‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23

பகுதி 7 : மலைகளின் மடி – 4

வெளியே இடைநாழிக்குச் சென்றதும் தேவிகை அமைச்சரிடம் “நானே அழைத்துச்செல்கிறேன் அமைச்சரே, தாங்கள் செல்லலாம்” என்றாள். அவர் பூரிசிரவஸ்ஸை ஒருமுறை நோக்கிவிட்டு தலைவணங்கி திரும்பிச்சென்றார். தேவிகை கண்களால் சிரித்தபடி பூரிசிரவஸ்ஸிடம் “உங்களிடம் பேசும்பொருட்டே அவரை அனுப்பினேன்” என்றாள். அந்த நாணமில்லாத தன்மை பூரிசிரவஸ்ஸை மகிழ்வித்தது. அவளிடம் அரசியருக்குரிய நிமிர்வு இருக்கவில்லை. ஆனால் அரண்மனைப்பெண்களுக்குரிய நடிப்புகளும் இருக்கவில்லை. பாலைவனநகரிகளில் தெருக்களில் புழுதிமூடித்தென்படும் குமரிகளைப்போல் இயல்பாக இருந்தாள்.

“இங்கே அயலவர் எவரும் வருவதில்லை. வருபவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். அதிலும் முதியவர்களே கூடுதல். அவர்களிடம் பேசுவதன்றி எனக்கு வெளியுலகத்தை அறிய எந்த வழியும் இல்லை” என்று அவள் சொன்னாள். “இளவரசி, நீங்கள் கல்விகற்றிருக்கிறீர்களா?” என்றான் பூரிசிரவஸ். “என்னைப்பார்த்தால் என்ன தோன்றுகிறது?” என்று அவள் கேட்டாள். “உங்கள் மொழியில் கல்விகற்ற தடயம் இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்து “ஆம், இங்கே எவரும் அந்தப்பேச்சுகளை பேசுவதில்லை. கல்விகற்றவளாக நடந்துகொள்ள எனக்கு மறுதரப்பே இல்லை” என்றபின் சிரித்து “நான் முறையாகக் கற்றிருக்கிறேன்” என்றாள்.

“காவியங்களையும் குலவரலாறுகளையும் எனக்கு இரு முதுசூதர்கள் கற்பித்தனர். மறைந்த அமைச்சர் நந்தனர் எனக்கு அரசு சூழ்தல் கற்பித்தார். ஆனால் அதெல்லாம் கல்வி என்று சொல்லமாட்டேன். பாரதவர்ஷத்தில் என்னென்ன கலைகள் வளர்கின்றன என்று எனக்குத்தெரியும். நான் கற்றது குறைவான கல்வியே என்று அறியுமளவுக்கு கற்றிருக்கிறேன் என்று சொல்வேன்” என்றாள். “கல்வியை ஒப்பிட்டு மதிப்பிடக்கூடாது. கற்கும் மனநிலையை அளிப்பது எதுவும் கல்வியே” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்துக்கொண்டு ”உகந்த மறுமொழி சொல்லக் கற்றிருக்கிறீர்கள் இளவரசே” என்றாள்.

”இளவரசி” என அவன் சொல்லத்தொடங்க “என்னை தேவிகை என்று அழைக்கலாமே” என்றாள். “நான் உங்கள் குலம் என்று சொன்னீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “அதை ஒரு நல்லூழாகவே எண்ணுவேன்” என்றபின் “தேவிகை, உனக்கு நான் எந்தவழியில் உறவு என்று தெரியும் அல்லவா?” என்றான். “ஆம், எங்கள் பிதாமகர் பால்ஹிகர் நெடுநாட்களுக்கு முன்னர் வடக்கே இமயமலைகள் சூழ்ந்த மண்ணுக்குச் சென்று ஏழு மனைவியரிலாக பத்து மைந்தரைப்பெற்று பத்துகுலங்களை உருவாக்கினார்.” விரல்களை நீட்டி இன்னொரு கையால் மடித்து எண்ணி “மாத்ரம்,சௌவீரம், பூர்வபாலம், சகம், யவனம், துஷாரம், கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம்” என்றாள்.

பெண்கள் சிறுமிகளாக ஆகிவிடும் விரைவை எண்ணி புன்னகைத்த பூரிசிரவஸ் “ஆம், சரியாக சொல்லியிருக்கிறாய். ஆனால் கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் ஆகிய நான்கும் நாடுகள் அல்ல. அவை குலக்குழுக்கள் மட்டும்தான். துவாரபாலம் மலைக்கணவாயை காவல்காக்கும் குலம். அனைவருமே பால்ஹிகரின் குருதி என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றான்.  தேவிகை விழிகளை சரித்து “அப்படி இல்லையா?” என்றாள். “எப்படி தெரியும்? இந்தக்குலங்களெல்லாம் பல ஆயிரம் வருடங்களாக அந்த மலையடுக்குகளில் வாழ்பவை. ஒரு ஷத்ரியரின் குருதி கிடைப்பதை அடையாளமாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்” என்றான்.

அவள் சிலகணங்கள் தலைகுனிந்து சிந்தித்தபின் தன் பின்னலை முன்னால் கொண்டுவந்து கைகளால் பின்னியபடி “திரௌபதியைப் பற்றி சொல்லுங்கள்…” என்றாள். “என்ன சொல்வது?” என்றான் பூரிசிரவஸ். “பேரழகியா?” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “என்ன சிரிப்பு?” என்றாள். “முதன்மையான அரசியல் வினா…” என்றபின் மீண்டும் சிரித்தான். “அரசு சூழ்தல் எனக்கும் தெரியும். அவள் அழகி என்பதுதான் இன்றைய முதன்மையான அரசியல் சிடுக்கு…” என்று தலைதூக்கி சீறுவதுபோல சொன்னாள். அதிலிருந்த உண்மையை உணர்ந்த பூரிசிரவஸ் “ஆம், ஒருவகையில் உண்மை” என்றான்.

“ஆகவேதான் கேட்கிறேன். அவள் பேரழகியா?”என்றாள். “இளவரசி, அழகு என்றால் என்ன? அது உடலிலா இருக்கிறது?” தேவிகை “வேறெதில் உள்ளது?” என்றாள் கண்களில் சிரிப்புடன். “உடலில் வெளிப்படுகிறது” என்றான் பூரிசிரவஸ். “அதை என்னவென்று சொல்ல? பாரதவர்ஷத்தின் ஆண்களுக்குப் பிடித்தமான, அரசர்களை அடிமைப்படுத்தக்கூடிய ஒன்று. அவளுடைய ஆணவம், அதன் விளைவான நிமிர்வு, உள்ளத்தின் கூர்மை, அது விழிகளில் அளித்துள்ள ஒளி. எல்லாம்தான். எப்படி சொல்வது?”

அவன் சொற்களை கண்டுகொண்டான். “அதைவிட முக்கியமானது விழைவு. அவள் கண்களில் இருப்பது விழைவு. அவள் உடலின் அத்தனை அசைவுகளிலும் அது வெளிப்படுகிறது. வெப்பம் தீயாக வெளிப்படுதல் போல. அதுவே அவளை அழகாக ஆக்குகிறது. அதன் எழுச்சியே அவளை பேரழகியாக்குகிறது… ஆம், பேரழகிதான். அவளை ஒருமுறை பார்த்தவர்கள் நாளில் ஒருமுறையேனும் அவளை எண்ணுவார்கள். பிற பெண்களுடன் எல்லாம் அவளை ஒப்பிடுவார்கள். ஆகவேதான் அவள் பேரழகி என்கிறேன்.”

“நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா?” என்று அவள் அவனை நோக்காமல் இயல்பாக இடைநாழியின் கடினமான கற்சுவரை நோக்கியபடி கேட்டாள். “ஆம், எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது.” அவள் தலைதிருப்பி “ஒப்பிடுகிறீர்களா?” என்றாள். அதன் பின்னர்தான் அவள் கேட்பதை புரிந்துகொண்டு பூரிசிரவஸ் “இளவரசி, நான் ஒப்பிடுகிறேன் என்பது மதிப்பிடுகிறேன் என்றல்ல” என்றான். அவள் பற்றிக்கொள்வது போல திரும்பி சிரித்து “மழுப்பவேண்டியதில்லை. ஒப்பிடுகிறீர்கள்… அதனாலென்ன?” என்றாள்.

“இப்போது நான் அவளிடமிருக்கும் பேரழகு என்ன என்று சொன்னது உன்னை வைத்தே. அவளிடமிருப்பது விழைவு.” அவள் தலைகுனிந்து உதடுகளை பற்களால் கவ்வி சில கணங்கள் சிந்தித்து “காம விழைவா?” என்றாள். “ஆம், ஆனால் அது மட்டும் அல்ல.” தேவிகை “அவள் பாரதத்தை வெல்ல நினைக்கிறாள்…” என்றாள். “இல்லை, அதுவும் அல்ல. அவளுக்கு பாரதவர்ஷத்தின் மணிமுடி வேண்டும். அதுவும் போதாது. இங்குள்ள அத்தனை மானுடரின் மேலும் அவள் கால்கள் அமையவேண்டும். அதுவும் போதாது, அவள் விழைவது காளியின் பீடம். அதுதான். அதுதான் அவளை ஆற்றல்மிக்கவளாக ஆக்குகிறது. அவள் ஆணாக இருந்திருந்தால் பெருவீரம் கொண்டவளாக வெளிப்பட்டிருப்பாள். பெண் என்பதனால் பேரழகி.”

