ஹலோ! ஹலோ!

”நேயர்களுக்கு அன்பான வெனெக்கம். இப்ப நம்ம கூட பிரபல னீரிழிவு மருத்துவர் டாக்டர் எம்.ஸ்ஸெக்ரபாநி எம்டி அவர்கள் வந்திருக்காங்க. திரு ஸ்ஸெக்ரபாநி அவர்கள் இன்னிக்கு நீரிழிவு மருத்துவத்திலே னம்பர் ஒன் டாக்டரா இருக்காங்க. அவங்க இப்ப இங்க வந்து னம்ம நேயர்கள் கேக்கிற கேல்விகளுக்கு பதில் ஸொல்றதிலே எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. னேயர்கள் உங்க கேல்விகல னேரடியாகவே திரு ஸ்ஸெக்ரபாநி அவர்கள் கிட்ட கேட்கலாம். வெனெக்கம் திரு ஸ்ஸெக்ரபாநி”

”வணக்கம்” ”டாக்டர், இப்ப இந்த னீரிழிவுங்கிற னோயிலே நீங்க ஸிறப்பா ரிஸேர்ச் ஸெய்துட்டு வரீங்க இல்ல? னீரிழிவுன்னா என்ன? அதோட ஆரிகூரிகள் என்னென்ன?”. ” ”ரொம்ப நல்ல கேள்வி. இப்ப நீரிழிவுன்னா ஆக்சுவலி நெறையபேரு சுகர்னு சொல்றாங்கன்னாலும் சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீரிழிவுன்னாக்க அது ஒரு நோய்னு சொல்ற அதே நேரத்திலே எக்ஸாட்டா சொல்லணுமானா வி ஹேவ் டு மேக் ஸெர்ட்டெய்ன் கிளாரி·பிகிகேஷன்ஸ் இன் த பாயிண்ட் பட்…ஆக்சுவலி இந்த நீரிழிவுங்கறது–.”

”ரொம்ப ஸரியா ஸொன்னீங்க டாக்டர். அதுக்குள்ள இப்ப ஒரு னேயர் லைன்ல இருக்கார். கேக்கலாமா?” ”ஓக்கே” ”ஹலோ ஹலோ ஹலோ…ஹலோ யார் பேசறது?” ”ம்ங்கஸனமங்கர்ஸி” ”ஹலோ யார் பேசறது? ஹலோ? ஹலோ ,டாக்டரிடம் கேலுங்கள் நிகல்ஸ்ஸியிலே இருந்து ஸின்பாப்பா பேஸறேன். ஹலோ” ”ம்ம்… மங்கயர்கரசி” ”யாரு மங்கயர்க்கரசியா?” ”ம்ம்ம் மங்கயர்க்கரசி அயனாவரத்திலே இருந்து பேசறேன்” ”சொல்லுங்க, அயனாவரம் மங்கயர்க்கரசி…னீங்க என்ன கேக்கணும்?” ”ம்ம்ம்…டாக்டர்கிட்ட பேசணும்”

”சொல்லுங்க மங்கயர்க்கரசி” ”ம்ம்ம்…நான் இப்ப ஹலோ…ஹலோ” ”சொல்லுங்க” ”ம்ம்ம்ம்….எங்க மாமனாருக்கு காது கேக்கல்லை. அவருக்கு சுகர் உண்டான்னுட்டு கேக்கலாம்னுட்டு…” ”மங்கயர்க்கரசி உங்க மாமனாருக்கு என்ன வயசு?” ”அது இருக்கும் ஒரு எம்பது எம்பத்தஞ்சு” ”எண்பத்தைந்து வயதானா காது  கொஞ்சம் கேக்காம போறது நேச்சுரல்தான். இதுக்கு நீங்க ஒரு இஎன்டி நிபுணரை கலந்தாலோசிக்கலாம். அதுக்கு முன்னாடி அவருக்கு சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்” ”ம்ம்ம்…சரிங்க” ”ஓக்கே மங்கயர்க்கரசி. கூப்பிட்டதுக்கு ரொம்பவே தாங்க்ஸ்.. அப்றம் டாக்டர் னீங்க னீரிழிவைப்பத்தி சொல்லிட்டிருந்தீங்கள்ல?.”

