மனப்பாடம்

Memorise-speech-essay

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்…

இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமா?தெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது? ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை?நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்!

அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்
திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்

நம்முடைய நூல்மரபில் மனனம்,ஸ்வாத்யாயம்,தியானம் என்றுதான் கல்வியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கற்கப்படும் நூலை முழுமையாக மனப்பாடம் செய்தல். அதன்பின் அதன் சாத்தியமான அனைத்து அர்த்தங்களையும் அறிதல். கடைசியாக அதை ஆழ்மனதால் தியானித்து முழுதாக அறிதல்

நூலை எழுதி வைப்பது அழிந்துபோகாமலிருக்கத்தானே ஒழிய அதை நோக்கி வாசிப்பது பழைய குருமரபுகளில் குறைவு. மனப்பாடம் செய்யப்படுவதற்காகவே நூல்கள் சுருக்கமாகவும், சந்தத்துடனும் எழுதப்பட்டன. சூத்திரம் என்ற வடிவம் நினைவில் நிறுத்துவதற்குரியது. வெண்பா சூத்திரத்திற்கான செய்யுள். தமிழில் குறள் சூத்திரம் என்பதற்குச் சிறந்த உதாரணம்

மூலநூல்களை மனப்பாடம் செய்தால்தான் அவற்றை நினைவில் ஓட்டி முழுமையாக அறியமுடியும். ஒரு வரி ஓர் உணர்வுடனோ அனுபவத்துடனோ இணைந்து தன்னிச்சையாக நினைவில் எழுவதுதான் அதை உண்மையில் புரிந்துகொள்ளும் தருணம்

உதாரணமாக ஒருநண்பரின் இறப்புச்செய்தி எனக்கு வந்தபோது பேருந்துப்பயணத்தில் இருந்தேன். அவர் இயற்கைவேளாண்மை, கிராமிய மேம்பாடு சார்ந்து பெரிய கனவுகள் கொண்டிருந்தார். அதைச்சார்ந்தே தன்னை பயிற்றுவித்து வந்தார். அவரது இயல்பே அதைச்சார்ந்து உருவாகி வந்தது

ஆனால் கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு ஊர் திரும்பலாமென நினைத்து தொடர்ந்து வளைகுடா நாட்டிலேயே பணியாற்றினார். அவர் வெறுத்த வேலை. அவர் ஒன்றும் சாதிக்கமுடியாத வேலை.ஆனால் எப்போதும் அவருக்கு செய்து தீர்க்கவேண்டிய ஒரு சிறிய வேலை எஞ்சியிருபப்தாகத் தோன்றிக்கொண்டிருந்தது. ஒரு சிறு மாரடைப்பில் மறைந்தார்.

அவரைப்பற்றி எண்ணியதும் இயல்பாக ஒருகுறள் நினைவில் எழுந்தது

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத்துணை

நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடாது அறச்செயல்களைச் செய்யுங்கள். இறக்கும்போது அதுவே துணைவரும்– இதுதான் வழக்கமான பொருள். ஆனால் அறம் என்ற சொல்லுக்கு ஏன் தானதர்மங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்? அப்படி வள்ளுவர் காலத்தில் பொருள் இல்லை.

தன்னறம், தனக்கே உரிய அறம் என ஏன் பொருள் கொள்ளக்கூடாது? ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம். அதைச்செய்யாமல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கவேண்டாம். வாழ்நாள் வீணாகிவிடும். ஒருவன் தன் சொந்த அறம் எதுவோ அதைச் செய்தால் மட்டுமே நிறைவாக இறக்கமுடியும், இறப்பின் கணத்தில் மனநிறைவாக அதுவே உடனிருக்கும். அதையல்லவா வள்ளுவர் சொல்கிறார்?

இப்படி அக்குறள் எனக்கு அன்று திறந்துகொண்டது. மூலநூல்கள் அப்படி திறந்துகொள்ளவேண்டும். அதன்பெயரே தியானம். அதற்கு முதல்படி மனனம்.

ஆகவே பழைய குருமரபுகளில் மனப்பாடம் என்பது வலியுறுத்தப்பட்டது. ஆகவே ஒருவர் நல்ல கல்வியுடையவர் என்றால் நூல்களை மனப்பாடமாக ஒப்பிப்பது என்பது ஒரு வழக்கமாக ஆகியது. பின்னர் ஒப்பிப்பதற்காகவே மனப்பாடம் செய்வதாக அது மாறியது

தமிழ் மேடைகளில் செய்யுள்களை ஒப்பிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது நாய் பெற்ற தெங்கம்பழம் மட்டுமே. மனனம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ஸ்வாத்யாயம் அதாவது அதன் அத்தனை பொருட்களையும் கற்றறிதல், நிகழ்ந்திருக்காது.. தியானம் நடந்தே இருக்காது. ஆகவே மேடை மேடையாக வருடக்கணக்காக உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் எந்தப்பயனும் இல்லை

ஜெ

தன்னறம்

தன்னறத்தின் எல்லைகள்

தன்னறமும் தனிவாழ்வும்

முந்தைய கட்டுரைவாசிப்பின் வழியாக…
அடுத்த கட்டுரைராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு