பு வெறுப்புகள் உள்ளன.
அவற்று வசப்படலாகாது.
ஏனென்றால்
அவ்விருப்பு வெறுப்புகள்
இவனுக்கு
எதிரிகள்.
செயல்களின் முதல் தூண்டுதல் எது?
அர்ஜூனன் கேட்கும் இந்த வினா மிக அடிப்படையான ஒரு தத்துவக் கேள்வியாகும். அதாவது எவ்வாறு இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று கேட்பதற்கு நிகரான ஓர் அடிப்படை தத்துவப் பிரச்சினை இதில் உள்ளது. கீதையின் கர்மயோகம் சார்ந்த விவாதத்தை இந்த வரியில் இருந்து ஆரம்பித்து திரும்பச் சென்று நிகழ்த்த வேண்டும் என்று கூடச் சொல்வோம். ஆனால் பல உரைகளில் இந்தப் பாடல் போதுமான அளவுக்குக் கவனிக்கப்படாமல் சென்றிருப்பதை வாசகர் காணலாம்.
இந்தக் கேள்வியை இப்படி விரிவுபடுத்திக் கொள்கிறேன். ஒரு கல் சாலையில் கிடக்கிறது. அதன் தன்னியல்பு என்பது செயலின்மை ஆகும் (Inertia) அதாவது அசையாமல் அப்படியே எத்தனை காலம் வேண்டுமானாலும் அது கிடக்கும். ‘வெளியே’ இருந்து ஒரு தூண்டுதல் வராமல் அதில் எதுவுமே நிகழாது. கால்பட்டால் இடம் மாறலாம். இன்னொரு கல் பட்டு இடம் மாறலாம். நெடுங்காலம் மழையும் வெயிலும் பட்டு அ*லக்கலாம். ஆனால் இப்படி ஒரு புறக்காரணம் இல்லாமல் இருந்தால் முடிவின்மை வரை அது அப்படியேதான் இருக்கும். அதுவே அதன் தன்னியல்பு. அந்த இயல்பு அதில் உறைந்துள்ளது.
அதேபோல மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களிலும் அவற்றுக்கான தன்னியல்பு உறைந்துள்ளது. ஒரு பாக்டீரியாவின் உடலின் கட்டுமானம் எப்படி அதன் அடிப்படை இயல்போ அதே போல அதன் செயல்பாடுகளும் அதன் அடிப்படை இயல்புகளே அது எதையும் யோசித்து செய்வதில்லை. அது எதை உண்ணவேண்டும், எப்படி பெருகவேண்டும், எப்படி அழிய வேண்டும் என்று அதன் அடிப்படையமைப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியாவைப் போன்றதே புழுப்புச்சிகளின் உலகும். பறவைகள் மிருகங்களும் அப்படித்தான். ஆக மனிதனும் ஒன்றும் பெரிய வேறுபாடு உடையவனல்ல. அவனும் ஓர் உயிர்த்துளிதான். அவனும் அவனுடைய ஆதாரமான இயல்புகளின்படி செயல்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால் தானே சுயமாகச் செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருப்பான், அவ்வளவுதான்.
அர்ஜீனனின் வினா இதுதான். உலகில் உள்ள உயிர்க்குலங்கள் அனைத்தும், மனிதன் உட்பட, தங்கள் இயல்புகளில்படி செயல்படுகிறார்கள். அந்தச் செயல்பாடுகளில் அவர்களுக்கு ஏதும் கட்டுப்பாடு இல்லை. அப்படி இருக்க அவர்களிடம் இதைச் செய் என்றோ செய்யாதே என்றோ சொல்லதில் என்ன பொருள் அதிலும் செய்யாதே என்ற விலக்குகளினால் ஆவது என்ன?