”யா… ஆக்சுவலி இந்த நீரிழிவுன்னா…டெ·பனிட்லி இட் இஸ் எ பிக் பிராப்ளம் இன் அவர் கண்ட்ரி வி ஹேவ் டு அண்டர்ஸ்டேண்ட் எ லாட் இன் திஸ் ஏரியா…பட்” ”நீங்க நீரிழிவுன்னு எதைச் ஸொல்வீங்க டாக்டர்?” ”குட் கொஸ்டின். ஆக்சுவலா வி ஸே இட் ஆஸ் சுகர் கம்ப்ளெயிண்ட்… மெடிக்கல்லி இட் ஹேஸ் எ லாட் ஆ·ப்– ” ”ரொம்பவே தெலிவா விளக்கினீங்க டாக்டர். அதுக்குள்ள இன்னொரு னேயர் லைன்ல இருக்கார்…பாப்பமா?” ”ஷ்யூர்”

”ஹலோ ஹலோ ஹலோ…யார் பேசறது?” ”ர்ர்ர்ர்ர்ர்ர்…குமாரசாமி…திருநெல்வேலி” ”சொல்லுங்க குமார்ஸாமி…” ”டாக்டரவுஹ இருக்காஹளா?” ”ஹலோ நான் டாக்டர் சக்கரபாணி பேசறேன்” ”ஹலோ! ஹலோ” ”ஹலோ.. ஹலோ” ”ஹலோ ஹலோ… சொல்லுங்க” ”ஹலோ?” ”ஹலோ!” ”ர்ர்ர்ர்” ”ஸாரி கட்டாயிடிச்சு. ஸொல்லுங்க டாக்டர்..இப்ப னீரிழிவுன்னா னாம எதைப்பத்திச் சொல்றோம்’?” ”வெரி இன்ட்ரெஸ்டிங் கொஸ்டின். ஆக்சுவலி எ லாட் ஆ·ப் பீப்பிள் ஹேவ் த ஸேம் கொஸ்டின்….பட் பலபேர் இப்டி கேக்கிறதில்லை” ”ஸரியாச் ஸொன்னீங்க டாக்டர். இப்ப பலபேர் டாக்டர்கிட்ட டவுட்ஸ் கேட்டு க்லியேர் பன்னிக்கிறதில்லை. ஸோ தே ஹேவ் எ லாட் ஆ·ப் பிராப்லம்ஸ். ஆக்சுவலி…..அதுக்கு முன்னாடி ஒரு காலர்..” ”ஓக்கே”

”ஹலோ ஹலோ?” ”ஹலோ”  ”ஹலோ , சொல்லுங்க …” ”ஹலோ?” ”ஹலோ, சொல்லுங்க…இது டாக்டரிடம் கேளுங்கள் நிகல்ஸி . னான் ஸின்பாப்பா பேசறேன்” ”சின்னப்பாப்பாவா?” ”ஆமங்க” ”நல்லா இருக்கீங்களா மேடம்?” ”னான் னல்லாவே இருக்கேன். னீங்க எப்டி இருக்கீங்க?” ”நல்லா இருக்கேன்…வீட்ல எல்லாரும் சௌக்கியங்களா?” ”ஸௌக்யமா இருக்காங்க…ஸொல்ங்க என்ன கேக்கணும்?” ”டாக்டர்கிட்ட கேக்கணும்” ”கேளுங்க , உங்கபேரு?” ”நான் அம்பத்தூர் குணசேகர் மேடம். தினம் ஒரு பிரச்சினை நிகழ்ச்சியிலே நான் உங்ககிட்ட கூப்டு பேசியிருக்கேன். அப்றம் தேன்விழுது நிகழ்ச்சியிலேகூட ஒரு பாட்டு டெடிகேட் பண்ணினேன்” ”ஓ, அவரா னீங்க? வேரி னைஸ்! ஸொல்ங்க கூணஸேகர்…” ”டாக்டர்கிட்ட கேள்விங்க” ”கேளுங்க குணசேகர்”

”இல்லீங்க டாக்டர், இப்ப இந்த நீரிழிவு எல்லாருக்கும் வருமா?” ”நல்லா கேட்டீங்க குணசேகர். நீரிழிவுன்னா ஆக்சுவலா எவ்ரி ஒன் ஹேஸ் த ரிஸ்க் ஆ·ப் ஹேவிங் இட். ஜெனரல்லி த ரிஸ்க் ·பேக்டர் இஸ் செவெண்டி பெர்ஸெண்ட் இன் இண்டியா. பிகாஸ் வி ஹேவ் எ லாட் ஆ·ப் ஸப்போர்ட்டிங் ·பேக்டர்ஸ் ஹியர். அவர் டிரெடிஷன் காண்ட்ரிபியூட்ஸ் எ லாட். ஆண்ட் அவர் ·புட் ஹேபிட்ஸ்.. ஆண்ட் டெ·பனிட்லி அவர் ஜெனெடிக் ஸ்டரக்சர்..இட்ஸ் ரியலி காம்லிகேட்டட்..” ”சரிங்க” ”என்ன பண்றீங்க குணசேகர்?” ”ஓட்டல் ஸார்” ”ஓட்டல் வச்சிருக்கீங்களா?” ”இல்ல சார் நைட் புரோட்டா கடை” ”ஸோ னைஸ்… குணசேகர். உங்க கிட்ட பேஸ்னதுக்கு ரொம்பவே மகில்ஸி. மறுபடியும் ஸந்திப்போம்…ஸொல்ங்க டாக்டர், இப்ப னீரிழிவுன்னா என்னான்னு பேஸ்ட்டிருந்தோம் இல்லியா?”