தேவிகை பெருமூச்சுவிட்டு “இங்கே செய்திகளே வருவதில்லை. சூதர்களும் வருவதில்லை. ஆனாலும் அவளைப்பற்றி எவரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஒரு இளையபோர்வீரனை கொற்றவைக்கு பலிகொடுத்து அவன் நெஞ்சில் இருந்து அள்ளிய குருதியை அவள் கூந்தலுக்குப் பூசுவார்கள் என்றார்கள். குருதி பூசப்பட்டமையால் அவளுடைய கூந்தல் நீண்டு வளர்ந்து தரையைத் தொடும் என்றார்கள். அவள் அமர்ந்திருக்கையில் அது கரிய ஓடை போல ஒழுகும் என்றார்கள்… எத்தனை கதைகள்!” என்றாள்.

”கதைகள் பொய், அவற்றின் மையம் உண்மை” என்றான் பூரிசிரவஸ். “அவள் கூந்தல் பேரழகுகொண்டது. கன்னங்கரியது. இருண்ட நதிபோல.” தேவிகை “நீங்கள் கண்டீர்களா?” என்றாள். ”ஆம், நான் அவளை வேட்க மணநிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.” தேவிகை சிரித்து “அடடா… கனியை இழந்த கிளியா நீங்கள்?” என்றாள். அவனும் சிரித்து “இல்லை. கனியை குறிவைக்கவேயில்லை. அங்கே என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் வழியாக அறிந்தோம். அந்த வில்லை பரசுராமனும் அக்னிவேசரும் பீஷ்மரும் துரோணரும் இளைய யாதவனும் கர்ணனும் அர்ஜுனனும் மட்டுமே ஏந்த முடியும். நான் அதை நாணேற்றக்கூட செல்லவில்லை” என்றான்.

“பிறகெதற்கு சென்றீர்கள்?” என்று அவள் கேட்டாள். “மணநிகழ்வுக்கு அழைப்பு அனுப்பப்படுவது என்பது ஆரியவர்த்தத்தின் அரசகுடிகளில் நமக்கும் இடமுண்டு என்பதற்கான சான்று. அங்கே நமக்களிக்கப்படும் இடம் நாம் எங்கிருக்கிறோம் என்பதற்கான குறி. அத்தனை அரசர்களும் அதன்பொருட்டே வருகிறார்கள். அது ஒரு தொன்மையான குலமுறை. இது வெறும் விளையாட்டாக இருந்த காலத்தை சேர்ந்தது. முதியவரான சல்லியரும் வந்திருந்தார்.”

தேவிகை சிந்தனையுடன் “ஆனால் எங்களுக்கு அழைப்பு இல்லை” என்றாள். “அது ஒரு தொன்மையான பட்டியல். அதில் இடம்பெறவேண்டுமென்றால் போர்வெற்றி தேவை” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் ஷத்ரிய அரசகுலம் அல்லவா?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “ஆம், ஆனால் அது ஓர் அளவுகோல் அல்ல. மலைவேடர்மரபுகொண்ட மன்னர்களும் அங்கிருந்தார்கள்” என்றபின் “தேவிகை, கருவூலம் மட்டுமே அரசனின் இடத்தை வரையறுக்கும் ஆற்றல்கொண்டது” என்றான்.

“பிதாமகர் பால்ஹிகருக்கு சூரிய ஒளியை நோக்கும் விழி இல்லை. அவரது உடலிலும் சூரிய ஒளிபட்டு நெடுநாட்களாகின்றன. என் தந்தை சிறுவனாக இருந்தகாலம் முதலே அவர் இந்த நிலவறைகளில் ஒன்றில்தான் வாழ்கிறார். நினைவும் இல்லை. என்னை அவர் அறியார்” என்றபடி தேவிகை அவனை நிலவறைக்குள் சுழன்று இறங்கிய படிகளில் அழைத்துச்சென்றாள். வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தீட்டப்பட்ட பளிங்குக் கற்கள் வழியாக உள்ளே சீரான ஒளி நிறைந்திருந்தது.

மூன்று அடுக்குகள் கீழிறங்கிச் சென்றார்கள். “நாம் மண்ணுக்குள்ளா செல்கிறோம்?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு மழை பெய்வதில்லை. ஆகவே நீர் இல்லை” என்றாள் தேவிகை. “எங்கள் நாட்டிலும் மழை மிகக்குறைவே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் மலையிலிருந்து சாரல் விழுந்துகொண்டு இருக்கும்.” “உங்கள் நாடு குளிரானதா?” என்றாள். “ஆம், ஆனால் உங்களூருடன் ஒப்பிடுகையில் உலகில் எதுவும் குளிர்நாடே” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்தாள். “ஆம், இங்கு வருபவர்கள் எல்லாருமே உலகிலேயே வெப்பமான ஊர் இது என்கிறார்கள்.”