நீங்கள் நிஜ வாழ்வைச் சந்திப்பவர் என்றால் வாழ்வில் எத்தனையோ முறை இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருப்பீர்கள். ஒழுக்க, அற விலக்குகளினால் மனிதனை உண்மையிலேயே கட்டுப்படுத்த முடியுமா? மனித இயல்புக்கு மாறாக மனிதனை திருப்ப முடியுமா? எந்த மனிதனையாவது தடைபோட்டு திருத்த முடியுமா? அந்த வினாதான் இது. அதாவது கொசுவை கடிக்கக்கூடாது என்று தடுக்க முடியுமா? ஒரு விரிந்த அளவில் மனிதனும் ஒரு உயிரினம்தான், கொசுவைப் போலவே. அப்படியிருக்க கீதாசாரியன் இது தீது, இதைச் செய்யாதே என்று எப்படிக் கூறலாம்?
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனமதங்களில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத, செயல்களைப் பற்றிய அறிவுறுத்தல்களே காணப்படுகின்றன. செய்யக் கூடாதன செய்தால் இன்னின்ன தண்டனைகள் உண்டு, இன்னின்ன பழி சேரும் என்கின்றன அவை. செய்யக்கூடுவன செய்தால் இன்னின்ன பலன்களைப் பெறலாம் என்கின்றன. பல மத நூல்களில் 31, 32 ஆம் செய்யுளைப் போன்ற வரிகளையே பெரும்பாலும் பார்க்க முடிகிறது.
அத்தகைய நூல்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒன்று அத்தகைய அறிவுறுத்தலும் ‘மிரட்டலும்’ நிகழ்ந்த மறுகணமே எழுப்பப்படும் இந்த ஆழமான ஐயம். இதுவே கீதை ஒரு சுருதி என்று ஏற்கனவே நான் குறிப்பிட்டதற்கான காரணம். அடிப்படையான ஞான விவாதங்களை எழுப்பி விடை காணும் நூல் இது. நம்பு, கடைப்பிடி என்று ஆணையிடும் நூல் அல்ல. 31, 32 ஆம் செய்யுள்களை மட்டும் பிரித்தெடுத்து நம்பு என்று அறைகூவலை கண்ணன் நிகழ்த்துவதாக பெளராணிகர் கூறலாம். கீதையின் அமைப்பும் செய்தியும் அது அல்ல.
செய்யக்கூடுவன, கூடாதன பட்டியலை அளிக்கும் நூலை ஸ்மிருதி என்று கூறுவர். ஸ்மிருதிகள் ஒருபோதும் விளக்கம் அளப்பதில்லை. அவை தங்கள் அறிவுறுத்தல்களை இறைவனின் ஆணை என்றோ, மூதாதையர் மரபு என்றோ கூறி நிறுவவே முயலும். அவை விவாதிக்க விரும்பவதில்லை. விவாதமே ஒரு பெரிய பாவமாக, குற்றமாக கருதப்படும். அதாவது புனித அறிவுறுத்தல்களை ஐயப்படும் அத்துமீறலாக கருதப்படும்.
இதில் பொதுவாக காணப்படும் அம்சம் என்னவென்றால் மனு, மோசே, முகமது நபி என எவரை எடுத்துப் பார்த்தாலும் தங்கள் அறிவுறுத்தல்களை தங்களுடையவை அல்ல என்றும் இறைவனிடம் இருந்து நேரடியாக வந்தவை என்றும்தான் கூறுகிறார்கள். மனு இறைவன் நேரடியாக ரிஷிகளுக்கு அளித்தவற்றையே தானும் கூறுவதாகச் சொல்கிறார். கீதையும் ஒரு கோணத்தில் ‘இறைவனின்’ வாக்குதான். ஆனால் அது உபநிடதங்களுக்கே உரிய அழகிய புராணக்கதை மட்டுமே. இங்கே பரம்பொருள் இறுதி உண்மைகளை அறை கூவவில்லை. விதிகளை வரையறுக்கவில்லை. விவாதிக்க முன் வருகிறான். ஆகவேதான் கீதை ஒரு தத்துவ நூல்.
