பகுதி 5 : ஆடிச்சூரியன் – 1
நகுலன் அரண்மனை முகப்பில் ரதத்தில் வந்திறங்கியபோது காவல்கோட்டங்களில் எண்ணைப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முற்றத்தில் முன்னரே நின்றிருந்த மூன்று தேர்களின் நிழல்கள் அரண்மனையின் பெரிய சுவரில் மடிந்து எழுந்து சுடராடலுக்கு இசைய அசைந்தன. கடிவாளக்காப்பாளன் ஓடிவந்து குதிரைகளைப்பற்ற தேர்ப்பாகன் இறங்கி படிகளை நீக்கி வைத்தான். நகுலன் இறங்கி அவனிடம் புன்னகைத்துவிட்டு திரும்ப வெண்ணிறக் குதிரை ர்ர்ர்ப் என்ற ஒலியெழுப்பி தலையசைத்து அவனை அழைத்தது.
அவன் தன்னுடைய பட்டாடையையும் அணிகளையும் நோக்கிவிட்டு தேர்ப்பாகனை நோக்கி புன்னகைசெய்தான். அவனும் சிரித்துக்கொண்டு திரும்பி குதிரையை மெல்ல தட்டினான். அது பிடிவாதமாக தன் முன்னங்காலால் தரையைத்தட்டி தலையிலணிந்திருந்த மணிகள் ஒலிக்க குனிந்து மீண்டும் ஓசையெழுப்பியது. நகுலன் வாய்விட்டு சிரித்தபடி அதை அணுகி அதன் குஞ்சிமயிரில் கையை வைத்தான். அதன் விலாவும் முன்தொடையும் சிலிர்த்துக்கொண்டன. முன்னங்காலை எடுத்துவைத்து கழுத்தை வளைத்து அவன் மேல் தன் எடைமிக்க தலையை வைத்துக்கொண்டது. அதன் எச்சில் கோழை அவன் மேல் வழிந்தது.
நகுலன் அதன் உடலின் வெவ்வேறு இடங்களை தொட்டு அழுத்திக்கொண்டிருக்க அதன் வெண்ணிற இமைமயிர்கள் கொண்ட கண்கள் பாதிமூடின. மூக்குத்துளைகள் நன்றாக விரிய வாய்திறந்து செந்நீல நாக்கு வாழைப்பூ மடல் போல நீண்டு வெளிவந்தது. அவன் முழங்கையை மெல்ல நக்கியபடி குதிரை பெருமூச்சு விட்டு கால்களை தூக்கி வைக்க தேர் சற்று முன்னகர்ந்தது. அது சிறிய செவிகளை தொழும் கரங்களென தலைக்குமேல் குவித்து தலையை குலுக்கியபடி மீண்டும் கனைத்தது.
நுகத்தின் மறுபக்கம் இருந்த குதிரை அவனை நோக்கி விழிகளை உருட்டியபடி கழுத்துமயிர்நிரையை குலைத்து வாலைச்சுழற்றி முன்னடி வைத்தது. அவன் முன்பக்கம் வழியாக சுற்றிவந்து அதன் நெற்றிச்சுட்டியை தட்டினான். காதுகள் நடுவே இருந்த சங்கை கையால் வருடி கழுத்தை நீவி விட்டான். நெற்றியில் இரண்டு சிறிய சுழிகளும் முகத்தின் வலப்பக்கம் அரைச்சுழியும் கொண்ட நந்தம் அது. இரு குதிரைகளும் அவனை நோக்கி கழுத்தை வளைத்து நாக்கை நீட்டின. அப்பால் கட்டுத்தறிகளில் கட்டப்பட்டிருந்த குதிரைகளனைத்தும் கடிவாளத்தை இழுத்து அவனைநோக்கி திரும்பியிருந்தன.
பின்னால் வந்து நின்ற அரண்மனைச்சேவகன் தொண்டையொலி எழுப்ப நகுலன் திரும்பி நோக்கி புன்னகைத்தான். தேர்ப்பாகன் “நீங்கள் அத்தனை குதிரைகளிடமும் குலவவேண்டியிருக்கும் இளவரசே” என்றான். நகுலன் திரும்பி நோக்க சேவகன் ஓடிச்சென்று அப்பால் பெரிய கற்கலத்தில் தேக்கப்பட்டிருந்த நீரை மரக்குடுவையில் எடுத்துக்கொண்டுவந்தான். அதை அவன் ஊற்ற நகுலன் கைகளை கழுவிக்கொண்டான். சேவகன் “அமைச்சர் கிளம்பிவிட்டார். பெருங்கூடத்தில் அமர்ந்திருக்கிறார். அரசருக்காக சேவகர் சென்றிருக்கிறார்” என்றான்.
இடைநாழி வழியாக செல்லும்போது சேவகன் பின்னால் வந்தபடி “அஸ்தினபுரியின் படகுகளுடன் பாஞ்சாலத்தின் ஏழுபடகுகளும் செல்கின்றன. பாஞ்சாலத்திலிருந்து அஸ்தினபுரியின் மாமன்னருக்கு பரிசில்கள் கொண்டுசெல்லப்படுகின்றன” என்றான். “பாஞ்சாலத்தின் செல்வம் என்றால் கோவேறுகழுதைகள்தான். துர்வாசர்கள் அத்திரிகளை உருவாக்கும் கலையறிந்தவர்கள். நூறு கோவேறு கழுதைக்குட்டிகள் அஸ்தினபுரிக்கு செல்கின்றன” என்றான்.
