அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் ..நீண்ட நாட்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன் .. நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் .. விஷ்ணுபுரம் விழாவிற்கு வர எண்ணி கடைசி நேரத்தில் வேலை நிமித்தமாக மும்பை வரவேண்டியதிருந்ததால் வாய்ப்பை தவற விட்டேன் ..,மேலும் சென்னையில் நடக்கவிருக்கும் பூமணி பாராட்டு விழாவையும், சந்திப்பையும் தவற விட வேண்டியுள்ளது ..
தங்களின் நவீன அடிமை முறை பதிவையும் பார்த்தவுடன் இக்கடிதத்தை எழுதி அனுப்ப நினைத்தேன். வேலை பளுவால் எழுத நேரம் எடுத்ததால் விட்டு போன கடிதம், பிரச்சினை இன்னும் ஊடகங்களில் விவாதிக்கபட்டு வருவதாலும் தங்கள் தளத்திலும் கடிதங்கள் வந்தபடி இருப்பதாலும், எழுதி அனுப்புகிறேன். மென்பொருள் சேவை துறையில் ஏறக்குறைய 25 வருடங்கள் இருப்பதில் இருந்து உருவாகி வந்த எனது தனிப்பட்ட கருத்து இது
கடிதம் மிக நீண்டதாக வந்து விட்டது! பொறுத்து கொள்ளவும் .. பிரச்சினையின் பின்னணியையும் , மாற்று கருத்துகளையும் எண்ணி பார்த்ததில் விரிவாகி விட்டது .. புரிகின்றபடி உள்ளதா என்று ஐயம்.. .. தங்கள் எண்ணங்களையும் , இந்த நோக்கில் உள்ள குறை / நிறைகளை அறிய ஆவல் .. இப்போதைய பிரச்சினை பற்றி மட்டுமே தவிர ஒட்டுமொத்த மென்பொருள் சேவை துறை பற்றி இல்லை இக்கடிதம் .. அதை எதை விட பெரிய கடிதமாகவே எழுதலாம்…
ஊடகங்களில் கூறப்படுவது போல் பணி நீக்கம் செய்யபடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இல்லை என்றே நான் எண்ணுகின்றேன் .. இது வெறும் வதந்தியினால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட எண்ணிக்கை மட்டுமே ..பிரயாகையில் வரும் விதுரர் பற்றிய அவதூறு புகைந்து பெரிதானது போல தான் இதுவும்!!
கண்டிப்பாக சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் ஒரு ஊழியரை திடீரென்று வேலை நீக்கம் செய்வது அந்த ஊழியர் நிலையில் இருந்து பார்க்கும் போது மிக மிக கஷ்டத்தை தரும் ஒன்று … தான் இருக்கும் வேலை நிலைத்து இருக்கும் என்ற நம்பிக்கையில் பலர் அப்போது தான் திருமணம் செய்து இருப்பார் , வங்கியிலோ வெளியிலோ பல உடன்படிக்கைகள், வாக்குகள் என முழுவதுமாக கட்டுபட்டிருப்பார் .. இப்போது அத்தனை கட்டுக்களுக்கும் அவர்கள் ஒரு மாற்று வழி உடனே செய்தாக வேண்டும் … சற்றும் நினைத்துப்பார்க்காத அதிர்ச்சியில் இருந்து மீளவதற்கு முன்னே இதை அவர்கள் செய்ய வேண்டும் .. மிகவும் வருந்தத்தக்க நிலைமை இது…
அதே சமயம் , இந்த துறையில் பல வருடங்களாக இருப்பதால் இதை நான் இன்னொரு கோணத்தில் பார்க்க விழைகிறேன் .. மென்பொருள் நிறுவனங்கள் 1995 2000 ஆண்டுகள் வாக்கில் அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தன .. இரு வகை வளர்ச்சிகள்
– இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி
– அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறியலாளர்களின் தேவை வளர்ச்சி
இந்த இரு வகை வளர்ச்சிகளிலும் ஊழியரை உபயோகிக்கும் முறை மாறினாலும், அடிப்படையில் இரண்டுமே தனியார்மய , முதலாளித்துவ உலகின் இரண்டு முகங்களாகவே இருந்தன என்று நினைக்கின்றேன்.
அமெரிக்காவில் வேலைக்கு சென்ற இந்திய பொறியாளர்கள் யாவரும் நேரடியாக அமெரிக்க நிறுவனங்களில் , அங்கு வாழும் அமெரிக்கர்களின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்பவர்கள் (இப்போதும் இந்த வகை ஊழியர்கள் அமெரிக்காவில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் தான் ..). இவர்களுக்கு அமெரிக்காவில் வேலை நிரந்தரம் இல்லை என்றே எண்ணுகின்றேன்.. அமெரிக்க நிறுவன வழக்கமான வேலை குறைப்பு நேரங்களில் , முக்கியமான பணியிலோ , முக்கியமான திறமை இல்லாமல் இருந்தால் வேலை இழக்க வாய்ப்புகள் அதிகம்.