”யா.. நீரிழிவுன்னா அது நம்ம கிராமத்திலே டிரெடிஷனலா சொல்லிட்டு வர்ரது. ஆக்சுவலி அது சித்த வைத்தியம்… அதாவது இந்த நாட்டு வைத்தியம்.. நீரிழிவுன்னா அது ஆக்சுவலி ஒரு நோய்னாக்கூட… எதுக்குச் சொல்றேன்னா வி ஹேவ் டு நோ எ லாட் ஆ·ப் திங்ஸ் இன் திஸ் ஏரியா. இன்னும் அது பத்தின விழிப்புணர்ச்சி நம்ம ஜனங்களுக்குள்ள ஏற்படலை…” ”ஸரியாச்சொன்னீங்க டாக்டர்.. அந்த விலிப்புனர்ஸ்ஸியை உருவாக்கறதுக்காஹத்தான் னாம இந்தமாதிரி புராக்ராம்லாம் னடத்தறோம். இப்ப ஒரு னேயர் லைன்ல காத்திட்டிருக்கார். பேசலாமா? ”டெ·பனிட்லி”

”ஹலோ?” ”ஹலோ மேடம்” ”ஹலோ, ஸொல்ங்க” ”ஹலோ மேடம்” ”ஹலோ” ”ஹலோ மேடம்” ”ஹலோ ஸொல்ங்க” ”ஹலோ நான் ஈஸ்வரன். திருச்சியிலே இருந்து பேசறேன்.” ”ஹலோ ஸொல்ங்க டிர்ஸ்ஸி ஈஸ்வரன்…”  ”ஹலோ” ”ஸொல்ங்க” ”வணக்கம் டாக்டர்” ”வணக்கம் சொல்லுங்க” ”ஹலோ?” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”சார்!” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஸார் இந்த சுகர் இருந்தா குழந்தை பிறக்குமா?” ”அருமையா கேட்டீங்க ஈஸ்வரன். தாய்க்கு டயபடிஸ் இருந்தா குழந்தைக்கும் டயபடிஸ் இருக்க வாய்ப்பிருக்கு. டயபடீஸ் இருக்கிற குழந்தை தாராளமா பிறக்கும்”

”இல்லசார்…அத கேக்கல்லை… குழந்தைக்கு சுகர் இருக்கறத சொல்லலை” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஹலோ?” ”ஹலோ” ”ஹலோ?” ”சொல்லுங்க” ”சார் குழந்தைய சொல்லலை” ”தாய்க்கு சுகர் இருந்தாலும் குழந்தை பிறக்கும்” ”அப்டீங்களா? ஹலோ” ”ஹலோ, சொல்லுங்க” ”தாய்க்கு இல்ல சார்.. ·பாதருக்கு சுகர் இருந்தா?” ”·பாதருக்கு சுகர் இருந்தாலும் குழந்தை பிறக்கும்” ”டைம் ரொம்ப லேட் ஆயிடுது சார்” ”யா…தாய்க்கு சுகர் இருந்தா குழந்தை கொஞ்சம் லார்ஜ் சைஸ்லே இருக்கிறதனாலே ஆக்சுவலி இட் டேக்ஸ் ஸம் டைம் டு கம் அவுட்.. ஜெனரலி.. ” ”அதில்லை சார்… இப்ப டைம் லேட் ஆறதனாலே என்னாகுதுன்னாக்க…”

”ஓக்கே டாக்டர், அந்தக் கால் கட்டாயிடிச்சு. னாம பேஸிட்டிருந்ததை பாக்கலாமா?” ”ஷ்யூர்..” ”னீரிழிவுன்னா என்னான்னு அருமையா வெலக்கிக் காட்டிட்டிருந்தீங்க” ”ஆமா..நீரிழிவுன்னா வி ஹேவ் டு லுக் இன் டு இட் வெரி கிளியர்லி. டயபடிஸ் இஸ் கால்ட் ஆஸ் நீரிழிவு. அதை நம்ம ஜனங்க இழிவா நினைச்சிட்டிருக்காங்க. இட் இஸ் ராங். நீரிழிவுன்னா ஆக்சுவலா இட் இஸ் நாட் எ டிஸீஸ்..” ”ரொம்பவே தெலிவாச் ஸொன்னீங்க டாக்டர், இப்ப ஒரு காலர் லைன்ல இருக்கார். பேஸ்லாமா?” ”ஓக்கே”

