‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 15

பகுதி 5 : ஆடிச்சூரியன் – 2

மிருஷை நகுலனின் குழலை மூங்கில்களில் சுற்றி சுழற்றியபடி “அணிகொள்ளுதலைப்பற்றி உங்கள் மூத்தவர் மூவரிடமும் பேசினேன் இளவரசே” என்றார். நகுலன் அவரை நோக்கி விழிகளை தூக்கினான். அவரது மெல்லிய விரல்கள் அவன் தலையில் சிட்டுகள் கூட்டில் எழுந்தமர்ந்து விளையாடுவது போல இயங்கின. அவரது பணிக்கேற்ப அவரது உடல் வளைந்து அவன் உடலில் உரசிக்கொண்டிருந்தது.

மிருஷை “அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்து கொண்டிருந்தனர்” என்றார். நகுலன் புன்னகையுடன் “ஆகவே?” என்றான். “தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” நகுலன் சிரித்துக்கொண்டு “நான் அப்படியெல்லாம் சிந்திப்பதில்லை. பெரும்பாலும் சிந்தனையற்ற விலங்குகளுடன்தான் என் வாழ்க்கை” என்றான்.

“குதிரைகள் அணிசெய்ய விழைந்தால் எதற்காகவிருக்கும்?” என்றாள் கலுஷை. காருஷை சிரித்துக்கொண்டு “அய்யோ, இதென்ன வினா?” என்றாள். “சொல்லுங்கள்” என்றாள் கலுஷை நகுலனின் குழலை தன் கைகளால் அள்ளியபடி. நகுலன் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “இதை நான் குதிரைகளில் கண்டிருக்கிறேன். அக்குலத்தில் ஆண்மையும் விரைவும் மிக்க குதிரை ஒன்றிருக்கும். பிற குதிரைகள் அக்குதிரையின் நடையையும் அசைவுகளையும் பிரதியெடுக்க முயலும்” என்றான். “குறிப்பாக குட்டிக்குதிரைகள்…”

குதிரைகளைப்பற்றி பேசத்தொடங்கியதும் அவனுக்கு சொற்கள் எழுந்தன. “நான் இதைக் கண்டது சாலிஹோத்ரசரஸில். அங்கே ஆக்னேயன் என நான் பெயரிட்டிருந்த ஓர் ஆண்குதிரை எண்பது குதிரைகள் கொண்ட குலமொன்றின் முதல்வனாக இருந்தது. அது தாவும்போது குளம்புகளில் அடிபட்டுவிட்டதனால் அதன் நடை சற்று கோணலாகியது. அக்குலத்தின் இளங்குதிரைகள் அனைத்துக்கும் அந்தக் கோணல்நடை வந்ததை கண்டேன்…”

அவன் ஊக்கத்துடன் குரலை உயர்த்தி “அதில் கூர்ந்து நோக்கும்படி ஒன்று உள்ளது. காலில் அடிபட்டு கோணலாகியதும் ஆக்னேயன் ஆற்றலை இழக்கவில்லை. மேலும் விரைந்தோடி ஆற்றலை பெருக்கிக் கொண்டது. ஆண்மை என்பது குளம்புகளில் இல்லை. தொடைச்சதைகளில் இல்லை. குதிரையின் உள்ளத்தில் உள்ளது என்று அறிந்துகொண்டேன். அந்த தனித்தன்மை அதன் சிறப்பாற்றலாக ஆகியது. அது ஓடுவதைக்கொண்டு அதன் திசையை கணிக்கமுடியாமலாகியது. அந்தத் திறனை அக்குலமே விரைவில் அடைந்தது…”

“ஆம், மானுடர்களாக இருந்தால் அக்குதிரைக்குலம் ஒரு பேரரசை நிறுவ அது ஒன்றே போதிய அடிப்படையாக ஆகும்” என்றார் மிருஷை. கலுஷையும் காருஷையும் கிளுகிளுத்துச் சிரித்தனர். சிரிக்காமல் ”குதிரைகளிலும் அரசுகள் உள்ளன” என்றான் நகுலன். “ஒரு புல்வெளியில் ஒருவகைக் குதிரையே ஆள்கிறது. அது ஒரு தனிக்குலம். பிற குதிரைகள் அவற்றுக்கு ஒதுங்கி வழிவிடுகின்றன. அவை வருகையில் தலைதாழ்த்தி மெல்ல கனைத்து பணிகின்றன. எங்கு குலமென்று ஒன்று உண்டோ அங்கே அரசும் உண்டு.”