கண்ணனை நம்புபவர்களுக்கு உரியதல்ல, கண்ணனை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவனிடம் விவாதிப்பவர்களுக்கு உரியது கீதை. நெறி நூல்களான ஸ்மிருதிகள் எவையும் காலாதீதமானவை அல்ல. ஏனென்றால் காலம் மாறியும் மாறாத நெறி என ஏதும் இல்லை. சுருதிகள் அடிப்படைப் பிரச்சினைகள் சார்ந்தவை. அவை என்றுமிருக்கும் வினாக்களும் விடைகளும் கொண்டவை. எனவே காலாதீதமானவை. ஒரு ஞானமரபில் சுருதிகளே மையமாக இருக்க வேண்டும்.
இச்செய்யுளில் குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு அம்சம் உண்டு. ஞானம் உள்ளவன் தன் இயல்புக்கு ஏற்ப செயல்படுகிறான் என்கிறான் அர்ஜூனன். ஞானமற்ற எளிய மனிதர்கள் தங்கள் இயல்புக்கு ஏற்பச் செயல்படுகிறார்கள், ஞானமுடையவர்கள் சிந்தித்து நேர்வழியில் செயல்படுகிறார்கள் என்பதே பொதுப்புத்தி இல்லையா?
அப்படியானால் இந்த வினாவே அர்த்தமற்றதாகிவிடுகிறது. ஞானமுடையவனும் தன் இயல்புக்கு ஏற்பவே செயல்படுகிறான். ஆகவே அனைவருமே தங்கள் இயல்புக்கு ஏற்பவே செயல்படுகிறார்கள். அப்படியானால் நல்லவை கெட்டவை என்ற பிரிவினைக்கும் உபதேசத்திற்கும் என்ன பொருளிருக்க இயலும்? அந்தக் கேள்வியே இங்குள்ள அடிப்படையான தரிசனப்பிரச்சினை. அதாவது மனிதனை அவனது தன்னியல்பை விட்டு விலகிச் செயல்படச் செய்யும் அந்த ‘புற’ விசை எது?
அதற்கான பதிலை கீதை 34ஆவது பாடலை முன்வைத்து மேலே விளக்கிச் செல்கிறது. ‘காமம்’ என்ற ஆற்றலே அந்த ‘புற’ விசையாகும். காமம் என்னும்போது இந்திய ஞான மரபில் உடல்உறவு சார்ந்து எழும் விருப்பு என்ற பொருளில் மட்டும் அச்சொல் கையாளப்படுவதில்லை. ஐம்புலன்களும் கொள்ளும் இன்பவிழைவே இங்கு காமம் என்று கூறப்படுகிறது. காமம் என்ற சொல்லுக்கு விழைவு என்றுதான் பொருள். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பொதுவான வார்த்தை இது.
இன்பநாட்டம்தான் மனிதனை அவன் தன் இயல்பில் இருந்து விவாதிக்கிறது. செயலுக்கான விசையாக அமைகிறது. கிட்டத்தட்ட இதையே வேறு கோணத்தில் சிக்மன்ட் ·பிராய்ட் பிராய்ட் விவாதிக்கிறார். Pleasure Prniciple என்று பிராய்ட் கூறுவதும் இதுவே. அதாவது மனிதனின் உள்ளே புலனின்பங்களை நுகர்வதற்கான அடங்காத நாட்டம் உள்ளது அவனுடைய செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் ஆதார விசை அதுதான்.
ஆனால் கீதை கூறுவதற்கும் சிக்மண்ட் ·ப்ராய்ட் கூறுவதற்கும் இவையே அடிப்படையான வேறுபாடுகள் பல உண்டு. ·ப்ராய்டின் நோக்கில் புலன்சார் இன்பங்களுக்கான விழைவு என்பது ஒரு மிருகஇயல்பு. எல்லா உயிரினங்களிலும் உள்ளது. அதை அவரது உளவியல் இட் (Id) என்று கூறும் ஆதாரமான விருப்புகளில் ஒன்று அது. கீதை இங்கே காமம் என்று கூறுவது மனித மனத்தில் உருவாக்கக்கூடியது. பிற உயிரினங்களில் அது இல்லை. ஆகவேதான் கீதையின் இந்த விளக்கம் மனிதர்களிடம் கூறப்படுகிறது.