நகுலன் “அவற்றை எப்படி நடத்தவேண்டும் என்றறிந்த புரவியாளர்களையும் அனுப்பச் சொல்லவேண்டும். அத்திரிகள் எடைசுமப்பவை. ஆனால் அவற்றின் முதுகுகள் கழுதைகளைப்போல ஆற்றல்கொண்டவையல்ல என்று இன்னமும் அஸ்தினபுரியினருக்கு தெரியாது. அங்கே பெரும்பாலான அத்திரிகள் முதுகுடைந்து தளர்ந்தவை” என்றான். “ஆம், இங்கிருந்து பன்னிரு புரவியாளர்களும் செல்கிறார்கள்” என்றான் சேவகன்.
பெருங்கூடத்தின் வெளியே நின்றிருந்த சேவகன் வணங்கி உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். உள்ளே ஏழு நெய்விளக்குகள் எரிந்த செவ்வொளியில் பீடத்தில் அமர்ந்து சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்த விதுரர் திரும்பி நோக்கி முகம் மலர்ந்து “வருக!” என்றார். நகுலன் அவரை பணிந்து நின்றான். அவர் அமரும்படி கைகாட்டியதும் அப்பால் விலகி பீடத்தில் அமர்ந்துகொண்டான். “முதலில் நீதான் வருவாய் என நினைத்தேன்” என்றார்.
“குதிரைகளை விரும்புபவன் முன்புலரியில் எழுந்தாகவேண்டும். அவை அப்போதுதான் முழுமையான துள்ளலுடன் இருக்கும்” என்றான் நகுலன். “நினைவறிந்த நாள் முதலே நான் விடியலில் துயில்வதில்லை.” விதுரர் புன்னகை செய்து “உன் இளையோனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று பிரம்மமுகூர்த்தம் முடிந்ததுமே கிளம்பிவிடலாம் என்று அவன் சொன்னான். ஆனால் கதிரெழுவதற்கு முன் என்னால் கிளம்பமுடியாதென்றே தோன்றுகிறது. நேரத்தை மாற்றிக்குறிக்கவேண்டும்” என்றார்.
“அரசரா?” என்று நகுலன் புன்னகையுடன் கேட்டான். “உன் தமையனும்தான். நேற்று இருவரும் விடிவதுவரை நாற்களப்பகடை ஆடியிருக்கிறார்கள்.” நகுலன் “மூத்தவர் அவர் வாழ்க்கையைப்பற்றி கற்ற அனைத்தையும் நாற்களத்தில் உசாவிப்பார்க்கிறார்” என்றான். விதுரர் “உன் புன்னகை மாறவேயில்லை. பாரதவர்ஷத்தின் பேரழகன் நீ என்று சூதர் பாடும்போதெல்லாம் நீ எப்படி இருக்கிறாய் என எண்ணிக்கொள்வதுண்டு. உன் முதிரா இளமை முகத்தை நினைவில் மீட்டி பெருமூச்சு விடுவேன். இனி உன் இந்த முகம் என்னிடமிருக்கும்” என்றார். நகுலன் நாணத்துடன் புன்னகைசெய்தான்.
“இங்கே மலைப்புரவிகளை பழக்குகிறார்கள் என்றார்களே” என்று விதுரரே அந்த இக்கட்டான நிலையை கடந்தார். நகுலன் எளிதாகி “ஆம் அமைச்சரே. இவர்களுக்கு புரவிகளைப் பிடிக்கவும் பழக்கவும் தனித்த வழிமுறைகள் உள்ளன. புரவிகளை இவர்கள் கண்ணியிட்டு பிடிப்பதில்லை. ஒரு குறிப்பிட்டவகை புல்லை பறித்துவந்து அதை அரைத்துக் கூழாக்கி சிறிய அப்பங்களாக்கி காட்டில் போட்டுவிடுகிறார்கள். அதைத்தின்றபடி குட்டிக்குதிரைகள் காடிறங்கி ஊருக்குள் வந்துவிடுகின்றன. அவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு காட்டுக்குதிரைகளை வரச்செய்கிறார்கள்” என்றான்.
“சுவை என்னும் பொறி… பொறிகளில் அதுவே மிகச்சிறந்தது” என்றார் விதுரர். “ஆம், ஆனால் குதிரைகளை தூண்டிலிட்டுப்பிடிப்பதை இங்கே தான் கண்டேன்” என்று நகுலன் சிரித்தான். சேவகன் பணிந்து கதவைத் திறக்க சகதேவனும் அர்ஜுனனும் உள்ளே வந்தனர். அவர்கள் பணிந்து அமர்ந்துகொண்டதும் விதுரர் “நீ குறித்த நேரம் கடந்துவிடும் மைந்தா. புதிய நேரம் தேவை” என்றார். சகதேவன் சிரித்துக்கொண்டே “ஆம், அதை அறிந்தே புதிய நேரத்துடன் வந்தேன். முதல்கதிர் எழுந்த இரண்டாம்நாழிகை நல்லது” என்றான்.
நகுலன் புன்னகைத்து “சென்று முடிக்கவேண்டிய பணியென ஏதுமில்லை. எல்லா நேரமும் நன்றே” என்றான். வெளியே பீமனின் காலடியோசை கேட்டது. நகுலன் ”மூத்தவர் நேற்றே கங்கைக்கு அப்பால் காட்டுக்குச் சென்றுவிட்டார் என்றார்கள். எப்படி செய்தியறிந்தார்?” என்றான். பீமன் உள்ளே வந்து உரத்தகுரலில் “வணங்குகிறேன் அமைச்சரே” என்று தலைவணங்கினான். விதுரர் வாழ்த்தினார். பீமன் சாளரத்தருகே கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான்.
குண்டாசியும் ஒரு சேவகனும் உள்ளே வந்தனர். குண்டாசி ஓரிருநாட்களிலேயே முகம் தெளிந்து விழியொளி கொண்டிருந்தான். “அமைச்சரே, அரசரும் மூத்தவரும் கிளம்பிவிட்டனர்” என்றான். “தருமன் எங்கிருந்து வருகிறான்?” என்றார் விதுரர். “நேற்று மிகவும் பிந்திவிட்டமையால் அவரும் அரசமாளிகையிலேயே துயின்றாராம்” என்றான் குண்டாசி. பீமனை நோக்கி தலைவணங்கி புன்னகைசெய்தான்.
“உன் விழிகள் சற்று தெளிந்திருக்கின்றன” என்றான் பீமன். குண்டாசி கைகளை நீட்டி “பாருங்கள், நடுக்கம் நின்றுவிட்டது” என்றான். ஆனால் அவன் கைகள் சிலகணங்களுக்குள் நடுங்கத் தொடங்கின. தாழ்த்திக்கொண்டு “இன்னும் சிலநாட்களில் முழுமையாகவே சீரடைந்துவிடுவேன். கதைப்பயிற்சிக்கு மீளவேண்டும்” என்றான். பீமன் “அது நிகழ்க!” என வாழ்த்தினான்.
விதுரர் “தருமனும் வந்துவிட்டால் சில சொற்களை சொல்லிச்செல்லலாம் என எண்ணினேன். தாழ்வில்லை, உங்களிடமே சொல்கிறேன்” என்றார். சகதேவனை நோக்கி “தருமன் இல்லாத இடத்தில் நீயே விவேகி. ஆகவே உன்னிடம் சொல்கிறேன். உறவுகளைப்போல உற்று உதவுபவை பிறிதில்லை. ஆனால் உறவுகளைப்போல எளிதில் விலகிச்செல்வதும் வேறில்லை. மணமான பெண் தன் தந்தையின் இல்லத்தில் அயலவள். ஒவ்வொரு கணமும் அவள் விலகிச்சென்றுகொண்டிருக்கிறாள்” என்றபின் ”உங்கள் திட்டங்கள் என்னவென்று நானறியேன். ஆனால் அவை எப்போதும் மானுடர் மீதான நம்பிக்கையின்மையிலிருந்து எழவேண்டுமென விழைகிறேன்” என்றார்.
சகதேவன் தலையசைத்தான். “பொறுமை பேராற்றலை அளிக்கிறது என்பது உண்மையே. ஆனால் நெடுநாள் பொறுத்திருக்கையில் அதுவே ஒரு வாழ்நிலையாகவும் உளஇயல்பாகவும் ஆகிவிடுகிறது. மானுட அகம் செயலற்றிருக்க விழைவது. செயலின்மையின் சுவையைக் கண்டபின் அது தன்னை அசைத்துக்கொள்ளவே விரும்பாது” என்றபின் பெருமூச்சுடன் “சிறியவெற்றிகள் வழியாகவே பெரிய வெற்றிகளை நோக்கி செல்லமுடியும். வேறுவழியே அதற்கில்லை” என்றார்.
வெளியே வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கல இசைக்கலன்கள் ஒலித்தபடி வந்த சூதர்கள் இடைநாழியிலேயே நின்றனர். உள்ளே வந்த கோல்காரன் “பாஞ்சாலத்தின் தலைவர் காம்பில்யம் ஆளும் அரசர் துருபதர் வருகை” என அறிவித்தான். அனைவரும் எழுந்து நிற்க விதுரர் தன் சால்வையை சீரமைத்தார். இரு சேவகர் வாயில்களை விரியத்திறந்தனர். அரசணிக்கோலத்தில் துருபதன் உள்ளே வர விதுரர் முன்னால் சென்று அவரை வணங்கி வரவேற்றார்.
அவருக்குப்பின்னால் அணிக்கோலத்தில் வந்த தருமன் விதுரரை அணுகி வணங்கினான். துருபதன் “சற்று பிந்திவிட்டோம் என்று புரிகிறது” என்றார். தருமன் “ஆம், மறுநேரம் கணிக்கப்பட்டிருக்குமென நினைக்கிறேன்” என்றான். ”ஆம்” என்றபடி அமர்வதற்காக கைகாட்டினார் விதுரர். அவர்கள் அமர்ந்துகொண்டதும் தானும் அமர்ந்தபடி “பாஞ்சாலத்தில் இருந்த இனியநாட்கள் என் நினைவில் என்றும் வாழும் அரசே” என்றார். துருபதன் “ஆம், எங்கள் வரலாறுகளில் அஸ்தினபுரியின் அமைச்சரின் கால்கள் இங்கு பட்டன என்பதும் எப்போதும் எழுதப்பட்டிருக்கும்” என்றார்.
விதுரர் “நான் வந்த பணி முடிவடையவில்லை. ஐவரையும் அழைத்துச்சென்று என் மூத்தவர் முன் நிறுத்தும்பொருட்டே வந்தேன். ஆனால் எப்போதும் யுதிஷ்டிரனின் முடிவே முதன்மையானது என்று அறிவேன்” என்றார். தருமன் “அமைச்சரே, அனைத்துத் திசைகளையும் தேர்ந்து நான் எடுத்த முடிவு இது…“ என்றான். “நலம் சூழ்க!” என்றார் விதுரர்.
துருபதன் “அஸ்தினபுரியின் பேரரசரிடம் சொல்லுங்கள் அமைச்சரே, இங்கே முடிவெடுப்பவர் யுதிஷ்டிரரே என்று. பாஞ்சாலம் தனது ஐங்குலங்களையும் நகரத்தையும் அஸ்தினபுரியின் மூத்தபாண்டவருக்கு முழுமையாகவே அளித்திருக்கிறது. இனி அவரது வெற்றியும் புகழும் மட்டுமே எங்கள் கடனாகும்… இது காம்பில்யத்தின் அரசனின் சொற்கள்” என்றார். விதுரர் வணங்கி “அஸ்தினபுரி அடைந்த பரிசுகளில் முதன்மையானது இது அரசே” என்றார்.
“அஸ்தினபுரியின் முடியுரிமைகளில் பாஞ்சாலம் எவ்வகையிலும் ஈடுபடாது அமைச்சரே. ஆனால் பாஞ்சாலத்தின் உள்ளத்தில் அவ்வரசின் தலைவர் எங்கள் மருகரே. அவர் சொல்லுக்கு மட்டுமே நாங்கள் பணிவோம்” என்றார் துருபதன். விதுரரின் விழிகள் சற்றே சுருங்கின. “அஸ்தினபுரி அதன் அரசராலேயே முழுமையாக ஆளப்படுகிறது” என்றார். அச்சொல்லின் பொருள் என்ன என்று துருபதன் எண்ணுவதற்குள்ளாகவே “யுதிஷ்டிரனுக்குத் தெரியாத அறமோ நெறியோ இல்லை” என்றார்.
சத்யஜித் வந்து தலைவணங்கி நின்றார். துருபதன் அவரை நோக்கியபின் “செலவுக்குக் குறித்த நேரம் அணுகுகிறது“ என்றபடி எழுந்தார். அனைவரும் எழுந்துகொண்டனர். துருபதன் சத்யஜித்திடம் தலையாட்ட அவர் வெளியே சென்று ஆணைகளை இடும் குரலோசை கேட்டது. துருபதன் முன்னால் செல்ல பிறர் தொடர்ந்தனர். பீமன் கைகளை விரித்தபடி வந்து நகுலனின் பின்னால் நின்று “முறைமைகள் ஏதும் குறையவில்லை இளையோனே” என்றான்.
எப்போதுமே சடங்குகளில் நகுலனின் அகம் நிலைப்பதில்லை. அவன் ஒவ்வொருவரும் இயல்பாக நிரைகொண்டதைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொருவர் அகத்திலும் முறைமை என ஒன்று உள்ளது. அதை எவருமே உணராதது போல தோன்றும், ஆனால் அது மீறப்படுமென்றால் அவர்கள் நிலைகுலைவார்கள்.
குண்டாசி அந்த நிரைநகர்வில் கால்தடுமாறியவன் போல பின்னடைந்து நகுலனின் அருகே வந்தான். அவன் உடல் தன்னுடன் முட்டிக்கொண்டதும் நகுலன் புன்னகைசெய்தான். குண்டாசி நாணியதுபோல புன்னகைசெய்து “இந்தச் சடங்குகள் எனக்கு ஒப்பவில்லை மூத்தோரே” என்றான். நகுலன் “நாம் இளையோர் என்பதனால் பின்னால் நின்றிருக்கமுடிகிறது” என்றான். குண்டாசி புன்னகைத்தபின் பின்னால் வந்த பீமனை கண்டான். அவன் விழிகள் மாறின.
துருபதன் இடைநாழியை அடைந்ததும் மங்கல இசைக்கலன்கள் இமிழத்தொடங்கின. இருபக்கமும் நின்ற சேவகர்களும் சூதர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். குரவையொலி எழுப்பிய அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் முன்னால் செல்ல துருபதனும் தருமனும் விதுரரும் சீர்நடையிட்டு பின்தொடர்ந்தனர். அவர்கள் முன் காவலர்கள் படைக்கலம் தாழ்த்தினர்.
நகுலன் ஆர்வமற்று நோக்கியபடி பின்னால் சென்றான். அவனுக்குப்பின்னால் பெரிய திரை போல பீமனின் மஞ்சள்நிறமான உடல் அசையக்கண்டு திரும்பி அண்ணாந்து நோக்கி புன்னகைத்தான். பீமனும் புன்னகைத்து விழிகளை சற்றே அசைத்தான். பேரமைச்சர் கருணரும் படைத்தலைவர் ரிஷபரும் வந்து துருபதனை எதிர்கொண்டனர். முதுநிமித்திகர் பத்ரர் கீழே அவரது மாணவர்களுடன் நின்றிருந்தார்.
மங்கல இசைக்கலன்கள் முழங்க மறுபக்கம் இடைநாழியில் இருந்து அகலிகையும் பிருஷதியும் திரௌபதியும் முழுதணிக்கோலத்தில் மங்கலச்சேடியருக்குப்பின்னால் மெல்ல நடந்துவந்தனர். அவர்கள் இடப்பக்கம் சேர்ந்து நிற்க இசைச்சூதர் மட்டும் வந்து பிறருடன் இணைந்தனர்.
பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் இளவரசர்கள் சுமித்ரனும் யுதாமன்யுவும், விரிகனும் வந்து தங்கள் வாள்களை உருவி காலடியில் தாழ்த்தி வணங்கி விதுரரை வரவேற்றனர். அதன்பின் அரசியரும் இளவரசியரும் வந்து வணங்கி வாழ்த்துபெற்றனர். நகுலன் சலிப்புடன் கால்களை மாற்றிக்கொண்டான். மீண்டும் மீண்டும் ஒரே செயல்கள், ஒரே தாளம். வாழ்நாளெல்லாம் அதை நடிப்பவர்களே அரசர்களாக முடியும்.
காலையொளி விரியத்தொடங்கிய முற்றத்தில் பந்தங்கள் மஞ்சள்நிறக் கொடிகள் போல துடித்துக்கொண்டிருந்தன. நகுலனின் மணத்தை அறிந்த குதிரைகளில் ஒன்று மூக்கை விடைத்து ப்ர்ர்ர் என ஒலியெழுப்ப இன்னொரு பெண்குதிரை முன்காலால் தரையைத் தட்டியது. அவன் திரும்பி பீமனை நோக்க அவர்கள் புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.
முற்றத்தில் கங்கைநீர்க்குடங்களுடன் நின்றிருந்த முதுவைதிகர் தௌம்யரும் அவரது ஏழுமாணவர்களும் வேதம் ஓதியபடி வந்து மாமரத்திலையில் நீர் தொட்டுத் தூவி வாழ்த்தினர். பீமன் நகுலனின் தோளில் கையை வைத்து “சக்ரவர்த்திகளுக்குரிய வழியனுப்புதலை ஒழுங்கமைத்திருக்கிறார்கள் இளையோனே” என்றான். “ஆம், அது அஸ்தினபுரிக்கு ஒரு செய்தி” என்றான் நகுலன். “அதை தெளிவாகவே துருபதன் சொல்லியும் விட்டார்.”
முரசுகளும் கொம்புகளும் மங்கலப்பேரிசையும் கலந்த ஒலிக்குள் சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்துகொண்டிருந்தன. வேதத்தூய்மைக்குப்பின் விதுரர் முற்றத்தில் இறங்கியபோது காவல் கோட்டங்களின் மேல் பெருமுரசங்கள் முழங்க கொம்புகள் இணைந்துகொண்டன. பாஞ்சாலனின் இளவரசர்கள் விதுரரைப் பணிந்து வாழ்த்துபெற்றனர். தருமன் திரும்பி நோக்க சகதேவனும் நகுலனும் முன்னால் சென்று விதுரரின் கால்களைப் பணிந்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அர்ஜுனனும் பீமனும் பணிந்தனர்.
குண்டாசி சகதேவனையும் நகுலனையும் அர்ஜுனனையும் பீமனையும் தருமனையும் முறைப்படி வணங்கினான். கடுங்குளிரில் நிற்பவன் போல அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. உதறும் கைகளால் கச்சையை பற்றிக்கொண்டான். அவமதிப்புக்குள்ளானவன் போல, அங்கிருந்து ஓடித்தப்ப விழைபவன் போல தெரிந்தது அவன் முகம்.
அவன் தேரில் ஏறிக்கொள்ள திரும்பியதும் பீமன் நகுலனை கைகளால் விலக்கி முன்னால் சென்று குண்டாசியை அள்ளி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். அவன் தலையை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு கைகளால் மெல்ல அடித்தான். குண்டாசி விம்மி அழத்தொடங்கினான். பீமன் அவனைப் பிடித்து விலக்கி ”குடிக்காதே” என்றதை உதடுகளின் அசைவால் நகுலன் அறிந்தான். “இல்லை மூத்தவரே…” என்றான் குண்டாசி. பீமன் அவனை மீண்டும் இறுக அணைத்தான். அவன் பீமனின் பிடியிலிருந்து நழுவி மீண்டும் அவன் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தலைகுனிந்து கண்ணீருடன் தேரில் ஏறிக்கொண்டான்.
தருமன் மெல்லிய கடுகடுப்புடன் பீமனிடம் ஏதோ சொல்ல அவன் பின்னால் சென்றான். குண்டாசி ஏறிய தேர் சகட ஒலியுடன் எழுந்து முன்னால் சென்றது. தருமன் குனிந்து தாள் பணிந்ததும் விதுரர் மெல்லிய உதட்டசைவுடன் அவனிடம் ஏதோ சொன்னார். அவன் தலையசைத்தான். துருபதனை வணங்கி விடைகொண்டு தேரில் ஏறிக்கொண்ட விதுரர் விழிசரித்து நகுலனை நோக்கி தன்னுடன் ஏறிக்கொள்ளும்படி கைகாட்டினார். ஒருகணம் திகைத்தபின் நகுலன் பீமனை நோக்கிவிட்டு தேரில் ஏறிக்கொண்டான்.
விதுரர் தேர்த்தட்டில் அமர்ந்து களைத்தவர்போல கால்களை நீட்டிக்கொண்டார். பெருமூச்சுடன் வெளியே கடந்துசெல்லும் காம்பில்யத்தின் அரண்மனை வரிசையையும் காவல்மாடங்களையும் எழுந்து வந்த சிவந்த கல்பரப்பப்பட்ட தேர்ச்சாலையையும் இருமருங்கும் இருந்த மரத்தாலான மூன்றடுக்கு மாளிகைகளையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவரது முகத்தின் ஒளிமாறுதல்களை நோக்கியபடி நகுலன் அமைதியாக இருந்தான்.
குதிரைக்குளம்படிகளின் சீரான தாளம் நகுலனை அமைதிகொள்ளச் செய்தது. அவன் தன் முன் ஆடும் திரைச்சீலையை நோக்கியபடி அமர்ந்திருந்தான். கரியநிறமான குதிரைகளின் பின்தொடைகள் கரிய மெழுகு போல பளபளத்து அசைந்துகொண்டிருந்தன. விதுரர் பெருமூச்சுவிட்டு அசைவதைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். “நீ என்ன எண்ணுகிறாய்?” என்று விதுரர் கேட்டது என்ன என்று அவனுக்குப்புரிந்தது. ”இங்கு மூத்தவர் அரசருக்கு நிகரானவர் என்கிறார்” என்றான். “மூத்த கௌரவரை ஒருபோதும் பாஞ்சாலம் ஏற்காது என்று அதற்குப்பொருள்.”
“ஆம், அதைத்தான் சொல்கிறார்” என்றார் விதுரர். “அதைத்தான் நான் மாமன்னரிடம் சொல்லவேண்டும்.” தாடியை கையால் வருடியபின் “அஸ்தினபுரி பாஞ்சாலத்தை இன்று எவ்வகையிலும் தவிர்க்கமுடியாது. ஒரு போரில் பாஞ்சாலம் நம்மிடமிருந்து விலகி நிற்குமென்றால் நமக்கு படைவல்லமையே இல்லையென்றாகும்” என்றார். அவர் பேசுவதற்காக நகுலன் காத்திருந்தான்.
“எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. துருபதன் எண்ணுவது என்ன? நீங்கள் இங்கே எத்தனைகாலம் இருக்க முடியும்? இங்கே எளிய மணமுறை இளவரசனாக இருக்கவே தருமன் எண்ணியிருந்தான். தருமனுக்கு அளிக்கும் அரசச்சீர்கள் மூலம் அதை முடியாதென்று ஆக்கிவிட்டிருக்கிறார். அரசனுக்குமேல் ஓர் அரசனாக இங்கே அவன் நெடுநாள் நீடிக்கமுடியாது.” கைகளை விரித்து “அதைத்தான் இறுதியாக தருமனிடம் சொன்னேன், நிலமில்லாது இந்நகர்விட்டு நீங்காதே என்று” என்றார்.
மீண்டும் தன் எண்ணங்களில் மூழ்கி வெளியே நோக்கி அமர்ந்திருந்தார். வணிகவீதிகள் கடந்துசென்றன. அப்போதுதான் கடைகளின் பலகையடுக்குக் கதவுகளைத் திறந்து தோல்கூடாரங்களை முன்னால் கட்டிக்கொண்டிருந்தார்கள். பொதிகளுடன் வந்த அத்திரிகள் கடைகளை ஒட்டிய சிறிய முற்றங்களில் முதுகோடு முதுகு ஒட்டி மூன்றுகால்களில் தலைதொங்க நின்று துயின்றன. ஒரு காற்று எழ அங்காடியின் அனைத்துக்கொடிகளும் சிர்ர்ர் என்ற ஒலியுடன் துடித்தன.
எதிரே வந்த யானைக்கூட்டத்துக்காக தேர் சற்று நின்றது. பொறுமையிழந்த குதிரை காலால் செங்கல்தரையை தட்டியது. கையில் சங்கிலியுடன் கங்கையில் நீராடிவந்த பன்னிரு யானைகள் கரிய மதில்சுவரென தெரிந்து இருள் அசைவதுபோல கடந்துசென்றன. சங்கிலிகளின் எடைமிக்க கிலுங்கலோசை கேட்டுக்கொண்டிருந்தது. முதல் பாகன் “சலதி ஹஸ்தி” என்று கூவினான். புறாக்கூட்டம் காற்றில் பிசிறிய சிறகுகளுடன் வளைந்து வந்து சிறிய சாலையில் அமர்ந்து மணிநிறக் கழுத்துக்களில் வண்ணங்கள் கலந்து மாற குனிந்து கொத்தத் தொடங்கியது. சிறிய நகங்களைப்போன்ற அலகுகள். குன்றிமணிக் கண்கள். இரும்புத்தகடு உரசுவதுபோன்ற குரல்கள்.
மீண்டும் தேர் கிளம்பியதும் விதுரர் திரும்பிப்பாராமல் “இன்றுமுதல் நீ அல்லவா?” என்றார். அவன் உடல் உலுக்கிக்கொண்டது. “பாண்டவர்களில் இன்னொரு கரிய அழகன்” என்றபின் “எதையும் எண்ணாமல் உன்னை ஒப்படைத்துவிடு” என்றார். “ஆம் அமைச்சரே” என்றான். “ஆடியும் சூரியனே” என்றபின் விதுரர் தலையை ஆட்டினார். “தெய்வங்கள் ஆடும் நாற்களம் என்று மானுட அகத்தை வியாசர் சொல்கிறார். அதில் மிகப்பெரிய காய் காமமே” என்றபின் தான் சொன்னவற்றை தானே எண்ணிப்பார்ப்பவர் போல உதடுகளை மெல்ல அசைத்து “நீ இங்கிதம் அறிந்தவன். உனக்கு சொல்லவேண்டியதே இல்லை” என்றார்.
கங்கை அணுகும் நீர்மணம் காற்றில் எழுந்தது. நீரிலிருந்து வந்த கொக்குகள் சாலைக்குக் குறுக்காகப் பறந்து சென்று தாழ்வான பண்டகசாலைகளின் கூரைமேல் அமர்ந்தன. சாலை சரிந்து சென்றதனால் தேரின் பின்தடி சகடங்களை உரசி ஒலியெழுப்பியது. பின்னர் பெருந்துறையை நோக்கித் திறக்கும் கோட்டைவாயிலும் அதன் மேலிருந்த காவல்மாடங்களும் தெரிந்தன. பெருவாயில் செங்குத்தாக எழுந்த ஒளிமிக்க தடாகம் போலிருந்தது..
