மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க முடிகிறது. அலுவலகத்தில் இட்ட பணியைவிட மும்மடங்கு பணி செய்ய முடிகிறது. எப்பொழுது நண்பர்கள் அழைத்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களோடு விளையாடவோ வெளியில் செல்லவோ முடிகிறது.
மகிழ்ச்சியான தருணத்திலோ, அமைதியான தருணங்களிலோ எடுக்கும் முடிவுகளை அதற்குரிய சூழ்நிலைகளில் நான் நினைத்தவாறே கையாளுகிறேனா என்று இக்கட்டான தருணங்களில் கூட வேறொருவனாக உள்ளிருந்து அகம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. இல்லையெனின் மனம் அதனை மாற்றியமைத்து மற்றோர் தருணத்தில் கண்காணிக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டதென தொடர்ந்து பல நாட்களாக, சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் உறுதியாக இதுதான் எனக்கூற முடியாது என்றாலும் தங்களின் எழுத்திற்கு அதில் ஒரு சீரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது. ஏனெனில் மற்ற எழுத்தாளர்கள் எழுத்தின் வழி அறியப்படுபவரும், இயல்பாக அறியப்படுபவரும் வேறாக இருப்பார்கள். அவர்களை நான் தவறென்று சொல்லவில்லை. படைப்பாளி என்பவன் தனி மனிதனிலிருந்து வேறுபட்டவன், படைப்பாளியை படைப்பைக்கொண்டே அணுக வேண்டும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டல்ல எனப் பொதுவாகக் கூறினாலும், ஒரு உன்னத படைப்பைப் படைத்த படைப்பாளியும் உன்னதமான ஒருவராக இருக்கும் பொழுது இயல்பாகவே அப்படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் மரியாதை வந்து விடுகிறது. அப்படித்தான் எனக்கும் தங்களுடைய எழுத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட உத்வேகம் நான் இருந்த நிலையில் இருந்து வேறோர் இடத்திற்கு தள்ளிவிட்டது. அங்கிருந்து வேறோர் இடம், பின்னர் வேறோர் இடம், இன்று இந்த நிலையில். நாளை இதைவிட உன்னத நிலையில் உறுதியாக (வாசித்துக்கொண்டெ இருந்தால்).
என்வாழ்வின் பொற்காலம் கடந்த காலம் அல்ல, நிகழ்காலம், இன்று இக்கணம். இதை நீடிக்கச் செய்ய ஒரே வழி, வாசித்துக்கொண்டே இருப்பது என்றே நினைக்கிறேன். வாசிக்கும் ஒரு புத்தகம், வாசிக்க வேண்டிய பத்து புத்தகங்களுக்கு வழியைத் திறக்கிறது. இன்று நான் வாசிப்பையே முழு நேர வேலையாக செய்து, உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் இன்றோடு எழுதுவதை நிறுத்தினாலும் கூட என் இறப்பிற்கு முன் இவ்வாசிப்புக்கடலில் ஒரு கைப்பிடி அளவு மட்டுமே அள்ள முடியும் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் உளமாற நன்றி.
ராஜேஷ்
அன்புள்ள ராஜேஷ்
புனைவை வாசிப்பதற்கான திறன் அனைவருக்கும் இயல்பிலேயே அமைவதில்லை. மிக்ச்சிலருக்கே மொழியை உடனடியாக சித்திரங்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். அது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை நாம் நம் நிறைவுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நம் கடமை என்றே சொல்லலாம்
வாழ்த்துக்களுடன்
ஜெ