உள்ளே செல்லச்செல்ல புழுதியின் மணம் வந்தது. அல்லது இருட்டின் மணமா? பூரிசிரவஸ் “நிலவறை மணம்” என்றான். “நாம் மண்ணுக்குக் கீழே நூறடி ஆழத்தில் இருக்கிறோம்” என்றாள் தேவிகை. “காலத்தில் புதைந்து மறைவதென்றால் இதுதான்” என்றான் பூரிசிரவஸ். தேவிகை இயல்பாக “எனக்கு என் தந்தை அரசகுலங்களில் மணமகன் தேடுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைத்து “ஆம், அது இயல்பே” என்றான். “ஆனால், இந்த நீண்ட பாலைவழிச்சாலையைக் கடந்து எவர் வரக்கூடும்?” என்றாள் அவள்.

“வைரங்கள் மண்ணின் ஆழத்தில்தானே உள்ளன?” என்றான் பூரிசிரவஸ். “அழகியசொற்கள்… நான் இவற்றைத்தான் கற்றுக்கொள்ளவேண்டும்…” என்ற தேவிகை “இவ்வழி” என்றாள். உள்ளே நீண்ட இடைநாழியின் இருபக்கமும் சிறிய அறைகள் இருந்தன. அவை மரக்கதவுகளால் மூடப்பட்டிருந்தன. “அவை கருவூலங்களா?” என்றான் பூரிசிரவஸ். சிரித்தபடி “ஆம், ஆனால் அவற்றில் பழைய தோலாடைகளும் உலர்ந்த உணவும் மட்டும்தான் உள்ளன” என்றாள் தேவிகை.

உள்ளே அரையிருட்டாக இருந்த அறைக்குள் அவள் அவனை கூட்டிச்சென்றாள். அறைவாயிலில் நின்றிருந்த சேவகன் அவளைக் கண்டதும் பணிந்து “துயில்கிறார்” என்றான். “பெரும்பாலும் துயிலில் இருக்கிறார். ஒருநாளில் நாலைந்து நாழிகை நேரம்கூட விழித்திருப்பதில்லை” என்றாள். அவள் முதலில் உள்ளே சென்று நோக்கிவிட்டு “வருக” என்றாள். அவன் உள்ளே நுழைந்து தாழ்வான மஞ்சத்தில் மரவுரிப்படுக்கைமேல் கிடந்த பால்ஹிகரை நோக்கினான்.

முதலில் அவர் இறந்துவிட்டார் என்ற எண்ணம்தான் அவனுக்கு வந்தது. மலைச்சரிவுகளின் ஆழத்தில் விழுந்து ஓநாய்களால் எட்டமுடியாத இடங்களில் கிடக்கும் சடலங்கள் போல உலர்ந்து சுருங்கியிருந்தது உடல். தேவிகை “பிதாமகரே” என்றாள். நாலைந்துமுறை அழைத்தபோது அவர் விழிதிறந்து “ஆம், மலைதான். உயர்ந்தமலை” என்றார். பின்னர் பால்ஹிகநாட்டு மொழியில் “ஓநாய்கள்” என்றார். அச்சொல்லை அங்கே அந்த வாயிலிருந்து கேட்டபோது அவன் மெய்சிலிர்த்தான்.

“என்ன சொல்கிறார்?” என்றாள். “ஓநாய்கள்… என் மொழி அது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அது பால்ஹிகநிலத்து மொழி என்றே நானும் நினைத்தேன். அந்தமொழியில்தான் பேசுவார்.” அவர் உள்ளூர அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று பூரிசிரவஸ் வியப்புடன் எண்ணிக்கொண்டான். இங்குள்ள வாழ்க்கை அல்ல அது. அங்குள்ள வாழ்க்கையும் அல்ல. எங்கோ என்றோ இருந்து மறைந்த வாழ்க்கை. இந்த மட்கிக்கொண்டிருக்கும் முதிய உடலுக்குள் ஒருமண், மலைகளுடன் மரங்களுடன் முகில்களுடன் மழைக்காற்றுகளுடன், திகழ்கிறது.

“பிதாமகரே, இவர் பால்ஹிகர். பால்ஹிகநாட்டிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள் தேவிகை. அவர் திரும்பி பழுத்த விழிகளால் நோக்கி “ஓநாய்களுக்கு தெரியும்” என்றார். தேவிகை பெருமூச்சுவிட்டு “பிதாமகருக்கு விழிப்பும் கனவும் நிகர்” என்றபின் “ஆனால் திடீரென்று கட்டற்றவராக எழுவார். அப்போது அருகே நிற்பவன் ஓடி வெளியே சென்றுவிடவேண்டும். ஒரு மனிதத்தலையை வெறுங்கைகளாலேயே அடித்து உடைக்க அவரால் முடியும்” என்றாள்.