அவர்கள் அதை அணுகியபோது கோட்டைமேலிருந்த பெருமுரசம் ஒலிக்கத் தொடங்கியது. கோட்டைவாயிலைக் கடந்ததுமே ஒளிபரவிய கங்கை நீர்ப்பரப்பின்மேல் நூற்றுக்கும் மேற்பட்ட கலங்களும் அம்பிகளும் நாவாய்களும் உருக்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி நின்றிருந்த துறைமுகப்பு ஓர்அலைநகரம் என கொடிகளும் பாய்களும் வணிகர்களின் ஆடைகளுமாக வண்ணங்கள் கொப்பளிக்க ஒட்டுமொத்தப் பேரோசையுடன் கண்முன் எழுந்து விரிந்தது.
காம்பில்யத்தின் பதினெட்டு துறைமேடைகளிலும் கலங்கள் அணுகியிருந்தன. கொடிமரங்களில் கட்டப்பபட்ட பாய்கள் காற்றில் அடிக்கும் ஒலியும் துறைமேடைக்கு அடியில் பெரிய மரக்கால்களில் அலைகள் சிதறும் நீரொலியும் சகடங்கள் மரமேடையில் ஓடும் ஒலியும் அத்திரிகளின் குளம்படியோசைகளும் அப்பால் யானைகளால் சுழற்றப்பட்ட சுமைசக்கரங்களின் உரசொலியும் கலந்து சூழ்ந்தன. தலைக்குமேல் எழுந்த ஏழு துலாத்தடிகள் தங்கள் அச்சுமேடையில் சுழன்றிறங்கி கலங்களில் இருந்து பொதிகளைத் தூக்கி கரைசேர்த்தன. கலங்களை இணைத்த மரப்பாலங்கள் வழியாக உணவேந்திய எறும்புகள் போல அத்திரிகள் பொதிகளுடன் உள்ளே சென்றுகொண்டும் மீண்டுகொண்டும் இருந்தன.
குண்டாசியின் தேர் நின்றிருந்தது. அவன் இறங்கி துறைமேடையின் அருகே அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் நின்ற பெரிய கலம் நோக்கி சென்றான். அவனுடைய மெலிந்த உடலில் ஆடை படபடத்தது. அவனுடன் குனிந்து பேசியபடி இரு சேவகர் சென்றனர். இருவர் பறக்கும் ஆடைகளுடன் தேர் நோக்கி வந்தனர். ஈரப்பாசி மணத்துடன் நீர்ப்பிசிறுகள் எழுந்து வந்து முகத்தை நனைக்கத் தொடங்கின. துறைமேடையில் இருந்து விலகிய அஸ்தினபுரியின் கலம் ஒன்று யானைபோல பிளிறியபடி ஒற்றைப் பாயை விரித்து நாய்ச்செவி என சற்றே திருப்பிக்கொண்டு காற்றை வாங்கி விலகிச்சென்றது.
பிளிறியபடி பாஞ்சாலத்தின் கலம் ஒன்று அமரமுனையைத் திருப்பி அலையில் எழுந்தமைந்து துறைமேடை நோக்கி வந்தது. அமரமுனையில் கொடிகளுடன் நின்றிருந்த மூவர் அவற்றை வீசினர். துறைமேடையில் நின்றிருந்த துறைச்சேவகர் கொடிகளை வீசியபடி ஓடி விரிந்தனர். கொழுத்த வெண்ணிறக் காளைகளால் இழுக்கப்பட்ட இரண்டு பொதிவண்டிகள் ஓசையுடன் மரமேடைமேல் ஏறின. மூக்குக் கயிறு இழுக்கப்பட்ட காளைகள் மூக்கைத்தூக்கி தலையை வளைக்க சகடங்கள் ஓசையுடன் ஒலிக்க வண்டிகள் தயங்கின.
நகுலன் அவிழ்த்து நிறுத்தப்பட்ட குந்தியின் ரதத்தை கண்டான். அதன் கொடி தும்பியின் சிறகென விர்ர்ர் என பறந்துகொண்டிருக்க சுற்றிக்கட்டப்பட்ட செம்பட்டுத்திரைச்சீலைகள் அதிர்ந்தன. அதன் இரண்டு வெண்குதிரைகளும் அப்பால் கட்டுத்தறிகளில் மூக்கில் தொங்கிய மரவுரிப்பைகளில் இருந்து கொள் மென்றுகொண்டிருந்தன. நகுலன் திரும்பி விதுரரை பார்த்தான். அவர் அதை பார்த்து விட்டார் என்று தோன்றியது. அவரது கண்களைப் பார்த்ததும் குந்தி அங்கே வருவதை அவர் முன்னரே அறிவார் என்று அறிந்துகொண்டான்.
சேவகர்கள் படியை அமைக்க நகுலன் இறங்கினான். விதுரர் இறங்கி காற்றில் எழுந்த சால்வையை சுற்றிக்கொண்டபின் மெல்லிய குரலில் “அரசியார் எங்கே?” என்றார். “சுங்கமாளிகையில் இருக்கிறார்கள்” என்றான் சேவகன். தலையசைத்துவிட்டு திரும்பி நகுலனிடம் “வா” என்று சொல்லிவிட்டு முன்னால் சென்றார். அவன் திரும்பி பாஞ்சாலத்தின் கலம் நோக்கி நீண்டுசென்ற பாதைப்பாலத்தை ஒருமுறை நோக்கிவிட்டு தொடர்ந்தான்.