உடனே கேட்கப்படும் வினா இதுதான். காமம் [அதாவது உடலுறவுக்கான ஆசையும் பிற புலன் ஆசைகளும்] பிற உயிர்களுக்கும் உள்ளனவே. மனிதனுக்கு மட்டும் உள்ள இயல்பு அல்லதானே? அப்படியானால் காமம் மானுடனுக்கு மட்டுமே உரியது என்று ஏன் சொல்லவேண்டும்?
இதில் கீதை அபாரமான ஒரு தெளிவை காட்டுகிறது. பின்னால் வரும் பாடல்களில் அது தெரியவரும். ஒருமுறை நித்யசைதன்ய யதியிடம் கேட்டேன். ‘ஏன் காம இச்சைகளை அடக்கி வெல்ல வேண்டும். எல்லா உயிர்களிலும் அது உள்ளது. அது ஒர் ஆதார இயல்புதானே?’ அது என்னிடம் ஒரு மூத்த எபத்தாளர் கேட்ட கேள்வி.
நித்யா பதில் கூறினார். ‘எந்த மிருகமாவது சீசன் அல்லாதபோது காம விருப்புடன் இருக்கிறதா? எந்த மிருகமாவது எப்போதும் காமத்தைப் பற்றிய நினைப்புடன் இருக்கிறதா? எந்த மிருகமாவது உடலில் ஆற்றல் இல்லாமலாகும்போதும் காமத்தை மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறதா? எந்த மிருகமாவது காமத்தை கலை, இலக்கியம், கேளிக்கைகள் என வளர்த்து பெரியதாக்கியபடியே இருக்கிறதா? எந்த மிருகமாவது முதுமையில் காமத்துடன் இருக்கிறதா?’ என்றால் பதில் கூறமுடியவில்லை.
ஆம், மனித மனத்தில் உள்ள காமம் வேறு வகையானது. இது இயல்பான மிருகக் காமம் அல்ல. மிருகக்காமம் தீ போன்றது. இது மனிதனின் அகங்காரம் என்ற பெட்ரோல் கொட்டப்படும் தீ. ஆகவே மேலும் மேலும் வளர்வது. மனித அகங்காரம் என்ற கலைடாஸ்கோப்பின்ந் அடுவே போடப்பட்ட வண்ணங்கள் போன்றது காமம்.
பிற உயிரினங்களின் காமத்தை அவற்றின் இயல்பு அது என்கிறது கீதை. எறும்புக்கும் கொசுவுக்கும் காமம் உண்டு. அது அவற்றின் அடிப்படை இயல்பிலிருந்து அவற்றை பிறழச் செய்வதில்லை. மானுடக்காமம் அதைச் செய்கிறது. ஆகவே இதையே கீதை காமம் என்று கூறுகிறது. இதை வெல்வது, ஒடுக்குவது குறித்தே பேசுகிறது. இல்லையேல் இது மனிதனை இயல்பு பிறழச் செய்துவிடும். பாவகரமான செயல்களில் ஆழ்த்திவிடும் என்று கீதை எச்சரிக்கிறது.
முப்பத்திநான்காம் பாடலில் கீதை காமத்தை புலன்களில் மனிதன் உருவாக்கிக் கொண்டுள்ள முடிவற்ற இன்ப விருப்பு என்று பேச ஆரம்பிக்கிறது. புலன்களுக்கு புலன் சார் இன்பங்களில் கடுமையான விருப்பு வெறுப்புகள் உள்ளன. அந்த விருப்பு வெறுப்புகள் புலன்களின் இயல்புகள். அந்த விருப்பு வெறுப்புகள் புலன்களின் பகுதிகள் என்றே கூறலாம். அவற்றை அப்படியே விட்டுவிட்டோம் என்றால் அது மிருக இயல்பாக, சாதாரணமாக இருந்துவிடும். அவை நம்மை நிலையழியச் செய்வது இல்லை.
