«

»


Print this Post

நிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி


2012OOTY117

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நலமா?

அண்மையில் பதிக்கப்பட்ட, நிதிவலை சார்ந்த தங்கள் தளத்து கட்டுரைகளைப் படித்தேன். இந்த, இந்தியாவிற்குப் பெரும்பாலும் தேவையேயற்ற வெளி நாட்டு நிதியின் தொடர்ந்த வருகை என்பது ஒரு தொடரும் சோகம்; இது, நம் தேசப் பிச்சைக்காரர்களால் குயுக்தியுடன் யாசிக்கப்படுவதும், இதற்கென்று ஒரு தொடர்ந்து விரிவாக்கப்படும் தொழில்முறை உருவாகியிருப்பதும் – உட்குறிக்கோள் கொண்ட தனவான்களால்/ நிறுவனங்களால் மேட்டிமைத்தனத்துடன் விட்டெறியப்படுவதுமான ஒன்றாகவும் வடிவெடுத்திருப்பது இன்னமும் சோகம்.

அண்மைக் காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கீழை ஆசிய நாடுகள் வழியாக வரும் (அரேபிய) நிதி என்பதும் – அது இஸ்லாமின் பன்முகப் பார்வையையும் அதன் நுணுக்கங்களையும் கலைஇலக்கிய வரலாறுகளையும் அழித்தொழித்து – ஒரு வீங்கிய, கனிவும் அன்புமற்ற ஒற்றைப்படை இஸ்லாமை வளர்க்கச் செய்யும் செயல்பாடுகளும் இதில் அடங்கும். :-(

இந்த வெளிநாட்டு நிதி தொடர்பாக, நேரடி அனுபவங்களாகவும் சிலபல ‘ஆராய்ச்சிகள்’ மூலமாகவும் நான் கண்டுகொண்டவற்றை, 1995 வாக்கில் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து பலசரடுகளில் உரையாடி 2001 வாக்கில் ஒரு வழியாக ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை (=Foreign aid (for NGOs) considered harmful) எழுதி முடித்தேன். இதில் ஓரளவு – எப்படி இந்த உள் நாட்டு பிச்சைக்கார கும்பல் கயமைத்தனத்துடன் பிணி செய்கிறது என்பதையும், அதன் வழிமுறைகள் பற்றியும் கொஞ்சம் பொதுமைப்படுத்தி எழுதியுள்ளேன்.

இந்தக் கட்டுரையை ஒரு தமிழ் முன்னுரையுடன் ’தொழில்முறை’ தன்னார்வ நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணம்…https://othisaivu.wordpress.com/2012/12/19/post-149/ எனப் பதிவு செய்தேன். முடிந்தால், நேரம் கிடைத்தால் படிக்கவும்.

“1995 வாக்கில் USENET-ல் பல விதமான உரையாடல்கள், அனுபவங்களூடே எழுத ஆரம்பித்து, 2001-ல் முடிக்கப் பட்ட கட்டுரை இது. பழைய குப்பைகளைச் சென்றவாரம் கிளறிக் கொண்டிருந்தபோது இதனைத் திருப்பிப் படிக்க நேர்ந்தது.

பதினைந்து வருடங்கட்குப் பின், இப்போது யோசித்தாலும், இதில் உள்ள எந்த விவரத்தையும், விவாதத்தையும் (கொஞ்சம் இடதுசாரிப் பார்வையை மட்டுப்படுத்துதல் தவிர்த்து) நான் திருத்த வேண்டிய அவசியமே இல்லை எனத் தோன்றுகிறது.

… இது எழுதப் பட்ட சமயத்தில், பலவிதமான எதிர்வினைகள் வந்தன, பெரும்பாலும் திட்டல்கள், எதிர்பாரா மனிதர்களிடமிருந்து சில ஷொட்டுக்கள். (திட்டல்கள் தமாஷாகவே இருந்தன – ‘முதுகில் குத்திவிட்டாயே, துரோகி’ போன்றவை அவை, அவைகள் கிடைக்கவில்லை, தப்பித்தீர்கள்!)

