«

»


Print this Post

ஆறு தரிசனங்கள்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..
 
நலமா..
 
இந்து மரபில் ஆறு தரிசனங்கள்  என்ற புத்தம் குறித்தி, உங்களிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்… குறிப்பாக, திருக்குறள் பற்றி … 
 
 
புத்தகம் பற்றி என் கருத்து..இதோ
 
அன்புடன்,
ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்

தங்கள் கருத்துரை கண்டேன். தத்துவார்த்தமான விவாதங்களுக்கு ஒரு செறிவான மொழி தேவைப்படுகிறது. கூடுமானவரை எளிமையாக எழுதப்பட்ட நூல்தான் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள். படிமங்கள் போன்ற சொல்லாட்சிகள் ஏற்கனவே தமிழில் வேரூன்றிவிட்டவை அல்லவா?

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்து மரபில் ஆறு தரிசங்கள் படித்தேன்…. ( கிழக்கு வெளியீடு) … சில கேள்விகள்…

அஜீவக மரபு, நம் செயல்கள் மூலம் நிகழ்சிகளை மாற்ற முடியாது என சொல்வதாக எழுதி உள்ளீர்கள்…

ஊழையும் உப்பக்கம் காண்பர் என திருவள்ளுவர் சொல்வது, நம் செயல் மூலம் , நியதியை மாற்றலாம் என பொருள் தருகிறதே… அவரை எப்படி அஜீவகர் என்கிறீர்கள்..? சில குரல்கள் மூலம் விளக்கவும்…

தமிழ் நாடு சித்தர் மரபு , இந்து மரபில் இருந்து வேறுபட்டதா… அவர்களின் தரிசனம் என்ன?

107 ம பக்கத்தில், மூன்றாவது பாரா…. ” இதை நாம் விஷ்ணு புறம் நாவலில்…..” என்று ஆரம்பித்து… ” மரபு கேட்டது ” என முடிகிறது…. வாக்கியம் சரியாக புரியவில்லை….

regards,

Ravi

அன்புள்ள ரவி

உங்கள் வினாக்களுக்கு நூலிலேயே பதில்கள் உள்ளன என்று நினைக்கிறேன்.

திருவள்ளுவர் சமணராக அல்லது ஆஜீவகாரக இருக்கலாம் என்பது பரவலான ஓர் ஊகம். ஆனால் தமிழகத்தில் சமணம் ஆசீவகம் பௌத்தம் போன்ற மதங்கள் எவையுமே அவற்றின் ‘தூய’ வடிவில் நீடிக்கவில்லை. அவை இங்குள்ள எல்லா பண்பாடுகளுடனும் தொடர்ச்சியான விவாதத்தில் ஈடுபட்டன. இங்குள்ள பண்பாட்டுக்கூறுகளை உள்ளிழுத்துக்கொண்டன. ஆகவேதான் திருத்தக்க தேவர் என்ற சம்ண முனி இன்பச்சுவை நிறைந்த சீவக சிந்தாமணியை எழுதினார். குறளில் இன்பத்துப்பால் இருக்கிறது

சிலப்பதிகாரமே சான்று. அதில் எல்லாமதங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரே இடத்தில் இருப்பதை நாம் காண்கிறோம். கோவலன் அருகனையும் புத்தரையும் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கிவிட்டு மதுரைக்குக் கிளம்புகிறான். ஊழையும் உப்பக்கம் காணலாம் என்பதில் உள்ள உம் தான் முக்கியமானது.

சித்தர் மரபு என்று வரையறுக்கப்பட்ட ஒன்று முன்பே இருந்ததில்லை. அது ஒரு வாய்மொழி நம்பிக்கை. 18 சித்தர் பாடல்கள் என்ற நூல் 20 ஆம் நூற்றாண்டில் மாம்பழ கவிசிங்கராயர் போன்றவர்களின் உதவியால் ரத்தினநாயகர் ஆன்ட் சன்ஸ் போன்ற பதிப்பகத்தாரால் உருவாக்கப்பட்டது.

சித்தர் மரபு என்பதற்கு இரண்டு ஊற்றுமுகங்கள். ஒன்று சமணர்களின் திகம்பர துறவிகளின் மரபு. இன்னொன்று சைவ தாந்த்ரீக மதங்களான காலாமுகம் காபாலிகம் போன்ற மரபுகள். இரு ஊற்றுக்கண்களில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவாகி வந்த ஒரு மரபுதான் சித்தர் மரபு. கிட்டத்தட்ட இதற்கு இணையான மரபு கர்நாடகத்தில் உள்ள வீரசைவ மரபாகும்

சந்தேகமென்ன, அவை இந்து மதத்தின் உட் கூறுகளே. இப்படி ஒன்றில் இருந்து ஒன்றாக முளைக்கும் பலநூறு ஞானவழிகளின் ஒட்டுமொத்த்தமே இந்து மதம் என்பது. அதிலும் தமிழ் சித்தர் மரபு என்பது சைவத்தின் வளமான ஒரு கூறுமட்டுமே

