வல்லபி வானதி- நிலவழிபாடு

DSC05635

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு, வணக்கம்.

சென்றவாரம் பேசியதுபோல வருகிற 22ம் தேதி அன்று நிலவழிவாடு செய்து கட்டிடப்பணியைத் துவக்க இருக்கிறோம். உங்கள் பயணத்திட்டம் காரணமாக தாங்கள் கலந்துகொள்ள இயலாதது குறித்து எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. காலதாமதம் பாதிக்கப்பட்டவர்களின் காத்திருப்பை இன்னும் அதிகரிக்கும் என்பதாலும் பொருளாதார கணக்குகளும் (இப்போதைய கட்டிட செலவு மதிப்பு சுமார் 90 லட்சம். கையிருப்பு 16 லட்சம். பொறியாளர் ஒரு பெரிய செலவுப்பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது ஒரு 15 லட்சம் அளவு சுமையைக்குறைக்கும் .) நிகழ்வை ஒத்திவைக்க இயலாமைக்கு முக்கிய காரணங்கள். எனவே உங்கள் ஆசிகளை ஒரு தந்தையாகவும் குருவாகவும் வழங்கினால் மிகவும் மகிழ்வோம்.

மேலும் இன்று தங்களது வலைத்தளத்தில் நம்பிக்கை மனுஷிகள் ஆவணப்படம் குறித்த கடிதம் படித்தேன். எனது பேச்சில் முதலில் கார்பரேட் நிறுவனங்கள் அனைத்தையும் நிராகரிப்பதுபோல ஒரு தொனி உள்ளது. அதிலேயே அடுத்ததாக நமது மண்ணை, வளங்களை நாசப்படுத்தியும் சுரண்டியும் வரும் நிறுவனங்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். நிறுவனங்களின் மூலம் என்ன என்பதைப் பார்த்துதான் நிதிபெறுவது என்ற உறுதியில் இருக்கிறோம். உங்களது பதிலிலும் அதுவே உள்ளது.

இருப்பினும் கேள்வி கேட்டநண்பர் என் விளக்கத்தையும் எதிர்பார்க்கக்கூடும் என்பதால் இந்த பதில். ஒவ்வொரு நிறுவனம் பற்றியும் அதன் மூலம், கொடைக்கான நோக்கம் போன்றவற்றை அறிந்துகொள்வது என்பது இயலாததாக உள்ளது. மேலும் பெருநிறுவனங்கள் தரும் நிதி எங்களை கட்டுப்படுத்தவோ நிர்பந்தப்படுத்தவோ கூடும் என்ற அச்சமும் உள்ளது. நிதியைப் பெற்றுக் கொண்டு அதற்கான நன்றியாக அறமீரலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். மேலும் அவர்களின் ஆராய்ச்சிக்கு இந்தபிள்ளைகளை பயன்படுத்தவும் நினைக்கலாம். கேட்ஸ் பவுண்டேஷன் இந்தியாவில் செய்துவரும் கொடைக்கான நோக்கம் குறித்த கட்டுரை இன்னும் எச்சரிக்கையளிக்கிறது. வேகமாக சென்று எங்கோ முட்டிநிற்பதைக்காட்டிலும் மெதுவாக சரியான வழியில் இலக்கை அடைந்தால் போதும் என நினைக்கிறோம். அதேபொழுது டாடா போன்ற ஒரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட கொடையையோ அவர்கள் இணைந்து அளிக்கும் கொடையையோ மறுப்பதில்லை.

நன்றி

வானவன்மாதேவி.

அன்புள்ள வல்லபி,வானதி,

நீங்கள் எப்போதேனும் எதையேனும் பிழையாகச் செய்யமுடியும் என நான் எண்ணவில்லை. அதற்கான மனத்தெளிவுடையவர்கள் நீங்களிருவருமே

என் வாழ்த்துக்கள். தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு. சிறக்கட்டும்

ஜெ

ஒருதனிப்பட்ட விண்ணப்பம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5
அடுத்த கட்டுரைவாசிப்பின் வழியாக…