“ஆகவே குதிரைகள் அணிசெய்வதென்றால் மேலும் ஆற்றல்கொண்ட குதிரையென தங்களை காட்டிக்கொள்ள விழையும் இல்லையா?” என்றார் மிருஷை. நகுலன் “ஆம், குறிப்பாக ஆற்றல்கொண்ட இன்னொரு குதிரையாக ஆக விரும்பும்” என்றான். மிருஷை “இளவரசே, சமையம் என்பது அதுவே அல்லவா? ஒருவர் தன்னை விடப்பெரிய ஓர் ஆளுமையை தன்மேல் ஏற்றிக்கொள்வதுதானே அது?” என்றார். நகுலன் சிந்தனையுடன் “அதனால் என்ன பயன்? நான் கதாயுதம் எடுத்தேனென்றால் பீமசேனராக ஆகிவிடமுடியுமா என்ன?” என்றான்.

“முடியாது. ஆனால் பீமசேனர் என உங்களை பிறர் எண்ணச்செய்ய முடியும்” என்றார் மிருஷை. ”சொற்கள் ஒலித்ததுமே பொருளாகி எண்ணமாகி நினைவாகி அழிந்துவிடுகின்றன. அணியும் காலத்திலும் வெளியிலும் அவ்வண்ணமே நின்றிருக்கிறது. கலையாது மறையாது. மீண்டும் மீண்டும் அது கண்ணுடன் உரையாடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதுவாக காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை அணியுங்கள். அது உங்களை இடைவெளியில்லாமல் அறிவித்துக்கொண்டே இருக்கும்.”

மிருஷை அவன் குழலை சுருட்டி முடித்து குழல்களின் முனைகளில் சூடான நீராவிக்குழாய்களை பொருத்தினார். மூங்கில்களில் வெம்மை எழத்தொடங்கியது. ”குதிரைகள் என்றாவது தங்கள் வால்களை சுருட்டிவிட விழையுமா என எண்ணிக்கொண்டேன்” என்றான் நகுலன் சிரித்தபடி. மிருஷை “எண்ணச்செய்ய முடிந்தால் எங்களில் ஒரு பிரிவு உருவாகும்” என்றார். “மானுடரன்றி எவ்வுயிரும் அணிசெய்துகொள்வதில்லை” என்றான் நகுலன். “மயிலுக்கும் கிளிக்கும் பருவங்களை ஆக்கும் தெய்வங்கள் அணிசெய்கின்றன” என்றார் மிருஷை.

வாயிலில் சிசிரன் வந்து “இளவரசி திரௌபதி வருகை” என்றான். மிருஷை திகைத்து “இப்போதா? இன்னமும் மாலையே ஆகவில்லை…” என்று சொல்ல “இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சிசிரன். “இங்கா? இங்கே…” என்று மிருஷை இருவரையும் பார்த்தபின் “இங்கே எதற்கு?” என்றார். சிசிரன் புன்னகையுடன் “அணிசெய்வதில் அவரது கைகளும் தேவையென உணரலாம் அல்லவா?” என்றபின் திரும்பிச்சென்றான். ”இங்கு எதற்கு வருகிறார்கள்?” என்று கலுஷை வியந்தாள். காருஷை ”எதற்காக என்றாலும் நமக்கு என்ன?” என்றாள் கழுத்தை நொடித்தபடி. “நாம் பெண்களுக்கு அணிசெய்ய அனுமதிக்கப்படுவதேயில்லை.”

திரௌபதியின் அணிகளின் ஒலி முன்னரே கேட்டது. கைவளைகளின் கிலுக்கத்துடன் அவள் கதவைத்திறந்து உள்ளே வந்தபோது சமையர்கள் மூவரும் நடனம்போல உடல் வளைத்து வணங்கினார்கள். திரௌபதி மிருஷையிடம் “நான் முன்னரே வந்துவிட்டேன் சமையரே… அங்கே அரண்மனையில் இன்று சடங்குகள் என ஏதுமில்லை. தங்களைப்பற்றி அறிந்துள்ளேன். தங்கள் பணியை காணலாமென்ற எண்ணம் வந்தது” என்றபின் அருகே வந்து இடையில் கைவைத்து நகுலனை நோக்கி நின்றாள். “எல்லா பெண்களையும்போல எனக்கு அணிகளை காண்பது பிடிக்கும்.”

மிருஷை “ஆம், அவை மானுட உள்ளத்தின் மிக அழகிய சில தருணங்களை புறப்பொருளில் சமைத்தவை” என்றபின் “ஆண்களின் அணிகள் சற்று வேறானவை இளவரசி” என்றார். “அவற்றில் ஆண்மை இருக்குமோ?” என்றாள் திரௌபதி. “இல்லை, அணிகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. இரு பாலினருமே அவற்றை அணிகிறார்கள். தோள்வளைகள் எவர் அணிந்தாலும் ஆண்மைகொண்டவை. தொடைச்செறிகளும் கச்சைகளும் ஆண்கள். கழலும் கணையாழியும் குழையும் ஆண்களணிந்தாலும் பெண்மையின் குழைவுள்ளவை.”

திரௌபதி புன்னகை செய்தாள். “ஆண்கள் எதற்காக பெண்அணிகளை அணியவேண்டும்?” என்றாள். “இரண்டும் உண்டு இளவரசி. மானுட உடலில் ஆண்மைகொண்ட உறுப்புகள் உண்டு. பெண்மை கொண்ட உறுப்புகளும் உண்டு. ஆணிலானாலும் பெண்ணிலானாலும் தோள்கள் ஆண்மை கொண்டவை. அவற்றை தோள்வளைகளை அணிவித்து மேலும் ஆண்மிடுக்கு கொள்ளச்செய்கிறோம்.” புன்னகையுடன் “ஆனால் கணுக்கால்களும் ஆண்மை கொண்டவையே. அவற்றில் சிலம்பையோ கழலையோ அணிவித்து சற்று பெண்மையை கலக்கிறோம்” என்றார்.

“ஏன்?” என்று அதுவரை இருந்த புன்னகை மறைய கண்கள் சுருங்க திரௌபதி கேட்டாள். “எவர் சொல்ல முடியும்? அதை அறிய மானுடக்காமத்தை முழுதறியவேண்டும்… மானுடவிழிகளில் அழகுணர்வாக திகழும் தெய்வங்கள் ரதியும் மதனும் அல்லவா?” திரௌபதி தலையசைத்து “ஆம்” என்றாள். ”பெண் அணியும் அணிகளிலேயே சரப்பொளி பெண்மைகொண்டது. பதக்கமாலை ஆண்மை கொண்டது. அவை நன்கு சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும் என்கின்றன சமையநூல்கள்” என்றார் மிருஷை.

திரௌபதி நகுலனின் குழல்களை சுற்றியிருந்த மூங்கில்களை அப்போதுதான் கண்டாள். ”அது என்ன குழலில்?” என்றாள். “சுருள்களுக்காக இளவரசி” என்றார் மிருஷை. “தங்கள் குழல் சுருளானது என்பதனால் இதை கண்டிருக்கமாட்டீர்கள்.” திரௌபதி “தேவையில்லை… சுருள்முடி அவருக்கு பொருந்தாது. காகச்சிறகு போன்ற நீள்குழலே அழகு” என்றாள். மிருஷை “அவரது குழல் மென்மையானது, எளிதில் சுருளும். சுருள் நீடிக்கவும் செய்யும்” என்றார். திரௌபதி கையை வீசி “தேவையில்லை. அதை நீள்கற்றைகளாக ஆக்குங்கள்” என்றபடி சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.

நகுலன் அவளை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் ஓரிரு அணிகளே பூண்டிருந்தாள். பட்டாடையின் பொன்னூல் பின்னல்களில் குதிரைகள் ஒன்றை ஒன்று கடந்து தாவிக்கொண்டிருந்தன. நகுலன் “அணிசெய்தலை கற்றிருக்கிறாயா?” என்றான். திரௌபதி “அணிக்கலை அறியாத பெண்கள் உண்டா?” என்றாள். மிருஷை திரௌபதி தன் அணிக்கலையில் தலையிட்டதை விரும்பாதவராக விரைந்து அவன் குழலில் இருந்து மூங்கில்களை எடுத்தபின் நறுமண எண்ணையைப் பூசி தந்தச்சீப்பால் சீவி நீட்டி நேராக்கினார். மெழுகு கலந்த குழம்பை குழலில் பூசி மீண்டும் மீண்டும் சீவியபோது குழல் ஒளியுடன் நீண்டு வந்தது.

“அதை இரு தோள்களிலும் விழும்படி போடுங்கள்” என்றாள் திரௌபதி. ”வகிடு தேவையில்லை. நேராக பின்னால் சீவி…” என்றாள். மிருஷை “ஆணை இளவரசி” என்றார். கலுஷை அவன் கைநகங்களை வெட்ட காருஷை கால்களின் கீழ் அமர்ந்தாள். திரௌபதி அவனையே தன் பெரிய விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் விழிகள் அவள் நோக்கை சந்தித்தபோது அவை தன்னைக் கடந்து நோக்குவதுபோல உணர்ந்தான்.

நறுவெந்நீரால் அவன் உடலை துடைத்து சுண்ணமும் சந்தனப்பொடியும் அணிவித்தனர். “நெற்றியில் மஞ்சள்நிறப்பிறை” என்றாள் திரௌபதி. “ஆணை இளவரசி” என்றார் மிருஷை. அவளே எழுந்து அருகே வந்து “மீசையை இன்னமும் கூராக்கலாமே” என்றாள். “அவரது மீசை மிகவும் மென்மையானது இளவரசி.” அவனை கூர்ந்து நோக்கி பின்பு “தேன்மெழுகிட்டு முறுக்கினால் கூராகுமல்லவா?” என்றாள். ”ஆம், ஆனால்…” என்று மிருஷை தயங்க “செய்யுங்கள்” என்று அவள் ஆணையிட்டாள்.