ஆனால் நம்முள்ளே இருக்கும் நமது சாரமான ஒன்று, நமது சுயம், நமது தன்னிலை, அந்த புலன்களின் விருப்பு வெறுப்புகளில் ஈடுபட ஆரம்பித்தால் அது பிரம்மாண்டமாக வளர ஆரம்பிக்கிறது. நாவுக்கு இனிப்பு பிடிக்கும், கசப்பு பிடிக்காது. அதன் இயல்பு அது. நமது அகம் அதை முடிவிலாது வளர்த்தெடுக்கலாம். இனிப்பு மீது பெரும் பித்து உருவாகி நாம் போதையடிமைகள் போல ஆகலாம். கசப்பை வெறுத்து கசப்பை நினைவுபடுத்தும் விஷயங்களையே வெறுக்க ஆரம்பிக்கலாம். இப்போது தீக்கங்குமேல் பெட்ரோல் கொட்டப்பட்டாயிற்று. விருப்பு வெறுப்புகள் நம் உள்ளே இருக்கும் நமக்கு எதிரிகள் என்று கூறுகிறது கீதை.
இங்கு கீதை உருவாக்கும் ஒரு நுட்பத்தைச் சொல்லிவிட்டு மேலே செல்லவேண்டும். பல பொழிப்புரைகளில் ‘விருப்பு வெறுப்புகள் ஆத்மாவுக்கு எதிரிகள்’ என்றே இப்பாடலின் இறுதிவரி மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும். கீதையில் உள்ள சொல் ‘அஸ்ய’ என்பதாகும். அதற்கு ‘இவன்’ என்று பொருள். இவன் யார்? அர்ஜூனன் அல்ல.அப்படி என்றால் உனக்கு, அவனுக்கு என்றே சொல்லப்பட்டிருக்கும். இவன் என்ற சொல்லாட்சி மூலம் குறிப்பிடப்படுவது அர்ஜூனனுக்குள் உறையும் இன்னொன்றை. சாரம்சமான இருப்பை. அதை நாம் ஆத்மா எனலாம். ஆனால் கீதை அதை இவன் என்றே கூறுகிறது.
ஆக அர்ஜூனனின் வினாவுக்கு கீதை கூறும் விடை இதுதான். மனிதனின் தன்னியல்பினை மீறச் செய்வது காமமே. அதுவே செயலின் முதல் தூண்டுகோல். அதுவே முதல் ஆற்றல். ஆகவேதான் காமத்தின் உறைவிடமான மானுட உடலின் முதல் மையத்தை யோகமரபு மூலாதாரம் என்றும் குண்டலினி அங்கே உறைகிறது என்றும் வகுத்தது. அங்கிருந்தே மானுடனை செயலுக்கு ஆற்றுப்படுத்தும் முதல் விசை வெளிப்படுகிறது. அதன் அடுத்தடுத்த தளங்களில்தான் பசி, உயிரின் ஆற்றல், சிந்தனை, உணர்ச்சிகள் என்று பிற எட்டு ஆற்றல் மையங்களும் உள்ளன என்பது யோகசாஸ்திரத்தின் புரிதல். கீதையின் பதிலும் இதுவே.
யோகம் காமத்தையும் ஓர் அடிப்படை ஆற்றலாகக் கண்டு அதை ஞானத்தை அடையும் பயணத்திற்கான விசையாக மாற்றிக் கொள்ள முடியும் என்று கருதுகிறது. அதற்கான தியான வழிமுறைகளை அது உருவாக்கியுள்ளது. ஆனால் இது கர்மயோகம். ஆதலால், சிறப்புறச் செயல்புரிவதன் மூலம் எப்படி மானுடன் விடுதலை பெறலாம் என்று மட்டுமே இது பேசுகிறது என்பதனால், இது காமத்தை அடக்குவது வெல்வது குறித்து வலியுறுத்துகிறது.