ஆக, நீங்களும் இதனைப் படித்து இறும்பூதடைக. ( நான் இதனைத் தமிழ்ப்படுத்தியிருக்கவேண்டும், என் நேரமின்மை (=சோம்பேறித்தனம்) காரணமாக, அதனைச் செய்யவில்லை, மன்னிக்கவும்.)”

ஆனால், சொற்ப நிதிக்கொடைகளானாலும் சிலசமயம், வெளி நாட்டு நிதிகளையும் பெற்று – மறைமுகத் தன்மையற்று, தன்னலமற்று நேரடியாகப் பணியாற்றும் நிறுவனங்களும் உள்ளன என்பதையும் அறிவேன். அவற்றில் பெரும்பாலானவை, எனக்குத் தெரிந்த அளவில், காந்தியின் பாதிப்பு கொண்டவை என்பதையும் நான் பதிவு செய்யவேண்டும்.

எனக்கு மகாமகோ உலகளாவிய இல்யுமினேட்டை சதிவலைகள் போன்ற கருத்தாக்கங்களுடன் ஒப்புதல் என்று இல்லாவிட்டாலும் – கொஞ்சம் வீச்சில் சிறிய, ஆனால் நஞ்சில் கொடிய – மதம், பண்பாடு குறித்த சதிவலைகள், அமைப்புத் திரள்கள் நிச்சயம் இருக்கின்றனதாம் எனும் கருத்தாக்கத்துடன் ஒப்புமையே. ஆக – இந்த நிதி வலைகள், அதன் உள் நாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், அதன் ‘பலனைப்’ பெறுபவர்கள், அதற்காக நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைபவர்கள் என விமர்சனங்கள் விரிவதில், வெளி வருவதில் மகிழ்ச்சியே.

மறுபடியும் இந்த உரையாடலை ஆரம்பித்ததற்கு நன்றி. ஏனெனில் – மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து குரலை எழுப்பினால்தால் நம் இந்தியச் சமூக கும்பகர்ணர்கள் ஒரு கண்ணையாவது திறந்து ப்ரதியட்ச உண்மைகளைக் கண நேரமேனும் பார்ப்பார்கள், அய்யய்யோ மன்னிக்கவும், கடைசி வார்த்தையை ‘காண முயற்சிப்பார்கள்’ எனப் படிக்கவும்.

நிற்க, என்னுடைய தன்னார்வக் குண்டு நிறுவனம் சார்பாக, மேலும் பிற, சகோதர – வெளிநாட்டு நிதி வாங்கி புளிச்சேப்பம் விட்டுக்கொண்டிருப்பவர்கள் சார்பாகவும் – எங்கள் மனம் உங்களுடைய தொடர்ந்த அவதூறுகளால் மிகமிக ஆழமாகப் புண்பட்டுவிட்டபடியால், உங்கள் மீது ஏவ – ஒரு வக்கீல் நோட்டீஸ் ஏவுகணை தயார் செய்துகொண்டிருக்கிறேன், ஜாக்கிரதை!

மன்னிக்கவும், உங்கள் கருத்திற்காக கண்டனம் தெரிவிக்கும் வகையில் உங்களுடைய எந்த புத்தகத்தை எரிப்பது என்பதை இதுவரை முடிவுசெய்யவில்லை – முடிவானபின் அவசியம் தகவல் தெரிவிக்கிறேன். ஊக்கபோனஸாக உங்கள் கொடும்பாவியை எரிப்பதும் பரிசீலனையில் இருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் பிரச்சினையென்னவென்றால், டீவிகாரர்கள் ஏதாவது பற்றியெரிந்தால்தான் கண்டுகொள்கிறார்கள்.

பிற பின்னர்.

புண்பட்ட நெஞ்சுடன்,

வெ.ராமசாமி

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/70826