மிருஷை தலைவணங்கி “இளவரசி… தங்கள் ஆணைப்படி அணிசெய்கிறோம்” என்றதும் அதைப்புரிந்துகொண்ட திரௌபதி திரும்பி நகுலனை நோக்கி புன்னகை புரிந்துவிட்டு வெளியே சென்றாள். மூவரும் தங்கள் சொற்களை முழுமையாக இழந்தவர்கள் போல அணிசெய்கையில் மூழ்கினர். முடிந்ததும் கலுஷை ஆடியை எடுத்துக்காட்டினாள். நகுலன் புன்னகையுடன் தன் முகத்தை நோக்கி “யாரிவன்?” என்றான். “உங்களை விடவும் ஆற்றல் மிக்கவன்…” என்றார் மிருஷை. நகுலன் புன்னகைசெய்தான்.

எழுந்து தன் சால்வையை அணிந்தபடி “நன்றி சமையரே. இனிய சொற்களுக்காகவும்” என்றான். “அணிசெய்துகொண்டவர்களை மூன்றுதேவர்கள் தொடர்கிறார்கள் என்பார்கள். நெளிவின் தேவனாகிய நீர். துடிப்பின் தேவனாகிய எரி. ஒளியின் தேவனாகிய சூரியன். மூவரும் உங்களுடன் இருக்கிறார்கள்” என்றார் மிருஷை.

கூடத்தில் அணிப்பரத்தையரும் சூதர்களும் தரையில் அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டு நகையாடிக்கொண்டிருந்தனர். அவனைக்கண்டதும் ஒரு சூதர் எடுத்து அப்பால் வைத்த யாழ் ‘தண்ண்’ என ஒலித்து வண்டுபோல ரீங்கரித்துக்கொண்டே இருந்தது. அவன் அவர்களைக் கடந்து படி ஏறி மாடியை அடைந்தான்.

கிழக்கு உப்பரிகையில் திரௌபதி பீடத்தில் அமர்ந்து கங்கையை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் நெற்றியின் புரிகுழலின் நிழல் மூக்கின்மேல் ஆடியது. பக்கவாட்டில் அவள் விழிகளிரண்டும் வெளியே பதிந்திருப்பவை போல, இரு பெரிய நீர்க்குமிழிகள் என ஒளியுடன் தெரிந்தன. காலடி ஒலிகேட்டு திரும்பியபோது காதணிகள் கன்னத்தைத் தொட்டு அசைந்தன. அவன் தலைவணங்கியபின் அப்படியே நின்றான்.

திரௌபதி புன்னகையுடன் அவனையே நோக்கி சிலகணங்கள் இருந்தபின் எழுந்து “பாரதத்தின் நிகரற்ற அழகன் என்று உங்களை சூதர்கள் சொல்கிறார்கள்” என்றாள். “அது இமயம் உயர்ந்தது என்று சொல்வதைப்போன்ற சொல்” என்றாள். ”பெருவீரர்கள் எப்படியோ மிதமிஞ்சிய பயிற்சியால் உடலின் சமநிலையை இழந்துவிடுகிறார்கள். உடலின் ஒவ்வொரு உறுப்பும் முழுமைகொண்டவர் நீங்கள்.”

நகுலன் “நான் அரசகுடியில் பிறந்திருக்காவிட்டால் என்னை சூதர்கள் அழகன் என்று சொல்லியிருப்பார்களா?” என்றான். “ஆம், அரசர்களையே சூதர்கள் பாடமுடியும்…” என்றபின் திரௌபதி வாய்விட்டுச் சிரித்து “தாழ்வில்லை, தன்னடக்கத்துடன் இருக்கிறீர்கள்” என்றாள். நகுலன் அவளை அணுகி வந்து பீடத்தில் அமர்ந்தபடி “என்றும் இளையோனாக இருக்கும் நல்லூழ் கொண்டவன் அல்லவா நான்?” என்றான்.

திரௌபதி அவனருகே பீடத்தில் அமர்ந்தபடி “உங்கள் இளையோன் உங்கள் வெண்ணிறப்படிமை போலிருக்கிறார்” என்று சொன்னாள். “வெண்ணிறத்தாலேயே ஒரு படி அழகு குறைந்துவிட்டார்.” நகுலன் “நாங்கள் இரட்டையர்” என்றான். “இளமையில் நான் அவனை நோக்கி திகைத்துக்கொண்டே இருந்தேன். இன்னொரு நான் ஏன் வெண்மையாக இருக்கிறேன் என்று.” திரௌபதி சிரித்து “இரட்டையராக இருப்பதைப்பற்றி என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. என்னைப்போல் இன்னொருவர் என்பதே தாளமுடிவதாக இல்லை” என்றாள்.

“மாறாக இன்னொரு நான் இருக்கிறேன் என்பது ஒரு பெரும் விடுதலை” என்றான் நகுலன். “வெளியே கிளம்பும்போது ஆடியில் நம் படிமையை விட்டுச்செல்வதுபோல. அச்சங்கள் எழும்போது எண்ணிக்கொள்வேன், நான் திரும்பாவிட்டாலும் இன்னொரு நான் இல்லத்தில் உள்ளேன் என்று.” சிரித்து “என்னை இருமுறை கொல்லவேண்டும் என்பதே எனக்களிக்கப்பட்ட பெரும் நல்லூழ் அல்லவா?” என்றான்.

திரௌபதி தன் கையின் வளையல்களை சுழற்றியபடி, “தாங்கள் புரவியியல் கற்றவர் என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். நகுலன் “ஆம், அதை இப்போது பாடல்களில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏழு வருடம் நான் சாலிஹோத்ரரின் குருகுலத்தில் இருந்தேன். அங்கே பெரும்புல்வெளி இருந்தது. அதில் காட்டிலிருந்து குதிரைக்குலங்கள் மேயவரும். அவற்றைக் கண்டு அவற்றின் மொழியையும் வாழ்வையும் கற்றேன். புரவிகளை நன்கறிந்தபின் நானறிந்தவை நூல்களில் உள்ளனவா என்று பார்த்துக்கொண்டேன், அவ்வளவே” என்றான்.

சற்று முன்னால் வந்து முகத்தை மடித்த கைவிரல்கள் மேல் வைத்தபடி “யானைகளில் பிடியே தலைமகள் என்பார்கள்” என்றாள் திரௌபதி. “குதிரைகளிலும் பெண்களே குலத்தை நடத்துகின்றன. ஆண்குதிரைகள் தனியர்கள்” என்றான் நகுலன். “ஒரு புரவியை எப்படி பழக்குவீர்கள்?” என்று அவள் தலைசரித்து கேட்டாள். அவள் உதடுகளின் உள்வளைவின் செம்மையை கன்னவளைவுகளின் ஒளியை மூக்கின்மேல் பரவியிருந்த மெல்லிய வியர்வையை கண்டான். “குதிரைகளைப் பழக்குவதென்பது நம்மை அவை ஏற்கும்படி செய்வதே.”

இடது கன்னத்தின் ஓரம் சற்றே மடிய, “உங்களை அவை ஏன் ஏற்கவேண்டும்?” என்றாள் திரௌபதி. “இளவரசி, குதிரைகள் விரைந்தோட விழைகின்றன. அவற்றின் குளம்புகள், சாட்டைக்கால்கள், நீள்கழுத்து, சுழலும் வால், பறக்கும் குஞ்சிமயிர் அனைத்துமே தெய்வங்கள் உணர்ந்த விரைவு என்பது விலங்குவடிவம் கொண்டு எழுந்தவை. விரைவை அன்றி எதையும் புரவி ஏற்காது. புரவிக்கு அதன் விரைவுக்கு உதவுபவன் நான் என கற்பித்தலையே நான் புரவியணைதல் என்கிறேன்.”

திரௌபதி சிரித்தபோது அவள் வெண்பற்கள் சிவப்பு நிறமான ஈறுகளுடன் வெளித்தெரிந்தன. “புரவியின் மீது மனிதன் ஏறுவது அதன் விரைவைக் கூட்டும் என அதை நம்பவைக்கவேண்டும், இல்லையா?” என்றாள். ”கட்டுப்படுதல் என்பது ஒருவகை விரைவே என அதற்கு சொல்லவேண்டும்…” கண்களில் சிரிப்பு எஞ்சியிருக்க முகம் கூர்மைகொண்டது “அரியகலைதான் அது. ஆனால் இயல்வதே.”

“உண்மையிலேயே புரவியின் மீது ஏறும் மனிதன் அதன் விரைவை கூட்டுகிறான்” என்றான் நகுலன். அவன் சொற்களில் அகவிரைவு குடியேறியது. ”புரவி கட்டற்றது. கடிவாளமில்லாத குட்டிக்குதிரையைப்போல ஆற்றல் நிறைந்த விலங்கு இல்லை. ஆனால் அதனால் ஒரு நாழிகை தொலைவை ஓடிக்கடக்க முடியாது. நுரைதள்ள நின்றுவிடும். ஏனென்றால் அதன் சித்தம் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கும். செல்லும் வழியில் தேவையின்றி துள்ளும். திசைமாறி ஓடும். கடினமான பாதைகளை தெரிவு செய்யும்… நீர் தன் பாதையை தானே வகுக்கும் ஆற்றல் அற்றது என்பார்கள்… குதிரையும் அப்படித்தான்.”