“எழுந்து நிற்பாரா?” என்றான் பூரிசிரவஸ். “அவர் உடலில் ஆற்றலுக்குக் குறைவில்லை. எழுந்து நன்றாகவே நடப்பார். எடைமிக்க பொருளைக்கூட தூக்குவார். பற்களில்லாமையால் அவரால் உணவை மெல்ல முடியாது. கூழுணவுதான். இப்போதும் அவர் உண்ணும் உணவை பத்துபேர் உண்டுவிடமுடியாது” என்றாள் தேவிகை. “பாண்டவர்களில் பீமசேனருக்கு நிகரானவர் என்று இவரை ஒருமுறை ஒரு மருத்துவர் சொன்னார்.”

பூரிசிரவஸ் சிரித்து “ஆம் அவரை நான் பார்த்திருக்கிறேன். பேருடல். பெருந்தீனி. இவரைப்போலவேதான். ஆனால் மஞ்சள்நிறமான பால்ஹிகர்” என்றான். தேவிகை “இவரை உங்களால் கொண்டுசெல்லமுடியுமா என்ன?” என்றாள். ”கொண்டுசென்றாகவேண்டும். அது எனக்கு இடப்பட்ட ஆணை.” தேவிகை சிலகணங்களுக்குப்பின் “:இளவரசே, இவரை கொண்டுசென்று என்னசெய்யப்போகிறீர்கள்?” என்றாள்.

அவன் அவள் விழிகளை நோக்கி “அஸ்தினபுரியில் அரியணைப்போர் நிகழவிருக்கிறது. பாரதவர்ஷம் முழுக்க போருக்கான சூழலே திகழ்கிறது. ஒவ்வொன்றும் போரை நோக்கியே கொண்டுசெல்கின்றன. நாங்கள் எங்களை காத்துக்கொள்ளவேண்டும். முதலில் யாதவகிருஷ்ணனிடமிருந்து. பின்னர் அஸ்தினபுரியிடமிருந்தும் மகதத்திடமிருந்தும். எங்களுக்குத்தேவை ஒரு வலுவான கூட்டமைப்பு. பத்து பால்ஹிகக்குடிகளையும் ஒன்றாக்க விழைகிறோம். அதை நிகழ்த்தும் உயிருள்ள கொடி இவர்தான்” என்றான்.

“இவரை உங்கள் மக்கள் பார்த்தே நூறாண்டுகள் இருக்குமே” என்றாள். “ஆம், தேவிகை. ஆனால் பால்ஹிக உடல் என்றால் என்ன என அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரைப்போன்ற பலநூறு பெரும்பால்ஹிகர்கள் மலைக்குடிகளில் உள்ளனர். நாங்கள் ஷத்ரிய சிற்றரசர்களிடம் மணம்புரிந்து எங்கள் உடல்தோற்றத்தை இழந்தோம். ஆகவே மலைக்குடிகள் எங்களை அணுகவிடுவதில்லை” என்றான் பூரிசிரவஸ்.

“எங்களிடமும் பிழையுண்டு. சென்றகாலங்களில் அவர்களை வென்று கப்பம் பெற மத்ரநாட்டிலிருந்தும் யவனநாட்டிலிருந்தும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஆனால் இவர் எங்கள் அரண்மனைவிழவு ஒன்றில் அவையில் வந்து அமர்ந்தால் அனைத்தும் மாறிவிடும். இவரது பெயரால் நாங்கள் விடுக்கும் ஆணையை அவர்கள் எவரும் மீறமுடியாது. ஆகவே எவ்வண்ணமேனும் இவரை கொண்டுசென்றாகவேண்டும்.”

“நீங்கள் வந்துள்ள புரவிகளில் இவரை கொண்டுசெல்லமுடியாது. இங்கே சுருள்மூங்கிலை அடித்தளமாக அமைத்து பெரிய வண்டிகளை கட்டும் தச்சர்கள் உள்ளனர். அகன்ற பெரிய சக்கரங்கள் கொண்ட அவ்வண்டிகள் குழிகளில் விழாமல் ஓடக்கூடியவை. மணலில் புதையாதவை. அப்படி ஒரு வண்டியை ஒருங்கமையுங்கள். இவரை கூட்டிவந்து வண்டியில் ஏற்றுகிறேன்.”

“இவரிடம் கேட்கவேண்டாமா, எங்களுடன் வருவாரா என்று?” என்றான் பூரிசிரவஸ். “கேட்டால் அவர் மறுமொழி சொல்லப்போவதில்லை. சொல்லும் மொழி ஏதும் இவ்வுலகிலுள்ளவையும் அல்ல. இரவிலேயே கொண்டுசெல்லுங்கள்” என்றாள் தேவிகை. “எப்படி செல்வீர்கள்?” “இங்கிருந்து மூலத்தானநகரி வரை மண்ணில். அதன் பின் நீர்வழியாக அசிக்னியின் மலைத்தொடக்கம் வரை. அங்கிருந்து மீண்டும் வண்டியில் பால்ஹிகநகரி வரை…”

“நீண்டபயணம்” என்றாள். “என் வாழ்நாளில் நான் இந்த சிறிய சிபிநாட்டு எல்லையை கடந்ததில்லை. ஆனால் வகைவகையான நிலங்களைத்தான் எப்போதும் கனவுகண்டுகொண்டிருக்கிறேன்.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “நெடுந்தொலைவில் உள்ள நாடொன்றுக்கு அரசியாகச் செல்ல நல்லூழ் அமையட்டும்” என்றான். அவள் உதடுகளை சற்றே வளைத்து சிரித்தாள். அறைக்குள் ஒரு மனிதர் விழித்திருப்பதை பொருட்படுத்தாமல் சிந்தை ஆகிவிட்டிருந்ததை அவன் எண்ணிக்கொண்டான்.

“செல்வோம்” என்று தேவிகை சொன்னாள். அவர்கள் எழுந்ததும் பால்ஹிகர் கூடவே எழுந்து தன் கையில் இருந்த சிறிய சால்வையை சுருட்டியபடி “செல்வோம். இங்கே இனிமேல் மறிமான்கள் வரப்போவதில்லை. பிரஸ்னமலைக்கு அப்பால் சென்று முகாமடிப்போம். அங்கே ஊற்றுநீர் உண்டு” என்றார். பூரிசிரவஸ் திகைத்து அவரை நோக்கினான். அவர் பால்ஹிகமொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன இடங்களெல்லாம் அவன் நன்கறிந்தவை. “பிதாமகரே!” என்றான். “நீ என் வில்லை எடுத்துக்கொண்டு உடன் வா. செல்லும் வழியில் நாம் வாய்திறந்து பேசலாகாது. ஓநாய்கள் நம் ஒலியை கேட்கும்” என்றார்.

தேவிகை “அவர் உங்களை அடையாளம் கண்டுகொண்டாரா?” என்றாள். “இல்லை, அவர் வேறு எவரிடமோ பேசுகிறார்” என்றான் பூரிசிரவஸ். ”அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் மண் இன்று இல்லை.” பால்ஹிகர் சென்று அறைமூலையில் இருந்த பெரிய குடுவையில் இருந்து நீரை அப்படியே தூக்கி முற்றிலும் குடித்துவிட்டு வைத்து தன் பெரும்கைகளில் தசைகள் அசைய உரசிக்கொண்டு “அக்னிதத்தா” என்று அவனை அழைத்து “இதை கையில் வைத்துக்கொள்” என்று அந்தக்குடுவையை சுட்டிக்காட்டினார்.

“அக்னிதத்தன் யார்?” என்றாள் தேவிகை. “பால்ஹிகரின் மைந்தர் சுகேது. அவரது மைந்தர் அக்னிதத்தர். அவரது மைந்தர் தேவதத்தர். தேவதத்தரின் மைந்தர் சோமதத்தரின் மகன் நான்” என்றான். தேவிகை “வியப்புதான்” என்றாள். “இவளும் உடன் வரட்டும். நாம் விரைவிலேயே சென்றுவிடுவோம்” என்றார். பூரிசிரவஸ் “இருக்கட்டும் பிதாமகரே. தாங்கள் சற்று நேரம் அமருங்கள். நான் புரவிகளுடன் வருகிறேன்” என்று திரும்பினான்.

“நில்லுங்கள். இத்தனை தெளிவுடன் இவர் பேசி நான் கேட்டதில்லை. இவரை இப்படியே அழைத்துச்செல்வதே உகந்தது. இல்லையேல் நீங்கள் அகிபீனா அளித்து கூட்டிச்செல்லவேண்டியிருக்கும்” என்றாள் தேவிகை. பால்ஹிகரிடம் “வண்டிகளை மேலே மலைப்பாதையில் நிறுத்தியிருக்கிறோம் பிதாமகரே. உடனே சென்றுவிடுவோம்” என்றாள். அவர் “ஆம், விரைவிலேயே இருண்டுவிடும். இருண்டபின் இது பசித்த ஓநாய்களின் இடம்” என்றபின் தன் போர்வையை எடுத்து தோளிலிட்டபடி நிமிர்ந்த தலையுடன் கிளம்பினார்.

தேவிகை மெல்லியகுரலில் “அவர் அந்த நிலைப்படியை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கடந்ததே இல்லை. எத்தனை சினம் கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நின்றுவிடுவார்” என்றாள். “செல்லுங்கள், உடன் செல்லுங்கள்.” பால்ஹிகர் “என் கோல் எங்கே?” என்றார். “பிதாமகரே” என்றபின் ஓடிச்சென்ற பூரிசிரவஸ் “அதை நான் வைத்திருக்கிறேன். நாம் வண்டிக்கே சென்றுவிடுவோம்” என்றான். திரும்பி “வெளியே இன்னமும் வெளிச்சம் இருக்கிறதே” என்றான்.

