இந்த தொடர்கட்டுரைகள் வழியாக சில அடிப்படை ஆதாரங்களை அளித்திருக்கிறேன். அந்நிய நிதிக்கொடைகள் உருவாக்கும் அறிவுலகச்செல்வாக்கு பற்றிய என்னுடைய கட்டுரைகளுக்கெல்லாம் பொதுவாக ‘பூச்சாண்டி காட்டுகிறார்’ என்றும் ‘அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு’ என்றும்தான் பதில் சொல்லிவந்திருக்கிறார்கள்
இந்திய உளவுத்துறையே எளிதில் கண்டடையமுடியாத ஆதாரங்களை எழுத்தாளர்கள் சொல்லவேண்டும் என்று வாதிடுவதன் சமாளிப்பை புரிந்துகொள்ள அதிக சிந்தனைவளமெல்லாம் தேவை இல்லை.இங்கே நான் அளித்துள்ளவை குறைந்தபட்ச ஆதாரங்கள். விரிவாக ஆராய விரும்புபவர்கள் இந்த வழியே நெடுந்தூரம் செல்லலாம்
இந்த ஆதாரங்களில் இருந்து தெளிவாகக்கூடியவை சில
1. இந்தியாவிலும் கீழைநாடுகளிலும் அந்நிய நிதிக்கொடைகளின் அறிவுத்தள ஊடுருவல் மற்றும் அழிவுகள் குறித்த செய்திகள் என் அச்சங்களோ ஊகங்களோ அல்ல. அவை இத்துறையின் முன்னோடி அறிஞர்களால் மிக மிக விரிவாக எழுதப்பட்டவை. தகவல்களுடன் விவாதிக்கப்பட்டவை
2 மூலத்தைக் கண்டையடையவே முடியாத அந்நிய அமைப்புகளில் இருந்து சிக்கலான வழிகளினூடாக வரும் நிதி இந்தியாவின் சிந்தனைத்தளத்தில் நுழைந்துகொண்டே இருக்கிறது. தன்னார்வக்குழுக்கள், ஆய்வுகளுக்கான நல்கைகளை அளிக்கும் அமைப்புகள், பல்கலைகழக ஒத்துழைப்புகள், சர்வதேச பண்பாட்டமைப்புகள் என இவற்றின் திசைகள் பல
3 இந்த அந்நிய நிதிக்கொடைகள் வழியாக சில அடிப்படைக் கருத்துக்கள் எங்கோ எவராலோ உருவாக்கப்பட்டு இங்குள்ள அறிவுத்துறைகளில் விதைக்கப்படுகின்றன.
4 கண்ணுக்குத்தெரியாத ஒரு வலையாக இந்த நிதிபெறுபவர்கள் இணைந்து செயல்பட்டு அந்தக் கருத்துக்களை நம் சிந்தனையில் நம்மை அறியாமலேயே நிறுவிவிடுகிறார்கள்
5 அச்சிந்தனைகள் பின்னர் கலைச்சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் எளிமைப்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே சென்று சேர்கின்றன. இவ்வாறாக நம் சிந்தனையையே கட்டுப்படுத்தி கொண்டுசெல்கின்றன. இவற்றைப்பற்றிய பிரக்ஞையே நம்மிடம் இருப்பதில்லை
6.ஊடகங்கள் இந்நிதியமைப்புகளின் நிதிவாங்கியவர்களால் நிறைக்கப்பட்டிருப்பதனால் இந்த தரப்பின் கருத்துத்தளச் செல்வாக்கு அபரிமிதமானது. அவற்றை எதிர்ப்பவர்களை முத்திரைகுத்தி அவதூறுசெய்து ஒழிக்க இவர்களின் கூட்டமைப்பால் எளிதில் முடிகிறது.
7.ஆய்வுகள் என்றபேரில் இவை அளிக்கும் நிதிக்கொடைகள் கீழைநாடுகளின் பண்பாட்டுச்செல்வத்தை ஆராய்வதற்கு அளிக்கப்படுவதில்லை.மாறாக அவர்களின் சமூகப்பிளவுகளை ஆராயவும். சமூக உட்கூறுகளை ஆராயவும்தான் அளிக்கப்படுகின்றன. மேலதிகமாக அவர்களின் பழைமையான அறிவியலையும் வாழ்க்கைக்கூறுகளையும் ஆவணப்படுத்தவும் அளிக்கப்படுகிறது
8.விளைவாக இந்திய அரசுக்கே தெரியாத அளவுக்கு மிகநுட்பமான இந்திய சமூகச்சித்திரம் எங்கோ எவருக்கோ சென்று சேர்கிறது.\
9.அத்துடன் இந்தியாவின் மரபையும் பண்பாட்டையும்பற்றிய எதிர்மறையான கசப்பூட்டும் கருத்துக்கள் இங்கே உருவாக்கப்பட்டு உலகமெங்கும்ம் கொண்டுசெல்லப்படுகின்றன. காலப்போக்கில் இந்த கசப்பு நம் சிந்தனைகளில் முழுமையாகவே பரவி ஒரு வெற்றிகரமாக சமூகமாக கூடிவாழவே முடியாதபடி ஆகிறது. இந்தியா, இந்திய மரபு, இந்தியப்பண்பாடு குறித்த ஆழமான கசப்புகள் இவ்வாறு விளைவிக்கப்படுகின்றன
10 இக்கருத்துக்களை அறிந்து புரிந்துகொள்ள நிதிபெற்ற அமைப்புகள், எழுத்தாளர்கள், அவற்றுக்கு நெருக்கமானவர்கள் ஆகியவர்களை நாம் அறிந்தாகவேண்டியிருக்கிறது
ஜெ
மேலும் இணைப்புகள்
1 Data – Global Go To Think Tank Report 2011
2 Registration of NGOs in India by location, 1970-2008
3 Ford Foundation and Economics Profession
4 NonProfit Institutions in India_GOI Report
7 List_NGO_NotFiledAnnualReturn
===========================================================
குறிப்பிடப்படும் கட்டுரைகள்
ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்
பழைய கட்டுரைகள்
போர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்
சிஐஏவும் ஃபோர்ட் பவுண்டேஷனும் மாற்று ஊடகங்களில் – இன்னொரு கட்டுரை
[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]