நகுலன் தொடர்ந்தான் “பரிமேல் ஏறும் வீரன் அதன் ஆற்றல்களை தொகுத்து அளித்து அதன் பாதைகளையும் வகுக்கிறான். புரவியின் கண்களுடன் மனிதனின் கண்களும் சேர்ந்துகொள்ள அது அறியும் நிலம் இருமடங்கு ஆகிறது. இளவரசி, காட்டுப்புரவி என்பது வீசியெறியப்பட்ட அம்பு. மானுடன் ஏறிய புரவி வில்லால் தொடுக்கப்பட்ட அம்பு. அதை அப்புரவியே உணரும்படி செய்ய முடியும்.” அவள் அவனை மீண்டும் புன்னகையுடன் நோக்கி “ஆனால் புரவிகளை அடித்தும் வதைத்தும் சேணமேற்கச் செய்வதையே நான் கண்டிருக்கிறேன்” என்றாள்.

“ஆம், அதைத்தான் பெரும்பாலும் செய்கிறார்கள். ஏனென்றால் குதிரைகள் கூட்டமாக வாழ்பவை. உடனுறை குலத்தை அவை உடலாலேயே அறிகின்றன. குதிரையின் உடலையே ஒரு பெரிய விழி என்று சொல்லலாம். விழிபோல அது எப்போதும் மெல்லிய துடிப்புடன் அசைந்து கொண்டிருக்கிறது. மிகமிக நுண்ணுணர்வுகொண்டது. அதற்கு மானுடன் முற்றிலும் அயலவன். அவன் தொடுகை அதை நடுங்கச் செய்கிறது. இளவரசி, கண்கள் மட்டும்தான் நாம் கைநீட்டும்போது தொடுவதற்குள்ளேயே அதிர்ந்து தொடுகையை உணர்பவை. இளம்குதிரையை தொட கைநீட்டும்போது கண்போல அதன் உடல் அதிர்வதை காணமுடியும்.”

நகுலன் தொடர்ந்தான் ”காட்டில் புரவியின் முதுகின்மேல் பாய்ந்தேறுவது வேங்கை மட்டுமே. அத்தனை புரவிகளும் தங்கள் முதுகின்மேல் வேங்கையின் நகங்களைப்பற்றிய அச்சத்தை பூசிக் கொண்டிருக்கின்றன. சிறிய ஒலியிலும் அசைவிலும் வேங்கையால் கிழிக்கப்பட்ட மூதாதைப்புரவிகள் அவற்றின் முதுகுகளை சிலிர்க்கச்செய்கின்றன. மேயும் காட்டுக்குதிரை அருகே ஒளிந்து நின்று ஒருமுறை கைசொடுக்கிநோக்கினால் இதை அறியலாம். அதன் முதுகில் வேங்கையெனும் எண்ணம் ஒருமுறை பாய்ந்துவிட்டிருக்கும். சிலிர்த்து கனைத்தபடி அது சில அடிகள் முன்னால் செல்லும்.”

“ஆகவே மானுடன் ஏறும்போது குதிரை வெருள்கிறது. பின்னர் கூருகிர்கள் அற்ற எளிய மானுடன் அவன் என அறிகையில் சினம் கொள்கிறது. தான் கட்டுப்படுத்தப்படுவதாக எண்ணுகிறது. வெல்லப்படுவதாக உணர்ந்து சீற்றம் கொள்கிறது. இளம்புரவியின் சீற்றம் எளியதல்ல. அதை தேர்ச்சியற்றவர் எதிர்கொண்டால் அக்கணமே கழுத்து முறிந்து உயிர்துறக்கவேண்டியிருக்கும்” நகுலன் சொன்னான். “யானைக்கும் காட்டெருதுக்கும் குதிரைக்கும் மட்டுமே கொலையின் இன்பம் தெரியும் இளவரசி. ஏனென்றால் அவை கொல்வதற்காகவே கொல்பவை. உண்ணும் சுவை அறியாதவை.”

“ஆகவே புரவியின் கொலைவிருப்பு மிக நுட்பமானது. அதை உணர்வதே புரவியியலின் உச்சஅறிதல்” என்றான் நகுலன். “புரவி தன் கொலைவிருப்பை தானே அறியாமல் தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது. தேன்துளிபோல, பாலாடைபோல ஒளிவிடும் இந்த உயிருக்குள் அப்படி ஓர் விருப்பு உண்டு என எவரும் எண்ணமாட்டார். விலங்குகளில் புரவியே தளிர். கொலை எனச் சொல்லும் எதுவும் அதன் உடலில் இல்லை. உகிர்கள், பற்கள், ஏன் கொம்புகள் கூட. புரவியின் கண்கள் மானுக்குரியவை. ஆண்புரவியில்கூட எப்போதுமுள்ள உணர்வென்பது கன்னியின் மிரட்சியே.”