பாஞ்சாலத்தின் கொடிபறந்த சுங்க மாளிகையின் முன்னால் சுங்கநாயகம் தன் இரு துணையாளர்களுடன் நின்று வணங்கி வரவேற்றார். நகுலன் வாழ்த்துச் சொன்னதும் அவரே உள்ளே அழைத்துச்சென்றார். கொம்பரக்கும் தேன்மெழுகும் கலந்த மணம் எழுந்த அறைகளில் பலர் சிறிய பீடங்களில் அமர்ந்து ஓலைகளில் எழுத வேறுசிலர் அவர்களுக்கு கணக்குகளை சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் தலைதூக்காவிட்டாலும் அவர்களின் உடல்கள் நோக்கின.
சிறிய கதவைத் திறந்து உள்ளே செல்லும்படி சொன்னார் சுங்கநாயகம். நகுலன் தயங்கினான். வா என தலையை அசைத்துவிட்டு விதுரர் உள்ளே நுழைய தலையைக் குனித்து நகுலனும் உள்ளே சென்றான். கங்கையின் ஒளியைக் கண்ட கண்களுக்கு அறையிருட்டு பழக சற்று நேரமாகியது. வெண்ணிற ஆடையுடன் பீடத்திலிருந்து எழுந்த குந்தியின் முகம் அதன்பின்னரே தெளிந்தது.
விதுரர் அமர்ந்து கொண்டார். குந்தி ஒருகணம் நகுலனை திரும்பி நோக்கிவிட்டு தன் பீடத்தில் அமர்ந்து முகத்தின்மேல் மேலாடையை இழுத்துவிட்டாள். நகுலன் கைகளைக் கட்டியபடி சுவர்மேல் சாய்ந்து நின்றான். வெளியே ஒரு வண்டியின் சகட ஒலி கேட்டது. அக்கட்டடம் அதற்குள் உள்ளவர்களின் பேச்சொலிகளின் மெல்லிய அதிர்வால் நிறைந்திருந்தது. சாளரத்திரைச்சீலை கங்கைக்காற்றில் உதறிக்கொண்டது.
“நான் சென்று செய்தியை சொல்கிறேன்” என்று விதுரர் தொடங்கினார். “நான் வந்தது நடக்கவில்லை. இனிமேல் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.” குந்தி தலைகுனிந்தே அமர்ந்திருந்தாள். அவள் தன்னை நோக்கிய பார்வையில் வியப்பு இருக்கவில்லை என்பதை நகுலன் உணர்ந்தான். சாளரம் வழியாக அவன் வருவதை அவள் நோக்கியிருக்கவேண்டும்.
விதுரர் ”ஏதேனும் செய்தி உண்டா?” என்றார். குந்தி தலையை அசைத்தாள். “பார்க்கவேண்டும் என்று சொன்னதாக தூதன் சொன்னான். தாங்கள் இடும் பணியை தலைதொட்டுச் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.” குந்தி பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தபோது குழலில் வழுக்கி தலையாடை பின்னால் சரிய அவளுடைய வெண்ணிறமான முகம் தெரிந்தது. கண்களுக்குக் கீழே சதை சற்று சுருங்கி மடிந்திருந்தது. உதட்டின் இரு எல்லையிலும் இரு மடிப்புகள். கழுத்திலும் கன்னங்களிலும் நீல நரம்புகள் தெரிந்தன.
“நான் சொல்வதென்ன? உங்களுக்கே தெரியும்” என்றாள் குந்தி. “உங்களை நம்பி இங்கிருக்கிறோம்… நானும் என் மைந்தரும்” அவள் குரல் உடைந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்தபோது கண்ணீர் மூக்கு நுனியில் ததும்பிச் சொட்டியது. மேலாடையால் கண்ணீரைத் துடைத்து அழுகையை அடக்க முயன்றாள். கழுத்தின் வெண்ணிறச் சதை அதிர்ந்தது. பின் மீண்டும் ஒரு விசும்பல்.
நகுலன் திரும்பி வெளியே செல்லும்பொருட்டு சற்றே அசைந்தான். விதுரர் அவனை நோக்கி நிற்கும்படி விழியசைத்தார். அவன் மீண்டும் சுவரில் சாய்ந்துகொண்டான். மெல்லிய சீறல் ஒலிகளுடன் குந்தி அழுதாள். அவள் நெற்றியிலிருந்து மேலேறிய வகிடு வெண்மையாக இருந்தது. இருபக்கமும் ஓரிரு நரையிழைகள் சுருண்டு நின்றிருந்தன. காதோரம் இறங்கிய மென்மயிரிலும் நரை. அவளை அணுக்கமாக நோக்கியே நெடுங்காலம் ஆயிற்று என நகுலன் எண்ணிக்கொண்டான்.
குந்தி மெல்ல அழுது அடங்கினாள். மேலாடையால் முகத்தை அழுத்தித் துடைத்தபோது கன்னங்களும் மூக்கும் குருதிநிறம் கொண்டன. விதுரர் கைகளைக் கட்டியபடி அவளையே நோக்கி அசையாமல் அமர்ந்திருந்தார். அவள் நிமிர்ந்து செவ்வரி ஓடிய விழிகளால் நோக்கி “நீங்கள் செல்லலாம் அமைச்சரே. அஸ்தினபுரியின் அரசருக்கும் அரசிக்கும் என் வணக்கங்களை தெரிவியுங்கள்” என்றாள்.
விதுரர் எழுந்து தலைவணங்கியபின் நகுலனிடம் செல்வோம் என்று தலையசைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் வெளியே சென்றார். குந்தி தன் முகத்தை ஆடையால் மூடிக்கொண்டதனால் நகுலன் அவள் முகத்தை பார்க்கமுடியவில்லை. தலைவணங்கிய பின் அவன் அறையை விட்டு வெளியே வந்தபோது விதுரர் விரைந்த நடையில் நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தார்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்