“அவரை அந்தப்போர்வையை சுற்றிக்கொள்ளச் செய்யுங்கள்” என்று சொன்னபடி அவள் பின்னால் வந்தாள். பால்ஹிகர் அந்த நிலைப்படி அருகே வந்ததும் நின்று தொங்கிய கழுத்துத் தசைகளை அசைத்தபடி “ஓநாய்களின் ஒலி கேட்கவில்லை…” என்றார். “அவை ஒலியில்லாமல் வருகின்றன. செல்லுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு இருக்கமுடியாது” என்றபடி அவர் நிலைப்படியைக் கடந்து மேலே படிகளில் ஏறினார். அங்கே நின்றிருந்த சேவகன் திகைத்து ஓடி மேலே சென்றான்.

“அது யார் ஓடுவது?” என்றார் பால்ஹிகர் பால்ஹிக மொழியில். “விஸ்வகன்… நம் வண்டியில் புரவிகளைப் பூட்டுவதற்காக ஓடுகிறான்” என்றான் பூரிசிரவஸ். “மேலாடையால் நன்றாக மூடிக்கொள்ளுங்கள் பிதாமகரே. பனி பெய்கிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்றபடி தேவிகை பின்னால் ஓடிவந்தாள். மிகவிரைவாக பால்ஹிகர் மேலேறிச்சென்றார். அவரது உடலின் எடை கால்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. நீளமான கால்களாகையால் அவருடன் செல்ல அவன் ஓடவேண்டியிருந்தது. பால்ஹிகர் தன் போர்வையால் முகத்தையும் உடலையும் நன்கு போர்த்திக்கொண்டார்.

“இந்தவாயில் நேராக அரண்மனை முற்றத்துக்குச் செல்லும். அங்கே ஏதேனும் ஒரு தேரில் கொண்டுசென்று அமரச்செய்யுங்கள்” என்றபடி தேவிகை பின்னால் ஓடிவந்தாள். “நாங்கள் கிளம்ப நேரமாகுமே. உணவு நீர் எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லை.” தேவிகை “தேரிலேறியதுமே அவர் துயின்றுவிடுவார். நீங்கள் புலரியில் கிளம்பலாம்” என்றாள். ”அதற்குள் நான் அனைத்தையும் ஒருங்கமைக்கிறேன்.” பூரிசிரவஸ் “பிதாமகரே, இவ்வழி… நமது தேர்கள் இங்கே நிற்கின்றன” என்றான்.

அவர்கள் இடைநாழியை அடைவதற்குள் அங்குள்ள அத்தனை காவல் வீரர்களும் அறிந்திருந்தார்கள். எதிரே எவரும் வராமல் விலகிக்கொண்டார்கள். தேவிகை உரக்க “பெரிய வில்வண்டியை கொண்டுவந்து நிறுத்துங்கள்” என்று ஆணையிட இருவர் குறுக்குவழியாக ஓடினார்கள். “பால்ஹிகநாட்டு வீரர்களை வண்டியருகே வரச்சொல்லுங்கள்” என்று தேவிகை மீண்டும் ஆணையிட்டாள். அவர்கள் இடைநாழியைக் கடந்து சிறிய கூடத்திற்கு வந்ததும் பால்ஹிகர் போர்வையால் நன்றாக முகத்தை மூடிக்கொண்டு “பனி பெய்கிறதா? இத்தனை வெளிச்சம்?” என்றார்.

பூரிசிரவஸ் “ஆம், வெண்பனி” என்றான். அவர் முகத்தை மறைத்து குனிந்தபடி முற்றத்தை நோக்கி சென்றார். அங்கே பெரிய மூங்கில்விற்கள்மேல் அமரும்படி கட்டப்பட்ட கூண்டுவண்டியை கைகளால் இழுத்து நிறுத்தியிருந்தனர் வீரர்கள். தேவிகை கைகாட்டி அவர்களிடம் விலகும்படி சொன்னாள். அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். “பிதாமகரே, நீங்கள் வண்டிக்குள் அமர்ந்துகொள்ளுங்கள். நான் பொருட்களை மற்ற வண்டிகளில் ஏற்றவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், பனி பெய்கிறது” என்றபடி பால்ஹிகர் ஏறி உள்ளே அமர்ந்துகொண்டார். உள்ளே விரிக்கப்பட்ட மரவுரிமெத்தையில் அவரே படுத்துக்கொண்டார்.

“சற்று ஓய்வெடுங்கள் பிதாமகரே” என்றபின் பூரிசிரவஸ் வெளியே வந்து கூண்டுவண்டியின் மரப்பட்டைக்கதவை மூடினான். தேவிகை மூச்சிரைக்க “இன்னொரு பெரிய வண்டிக்கு சொல்லியிருக்கிறேன். அதில் இறகுச்சேக்கை உண்டு. பாதையின் அதிர்வுகள் உள்ளே செல்லாது” என்றாள். “உங்களுக்கு உலருணவும் நீரும் மற்றபொருட்களும் உடனே வந்துசேரும்.”