“புரவி கொல்வதில்லை. அதனுள் வாழும் அந்த அறியாவிழைவின் தெய்வம் அதைவிட்டு எழுந்து அக்கொலையை நிகழ்த்துகிறது. புரவி கொல்வதை பதினெட்டுமுறை கண்டிருக்கிறேன். படகு என அலைக்கழியும். மீன் என வழுக்கி அது விலகும். அலையென தூக்கி சுழற்றிவீசும். எப்போதுமே அஞ்சி விலகிச்செல்வது என்றே தன்னை அமைத்துக்கொள்ளும். ஆனால் அம்மனிதன் கழுத்து எலும்பு ஒடியும் ஒலியுடன் மண்ணில் விழுவான். முதுகுவடம் உடைந்து ஒடிந்து அதிர்ந்து அமைவான்.”

“கொன்றபின் குதிரை என்ன நிகழ்ந்தது என உணராமல் சுழன்று வால் குலைத்து பிடரி உலைத்து நின்று அறியா பெருவிழிகளை உருட்டி நோக்கும். குனிந்து முகர்ந்து மூச்சுவிடும். துயர்கொண்டு தோலை சிலிர்க்கும். காதுகளை கூப்பி கரியவிழிகள் மருண்டு சுழல மெல்ல கனைக்கும். என்ன நிகழ்ந்தது என நாம் அதற்கு சொல்லவேண்டுமென எண்ணி நம்மை நோக்கும். இளவரசி, அப்போது நாமறிவோம். புரவியைப்போல இரக்கமற்ற கொடிய விலங்கை தெய்வங்கள் படைக்கவில்லை. உகிர்பரப்பி அறைந்து தலைபிளந்து குருதிகுடிக்கும் சிம்மமும் எளியதே.”

“கொன்றபின்னரும் புரவி குருதிமணம் அற்றதாகவே இருக்கும்” என்றான் நகுலன். “புரவியியலாளனுக்கு குதிரையின் மணமே இனியது. சாரல்மழைபெய்த புல்வெளி என மெல்லிய ரோமப்பரப்பில் ஊறி உருண்டு சொட்டும் வியர்வைத்துளிகளின் மணம். கடைவாயில் வெண்நுரையாக வழியும் எச்சிலின் மணம் நம் கனவுகளுக்குள் புகுவது. அதை யானைமதத்தின் மணத்துடன் ஒப்பிடுவார்கள். குருதியின் மணம் போன்றது அது. குருதியின் உப்பும் அனலும் அதில் இல்லை. கனிந்து பழுத்த குருதி அது.”

“குதிரை கொலைவிலங்கு என அறிந்த புரவியாளன் அதன் அழகைக் கண்டு அதை கள்ளமற்றது என்று எண்ணுவதை கடந்தவன். கட்டற்று துள்ளும் குதிரைக்குட்டி ஒரு கன்று அல்ல. மான் அல்ல. சிம்மக்குருளை கூட அல்ல. அது பிறிதொன்று. நஞ்சுமுனைகொண்ட அம்பு. அறம்பாடப்பட்ட சுவடி. ஆனால் பேரழகு கொண்டது. அதை வென்றவனின் ஆற்றல் வாய்ந்த படைக்கலம்” என்றான் நகுலன். “ஆகவே கட்டற்று துள்ளும் புரவியை வெல்ல எளிய வழி என்பது அதை வல்லமையால் அடக்குவதே.”

“வேங்கையால் பாய்ந்து பற்றப்பட்ட புரவி காட்டில் கனைத்தபடி விரைந்தோடும். ஓடி ஓடி ஓர் எல்லையில் அது அறியும் வேங்கையின் வல்லமை பெரிதென்று. அக்கணத்தில் அதன் கால் தளரத்தொடங்கும். அது தன்னை வேங்கையின் பசிக்குமுன் படைக்கும். புரவியை பழக்குபவர்கள் வேங்கைநகத்தை படைக்கலமாக கொண்டிருப்பார்கள். இரும்புத் துரட்டியின் கூர்முனையால் துளைக்கப்பட்டு கனைத்துக்கொண்டே குதிரை கால்தளரும்போது புரவியாளன் வெல்லத்தொடங்குகிறான். புரவியாளனின் அறைகூவல் என்பது அக்கணம் வரை அதன்மேல் இருந்துவிடுவதே… அவனால் அவன் வெல்லத்தொடங்கும் அக்கணத்தை உணரமுடியும். அவன் தன் வாழ்நாளில் உணரும் பெரும் இன்பம் அதுவே.”

நகுலன் அவளிடம் பேசவில்லை. ஒவ்வொரு அறிதலும் இன்னொன்றை காட்ட தன் சொற்களாலேயே இழுக்கப்பட்டு சென்றான். அவன் சொல்லிக்கொண்டிருந்ததை அப்போதுதான் அவன் அறிந்துகொண்டான். “குதிரை முதலில் தன்னை அவனுக்கு அளிக்கிறது. முழுமையாக பணிந்து நின்றுவிடுகிறது. அதன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்கும். அதன் வாயிலிருந்து வழிந்த நுரைதெறித்து அவன் உடலெங்கும் மதநீரின் மணம் நிறைந்திருக்கும். என்னை கொன்று உண் என்று அது அவனிடம் சொல்லும்.”