முதல் வகையான இந்திய நிறுவனங்கள் வேலை நடத்தும் விதம் வேறு மாதிரி .. ஆங்கிலத்தில் பிரமிட் மாடல் என்று கூறப்படும் பண்பு கொண்ட ஊழியர் குழு அமைப்பின் மூலம் அதே அமெரிக்க நிறுவனங்களின் வேலைகளை முடித்து கொடுப்பார்கள். இப்படி பட்ட நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களான அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சிறு சிறு வேலைகளாக தருவிக்காமல் வேலைகளை கூட்டி இந்தியாவில் ஒரு பெரிய ஊழிய குழு செய்யக்கூடிய அளவிற்கு வேலை தருவித்து தனது பிரமிட் குழு அமைப்பின் மூலம் முடித்து கொடுக்கின்றன. இவர்களின் பிரமிட் அமைப்பு , ஒரு அனுபவ , திறமை அடிபடையில் வகுக்கப்படும், வெவேறு படிநிலைகள் கொண்டதாக வடிவமைக்கப்படும்.
இந்த வகை வேலை அமைப்பில் அனுபவம் மிக்க ஊழியர்கள் அநேகமாக மேலாண்மை , மேற்பார்வையாளர்களாக இருப்பார்கள். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் அடிநிலை நிரலாக்க வேலையிலும், அனுபவம் கூட கூட , நிரலாக்கத்தில் இருந்து முன்னேறி விவர குறிப்பு , வடிவாக்கம் ஆகிய தளங்களில் நுழைந்து அதே நேரம் புதிதாக வரும் நிரலாக்க ஊழியர்களை மேலாண்மை செய்யும் வேளையிலும் ஈடுபடுவர்…இதுவே இவர்களின் பணிநிலை முன்னேற்றம் எனப்படுகிறது..
ஆக, அடிநிலை ஊழியர் 10 பேருக்கு , மேலாளர் எனப்டுபவர் ஒன்றோ , இரண்டோ பேர் தான் தேவை .இருக்கும்.. மென்பொருள் நிறுவனங்களின் அமெரிக்க, ஐரோப்பிய , பிற நாட்டு வாடிக்கையாளர்கள் கூடும் போது கூடுதல் வேலைகள் வரும் , அதனால் கூடுதாலான மேலாளர்கள் தேவை படுவர் .. ஆதலால் நிறுவன வளர்ச்சியின் போது 10 பேரில் 2 பேர் தான் முன்னேறுவார்கள் என்றில்லை…
10 பேரில் யார் மேல் வருவார்கள் என்பதை நிர்ணயிக்க ஒரு முக்கியமான துலாக்கோல் ஊழியர்களின் வேலை திறமையும் , அவர்கள் எந்த அளவுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுத்து உள்ளனர், புதிதாக வரும் தொழில் நுட்பங்களை கற்கும் திறன், தன்முயற்சி எடுத்து கொள்ளும் திறன் , தாங்கள் செய்யும் வேளைகளில் எந்த அளவுக்கு மாறுதலையோ , புதுமயையோ புகுத்தி நிறுவனத்தின் குறிக்கோளை அடைய செய்கிறார்கள் என்பவை கருத்தில் கொள்ளப்படும் ..இதை வருடா வருடம் செயல்திறன் மதிப்பிடுதல் எனும் செயல்முறை மூலம் நிர்ணயிகின்றன நிறுவனங்கள்.
மொத்தத்தில் நிறுவனங்கள் எந்த ஊழியர்கள் எல்லாம் தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்களோ , தங்களின் திறமைகளின், தொழில்நுட்ப ஞானத்தின் எல்லைகளை விரித்துக் கொள்கிறார்களோ அவர்களை ஊக்குவிக்கின்றது இந்த செயல்திறன் மதிப்பிடுதல் மூலம் ஊக்குவிகின்றது எனலாம் .. இந்த செயல்முறையில் குற்றம், குறைகள் கண்டிப்பாக இருக்கும் .. ஆனால் ஒரு வருட கால இடைவெளியை காணாமல் , ஒரு 3 அல்லது 5 வருட கால இடைவெளியை பார்த்தால் முன்னேற்றம் காண்பவர்கள் அநேகம் பேர் உண்மையிலேயே திறமை மிக்கவர்களாக, தன்முனேற்றம் கொள்வதில் தீவிரமாக இருப்பவர்களாகதான் இருப்பார்கள்
மேல்கூறிய திறமை நிர்ணயிப்பில் தங்களை மேம்படுத்திக் கொள்ளாத , ஆனால் வருடா வருடம் அனுபவசாலிகள் (எத்தனை வருடம் உழைத்தார்கள் என்ற கணக்கில் ) ஆக மாறும் ஊழியர்களின் நிலை தான் கேள்விக்குறி .. இந்த வகை “நிறுவன மேலாண்மை”யின் முக்ய அடித்தளம் – அனுபவம் கூட கூட , நிறுவனத்திற்கு அவர்கள் அளிக்கும் பங்கும் கூட வேண்டும் .. அடிநிலை ஊழியர் செய்யக்கூடிய வேலைகளை தான் அவர்களும் செய்கிறார்கள் என்றால் அவர்கள் பங்களிப்பு வருடத்திற்கு வருடம் குறைகிறது என்று அர்த்தமாகி விடும்.
மேலும் சில வருடங்களில் , மொத்த ஊழியர் எண்ணிக்கை மிக அதிகமானால் , திறமையினை மேம்படுதிக் கொள்ளாத மன நிலை கணிசமான ஊழியரிடம் வந்து விடுகிறது .. comfort zone என்ற மன நிலை வந்து விடும். இப்படி பட்ட ஊழியர்களை அவர்களின் இத்தகைய மன நிலையில் இருந்து வெளியேற்ற வேண்டியது நிறுவனத்திற்கு முக்யமாகிறது.
சோஷலிச நோக்கில் பார்க்காமல் , முதலாளித்துவ நோக்கில் பார்த்தால் இதில் குற்றம் இருப்பது போல் தெரியவில்லை .. நிறுவனத்தின் நோக்கம் லாபம் .. அதற்க்கு பங்களிக்கும் ஊழியர்களை ஊக்குவிக்கின்றது .. நிறுவனம் எட்டும் லாபத்தில் ஊழியர் பங்கு கண்டிப்பாக மிக மிக சிறிய பங்கே ..ஆனால் மென்பொருள் துறையில் இந்த பங்கே தனி மனிதர்கள் தேவைக்கு மிக அதிகமான தொகையே. அதற்க்கு ஈடாக ஊழியரிடம் ஒரு திறமை முன்னேற்றத்தை எதிர் பார்க்கிறது எனலாம் .
வேலை விடுப்பு நடக்கும் தருணங்களில் நிறுவனங்களின் பார்வை இத்தகைய ஊழியரை குறித்து தான் என்று நினைக்கின்றேன் ..முதலாளித்துவ நிறுவன சூழலில் இனி அடிக்கடி இப்படியான செய்திகளை மென்பொருள் துறையில் சந்திக்க நேரிடும் என்றே தோன்றுகிறது .. ஏனெனில் மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது 2000 – 2005 வாக்கில் .. அப்போது வேலைக்கு சேர்ந்தவர்கள் இப்போது ஒரு நடுவாந்திர மேலாண்மை நிலைமையில் இருப்பார்கள் ..ஆகவே சொகுசு நிலையில் (comfort zone) இருப்பவர்கள், ஒரு தீவிர தன்னிலை ஆய்வு செய்து கொள்வது மிக அவசியமாகிறது ..
என் தனிப்பட்ட கருத்து இது .. இப்படிப்பட்ட அழுத்தங்கல்லால் ஊழியர் வளர்ச்சி அடைவதற்கே வழி வகுக்கும். தொழில் நிலையிலும் , தனி வாழ்க்கையிலும் கூட இந்த முன்னேற்ற மன நிலை உதவலாம். வேலை நிரந்திரமில்லை என்ற எண்ணமே ஊழியர்களை வேலை நிரந்திரம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டுமோ (தங்களை மேம்படுத்தி கொள்ளல் , தங்கள் தொழில் நுட்ப, வேலை திறன்களை மிகுதிப்படுதிக்கொள்ளல் ஆகியவை ) அதை செய்ய தூண்டும். .. இது ஊழியர்கள், நிறுவனங்கள் இரு குழுக்களுக்கும் உதவும். அதை தாண்டி ஊழியர்களின் தனிப்பட்ட அறிவு , மன வளர்சிசிக்கும் உதவலாம் ..
மென்பொருள் துறையில் யூனியன்களின் (வந்தால் ..) பங்கு ஊழியர்களை இப்படி பட்ட மாற்றங்களுக்கு தயார் படுத்தி , வருடங்கள் கடக்கும் போது ஊழியர்கள் ஏதாவது ஒரு விதத்தில் நிறுவன வளர்ச்சியில் பங்கு பெற ஊழியர்களை தயார் செய்தும் , நிறுவன முதலாளி / மேலாண்மை துறையிடம் ஊழியர்களின் உழைப்பை சரியான முறையில் உபயோகப்படுத்த முன்னிறுத்தவும் பாடு படும் தரப்பாக இருக்கவேண்டும். மென்பொருள் துறையை பொறுத்தவரை தொழிலாளர் நலன் என்பது அநேகமாக வேலை நிரந்திரம் , வாய்ப்பு சார்ந்ததாகவே இருக்குமே தவிர தொழிலார்கள் சலுகைகள் என்பவை இந்த துறையில் வரும் அதிக பண வரவுகளால் கேட்காமலேயே அநேக சலுகைகள் கிடைக்க பெறுகின்றன என்பது என் எண்ணம் ..
அன்புடன்
வெண்ணி