”நீ இன்னும் பெரிய அரசை ஆளக்கூடியவள்… ஐயமே இல்லை” என்று பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் சொன்னான். “பெரிய அரசுடன் வருக” என்றாள் தேவிகை. அவன் திடுக்கிட்டு அவள் விழிகளை நோக்கினான். அவள் சிரித்தபடி “ஆம்” என்றபின் புன்னகைத்தாள். “இப்போதே என் அரசு பெரியதுதான். மேலும் பெரிதாக்க முடியும்” என்றான். “பிறகென்ன?” என்றாள். “சொல்கிறேன்…” என்றான்.

அவள் உதடுகளை மடித்தாள். கழுத்தில் நீலநரம்பு புடைத்தது. “இது காத்திருப்பதற்குரிய இடம்… அமைதியானது” என்று தலை குனித்து விழிகளை திருப்பியபடி சொன்னாள். “நெடுநாள் வேண்டியிருக்காது” என்றான். அவள் ஒருமுறை அவனை நோக்கி “நலம் திகழ்க!” என்றபின் உள்ளே செல்ல ஓரடி எடுத்துவைத்து திரும்பி “அரசரிடம் விடைபெற்று செல்லுங்கள்” என்றாள். ஆடை சுழன்று அசைய உள்ளே சென்றாள். அவளுடைய பார்வையை அவள் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதுபோலிருந்தது.

மறுநாள் காலையிலேயே அவர்கள் கிளம்பிவிட்டனர். இரவுக்குள் பயணத்துக்கான அனைத்தும் செய்யப்பட்டன. வண்டிக்குள் ஏறியதுமே பால்ஹிகர் துயின்றுவிட்டார். அவன் அரசரிடம் விடைகொள்ளும்போது விழிதுழாவி அவளை நோக்கினான். பின்னர் அவள் அவன் முன் வரவேயில்லை. கேட்பதற்கும் அவனால் முடியவில்லை. அவளிடம் அந்த இறுதிச் சொற்களை பேசாமலிருந்தால் கேட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டான்.

கிளம்பும்போது விடியலில் நகரம் பரபரப்பாக இருந்தது. தெருவெங்கும் வண்டிகளும் வணிகக்கூச்சல்களும் மக்களும் நெரிந்தனர். வண்டியை பல இடங்களில் அரசச் சேவகர்கள் வந்து வழியெடுத்து முன்னால் அனுப்பவேண்டியிருந்தது. வெயில் எழுவதற்குள் நகரம் மீண்டும் ஒலியடங்கி துயிலத் தொடங்கிவிடும் என்று பூரிசிரவஸ் நினைத்துக்கொண்டான். வண்டிகள் நகரின் சாலையில் இருந்து இறங்கி மலைக்குடைவுப்பாதைக்குள் நுழைந்தபோது திரும்பி நோக்கினான். பந்தங்களின் செவ்வொளியில் பரிமாறி வைக்கப்பட்ட இனிய அப்பங்கள் போல தெரிந்தன சைப்யபுரியின் பாறைமாளிகைகள். செந்நிறமான ஆவி போல சாளரங்களில் இருந்து ஒளி எழுந்தது.

மறுநாள் வெயில் ஏறும்போது அவர்கள் முதல் சோலையை அடைந்திருந்தனர். புரவிகளை அவிழ்க்கும்போது எழுந்து “எந்த இடம்?” என்றார். பூரிசிரவஸ் பால்ஹிகநாட்டில் ஒரு மலைமடிப்பை சொன்னான். அவர் ஏதோ முணுமுணுத்தபடி திரும்பவும் படுத்துக்கொண்டார்.

பூரிசிரவஸ் கூடாரத்திற்கு வெளியே மெல்லிய உலோக ஒலியைக் கேட்டு எழுந்துகொண்டான். சேவகன் அவனுக்கு செம்புக் குடுவையில் சூடான இன்னீருடன் மறுகையில் முகம் கழுவ நீருடன் நின்றிருந்தான். அவன் எழுந்து முகத்தை கைகளால் துடைத்தபடி வந்தான். நீரை வாங்கி முகம் கழுவியபின் இன்னீரை கையில் வாங்கிக்கொண்டு “இன்னமும் அரைநாழிகையில் நாம் இங்கிருந்து கிளம்பவேண்டும்” என்றான். ”இன்று வெளிச்சம் எழுகையில் மூலத்தானநகரி நம் கண்களுக்குப்படவேண்டும். மூன்றுநாட்கள் பிந்தி சென்றுகொண்டிருக்கிறோம்.”

 அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைபதுங்குதல்
அடுத்த கட்டுரைசூரியதிசைப் பயணம் – 8