“அப்போது அவன் கனிந்து அதனிடம் சொல்கிறான், நான் உன்னை வெல்லவில்லை. உன் ஆணவத்தை அவமதிக்கவுமில்லை. உன்னை என்னுடன் இணைத்துக்கொள்கிறேன். நீ என் உடலாக நான் உன் உடலாக ஆகப்போகிறோம். நான் எளிய கால்கள் கொண்ட மானுடன். நீ மலைக்காற்றுகளை குளம்புகளாகக் கொண்டவள். உன் கால்களை எனக்குக் கொடு. என் கண்களை நான் உனக்கு அளிக்கிறேன். நான்கு கால்களும் இரண்டு கைகளும் இரண்டு தலைகளும் கொண்ட வெல்லமுடியாத இவ்விலங்கை தெய்வங்கள் படைக்கவில்லை. ஆனால் தெய்வங்களனைத்தும் விரும்புவது இது என்கிறான்.”

“அது அவனுடன் இணைந்துகொள்கிறது. என்றோ மானுடவரலாற்றின் ஏதோ ஒரு மகத்தான தருணத்தில் நிகழ்ந்த இணைவு அது. ஒவ்வொரு முறை அது நிகழும்போதும் அந்த படைப்புவிந்தை மீண்டும் வெளிப்படுகிறது” என்றான் நகுலன். “புரவியின் உடல் மானுடனை அறியும் கணம் போல ஒருபோதும் சொல்லிவிடமுடியாத மந்தணம் வேறில்லை. அது ஒரு யோகம். இரண்டின்மை. சொல்லுக்கு அப்பால் உடல்கள் ஒன்றை ஒன்று அறிகின்றன. இரண்டு உள்ளங்களும் திகைத்து விலகி நின்றிருக்கின்றன. மிகச்சிறந்த புரவியூர்தலுக்குப் பின் மானுடன் ஒருபோதும் இப்புவியில் தன்னை தனியனென்று உணரமாட்டான்.”

திரௌபதியின் விழிகள் அவன் மேல் நிலைத்திருந்தன. அவற்றின் இருபக்கக் கூர்முனைகள் மையிடப்பட்டு கருங்கரடியின் நகங்கள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டான். பெருமூச்சுடன் அவள் கலைந்து “நாளை உங்களுடன் குதிரையில்லம் செல்ல விழைகிறேன்…” என்றாள். ”ஆம், செல்வோம்” என்றான். அவள் எழுந்தபோது மேலாடை சரிந்தது. மெல்ல அதை எடுத்து தன் முலைகள் மேல் போட்டபடி அவன் விழிகளை நோக்கினாள். அவற்றுக்குள் தொலைதூரத்துப் பறத்தல் ஒன்றின் நிழல் என ஓர் அசைவு தெரிய அவன் எழுந்து கைகள் பதைக்க நின்றான்.

அவள் புன்னகைத்ததும் அவன் அவளை அணுகி இடையை சேர்த்து பற்றிக்கொண்டான். அவள் தன் கைகளால் அவனை சுற்றி அணைத்து முகத்தருகே முகம்தூக்கி “நான் முதல்பெண் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றபின் அவன் குனிய அவன் மூச்சுக்காற்றில் அவள் நெற்றியின் ஒற்றைக்குழல் அசைந்தது. “இன்று நானும் புதியவளே” என்றாள். அவன் அவள் கன்னத்தை மிக மென்மையாக தடவி புன்னகைத்தான். பின் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

அவள் தோள்வளைவில் அவன் முகம் பொருந்தியது. அவன் காதுகளில் மெல்லிய குரலில் அவள் கேட்டாள் “நீங்கள் எப்படி புரவியை பழக்குவீர்கள்?” நகுலன் “புரவிக்குப் பிடித்த ஒரு நடிப்பை அளிப்பேன். அதைவிட எளிய புரவியென அதன் முன் நிற்பேன். உடலால் அசைவால் மணத்தால் புரவியென்றே ஆவேன். அது என்னை வெல்லும்போது அதன் தயக்கங்கள் மறையும். அந்த அணுக்கத்தில் அதன் நெஞ்சில் நுழைவேன். பின் அதன் முதுகை ஆளுவேன்” என்றான். அவள் அவன் காதில் சிட்டுக்குருவியின் ஒலி என மெல்ல சிரித்து காதுமடலை கடித்தாள். அவன் அவளை அள்ளி தன் கைகளில் எடுத்துக்கொண்டான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைமங்கோலியாவின் பவதத்தர்