அது ஓர் அச்சுப்பிழை. திருத்திக்கொள்கிறோம்

ஜெ 

தொடர்புடைய பதிவுகள்

 • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/7085

4 comments

Skip to comment form

 1. gomathi sankar

  நீங்கள் சித்தர் மரபை மிக எளிமைப் படுத்தி புரிந்துகொள்கிறீர்கள் என்று தோன்றுகிறது மரபான ஹிந்து மதத்துக்கும் சைவத்துக்கும் சித்த மரபுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன சமணம் ஆசீவகம் போல சித்தர்கள் துறவை வலியுறுத்தவில்லை [பட்டினத்தார் சிவவாக்கியர் போன்றவர்களையும் சித்தர் வரிசையில் வைத்துவிட்டதால் ஏற்பட்ட குழப்பம் இது ]இன்றைய தமிழ் மருத்துவம் முழுக்க முழுக்க சித்த மருத்துவமே [நிறைய ஆதுர சாலைகள் வைத்திருந்த மருத்துவத்தை ஒரு தர்மமாக வைத்திருந்த பௌத்தர்கள் எழுதிய ஒரு மருத்துவ நூல் கூட தமிழில் இன்று புழக்கத்தில் ஏன் இல்லை என்பது ஆய்வுக்கு உரியது] சித்தர்கள் பலர் சிவனை முதன்மையாக கொண்டனர் என்பது முழு உண்மையில்லை போகர் தன நூலில் சிவன் விஷ்ணு போன்றவர்கள் மனிதர்களே என்றும் குறிப்பிடுகிறார் [போகர் சீனர் ]யாக்கோபு தேவர் போன்று இஸ்லாமியர்களும் உண்டு சித்தமரபுக்கு இணையான மரபு வட இந்தியாவில் இருக்கும் நாத மரபே அதற்கு நீண்ட வரலாறு உண்டு இரத்தின நாயக்கர் தான் மட்டு வாகடம் பற்றியும் பற்றியும் பதிப்பித்தார் ஆனால் அதற்கு முன்பு மாட்டு வாகடம் பற்றி தமிழில் தனி சிந்தனை ஒன்றும் இல்லை அது மனித மருத்துவத்தின் ஒரு கூறுதான் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு மாடுகளுக்கு தமிழ்நாட்டில் வைத்தியமே செய்ததில்லை என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன் [நகைச்சுவை]

 2. gomathi sankar

  மேலும் நமக்குள் இருக்கும் பழங்குடி மனம் சித்தர்கள் போன்ற அதிமானுடர்களை நம்ப விரும்புகிறது அதனால்தான் சித்தர்கள் இருக்கிறார்கள் என்றும் நீங்கள் சொல்வீர்கள் எனவும் எதிர்பார்க்கிறேன் சித்தர்கள் நீங்கள் இன்று பெரிதும் எதிர்க்கும் குண்டலினி இயற்கைக்கு மாறான சித்துக்கள் போன்ற கருதுகோள்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்ற உண்மை உங்கள் நிலைப்பாட்டை பாதித்திருக்காது எனவும் நான் நம்பவே விரும்புகிறேன்[இதுவும் நகைச்சுவைதான் தலைவா ]

 3. gomathi sankar

  ஞானம் வேண்டும் எனில் மலைக்குப் போ என்பார்கள் ஏசு முஹம்மது ரமணர் எல்லாரும் மலைக்கு வந்துதான் ஞானம் பெற்றார்கள் ஆனால் நீங்கள் ரிஷிகேஷ் வந்தும் ‘சித்த’ தெளிவு வரவில்லை எனில் என்ன செய்வது ஆனால் இந்த மாதிரி கூட்டமாக வரக் கூடாது ஞானத்தின் வழி இடுகலானது மட்டுமல்ல தனிமையானதும் கூட என்பது தெரியாதா ஆகவே கடைத்தேறும் கடைசி வாய்ப்பாக நீங்கள் மட்டும் தனியாக [குறிப்பாக அந்த கல்பற்றா வேண்டாம் மலையாளிகள் எல்லாம் கம்யுனிஸ்ட்கள் என அறிவீர்கள் தானே ]ரிஷிகேஷ் மேலே பத்து கல் தொலைவில் எங்கள் ஆஸ்ரமம் உள்ளது அங்கு வரவும் அன்பளிப்புகள் மறுப்பதில்லை கிரெடிட் கார்டுகள் மதிக்கப் படும் paypal மதிப்பது இல்லை

 4. kothand33

  யோக்ஸ்ய ப்ரதம்ம் த்வாரம் வாங் நிரோதஹம்,
  அபரிக்ரஹம், நிராஷாச, நிரீசாச,
  நித்ய யேகாந்த சைலத: (ஹ)
  ” விவெக சூடமணி ” ஆதி சங்கரர்
  பாடலின் பொருள்:
  யோகத்தின் முதல் வாயில் நாவடக்கம்,
  பிறர்பொருள்பரிக்காமை, எதிர்பார்ப்புகள் ஒதுக்குதள், ஆசை விடுத்தல்,
  நித்தியமும் தனித்து இயங்குதல்.

  நியமமம், நேம்ம் மட்டுமன்றி, “தனித்து இயங்குதல்” சங்கர்ரால் வலியுறுத்தப்படுகிறது. நாவடக்கமும் இன்றியமையாதது.
  கோமதி சங்கர் அவர்கள் இதனையே சுட்டுகிறார்.
  வி.கோதண்ட ராமன்

  பி.கு. : ஆறு தரிசன்னங்கள் எவை எனக்குறிப்பிட்டால் வாசகர்களுக்கு ஏதுவாக இருக்கும்

Comments have been disabled.