”ஹலோ ஹலோ ஹலோ” “” ஹலோஹலோ” “ஹலோஹலோ” ”ஸொல்ங்க நாங்க டாக்டரிடம் கேல்ங்க நிகல்ஸ்ஸியிலே இருந்து பேஸ்ரோம்” ”ஹலோ” “ஹலோ”. ”நான் சந்திரமோகன் சேலம்.” ஸொல்ங்க ஸென்ரமோஹென்…” ”நான் நீரிழிவ பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன். அதைச் சொல்லலாம்னு நினைக்கிறேன்.” ”ஓ வாவ்…சொல்லுங்க” ”நானிழிவில்லை அவரிழிவில்லை நீரிழிவு என்றால் நீர் இழிவாக நினைப்பதில்லை” ”ஓ! நைஸ்”’ ”நீரிழிவல்ல நிலமிழிவல்ல. வானிழிவல்ல வரப்பு இழிவல்ல. நீரிழிவை நீக்குதல் நன்று” ”ஓ, வெரி குட்” ”அவ்ளவுதாங்க கவிதை” ”வேரி குட்…சந்திரமோகன் கூப்பிட்டதுக்கு ரொம்பவே னன்றி’. அப்றம் டாக்டர் னாம இப்ப னீரிழிவைப்பத்தி பேஸ்ட்டிருந்தோம் இல்லியா?”  ”எஸ்…டெ·பனிட்லி” ”ஸோ ,னீரிழிவுன்னா என்ன?”

”வேரி குட் கொஸ்டின். நீரிழிவுன்னா இட் இஸ் எ ஸ்டிரேஞ்ச் ·பிஸிகல் ·பினாமினன் ” ”எக்ஸலண்ட் டாக்டர்…அதுக்குள்ள ஒரு காலர் லைன்ல இருக்கா…ஹலோ ” ”ஹலோ” “ஹலோ” “”ஹலோஹலோ” “ஹலோஹலோ” “ஹலோ,நான் பிரபாகரன் பேசறேன்…கோவில்பட்டி…கோவில்பட்டி” ”ஸொல்ங்க கோவில்பட்டி பிரபாகரன்” ”ஸார் இப்ப இந்த காசினிகீரய மூணுவேளை மசிச்சு சாப்பிட்டா சுகர் எறங்குமா சார்?” ”கண்டிப்பா… காஸினிகீரை இஸ் குட் பார் லூஸ் மோஷன். தினம் ஏழெட்டுவேளை மோஷன் போனா கண்டிப்பா சுகர் குறையும்…பிகாஸ்…” ”தேங்க்ஸ் சார்” ”வச்சிட்டார்…ஸொல்ங்க சார் னீரிழிவுன்னா என்ன?”

”அதான் நான் இப்ப சொல்லிட்டிருக்கேன். நீரிழிவுன்னா இட்ஸ் எ ·பினாமினன். எ கைண்ட் ஆ·ப்..யூ நோ…ஆக்சுவலி நீரிழிவுன்னா டயபாடீஸ்…” ”மிகஸ்ஸிரப்பா உங்க கருத்துக்கலை எல்லாருக்கும் புரியறாப்ல தெலீவா எடுத்துச் ஸொன்னீங்க. உங்க கருத்துக்கலாலே ஏராளமான னேயர்கலுக்கு பயன் கிடைஸ்ஸிருக்கும்னு னம்பறோம். னிறையவே இதைப்பத்தி பேஸ்லாம். ஆனாலும் டைம் இல்லாதததனாலே இப்ப இந்த நிகல்ஸ்ஸிய னிரைவு ஸெய்ரோம். எங்க னிகல்ஸ்ஸியிலே வந்து பார்டிஸிபேட் பன்னி அரிய கருத்துக்கலை ஸொன்னதுக்கு ரொம்பவே நன்றி. வெனக்கம்.” ”வணக்கம்”

”வெனக்கம் னேயர்கலே னிகல்ஸ்ஸியை ரஸிச்சிருப்பீங்க…அடுத்த வாரம் இதே னிகல்ஸ்ஸியிலே குடல்வால் அறுவை னிபுணர் டாக்டர் அகர்வால் னம்ம கிட்ட பேஸ்றதுக்கு வரதா இருக்கார். நேயர்கள் அவர்கிட்ட எல்லா கேல்விகலையும் கேட்டு தெலிவு பெறலாம். வெனக்கம்”

முந்தைய கட்டுரைஇலவச தமிழ் மின்னூல்கள்
அடுத்த கட்டுரைவாழையும் விஷமும்